வியாழன், 27 அக்டோபர், 2016

சுயமாக முடி வெட்டிக் கொள்ளல்

                                     Image result for self hair cutting


நான் சிறுவனாக இருந்தபோது இப்போது உள்ளது  போல் முடி வெட்டும் கடைகள் இருக்கவில்லை. ஒரு தெரு முனையில் நாலைந்து நாவிதர்கள் தங்கள் உபகரணங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். (கவுண்டமணி ஒரு ஜோக்கில் ஆற்றிற்குள் ஒரு பெட்டியைத் தூக்கி எறிவாரே, அந்த மாதிரிப் பெட்டி)

நாம் போய் கூப்பிட்டால் நம்முடன் நம் வீட்டிற்கு வருவார்கள். வீட்டு வாசலில் ஒரு ஓரமாக உட்கார்ந்து நமக்கு முடி வெட்டிவிட்டு, அந்த வெட்டின முடிகளை எல்லாம் எடுத்து தூரமாகப் போட்டு விட்டு, நாலணா, அதாவது இன்றைய கணக்கில் இருபத்தியைந்து பைசா வாங்கிக்கொண்டு போவார்கள்.

பிறகு நாம் குளித்து விட்டுத்தான் வீட்டுக்குள் போகவேண்டும். அந்த நாளைய வழக்கங்கள் அப்படித்தான் இருந்தன. பிறகு முடி வெட்டும் கடைகள் உருவாகின. எல்லோரும் அங்குதான் சென்று முடி வெட்டிக்கொள்ளவேண்டும் என்கிற நிலை உருவாகியது. இருந்தாலும் சில பணக்காரர்களின் வீட்டுக்கு நாவிதர்கள் போவது வழக்கத்தில் இருந்தது. இந்த வழக்கம் இன்றும் சில கிராமங்களில் இருக்கிறது.

நானும் சலூனுக்குப் போய் முடி வெட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். கடைசியாக வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சலூனுக்கு ஒரு இருபது வருடமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது முடி வெட்ட எங்கள் ஊரில் எண்பது ரூபாய் வாங்குகிறார்கள். தீபாவளி சமயத்தில் இது நூறு ரூபாயாக உயரும்.

இங்கு உள்ள முக்கிய உபகரணங்கள் இரண்டே. கத்தரிக்கோலும் சீப்பும். இந்த இரண்டை உபயோகித்தே நாவிதர் உங்களுக்கு முடி வெட்டி விடுவார்.

Image result for சீப்பு
Image result for scissors cutting hair

முன்பெல்லாம் என் தலையில் முடி அடர்த்தியாக இருந்தது. வரவர முடியெல்லாம் கொட்டிப்போய் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக முடிகள் இருக்கின்றன. இப்போதும் என்னிடம் அந்த நாவிதர் அதே சார்ஜ்  வாங்குகிறார்.

முடி நிறைய இருப்பவர்களிடம் வாங்கும் அதே ரேட்டை என்னிடமும் வாங்குகிறாயே, என் தலையில்தான் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே முடிகள் இருக்கின்றன, ரேட்டில் கொஞ்சம் குறைத்துக்கொள்ளக் கூடாதா என்று ஒரு நாள் கேட்டேன்.

அந்த நாவிதர் அதற்குக் கூறிய பதிலில் நான் அசந்து விட்டேன். "சார், நியாயமாக உங்களிடம் நான் அதிக ரேட் வாங்கவேண்டும். ஏனென்றால் முடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் அவைகளைத் தேடிப்பிடித்து வெட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு அதிக நேரம் செலவாகிறது. அதனால் இனிமேல் உங்களிடம் அதிக சார்ஜ் வாங்கலாம் என்று இருக்கிறேன்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

அப்படியா என்று அன்று வீட்டிற்கு வந்த பிறகு அவன் சொன்னதைப் பற்றி யோசித்தேன். நாம் ஏன் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். இருப்பதோ கொஞ்சம் முடிகள்தான். அவைகளை நானே ஏன் வீட்டிலேயே வெட்டிக்கொள்ளக்கூடாது என்று ஒரு யோசனை தோன்றியது. இப்போது நாம் சுயமாகத்தானே ஷேவிங்க் செய்து கொள்கிறோம். பின் ஏன் சுயமாக முடி வெட்டிக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. அமெரிக்காவில் இப்படித்தான் சுயமாக முடி வெட்டிக்கொள்வார்களாமே என்று எங்கோ படித்ததும் நினைவிற்கு வந்தது. உடனே செயலில் இறங்கினேன்.

எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். "கண் பார்த்தால் கை செய்ய வேண்டும் " என்பார்கள். எத்தனை வருடமாக நான் சலூனுக்குப் போய் முடி வெட்டிக்கொண்டிருக்கிறேன்? வேண்டியதெல்லாம் ஒரு சீப்பும் ஒரு கத்தரிக்கோலும்தானே என்று அடுத்த தடவை நானே முடி வெட்டிக்கொண்டு விட்டேன்.

என்ன, ஆங்காங்கே எலி கரண்டினமாதிரி திட்டுத்திட்டாய் இருந்தது.
இரண்டு நாள் வெளியில் தலை காட்டவில்லை. மூன்றாவது நாள் கண்ணாடியில் பார்த்தேன். அதிக மோசமாகத் தெரியவில்லை. தைரியமாக வெளியில் நண்பர்களப் பார்க்க கிளம்பினேன். என்னைப் பார்த்த நண்பர்கள் என் தலையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆஹா, நம் முயற்சி வெற்றி என்று எண்ணிக்கொண்டேன். இனி இதுவே நம் வழக்கமாக வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்தேன்.

அமேசான் தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது இந்த டிரிம்மர் கண்ணில் பட்டது. ஆஹா, இதை வாங்கி வைத்துக் கொண்டால் நம் முயற்சிக்குத் துணையாக இருக்குமே என்று மனதிற்குத் தோன்றியது.
Image result for self hair cutting
உடனே இதை 1500 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டேன். பரீட்சித்துப் பார்த்ததில் உபயோகமாக இருந்தது.

பிறகு இன்னுமொரு யோசனை தோன்றியது. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று தோன்றியது. ஆகவே சுயமாக முடி வெட்டிக்கொள்ளும் யோசனை யாருக்காவது இருந்தால் அவர்களுக்கு இலவசமாக கோச்சிங் வகுப்புகள் நடத்துவதாக முடிவு செய்துள்ளேன். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

24 கருத்துகள்:

  1. // ஆகவே சுயமாக முடி வெட்டிக்கொள்ளும் யோசனை யாருக்காவது இருந்தால் அவர்களுக்கு இலவசமாக கோச்சிங் வகுப்புகள் நடத்துவதாக முடிவு செய்துள்ளேன். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.//

    ஐயா. கேட்கவே மகிழ்ச்சியாய் இருக்கிறது.என்னைப்போல் வெளியூரில் உள்ளவர்களுக்கு ‘தொலைதூரக் கல்வி’ போல் அஞ்சலில் கோச்சிங் வகுப்புகள் நடத்த எண்ணம் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியூர் அன்பர்களுக்கு நேரில் வந்தே கோச்சிங்க் செய்யப்படும். போகவர செலவு, தங்கும் செலவு மட்டும் கொடுத்தால் போதும்.

      நீக்கு
  2. trimmer இருந்தாலும் முதுகு பக்கம் வெட்டுவதற்கு யாருடைய உதவியாவது தேவை. ஆகவே கவனம் தேவை. trimmer என்பது ஒரு சின்ன lawwn mower தான்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. ஒரு வேளை நீங்கள் வருகிறார்வர்களுக்கு மொட்டை அடித்துவிட்டால் என்ன செய்வது அதனால் இனிம உங்ககிட்ட வருகிறவர்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  4. சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ள பலர் இதுபோல தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் வீட்டில் தாங்களேதான் முடிவெட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என நானும் கேள்விப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர்களின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தி வருகிறார்கள்.

    முடி அடர்த்தியாக இருந்தால் அறுவடை செய்வது எளிது. இன்று நம்மைப் போல உள்ளவர்களுக்கு, ஆங்காங்கே மட்டும் உள்ள முடிகளைத் தேடித்தேடி வெட்டுவதில் சிரமம் அதிகம். அதனால் அதற்கு ரேட்டும் அதிகம் என்ற நகைச்சுவையை நான் பின்னூட்டத்தில் சொல்லலாம் என நினைத்தேன். நீங்களே அதனை எழுதிவிட்டீர்கள்.

    மிகவும் பயனுள்ள ’தலை சிறந்த’ பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. "வேண்டியதெல்லாம் ஒரு சீப்பும் ஒரு கத்தரிக்கோலும்தானே என்று அடுத்த தடவை நானே முடி வெட்டிக்கொண்டு விட்டேன்"...இது practical இல்லை ..நமக்கு நாமே முடி வெட்டிக்க்கொள்ள சரியாக வராது ..உங்களுக்கு உங்கள் நண்பரும் ,அவருக்கு நீங்களுமாக ..முடி வெட்டிக்க்கொள்வதே நடைமுறைக்கு உதவும் !....

    மாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கடந்த இரு முறையாக நானேதான் முடி வெட்டிக்கொள்கிறேன். முதலில் கொஞ்சம் கஷ்டம்தான். பழகப் பழக சரியாகிவிடும். சலூனில் அந்தப் போர்த்தும் துணிதான் முக்கியமாக என்னை இந்த முடிவிற்குத் தூண்டியது.

