புதன், 13 ஆகஸ்ட், 2014

வணிக நாணயம்நாணயம் என்று ஒரு வார்த்தை பழக்கத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும். தெரியாதிருந்தால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பணத்திற்கும் நாணயம் என்று சொல்வார்கள். நாம் இப்போது பார்க்கப்போவது அந்த நாணயம் அல்ல.

வியாபாரத்தில் நேர்மை என்று ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு பொருளை விற்பவன் அதற்கு வாங்கும் விலைக்குத் தகுந்ததான பொருளைக் கொடுக்கவேண்டும். அந்தப் பொருளின் தரத்திலோ, பயன்பாட்டிலோ ஏதாவது குறை இருந்தால் அதற்கு விற்பவன் பொறுப்பேற்க வேண்டும். இதைத்தான் வியாபாரத்தில் நாணயம் இருக்கவேண்டும் என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள்.

அப்படி நாணயமாக வியாபாரம் செய்தவர்கள் முன்னேற்றமடைந்தார்கள். மக்கள் அப்படிப்பட்வர்களைத்தான் ஆதரித்தார்கள்.

ஆனால் இன்றைய விளம்பர உலகில் நாணயம் என்றால் அது எங்கே விற்கிறது என்று கேட்கும் அளவிற்கு வந்து விட்டது. சமீபத்தில் நடந்த என் அனுபவத்தைக் கேளுங்கள்.

இப்போதெல்லாம் எந்தப் போருள் வாங்கினாலும், அதற்கு விற்பனைக்குப் பிறகு தரப்படும் பராமரிப்பு பணியை விற்பவர் ஏற்றுக்கொள்வதில்லை. பராமரிப்புக்கென்று தனியாக ஒரு கம்பெனியை ஒவ்வொரு உற்பத்தியாளரும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள்தான் அந்தப் பொருளுக்கு "விற்பனைக்குப் பின் பராமரிப்பு" (After Sales Service) என்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நாம் என்ன நம்புகிறோம் என்றால் "நாம் வாங்கும் பொருளுக்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதை அவர்கள் சரி செய்து தருவார்கள்" என்று.

இந்த மாதிரி பராமரிப்புக்கென்று தனி அமைப்பு வைத்திருப்பதே நம்மைப் போன்ற இளிச்சவாயன்களை ஏமாற்றுவதற்காகவே. அவர்களுக்கென்று கட்டணமில்லா போன் நெம்பர் ஒன்று இருக்கும். அந்த நெம்பருக்குப் போன் செய்தால் எப்போதும் அதை யாரும் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்தக் கசமாலங்களுக்குத் தெரியும் - ஒவ்வொரு போன்காலும் ஒரு பிரச்சினையைத் தான் கொண்டு வரும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.

அப்படித் தப்பித் தவறி யாராவது எடுத்தால் மறு முனையிலிருந்து "க்யா பாத் ஹை" என்று ஒரு கேள்வி வரும். நாம் சுதாரித்துக் கொண்டு "இங்கிலீஷ் மே போலோ" சொல்வதற்குள் லைனை கட் செய்து விடுவார்கள். அநேமாக உங்களில் பலர் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள்.

நான் ஐந்து வருடங்களுக்கு முன் பிரபல கம்பெனி ஒன்றின் பிரிட்ஜ்  20000 ரூபாய் கொடுத்து வாங்கினேன். சமீபத்தில் அதனுடைய கைப்பிடி உடைந்து விட்டது. இது என்ன சாதாரண ரிப்பேர்தானே என்று அந்தக் கம்பெனியின் சர்வீஸ் சென்டருக்குப் போனேன். விஷயத்தைச் சொன்னதும் அங்கு வரவேற்பில் இருந்த நவநாகரிக யுவதி, "சார், நீங்க உங்க பிரிட்ஜை இங்கு கொண்டு வந்தால் நாங்கள் ரிப்பேர் செய்து கொடுப்போம். இல்லையென்றால் இந்த நெம்பருக்குப் போன் செய்யுங்கள், அவர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் செய்து தருவார்கள்" என்று மிழற்றியது. (மிழற்றியது என்றால் என்ன அர்த்தம் என்று தமிழறிஞரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இந்த மாதிரி ஒரு சர்வீஸ் சென்டருக்கு ஒரு முறை போய் வாருங்கள்.)

