வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்தவர்களுக்கு வெள்ளாள சமூகத்தில் அதிக மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.
இந்த குலப்பெயர் வருவதற்கு காரணம் – இந்தக் குலத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்துதான் காது குத்துவார்கள். ஆகவே இவர்களுக்குத்தான் காது முழுமையானதாகக் கருதப்படும். எனவே இவர்கள் முழு காது உடையவர்கள் என்ற சிறப்புப் பெற்றவர்கள். இவ்வாறு இந்தக் குலத்தவர்கள் “முழுக்காதன் குலத்தவர்கள்” என்ற சிறப்பைப் பெற்றார்கள்.
இந்தக் குலத்திற்கு குலதெய்வம் வெள்ளையம்மாள் ஆகும். இந்தத் தெய்வத்திற்கு கோவை மாவட்டம் காங்கயம் பக்கத்திலுள்ள காடையூரில் உள்ள பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி இருக்கிறது. ஒவ்வொரு இனத்தவர்களின் குல தெய்வங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும். இந்த வரலாறுகள் கர்ண பரம்பரையாய் வருவன. பல குல வரலாறுகளுக்கிடையே பல சமயங்களில் ஒரே கருத்து காணப்படும். அதே மாதிரி ஒரே குல தெய்வத்தின் வரலாற்றிலும் பல பேதங்கள் இருக்கும். இந்த வரலாறுகளுக்கெல்லாம் ஆதாரம் என்னவென்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. நம்பிக்கையின் அடிப்படையில்தான் இவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காங்கயத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரும் விவசாயிக்கு நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். அந்தப் பெண் பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று அழைத்தார்கள். (மகாபாரதத்தில் பாண்டு மன்னன் பிறக்கும்போதே வெளுத்திருந்தான் என்று படித்திருக்கிறோம்). இன்றும் இவ்வாறான குழந்தைகள் பிறக்கின்றன. அவைகளை “அல்பினோ” என்று கூறுவார்கள். அந்தப் பெண்ணிற்கு மணப்பருவம் நெருங்கியது. பெற்றோரும் உடன் பிறந்தோரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.
அவர்கள் பண்ணையில் மாடு மேய்ப்பதற்காக தூர தேசத்திலிருந்து வந்த ஒருவன் வேலையில் இருந்தான். அவனும் அவர்கள் இனத்தைச் சேர்ந்தவனே. ஆனால் ஏழை.
வெள்ளையம்மாளின் தந்தை அந்த மாடு மேய்ப்பவனுக்கே தன் பெண்ணைக் கட்டிக்கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்.
அவனுடைய ஊருக்குச் சென்று அவனுடைய பெற்றோர்களின் சம்மதம் பெற்றார். திருமணமும் நடந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.
அவளுடைய தமையன்களுக்கும் திருமணம் நடந்து எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். இந்நிலையில் வெள்ளையம்மாளின் தந்தைக்கு அந்திம காலம் நெருங்கியது. அப்போது அவர் தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு, வெள்ளையம்மாளுக்கு ஒரு காணி நிலம் கொடுக்கும்படி கூறிவிட்டு காலமானார்.
வெள்ளையம்மாளின் அண்ணிகளின் துர்ப்போதனையைக் கேட்ட அண்ணன்மார்கள் வெள்ளையம்மாளின் புருஷனை வஞ்சகமாக தனியாக கூட்டிக்கொண்டு போய் கொன்றுவிட்டார்கள். அவன் எங்கோ காணாமல் போய்விட்டான் என்று சொல்லி, வெள்ளையம்மாளின் பேரிலும் பல அவதூறுகளைக் கூறி அவளை வீட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள். அப்போது அவள் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்தாள்.
வெள்ளையம்மாள் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு எங்கு செல்வது என்று தெரியாமல் மனம் போன போக்கில் போகும்போது, ஒரு சர்தார் (அந்நாளைய முஸ்லிம் அரசாங்க உயர் அதிகாரி) குதிரைமேல் வருவதைக்கண்டு அஞ்சி புதரில் ஒதுங்கினாள். சர்தார் இவளைப்பார்த்தவுடன் நின்று விசாரித்து இவளுடைய அனாதை நிலையைக் கண்டு இரங்கினான். “நான் இப்போது வரி வசூலுக்காக அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன். திரும்பி வந்ததும் உன்னுடைய துயர் தீர்க்கிறேன். அதுவரை பக்கத்தில் இருக்கும் கோட்டையில் பத்திரமாக இருப்பாயாக” என்று ஆறுதல் சொல்லி, அவளைக் கோட்டையில் தங்க ஏற்பாடுகள் செய்து விட்டு, வரி வசூலிக்கப் போய்விட்டான்.
