வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் சிறை பிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்.



இத்தகைய செய்திகளை பல வருடங்களாக, ஏறக்குறைய நான்கு நாட்களுக்கு ஒரு முறை செய்தித்தாள்களில் படிக்கிறோம். அடுத்த நிமிடம் மறந்து போகிறோம். இது ஏன் இப்படி நடக்கிறது?

ஒரு ஈழத்தமிழ் பதிவர் தன் பதிவில் எழுதியிருந்தார் - கச்சத்தீவு பல நூற்றாண்டு காலமாக இலங்கைக்கு சொந்தமான பகுதி. அதில் இந்திய நாட்டுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஏன் இதை வலியுறுத்துவதில்லை என்றால், ஈழப்போராட்டத்தில் இந்தியத் தமிழர்களின் அனுதாபமும் ஆதரவும் இப்போது எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் இதைப்பற்றி வாய் திறப்பதில்லை.

இதன் உண்மையை வரலாற்று ஆசிரியர்கள்தான் சொல்ல முடியும். சாதாரண இந்தியத் தமிழனான எனக்குத் தெரிந்ததெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் இந்திய-இலங்கை அரசுகள் ஒரு ஒப்பந்தம் போட்டு, கச்சத்தீவில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒத்துக்கொண்டார்கள் என்பதே.

சமீபத்தில் சென்னை நீதி மன்றம் ஒன்றில் கூட மத்திய அரசு இந்த நிலையை திட்டவட்டமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது என்று செய்தித்தாள்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. இருந்தும் தமிழக மீனவர்கள் ஏன் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்றால் அங்கு மீன் அதிகமாகக் கிடைப்பதேயாகும். இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்.

இருந்தாலும் இந்த சிறை பிடிப்பு, கடிதங்கள், மீனவர் விடுதலை என்கிற நாடகம் ஏன் தொடர்ந்து நடக்கிறது என்றால், வெறும் வாயையே எத்தனை நாளைக்குத்தான் மெல்லுவது? கொஞ்சம் அவல் இருந்தால் நல்லதுதானே என்கிற நடைமுறைத் தத்துவம்தான்.

8 கருத்துகள்:

  1. கச்சத்தீவு விவகாரம் இப்போது தீருமென்று தெரியவில்லை. இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கெடா வகையில் இரு நாடு அரசுகளும் ஆவன செய்யவேண்டும். செய்வார்களா என்பதுதான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. கச்சத் தீவில் சிறை பிடிக்கப் படும் இந்திய மீனவர்பற்றிய செய்திகளே பத்திரிக்கைகளில் வருகின்றன. நம்மவர்களால் சிறை பிடிக்கப் படும் இலங்கை மீனவர்களும் இருக்கிறார்கள். அவை ஏனோ நம் பத்திரிக்கைகளில் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. .

    பதிலளிநீக்கு
  3. தமிழக மீனவர்கள் பற்றி உண்மையை சொல்லியிருக்கிறீர்கள். இந்திய எல்லையை தாண்டிச் சென்று இலங்கையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள் என்பது பலருக்கு தெரியும். ஆனால் இதை வைத்து தமிழக அரசியல்வாதிகளும்,தமிழ் போலி வீரர்களும் நன்றாகவே அரசியல் செய்கிறார்கள். இலங்கையில் உள்ள தமிழர்கள் சொல்லி தான் கடற்படை தங்களை கைது செய்வதும் சில மீனவர்களுக்கு தெரிஞ்சிருக்கு, ஆனா அரசியல் வாதிகள் நடத்தும் நாடகத்தை நம்பி இலங்கைக்குள் சென்று மீன் பிடித்து கொண்டுவர முடியும் என்று நம்பி கொண்டேயிருக்கிறார்கள். மற்றய நாடுகளில் இல்லாத பூச்சிகொல்லி மருந்துகளை விவசாயத்தில் பாவித்து தீமைகளை தேடி கெண்டதை போல் தவறான மீன்பிடி முறைகளால் தமிழக மீன் வளத்தை அழித்துவிட்டு பக்கத்து நாட்டுக்குள் சென்று மீன் பிடித்து கொண்டுவரவேண்டும்மென்றல் எப்படி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகச் சொன்னீர்கள். ஆனால் சாதாரணத் தமிழன் என்றுமே இளிச்சவாயன்தான். இந்த அரசியலெல்லாம் அவனுக்குப் புரியாது.

      நீக்கு
    2. தவறான உத்திகளை பயன்படுத்தி நம் நாட்டு மீன் வளத்தை இழந்துவிட்டு எல்லை கடந்து மீன் பிடிக்க போய் இலங்கை கடற்படையிடம் மாட்டிகொள்கிறார்கள் நமது மீனவர்கள் என்று திரு.வேகநரி சொல்வது உண்மையானால் மத்திய அரசும் மாநில அரசும் அமர்ந்து பேசி இந்த உண்மையை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியதுதானே. இது உண்மையாக இருக்கும் பட்சம், மீன் வளத்தை இழந்த நமது நாட்டு மீனவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு கண்டிப்பாக உள்ளது. எத்தனை நாட்களுக்கு இந்த கண்மூடி விளையாட்டு. உண்மையை என்று நேரடியாக எதிர்கொள்கிறோமோ அன்றுதான் ஒரு விடிவு காலம் பிறக்கும்.
      அப்படி திரு.வேகநரி சொல்வது உண்மையில்லாத பட்சத்தில் தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.
      எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது பலவீனத்தையே காட்டுகிறது.

      சேலம் குரு

      நீக்கு
    3. மீனவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதில் என்ன அரசியல் ஆதாயம் கிடைக்கும்? பிரச்சினையை இப்போது இருப்பது போலவே நீட்டித்தால் அரசியல் செய்ய ஏதுவாக இருக்கும் அல்லவா? யாராவது பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வார்களா?

      நீக்கு
  4. மீன் வளத்தை இழந்து துன்பபடும் நமது நாட்டு தமிழக மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே பாதிக்கபட்ட மக்களுக்கான சரியான நிவாரண முறையும், வாழ்கை தரம் கூடிய மக்கள் வாழும் நாடுகளில் செயல்படுத்துகிற முறையுமாகும்.ஆனா பழனி. கந்தசாமி அவர்கள் சொன்னாபோல் இதனால் நமது அரசியல்வாதிகளுக்கு என்ன அரசியல் ஆதாயம் கிடைக்கும்?
    அதனாலே இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகள் எப்படியெல்லம் இருக்க வேண்டும், எந்த நாட்டுடன் நாம் போர் தொடுக்க வேண்டும், சுண்டைக்காய் இலங்கையை அடித்து மீன்பிடிக்க ஏன் தயக்கம், இந்திய நீதிமன்றங்கள் எப்படியெல்லம் கொலை குற்றவாளிங்களுக்கு தீர்பளிக்க வேண்டும், எந்த பாஷையை இந்திய அரசு கற்பிக்கலாம் இப்படி எல்லாம் இந்திய அரசுக்கு ஆலோசனை சொல்ல மாபெரும் மேதைகள் கூட்டத்தை தமிழக அரசியல்வாதிகள் உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. தமிழக மீனவர்களால் நடத்தபடுவது அப்பட்டமான அந்நிய எல்லை மீறி மீன் பிடி கொள்ளை என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது.

    பதிலளிநீக்கு