வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்தவர்களுக்கு வெள்ளாள சமூகத்தில் அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.
இந்த குலப்பெயர் வருவதற்கு காரணம் – இந்தக் குலத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்துதான் காது குத்துவார்கள். ஆகவே இவர்களுக்குத்தான் காது முழுமையானதாகக் கருதப்படும். எனவே இவர்கள் முழு காது உடையவர்கள் என்ற சிறப்புப் பெற்றவர்கள். இவ்வாறு இந்தக் குலத்தவர்கள் “முழுக்காதன் குலத்தவர்கள்” என்ற சிறப்பைப் பெற்றார்கள்.
இந்தக் குலத்திற்கு குலதெய்வம் வெள்ளையம்மாள் ஆகும். இந்தத் தெய்வத்திற்கு கோவை மாவட்டம் காங்கயம் பக்கத்திலுள்ள காடையூரில் உள்ள பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி இருக்கிறது. ஒவ்வொரு இனத்தவர்களின் குல தெய்வங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும். இந்த வரலாறுகள் கர்ண பரம்பரையாய் வருவன. பல குல வரலாறுகளுக்கிடையே பல சமயங்களில் ஒரே கருத்து காணப்படும். அதே மாதிரி ஒரே குல தெய்வத்தின் வரலாற்றிலும் பல பேதங்கள் இருக்கும். இந்த வரலாறுகளுக்கெல்லாம் ஆதாரம் என்னவென்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் இவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காங்கயத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரும் விவசாயிக்கு நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். அந்தப் பெண் பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று அழைத்தார்கள். (மகாபாரதத்தில் பாண்டு மன்னன் பிறக்கும்போதே வெளுத்திருந்தான் என்று படித்திருக்கிறோம்). இன்றும் இவ்வாறான குழந்தைகள் பிறக்கின்றன. அவைகளை “அல்பினோ” என்று கூறுவார்கள். அந்தப் பெண்ணிற்கு மணப்பருவம் நெருங்கியது. பெற்றோரும் உடன் பிறந்தோரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.
அவர்கள் பண்ணையில் மாடு மேய்ப்பதற்காக தூர தேசத்திலிருந்து வந்த ஒருவன் வேலையில் இருந்தான். அவனும் அவர்கள் இனத்தைச் சேர்ந்தவனே. ஆனால் ஏழை.
வெள்ளையம்மாளின் தந்தை அந்த மாடு மேய்ப்பவனுக்கே தன் பெண்ணைக் கட்டிக்கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்.
அவனுடைய ஊருக்குச் சென்று அவனுடைய பெற்றோர்களின் சம்மதம் பெற்றார். திருமணமும் நடந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.
அவளுடைய தமையன்களுக்கும் திருமணம் நடந்து எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். இந்நிலையில் வெள்ளையம்மாளின் தந்தைக்கு அந்திம காலம் நெருங்கியது. அப்போது அவர் தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு, வெள்ளையம்மாளுக்கு ஒரு காணி நிலம் கொடுக்கும்படி கூறிவிட்டு காலமானார்.
வெள்ளையம்மாளின் அண்ணிகளின் துர்ப்போதனையைக் கேட்ட அண்ணன்மார்கள் வெள்ளையம்மாளின் புருஷனை வஞ்சகமாக தனியாக கூட்டிக்கொண்டு போய் கொன்றுவிட்டார்கள். அவன் எங்கோ காணாமல் போய்விட்டான் என்று சொல்லி, வெள்ளையம்மாளின் பேரிலும் பல அவதூறுகளைக் கூறி அவளை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள். அப்போது அவள் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.
வெள்ளையம்மாள் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் மனம் போன போக்கில் போகும்போது, ஒரு சர்தார் (அந்நாளைய முஸ்லிம் அரசாங்க உயர் அதிகாரி) குதிரைமேல் வருவதைக்கண்டு அஞ்சி புதரில் ஒதுங்கினாள். சர்தார் இவளைப்பார்த்தவுடன் நின்று விசாரித்து இவளுடைய அனாதை நிலையைக் கண்டு இரங்கினான். “நான் இப்போது வரி வசூலுக்காக அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். திரும்பி வந்ததும் உன்னுடைய துயர் தீர்க்கிறேன். அதுவரை பக்கத்தில் இருக்கும் கோட்டையில் பத்திரமாக இருப்பாயாக” என்று ஆறுதல் சொல்லி, அவளைக் கோட்டையில் தங்க ஏற்பாடுகள் செய்து விட்டு, வரி வசூலிக்கப் போய்விட்டான்.