சர்தார் திரும்பி வருவதற்கு பல மாதங்கள் ஆகிவிட்டன. இதற்குள் வெள்ளையம்மாளுக்கு நான்காவது மகனும் பிறந்துவிட்டான். சர்தார் வந்த பிறகு வெள்ளையம்மாளைக் கூட்டிக்கொண்டு அவளுடைய அண்ணன்மார் ஊருக்கு வந்தான். அவர்களுடைய அண்ணன்மாரைக் கூப்பிட்டு விவரங்கள் விசாரிக்கும் போது அவளுடைய அண்ணிமார்கள் வெள்ளையம்மாள் பேரில் அடாத பழிகளைச் சுமத்தினார்கள். விபசாரி என்றும் ஏசினார்கள். அவளுடைய அண்ணன்மார்கள் வாய்மூடி மெளனமாக இருந்தார்கள். சர்தார் அவர்களைப் பார்த்து உங்கள் தகப்பனார் வெள்ளையம்மாளுக்கு காணி நிலம் கொடுக்கச் சொன்னது உண்டா இல்லையாவென்று கேட்க, அவர்கள் எங்கள் தந்தை அவ்வாறுதான் கூறிவிட்டு இறந்தார். ஆனால் இப்போது வெள்ளையம்மாள் சாதி கெட்டு வந்திருப்பதால் அவளுக்கு ஒன்றும் கொடுக்க முடியாது என்று வாதிட்டனர்.
இதைக்கேட்ட வெள்ளையம்மாள் நான் கடவுள் சாட்சியாக எந்தத் தப்பும் செய்யவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன் என்று சொன்னாள். அப்போது அவளுடைய அண்ணன்மார்கள் தங்கள் பெண்டாட்டிகளின் பேச்சைக் கேட்டு, வெள்ளையம்மாள் மூன்று சத்தியங்கள் செய்தால் நாங்கள் எங்கள் நிலம் எல்லாவற்றையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்துவிடுகிறோம், அப்படிச் செய்யாவிட்டால் இவள் தீக்குளிக்க வேண்டும் என்று கூறினர். அந்த சத்தியங்கள் என்னவென்றால்:
1. காளைகளை ஏரிலோ அல்லது வண்டியிலோ பூட்டிவதற்கு வெடத்தலாமரத்தில் நுகத்தடி செய்து வைத்திருப்பார்கள். இது நன்கு முற்றி காய்ந்திருக்கும். அந்த நுகத்தடியை மண்ணில் நட்டு தண்ணீர் ஊற்றினால் அது துளிர் விடவேண்டும்.
2. அந்த ஊர்க்கோவிலில் நிறுத்தியிருக்கும் மண் குதிரைக்கு நண்ணீர் தெளித்தால் அது தலையைக் குலுக்கி கனைக்கவேண்டும்.
3. இதற்கு வேண்டிய தண்ணீரை சுடாத பச்சை மண் குடத்தில் எடுத்து வரவேண்டும். அப்போது அந்த மண்குடம் கரையாமல் இருக்க வேண்டும்.
இதைக்கேட்ட சர்தார் வெள்ளையம்மாளிடம் இவர்கள் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீ இதற்கு ஒப்புக்கொள்ளாதே என்று கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ, நான் பதிவிரதை, நான் இந்தச் சத்தியங்களைச் செய்வேன் என்று கூறினாள். அவ்வாறே ஒரு நுகத்தடி நடப்பட்டது. பச்சை மண் குடமும் கொண்டுவரப்பட்டது. வெள்ளையம்மாள் கோவில் குளத்திலிருந்து அந்தக் குடத்தில் நீர் கொண்டு கொண்டு வந்தாள். குடம் கரையாமல் நின்றது. அந்தக் குடத்தில் இருந்து தண்ணீரை நுகத்தடிக்கு ஊற்ற அந்த நுகத்தடியில் தளிர்கள் துளிர்த்தன. மீதம் இருந்த தண்ணீரை அங்கிருந்த மண் குதிரை மேல் தெளிக்க, அந்தக் குதிரை தலையை ஆட்டி கனைத்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிசயப்பட்டுப் போனார்கள். வெள்ளையம்மாளின் அண்ணன்மார்கள் நால்வரும் சர்தாரிடம் வந்து எங்கள் சொத்து முழுவதையும் வெள்ளையம்மாளுக்கே கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டு ஊரைவிட்டே போய்விட்டார்கள். சர்தாரும் வெள்ளையம்மாளுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு தன் ஊருக்குப் போனார்.