அந்த நெம்பருக்குப் பலமுறை போன் செய்து ஒருவாறாக லைன் கிடைத்தது. அதிலிருந்த நபர் விவரத்தைக் கேட்டுக்கொண்டு  எங்கள் சர்வீஸ் இன்ஜனியர் உங்களைத் தொடர்பு கொள்வார் என்று சொல்லி என் மொபைல் நெம்பரை வாங்கிக்கொண்டார். உங்கள் கம்ளெய்ன்ட் நெம்பர் என்று ஒரு பதினைந்து இலக்க யெம்பரைத் தந்தார். நானும் இது பெரிய கம்பெனியாச்சே. நம் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.

அடுத்த நாள் சர்வீஸ் இன்ஜினியர் போன் செய்து எல்லா விவரங்களையும் விலாவாரியாக கேட்டு விட்டு, சரி சார் நான் கம்பெனிக்கு இந்த ஸ்பேர் பார்ட் வேண்டுமென்று ஆர்டர் போட்டு விடுகிறேன், பார்ட் வந்ததும் நான் உங்கள் வீட்டிற்கு வந்து பிரிட்ஜை சரி செய்து தந்து விடுகிறேன் என்றார். எனக்கும் அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது.

இரண்டு நாள் கழித்து என் மொபைலுக்கு ஒரு செய்தி. உங்கள் பிரிட்ஜ்ஜுக்கு வேண்டிய ஸ்பேர் பார்ட் எங்களிடம் இல்லை. ஆகவே உங்கள் கம்ப்ளெய்ன்டை இத்துடன் மூடுகிறோம். அவ்வளவே. நான் என்ன செய்வது? திரும்பவும் அந்த சர்வீஸ் டிபார்ட்மென்டைக் கூப்பிட்டேன். அவர்கள் சொன்னது என்னவென்றால், சார் நீங்கள் பிரிட்ஜ் வாங்கி ஐந்து வருடங்களாகி விட்டன, அந்த மாடல் இப்போது மார்க்கெட்டில் இல்லை, அதனால் அதற்கு ஸ்பேர் பார்ட் கிடைக்காது. இப்படி சொன்னால் நான் என்ன செய்வது என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் இன்றைய நாணயத்தின் உச்ச கட்ட பிரதிபலிப்பு. சார் அந்த பிரிட்ஜை உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் டீலரிட்ம் கொண்டு போனால் அதை வாங்கிக்கொண்டு உங்களுக்குப் புதிதாய் பிரிட்ஜ் கொடுப்பார்கள் என்றார்கள்.

நான் ஒரு மடையன். இதைக் கேட்டுக் கொண்டு பக்கத்திலிருக்கும் டீலரிடம் போனேன். ஆஹா, அதற்கென்ன, தாராளமாய் எடுத்துக்கொள்கிறோம் என்றார்கள். மாடல் நெம்பர், வாங்கின வருடம் எல்லாம் கேட்டு விட்டு, உங்கள் பிரிட்ஜ் 500 ரூபாய்தான் பெறும், ஆனால் நீங்கள் எங்களுடைய நீண்ட நாள் கஸ்டமர் என்பதால் ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக்கொள்கிறோம். புது பிரிட்ஜ் 25000 ரூபாயிலிருந்து கிடைக்கும், உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம் என்றார்கள்.

ஆகவே நண்பர்களே, நீங்கள் இப்போது அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரே வித்தியாசம். அங்கு பழைய சாமான்களை யாரும் வாங்க மாட்டார்கள் இங்கு அதற்கு அடிமாட்டு விலை கொடுப்பார்கள்.

17 கருத்துகள்:

 1. //இந்த மாதிரி பராமரிப்புக்கென்று தனி அமைப்பு வைத்திருப்பதே நம்மைப் போன்ற இளிச்சவாயன்களை ஏமாற்றுவதற்காகவே.//

  உண்மைதான் ஐயா. நான் Whirlpool இன் Washing Machine வாங்கியபோதும் இது போன்று மூன்று ஆண்டுகளுக்கான Annual Maintenance Contract க்கென்று கணிசமான தொகையை ‘தண்டம்’ அழுதேன். மூன்று ஆண்டுகளில் அவர்களின் Service Engineer ஆறு மாதத்திற்கு ஒருமுறை வந்து Free service செய்வார் என்று சொன்னார்கள். யாரும் வரவில்லை. தொலைபேசியில் அழைத்தால் இதோ வருகிறேன் என்று சொன்னார்களே தவிர யாரும் வரவில்லை.அந்த நிறுவனத்திற்கே கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை. ‘Consumer Court க்கு போங்கள்’ என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் பணத்தை வீணாக்கியது போல் மேற்கொண்டு எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

  பதிவின் கடைசியில் முத்தாய்ப்பாய் சரியாய் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. After Sale Service என்று பெரிதாய் சொன்னாலும் ஒரு Service-ம் தருவதே இல்லை. எத்தனை வருட Warranty என்று சொல்கிறார்களோ அவ்வளவு தான், அதை விட கம்மியாகத் தான் உழைக்கிறது...... பல விதமாய் ஏமாற்றுகிறார்கள். :(

  பதிலளிநீக்கு
 3. தொழில்தர்மம் ,புரபஷனல் எதிக்ஸ் -கொடிகட்டித்தான் பறக்கிறது.!

