சுய உதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுய உதவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 அக்டோபர், 2016

சுயமாக முடி வெட்டிக் கொள்ளல்

                                     Image result for self hair cutting


நான் சிறுவனாக இருந்தபோது இப்போது உள்ளது  போல் முடி வெட்டும் கடைகள் இருக்கவில்லை. ஒரு தெரு முனையில் நாலைந்து நாவிதர்கள் தங்கள் உபகரணங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். (கவுண்டமணி ஒரு ஜோக்கில் ஆற்றிற்குள் ஒரு பெட்டியைத் தூக்கி எறிவாரே, அந்த மாதிரிப் பெட்டி)

நாம் போய் கூப்பிட்டால் நம்முடன் நம் வீட்டிற்கு வருவார்கள். வீட்டு வாசலில் ஒரு ஓரமாக உட்கார்ந்து நமக்கு முடி வெட்டிவிட்டு, அந்த வெட்டின முடிகளை எல்லாம் எடுத்து தூரமாகப் போட்டு விட்டு, நாலணா, அதாவது இன்றைய கணக்கில் இருபத்தியைந்து பைசா வாங்கிக்கொண்டு போவார்கள்.

பிறகு நாம் குளித்து விட்டுத்தான் வீட்டுக்குள் போகவேண்டும். அந்த நாளைய வழக்கங்கள் அப்படித்தான் இருந்தன. பிறகு முடி வெட்டும் கடைகள் உருவாகின. எல்லோரும் அங்குதான் சென்று முடி வெட்டிக்கொள்ளவேண்டும் என்கிற நிலை உருவாகியது. இருந்தாலும் சில பணக்காரர்களின் வீட்டுக்கு நாவிதர்கள் போவது வழக்கத்தில் இருந்தது. இந்த வழக்கம் இன்றும் சில கிராமங்களில் இருக்கிறது.

நானும் சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். கடைசியாக வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சலூனுக்கு ஒரு இருபது வருடமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது முடி வெட்ட எங்கள் ஊரில் எண்பது ரூபாய் வாங்குகிறார்கள். தீபாவளி சமயத்தில் இது நூறு ரூபாயாக உயரும்.

இங்கு உள்ள முக்கிய உபகரணங்கள் இரண்டே. கத்தரிக்கோலும் சீப்பும். இந்த இரண்டை உபயோகித்தே நாவிதர் உங்களுக்கு முடி வெட்டி விடுவார்.

Image result for சீப்பு
Image result for scissors cutting hair

முன்பெல்லாம் என் தலையில் முடி அடர்த்தியாக இருந்தது. வரவர முடியெல்லாம் கொட்டிப்போய் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிகள் இருக்கின்றன. இப்போதும் என்னிடம் அந்த நாவிதர் அதே சார்ஜ்  வாங்குகிறார்.

முடி நிறைய இருப்பவர்களிடம் வாங்கும் அதே ரேட்டை என்னிடமும் வாங்குகிறாயே, என் தலையில்தான் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே முடிகள் இருக்கின்றன, ரேட்டில் கொஞ்சம் குறைத்துக்கொள்ளக் கூடாதா என்று ஒரு நாள் கேட்டேன்.

அந்த நாவிதர் அதற்குக் கூறிய பதிலில் நான் அசந்து விட்டேன். "சார், நியாயமாக உங்களிடம் நான் அதிக ரேட் வாங்கவேண்டும். ஏனென்றால் முடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் அவைகளைத் தேடிப்பிடித்து வெட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு அதிக நேரம் செலவாகிறது. அதனால் இனிமேல் உங்களிடம் அதிக சார்ஜ் வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

அப்படியா என்று அன்று வீட்டிற்கு வந்த பிறகு அவன் சொன்னதைப் பற்றி யோசித்தேன். நாம் ஏன் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். இருப்பதோ கொஞ்சம் முடிகள்தான். அவைகளை நானே ஏன் வீட்டிலேயே வெட்டிக்கொள்ளக்கூடாது என்று ஒரு யோசனை தோன்றியது. இப்போது நாம் சுயமாகத்தானே ஷேவிங்க் செய்து கொள்கிறோம். பின் ஏன் சுயமாக முடி வெட்டிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. அமெரிக்காவில் இப்படித்தான் சுயமாக முடி வெட்டிக்கொள்வார்களாமே என்று எங்கோ படித்ததும் நினைவிற்கு வந்தது. உடனே செயலில் இறங்கினேன்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். "கண் பார்த்தால் கை செய்ய வேண்டும் " என்பார்கள். எத்தனை வருடமாக நான் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொண்டிருக்கிறேன்? வேண்டியதெல்லாம் ஒரு சீப்பும் ஒரு கத்தரிக்கோலும்தானே என்று அடுத்த தடவை நானே முடி வெட்டிக்கொண்டு விட்டேன்.

என்ன, ஆங்காங்கே எலி கரண்டினமாதிரி திட்டுத்திட்டாய் இருந்தது.
இரண்டு நாள் வெளியில் தலை காட்டவில்லை. மூன்றாவது நாள் கண்ணாடியில் பார்த்தேன். அதிக மோசமாகத் தெரியவில்லை. தைரியமாக வெளியில் நண்பர்களப் பார்க்க கிளம்பினேன். என்னைப் பார்த்த நண்பர்கள் என் தலையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆஹா, நம் முயற்சி வெற்றி என்று எண்ணிக்கொண்டேன். இனி இதுவே நம் வழக்கமாக வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்தேன்.

அமேசான் தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த டிரிம்மர் கண்ணில் பட்டது. ஆஹா, இதை வாங்கி வைத்துக் கொண்டால் நம் முயற்சிக்குத் துணையாக இருக்குமே என்று மனதிற்குத் தோன்றியது.
Image result for self hair cutting
உடனே இதை 1500 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டேன். பரீட்சித்துப் பார்த்ததில் உபயோகமாக இருந்தது.

பிறகு இன்னுமொரு யோசனை தோன்றியது. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று தோன்றியது. ஆகவே சுயமாக முடி வெட்டிக்கொள்ளும் யோசனை யாருக்காவது இருந்தால் அவர்களுக்கு இலவசமாக கோச்சிங் வகுப்புகள் நடத்துவதாக முடிவு செய்துள்ளேன். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.