வெள்ளையம்மாள் பல காலம் தன் மக்களுடன் வாழ்ந்து விட்டு பின் தெய்வமானாள். அவளுடைய வம்சாவளிதான் தற்காலத்தில் முழுக்காதன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.
Nalla pakivu... oru varalarai arinthu kondeaan.
பதிலளிநீக்குகுல தெய்வ வரலாறு அருமையாக இருந்தது,,,,
பதிலளிநீக்குஎங்கள் ஓதாலன் குல வரலாறு தெரிந்தால் அதையும் கூறவும், உங்கள் பதிவு பணி தொடரட்டும்,,, வாழ்த்துக்கள்............
அன்புள்ள ஐயா! வணக்கம் கொங்கு மண்ணின் வாசம் வீசும் இந்த பதிவு "படிப்பதற்கே அருமையாக உள்ளது" வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குகறி திங்கிர முழுக்காதன், கறி திங்காத முழுக்காதன் அப்படின்னு உட்பிரிவு இருக்குதே அதையும் சொல்லுங்கண்ணா:))
பதிலளிநீக்கு//நிகழ்காலத்தில்... said...
பதிலளிநீக்குகறி திங்கிர முழுக்காதன், கறி திங்காத முழுக்காதன் அப்படின்னு உட்பிரிவு இருக்குதே அதையும் சொல்லுங்கண்ணா:))//
நடைமுறையில் அந்த மாதிரி பழக்கங்கள் இருக்கிறது. ஆனால் எல்லோரும் ஒரே குலம்தான். ஒரே குலதெய்வம்தான். இன்று கறி தின்பவர்கள் நாளை மாறலாம். ஆகவே இது ஒரு பழக்கம் மட்டுமே.
கொங்கு வெள்ளாளர் மரபில் மாமிச உணவு பழக்கம் கிடையாது.. பல சான்றுகள் உண்டு.. பலி பூசைகளின் கறியும் நம் குடிபடைகளுக்கே.. நம் காநியாச்சிகளோ, கடவுளான நம் முன்னோர்களுக்கோ நாம் பலி தருவது அல்ல.. மூலவரின் கணந்ககளுக்குதான் பலி.. அதுதான் கணபூசை...
நீக்கு//! ஸ்பார்க் கார்த்தி @ said...
பதிலளிநீக்குகுல தெய்வ வரலாறு அருமையாக இருந்தது,,,,
எங்கள் ஓதாலன் குல வரலாறு தெரிந்தால் அதையும் கூறவும், உங்கள் பதிவு பணி தொடரட்டும்,,, வாழ்த்துக்கள்.......//
உங்க ஓதாலன் குல வரலாறு எனக்குத் தெரியலீங்களே, மாப்பிள்ள. உங்க குலத்தில இருக்கிற பெரியவங்க யாரையாச்சும் கேளுங்க.
//!! அய்யம்மாள் !! said...
பதிலளிநீக்குஅன்புள்ள ஐயா! வணக்கம் கொங்கு மண்ணின் வாசம் வீசும் இந்த பதிவு "படிப்பதற்கே அருமையாக உள்ளது" வாழ்த்துக்கள்//
வருக, கருத்துக்கு நன்றி.
கீழ பார்த்தீங்கன்னா, எல்லா கூட்டத்தையும் ஒண்ணா கொங்கு வேளாளர்கள்னு வகைப்படுத்தியிருக்கு. ஆனா, அரசு Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar, Thondu Vellalar, Pala Gounder, Poosari Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pallavellala Gounder, Sanku Vellala Gounder and Rathinagiri Gounder வகைப்படுத்தியிருக்குங்க ஐயா?
பதிலளிநீக்குஇந்த வகைக்கும், கீழே உள்ள பிரிவுக்கும் என்ன சம்பந்தம்?
பால வெள்ளாள கவுண்டர்கள் கொங்கு வெள்ளாளரில் சேர்த்திதானே?