  பதிலளிநீக்கு
 4. பிரிட்ஜின் கைப்பிடி உடைந்த்தற்கு புது பிரிட்ஜ் வாங்க வேண்டுமா?!!

  தற்கால வியாபரத்தின் "நாணயம் " நம்மை போண்டியாக்கத்தான். ;-(

  பதிலளிநீக்கு
 5. நம்பிக்கையாவது நாணயமாவது ...... எல்லாமே சும்மா ஏமாற்று வேலைகள் மட்டுமே. புதிய பொருளை நாம் பணம் கொடுத்து வாங்கும் போது மட்டும் என்னவெல்லாமோ சொல்லுவார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பார்கள். பிறகு கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 6. //மாடல் நெம்பர், வாங்கின வருடம் எல்லாம் கேட்டு விட்டு, உங்கள் பிரிட்ஜ் 500 ரூபாய்தான் பெறும், ஆனால் நீங்கள் எங்களுடைய நீண்ட நாள் கஸ்டமர் என்பதால் ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக்கொள்கிறோம். //

  எந்த மாடலாக இருந்தாலும், புத்தம் புதிதாக வாங்கி ஒரு மாதமே ஆகியிருந்தாலும் இதே 500 அல்லது 1000 மட்டுமே கிடைக்கும் என்பதை தாங்கள் அறிய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. நம்மிடம் இருக்கும் எந்தப் பொருளுக்கும் மதிப்பு கிடையாது,கடைகளில் இருந்தால் யானைவிலை, குதிரைவிலை. வயிற்றெரிச்சல்தான்

  பதிலளிநீக்கு
 8. எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு அய்யா..! நான் சண்டை யே போட்டுவிட்டேன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சண்டை போடுவதால் நமக்குத்தான் ஹார்ட் அட்டாக் வருமே தவிர, அவன்கள் இதைப்பற்றி சிறிதும் கவலைப் படமாட்டார்கள். கம்பெனி ஆரம்பிக்கும்போதே அவர்களுக்கு இதைப் பற்றி ஒரு ஸஃபெஷல் ட்ரெயினிங்க் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 9. நான் பணியில் இருக்கும்போது இந்த மாதிரியான பிரச்சினைகளில் எனது விடுமுறை நாட்கள் (CASUAL LEAVE) அதிகம் வீணாயிருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 10. இங்கு அமெரிக்காவில் இதை எப்படி சமாளிக்கிறோம் என்றால், பழைய பொருட்களின் பாகங்கள் இபே போன்ற ஆன்லைன் ஆக்ஷன் இடங்களில் கிடைக்கிறது. அங்கிருந்து வாங்கி, நாமே அதை பொறுத்த வேண்டியது தான். என்ன, எல்லா வேலையையும் நாமே கற்றுக்கொண்டு செய்ய வேண்டியிருக்கிறது!

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. இந்த வார்த்தையின் பொருள் எனக்கு விளங்கவில்லை. நான் அந்தக் காலத்து ஆள் அல்லவா?

   நீக்கு
  2. இதை நகைச்சுவைக்காக எழுதினேன்.புதிய போன் வாங்க முடியவில்லையே என சோகத்தில் இருக்கும் ஒருத்தியிடம் ஒரு சிறுமி இந்த வார்த்தையை சொல்லுவாள். சோகத்திலிருப்பவள் "கர்சாக்" என்றால் என்ன என்பாள். அதற்கு சிறுமி "பழைய போனை போட்டோ எடுங்க குயிக்கர்ல வித்துடுங்க" என்பாள்.

   நீக்கு
 12. Well. If we want to enjoy the benefits of free markets, globalization and capitalism such as economic growth, luxurious life style etc. we have to support consumerism. Only high consumption (replacing cars, fridges, washing machines etc. every 5 years) can sustain this kind of growth.

  பதிலளிநீக்கு