      நீக்கு
  6. சின்ன வயதில் ,முடி வெட்டும் போது கரக் கரக் என்று ஒரு சின்ன டிராக்டரை தலையில் ஓட்டுவார்கள் ,அது உங்களிடம் இருக்கா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது இல்லாமயா? சின்னது ஒண்ணு பெரிசு ஒண்ணு அமேசான்ல வாங்கிட்டேன்ல!

      நீக்கு
  7. நீங்கள் பெற்ற பயனை அனைவரும் அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.தம3

    பதிலளிநீக்கு
  8. காந்தி ஒரு முறை தனக்கு தானே முடி வெட்டிக்கொல் முயற்சித்து தோல்வியிற்று அதனை கைவிட்டார் என்று எப்போதோ படித்த நினைவு இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கு மிக்க நன்றி, முரளிதரன். ஆகவே நானும் உலகப் புகழ் பெற்றவர்களின் பாதையில்தான் நடக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். காந்தி கைவிட்டு விட்டார். நான் விடமாட்டேன்.

      நீக்கு
  9. உங்கள் கருத்தை உள்ளிடுக...யோசனைக்கு நன்றி! எங்க.ஊரில் 100/ரூபாய் வாங்குறார்கள்..எனக்கு அறிவுதான் வளறமாட்டேன்கிறது முடியாவது வளர்கிறதே என்ற பெருமையில் முடி வெட்டிக் கொள்வதில்லை அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை. ஏதாவது ஒன்று வளர்ந்தால் சரி. ஆனாலும் இப்போது முடி மிகவும் நீளமாக இருக்குமே. தலை வாருவது கடினமாச்சே?

      நீக்கு
  10. சார்...100 ரூபாய் செலவு செய்யாமல் சேமிக்க அந்த பார்பர் ஷாப் பையன் தொழிலில் கை வைக்கிறீங்களே! இப்படி எல்லாரும் மற்றவர்கள் தொழிலைப் பண்ண ஆரம்பித்தால் உலகம் என்னத்துக்கு ஆகும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உலகம் மாறி வருவதை நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். பத்து வருடத்திற்கு முன்பு கோவையில் வெளி மாநிலத்துக்காரர்களைப் பார்ப்பது அரிது. இப்போது முக்கிய தொழில்களான கட்டுமானப் பணி, ஓட்டல் தொழில், பலசரக்கு வியாபாரம், மற்றும் பல தொழில்களில் பீகார், உத்திரப் பிரதேச தொழிலாளர்கள்தான் மிகுந்திருக்கிறார்கள். முன்பு இந்த வேலைகளைச் செய்து வந்த உள்ளூர் தொழிலாளர்கள் என்னவானார்கள் என்று தெரியவில்லை.

      முன்பு துணி வெளுப்பாளர்கள் என்று ஒரு குரூப் இருந்தது. வீட்டிற்கு வந்து துணிகளை எடுத்துப் போய் துவைத்து இஸ்திரி போட்டுத் திரும்பக் கொண்டு தருவார்கள். இப்போது அந்த மாதிரி தொழிலாளர்கள் காணாமல் போனார்கள்.

      அதே மாதிரி இன்னும் கொஞ்ச நாளில் இந்த சலூன்களெல்லாம் காணாமல் போகும். அதற்குப் பதிலாக பியூட்டி பார்லர்கள் என்ற அமைப்புகள்தான் இருக்கும். அங்கு மேல்தட்டு மக்கள்தான் சென்று முடி அலங்காரம் செய்து கொள்ள முடியும். சாதாரண ஜனங்களுக்கு முடி வெட்ட ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

      உலகம் என்ன ஆகும் என்கிற கவலை வேண்டாம். அது நன்றாகவே இருக்கும்.

      நீக்கு
  11. https://www.facebook.com/sundaresan.gangadharan/posts/1884972241721573

    தயவுசெய்து மேற்படி இணைப்பில் உள்ள வீடியோவையும், அதற்கு நான் எழுதியுள்ள கமெண்ட்ஸ்ஸையும் படித்துபார்க்கவும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப.கந்தசாமி ஞாயிறு, 30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:44:00 IST


      //இணைப்பு கிடைக்கவில்லையே?//

      மெயில் மூலம் மீண்டும் இணைப்பினை அனுப்பி வைக்கிறேன். அங்கேயே க்ளிக் செய்து, அங்கு போய்ச்சேர சுலபமாக இருக்கலாம்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. உங்கள் அன்பு மட்டுமே என் பீஃஸ். ஆனால் என்னிடம் முடி வெட்டிக்கொள்ள உங்களுக்கு தைரியம் இருக்கா?

      நீக்கு