சர்தார் திரும்பி வருவதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. இதற்குள் வெள்ளையம்மாளுக்கு நான்காவது மகனும் பிறந்துவிட்டான். சர்தார் வந்த பிறகு வெள்ளையம்மாளைக் கூட்டிக்கொண்டு அவளுடைய அண்ணன்மார் ஊருக்கு வந்தான். அவர்களுடைய அண்ணன்மாரைக் கூப்பிட்டு விவரங்கள் விசாரிக்கும் போது அவளுடைய அண்ணிமார்கள் வெள்ளையம்மாள் பேரில் அடாத பழிகளைச் சுமத்தினார்கள். விபசாரி என்றும் ஏசினார்கள். அவளுடைய அண்ணன்மார்கள் வாய்மூடி மெளனமாக இருந்தார்கள். சர்தார் அவர்களைப் பார்த்து உங்கள் தகப்பனார் வெள்ளையம்மாளுக்கு காணி நிலம் கொடுக்கச் சொன்னது உண்டா இல்லையாவென்று கேட்க, அவர்கள் எங்கள் தந்தை அவ்வாறுதான் கூறிவிட்டு இறந்தார். ஆனால் இப்போது வெள்ளையம்மாள் சாதி கெட்டு வந்திருப்பதால் அவளுக்கு ஒன்றும் கொடுக்க முடியாது என்று வாதிட்டனர்.
இதைக்கேட்ட வெள்ளையம்மாள் நான் கடவுள் சாட்சியாக எந்தத் தப்பும் செய்யவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன் என்று சொன்னாள். அப்போது அவளுடைய அண்ணன்மார்கள் தங்கள் பெண்டாட்டிகளின் பேச்சைக் கேட்டு, வெள்ளையம்மாள் மூன்று சத்தியங்கள் செய்தால் நாங்கள் எங்கள் நிலம் எல்லாவற்றையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்துவிடுகிறோம், அப்படிச் செய்யாவிட்டால் இவள் தீக்குளிக்க வேண்டும் என்று கூறினர். அந்த சத்தியங்கள் என்னவென்றால்:
1. காளைகளை ஏரிலோ அல்லது வண்டியிலோ பூட்டிவதற்கு வெடத்தலாமரத்தில் நுகத்தடி செய்து வைத்திருப்பார்கள். இது நன்கு முற்றி காய்ந்திருக்கும். அந்த நுகத்தடியை மண்ணில் நட்டு தண்ணீர் ஊற்றினால் அது துளிர் விடவேண்டும்.
2. அந்த ஊர்க்கோவிலில் நிறுத்தியிருக்கும் மண் குதிரைக்கு நண்ணீர் தெளித்தால் அது தலையைக் குலுக்கி கனைக்கவேண்டும்.
3. இதற்கு வேண்டிய தண்ணீரை சுடாத பச்சை மண் குடத்தில் எடுத்து வரவேண்டும். அப்போது அந்த மண்குடம் கரையாமல் இருக்க வேண்டும்.
இதைக்கேட்ட சர்தார் வெள்ளையம்மாளிடம் இவர்கள் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீ இதற்கு ஒப்புக்கொள்ளாதே என்று கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ, நான் பதிவிரதை, நான் இந்தச் சத்தியங்களைச் செய்வேன் என்று கூறினாள். அவ்வாறே ஒரு நுகத்தடி நடப்பட்டது. பச்சை மண் குடமும் கொண்டுவரப்பட்டது. வெள்ளையம்மாள் கோவில் குளத்திலிருந்து அந்தக் குடத்தில் நீர் கொண்டு கொண்டு வந்தாள். குடம் கரையாமல் நின்றது. அந்தக் குடத்தில் இருந்து தண்ணீரை நுகத்தடிக்கு ஊற்ற அந்த நுகத்தடியில் தளிர்கள் துளிர்த்தன. மீதம் இருந்த தண்ணீரை அங்கிருந்த மண் குதிரை மேல் தெளிக்க, அந்தக் குதிரை தலையை ஆட்டி கனைத்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிசயப்பட்டுப் போனார்கள். வெள்ளையம்மாளின் அண்ணன்மார்கள் நால்வரும் சர்தாரிடம் வந்து எங்கள் சொத்து முழுவதையும் வெள்ளையம்மாளுக்கே கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டு ஊரைவிட்டே போய்விட்டார்கள். சர்தாரும் வெள்ளையம்மாளுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு தன் ஊருக்குப் போனார்.
வெள்ளையம்மாள் பல காலம் தன் மக்களுடன் வாழ்ந்து விட்டு பின் தெய்வமானாள். அவளுடைய வம்சாவளிதான் தற்காலத்தில் முழுக்காதன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.