ஞாயிறு, 2 ஜூலை, 2017

15. GST யினால் எங்கள் வருமானம் போச்சே?


இன்றைய கோவை செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி GST வந்த பிறகு மாநிலங்களுக்கு இடையேயான வணிக வரிச் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டுவிட்டன என்பதுதான். இதைப் பற்றி பல கனரக வாகன ஓட்டிகள் பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.

கோவை-பாலக்காடு இடையே வாளையார் என்கிற இடத்தில் ஒரு வணிகவரிச் சோதனைச் சாவடி இருக்கிறது. இது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். தினமும் இதன் வழியாக ஆயிரக்கணக்கான கன ரக வாகனங்கள் பல மாநிலங்களிலும் இருந்து செல்கின்றன. இந்த சோதனைச்சாவடியில் தணிக்கை முடிந்து வாகனங்கள் போவதற்கு குறைந்தது நான்கு நாட்கள் ஆகும்.

இதனால் விளைந்த தீமைகள் - இந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் வெட்டியாக நான்கு நாட்கள் காத்துக்கொண்டிருப்பதில் அவர்களின் சம்பளம், வாகனங்கள் ஓடாமல் நின்று கொண்டிருப்பதால் ஏற்படும் நஷ்டம் ஆகியவை அடங்கும். இந்த வழியாகப் போகும் மற்ற சாதாரண வாகனங்களும் பல இன்னல்களைச் சந்தித்தன.

இப்போது இந்த வணிக வரிச் சோதனைச் சாவடி நீக்கப்பட்டு விட்டதால் கனரக வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக செய்தித்தாட்கள் செய்தி பிரசுரிக்கின்றன.

ஆனால் இவர்கள் ஒருவரும் இந்த சோதனைச்சாவடிகளின்  இன்னொரு சாராரைப் பற்றி சிறிதும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. யோசித்துப் பாருங்கள். இந்தச் சோதனைச்சாவடிகளில் பணியாற்றிய பணியாளர்களின் இன்றைய நிலை என்ன? அவர்களின் குடும்பங்கள் எவ்வளவு சிரமப்படும்? இதை யாராவது யோசிக்கிறார்களா?

அவர்கள் அரசாங்க ஊழியர்கள், இந்த வேலை இல்லாவிட்டால் இன்னொரு வேலையில் அமர்த்தப்படுவார்களே, அதனால் அவர்களுக்கு என்ன கஷ்டம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகின்றது.

அப்படிக்கேட்பவர்கள் வாளையார் சோதனைச் சாவடிப் பக்கம் போயிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஒரு சர்க்கார் அலுவலகம், ஆயிரக்கணக்கான வாகனங்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றிச் செல்பவை, அந்த சர்க்கார் அலுவலர்கள் அனுமதித்தால்தான் போகலாம். இப்படிப்பட்ட நிலையில் ஒருவன் சும்மா இருந்தால் கூட வாகன ஓட்டிகள் கொடுக்கும் அன்பளிப்புகளை வாங்கி நிரப்ப ஒரு பாக்கெட் போதாதே.

இனி அவர்கள் பாக்கெட் நிரம்ப வழி ஏதுமில்லையே? இவர்களின் குறையைக் கேட்பார் இல்லையே? இதைவிடக் கஷ்டம் இருக்க முடியுமா? இந்தச் செய்தித்தாள்கள் இவர்களின் குறையை ஏன் செய்தியாக வெளியிடக்கூடாது?   

12 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது சரியே. இனிமேல் நாளிதழ்களில், வணிகச் செய்திகள் திரை செய்திகள், வாசகர்கள் கடிதம் போன்றவைகளுக்கு பக்கம் ஒதுக்குவதுபோல் கையூட்டு இழந்தவர்ளுக்கும் பக்கம் ஒதுக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. GST யின் நன்மைகளில் ஒன்று இந்த கொள்ளைக்கும் முடிவு கட்டிதாகும்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய ஹிந்து தினசரியில் வாளையார் சுங்கச் சாவடி வெறிச்சோடி இருப்பதைப் புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. //இனி அவர்கள் பாக்கெட் நிரம்ப வழி ஏதுமில்லையே?//

    ஏற்கனவே ஏழு தலைமுறைகளுக்கு வேண்டியதைச் சேர்த்திருப்பார்கள். இதற்கும் மேல் நிரம்பினால் பாக்கெட்டே கிழிந்துவிடும்.

    எவனோ ஒருசிலர் எப்படியோ போய்த் தொலையட்டும்.

    பெரும்பாலான பொதுமக்களுக்கான நல்லதை மட்டும் நாம் வரவேற்போம். மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
  5. //இனி அவர்கள் பாக்கெட் நிரம்ப வழி ஏதுமில்லையே? இவர்களின் குறையைக் கேட்பார் இல்லையே?// இப்படி சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் எப்படியோ வழி கண்டுபிடித்து விடுவார்கள்!!

    பதிலளிநீக்கு
  6. கடைசி ரெண்டு பத்திகளைப் படித்தபிறகுதான் கட்டுரை முழுமை பெற்றதை உணர்ந்தேன். இந்தச் சோதனைச்சாவடி, பணம் பெறுபவர்களால் நிரம்பியது. அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு மருத்துவக் கழிவுகளை கோவைக்குள் புதைக்க அனுப்புபவர்கள். நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
  7. “மனசைத் தொட்டுச் சொன்னா எங்களுக்கெல்லாம் சம்பளமே தேவையில்லை.” -இது, வணிகவரித் துறையில் வேலை பார்த்த நெருங்கிய சொந்தக்காரர் பல வருடங்களுக்கு முன்பு சொன்னது.

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. அங்கதத்திற்கு கூகுளில் தேடி பொருள் அறிந்தேன். பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் உறுவுகளே நானும் இன்றுமுதல் உங்களோடு சேர்ந்து பயணிக்க வந்துள்ளேன்.அதீத தமிழ் பற்றும், சமூக சிந்தனையும் கொண்ட நான் அவ்வப்போது நகைச்சுவைப்பதிவுகளையும், மொக்கைக் கவிதைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளேன்.

    உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்வேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  10. எனக்குத் தெரிந்த ஒரு rly TT கூட கூறக்கேட்டிருக்கிறேன் . எங்களுக்கு pay -masters passengers தான்..சம்பளம் வெறும் தோரணை தான் ..

    மாலி

    பதிலளிநீக்கு