//
கொங்கு வேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 141 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ம் நுற்றாண்டுக்குரியது. இதில் 141 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம். அவை,
1.அகினி
2.அந்துவன்
3.அனஙன்
4.அழகன்
5.ஆடை
6.ஆதி
7.ஆதித்ர்ய கும்பன்
8.ஆதிரை
9.ஆந்தை
10.ஆரியன்
11.ஆவன்
12.இந்தரன்
13.ஈன்சென்
14.உவனன்
15.என்னை
16.ஓதாலர்
17.ஒழுக்கர்
18.கடுந்துவி
19.கண்ணன்
20.கம்பன்
21.கருன்கண்ணன்
22.கலிஞி
23.கன்னாந்தை
24.கனவாலன்
25.காடன்
26.காடை
27.காரி
28.காவலன்
29.கிளியன்
30.கீரன்
31.குண்குலி
32.குண்டலி
33.குமராந்தை
34.குயிலன்
35.குருப்பன்
36.குழயான்
37.குனியன்
38.குனுக்கன்
39.கூரை
40.கொட்டாரர்
41.கொட்ராந்தை
42.கோடரஙி
43.கோவர்
44.கோவேந்தர்
45.கௌரி
46.சத்துவராயன்
47.சனகன்
48.சாத்தாந்தை
49.செங்கன்னன்
50.செங்குன்னி
51.செம்பூத்தான்
52.செம்பொன்
53.செம்வன்
54.செல்லம்
55.செல்லன்
56.செவ்வயன்
57.சேடன்
58.சேரலன்
59.சேரன்
60.சேவடி
61.சிலம்பன்
62.சுரபி
63.சூரியன்
64.சூலன்
65.சோதி
66.சோமன்
67.செளரியன்
68.தவளையன்
69.தளிஞ்சி
70.தன்டுமன்
71.தனக்கவன்
72.தனவந்தன்
73.தனசயன்
74.தூரன்
75.தேமான்
76.தேவேந்தரன்
77.தொரக்கன்
78.தோடை
79.நந்தன்
80.நாரை
81.நீருன்னி
82.நீலன்
83.நெட்டைமணியன்
84.நெய்தாலி
85.நெரியன்
86.ப்ரம்மன்
87.பஞ்சமன்
88.படுகுன்னி
89.பதுமன்
90.பயிரன்
91.பரதன்
92.பவளன்
93.பன்னன்
94.பன்னை
95.பனங்காடன்
96.பனையன்
97.பாண்டியன்
98.பாதாரய்
99.பாம்பன்
100.பாமரன்
101.பாலியன்
102.பானன்
103.பிள்ளன்
104.புதன்
105.புன்னை
106.பூச்சாதை
107.பூசன்
108.பூதியன்
109.பெரியன்
110.பெருங்குடி
111.பைதாலி
112.பொடியன்
113.பொருள்தந்தான்
114.பொன்னன்
115.மணியன்
116.மயிலன்
117.மழ்உழகர்
118.மாடை
119.மாதமன்
120.மாதுலி
121.மாவலர்
122.மீனவன்
123.முக்கண்ணன்
124.முத்தன்
125.முழுகாதன்
126.முனைவீரன்
127.மூரியன்
128.மூலன்
129.மெதி
130.மொய்ம்பன்
131.வணக்கன்
132.வாணன்
133.விரதன்
134.விரைவுளன்
135.வில்லி
136.விளியன்
137.விளோசனன்
138.வெந்தை
139.வெந்துவன்
140.வெளம்பன்
141.வெளையன்
என்பனவாகும்.
செல்லன், விழியன், கண்ணன், பனையன், மணியன் குலத்தவர்களில் சிலர் மட்டும் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து பின்னாளில் கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக்கவுண்டர்) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குலப்பிரிவு,
1.பருத்திப்பள்ளி செல்லன் குலம்
2.ராசிபுரம் விழியன் குலம்
3.மல்லசமுத்திரம் விழியன் குலம்
4.திண்டமங்கலம் விழியன் குலம்
5.மோரூர் கண்ணன் குலம்
6.மொளசி கண்ணன் குலம்
7.வெண்ணந்தூர் கண்ணன் குலம்
8.ஏழூர் பண்ணை குலம்
9.வீரபாண்டி மணியன் குலம்
என்று அழைக்கப்படுகிறது.
//
அண்ணா...வணக்குமுங்க..நான் உங்க பங்காளிதானுங்கோ..ஆடி மாதம் முழுக்காத கல்யாணம் ஏதுமில்லைங்களா..
பதிலளிநீக்குஐயா நான் தங்களின் முழுக்காதன் குல வரலாறு படித்தேன் .மிகவும் அருமை.நான் பொருள்தந்தான் குலத்தை சேர்ந்தவன் (சென்னிமலை அருகே உள்ள பிடாறியூர் தம்பிராட்டி அம்மன் ).எங்களுடைய குல தெய்வ வரலாறு புத்தகத்தில் வெள்ளையம்மாள் சம்பந்தமான வரலாறு உள்ளது.பொருள்தந்தான் குலம் - முழுக்காதன் குலம் நேரடியான தொடர்பு என்ன?
பதிலளிநீக்குcivilnagu10@gmail.com
//Nagu said...
பதிலளிநீக்குஐயா நான் தங்களின் முழுக்காதன் குல வரலாறு படித்தேன் .மிகவும் அருமை.நான் பொருள்தந்தான் குலத்தை சேர்ந்தவன் (சென்னிமலை அருகே உள்ள பிடாறியூர் தம்பிராட்டி அம்மன் ).எங்களுடைய குல தெய்வ வரலாறு புத்தகத்தில் வெள்ளையம்மாள் சம்பந்தமான வரலாறு உள்ளது.பொருள்தந்தான் குலம் - முழுக்காதன் குலம் நேரடியான தொடர்பு என்ன?
civilnagu10@gmail.com//
இதைப் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் என்னிடம் இல்லை. ஆனால் நடைமுறையில் இரண்டு குலமும் ஒன்றாகவே கருதப்படுகின்றது. இரண்டு குலத்தவர்களும் அண்ணன் தம்பிகளாகவே கருதப்படுகிறார்கள். கொள்வினை, கொடுப்பினை கிடையாது. இந்தப் பகுதியில் உள்ள இருவரும் ஒரே குலதெய்வத்தைத்தான் வணங்குகிறார்கள்.
ஏன் இரண்டு குலப் பெயர்கள் ஏற்பட்டன என்று எனக்குத் தெரியாது.
வணக்கம் ஐயா , நான் பால வெள்ளாள பிரிவை சார்ந்தவன். காணியாள கவுண்டர் என்று அழைக்கப்படும் பிரிவு பால வெள்ளாளர் பிரிவை சார்ந்ததா? எங்கள் பிரிவை சார்ந்தவர்கள் வேறு பிரிவில் பெண் எடுக்க/கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இதில் ஏதும் வரலாற்று காரணம் அடங்கி உள்ளதா ?
பதிலளிநீக்குஇப்படிக்கு சு.பொ.விஜயகுமார்
//Vijayakumar said...
பதிலளிநீக்குவணக்கம் ஐயா , நான் பால வெள்ளாள பிரிவை சார்ந்தவன். காணியாள கவுண்டர் என்று அழைக்கப்படும் பிரிவு பால வெள்ளாளர் பிரிவை சார்ந்ததா? எங்கள் பிரிவை சார்ந்தவர்கள் வேறு பிரிவில் பெண் எடுக்க/கொடுக்க அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இதில் ஏதும் வரலாற்று காரணம் அடங்கி உள்ளதா ?
இப்படிக்கு சு.பொ.விஜயகுமார்//
கவுண்டர்களில் நடைமுறையில் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. காணியாளக் கவுண்டர் என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
இந்த உட்பிரிவுகள் தேவையில்லை என்பது என் கருத்து. ஆனால் இதை நடைமுறைப் படுத்த யாரும் முயற்சி எடுக்க மாட்டார்கள்.
கல்யாணங்கள் பல காரணங்களுக்காக சொந்தம் அல்லது தங்கள் இனத்துக்குள்ளேயே இன்றும் நடைபெறுகின்றன. இவை மாறுவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும்.
வணக்கம் அய்யா இணையதலத்தில் வழம் வருகையில் சில செய்திகள் கிடைத்தன . அந்த இணையதளத்தின் முகவரியை கீழே இணைத்துள்ளேன். தங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன் http://kongupattakarars.blogspot.com/
பதிலளிநீக்கு@ Vijayakumar
பதிலளிநீக்குநான் பால வெள்ளாள கவுண்டர் இனத்தை சார்ந்தவன். உங்கள் கேள்வியை என் அம்மாவிடம் கேட்டதற்கு, காணியாள கவுண்டர் என்ற சொல் நிறைய நிலபுலன் வைத்திருப்பவர்களை அல்லது ஊர் கவுண்டர்களை குறிப்பதாக இருக்கும் என்று கூறினார். என் சொந்தங்களில் ஊர் கவுண்டர்களாக இருக்கும் சிலரை காணியாள கவுண்டர் என்று இன்றும் அழைக்கிறார்கள் என்ற தகவலையும் கூறினார். என்னுடைய அலைபேசி எண் - 98941 00608 .
மதிப்பிற்குரிய அய்யா , ஆனால் புலவர் இராசு அவர்களின் ' கொங்கு குல மகளிர் ' நூலிலே வெள்ளயம்மாளுக்கு 4 குழந்தைகள் என்று எழுதி இருக்கிறாரே. சிறிது தெளிவுபடுத்த இயலுமா?
பதிலளிநீக்குகாடையூர் பொருளந்தை கூட்டத்துக்கு முழுக்காது என்ற அடைமொழி உள்ளது. அதனால் "முழுக்காது பொருளந்தை" என்று அழைக்கப்படுகின்றனர். பொருளந்தை குலத்தார் சிலர் தங்களை பிரழந்தை என்றும் பிராந்தை என்றும் கிண்டல் செய்ததால் பொருள் தந்த குலம்ன்னு மாத்திட்டாங்க 19ஆம் நூற்றாண்டில். ஆனால் கல்வெட்டுகளில் பொருளந்தை என்றே வரும். காடையூர் கடையீஸ்வரர் கோயிலில் கி.பி.1170, மற்றும் 1263 ஆம் ஆண்டுகளில் வெள்ளாளர் பொருளந்தை கூட்டத்தினர் திருப்பணி செய்த கல்வெட்டுகள் உள்ளது. ஆக, பொருளந்தை என்பதே கூட்ட பெயர். பொருள்தந்த என்பது நாகரிக திரிபு. முழுக்காது என்பது அடைமொழி. ஆக பொருளந்தை என்ற சங்க கால பெயரை மட்டும் உபயோகிக்கவும். சிலர் முழுக்காது குலம் வேறு, பொருளந்தை வேறு என அறியாமயில் கூறி வருகின்றனர். மேலும், திருமண விஷயத்தில் குழம்பி பங்காளி களுக்குள் திருமணம் செய்ய முற்படும் அனந்தம் கூட நடைபெற்றுள்ளது. இது போல் குழப்பம் இல்லாமல் காடையூர் கோயிலை சேர்ந்தோர் "முழுக்காது பொருளந்தை" என அழையுங்கள். நன்றி.
பதிலளிநீக்குவணக்கம்.. வெள்ளையம்மாளுக்கு முஸ்லீம் சர்தார் செய்த உதவிக்காக, அந்த சமுதாயத்திற்கு நன்றிக்கடனாக ஒன்றைச்செய்கிறார்கள். அது என்னவென்றால் முழுக்காதன் குலத்தினர் தங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை, அக்குழந்தைகளுக்கு காது குத்தாமல் முஸ்லீம் சமுதாயக்குழுந்தையாக அக்குழந்தைகள் இருக்கும். முஸ்லீம் சமுதாயத்தில் எப்படி சுன்னத்செய்தபிறகு அந்தக்குழந்தை முஸ்லீமாக மாறுகிறது. அது போலவே அந்த இரண்டு குழந்தைகளுக்கும் காதுகுத்தி, அப்பா அம்மா இருவரும் முழுக்காதன் சீர் செய்கிறார்கள். அதன் பின் தான் அந்த குழந்தைகள் இந்துக்குழந்தைகளாக மாற்றம் பெறுகிறார்கள். ஒரு சிலருக்கு ஒரு குழந்தை மட்டுமே இருக்கும். அப்போது அந்தக்குழந்தையின் கையில் ஒரு வேலைக்கொடுத்து(அது ஒரு குழந்தை)பின் சீர் செய்வார்கள்.. இந்த முழுக்காதன் சீர் மற்றும் எழுதிங்கள் சீர் செய்த பின் தான் அந்த அப்பா-அம்மா இருவருமே திருமணங்களில் அருமை எடுக்கமுடியும். இவர்களை அருமைக்காரர்கள் அல்லது சீர்க்காரர்கள் என அழைப்பார்கள். கொங்கு திருமணங்களில் , ஐயர் இருந்தாலும் மணமகன் கையில் மாங்கல்யத்தை இந்த அருமைக்காரர் தான் எடுத்துக்கொடுப்பார். கொங்கு வேளார்களில் ,ஐயர் திருமணத்தை நடத்தும் பழக்கம் முன்பு இல்லை. சமீப ஆண்டுகளில் தான் ஐய்யரை வைத்து திருமணம் நடத்தும் வழக்கத்தை யாரோ ஏற்படுத்த அதையே இன்று எல்லோரும் தொடருகிறார்கள்..எனது திருமணத்தில் ஐயர் கிடையாது..
பதிலளிநீக்கு