சங்கம் ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் உருப்படியாக ஏதும் செய்யவில்லை. இப்படியே போனால் நம்மை கிறுக்கர்கள் என்று எல்லோரும் கேலி செய்வார்களே என்று யோசித்தேன்.
செயலாளர் நண்பர் சொன்னார். சங்கத்தின் பெயரிலேயே கிறுக்கர்கள் சங்கம் என்று பெயர் வைத்துவிட்டு எல்லோரும் நம்மைக் கிறுக்கர்கள் என்று சொல்வார்களே என்றால் எப்படி?
அதுவும் ஒரு விதத்தில் நியாயம்தான் என்று ஒப்புக்கொண்டு, அடுத்து தமிழர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இந்த திட்டத்திற்கு முதலாவதாக தமிழர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசியம். அப்புறம்தான் அவர்களை முன்னேற்றுவது எப்படி என்று யோசிக்க முடியும். இதற்கு என்ன செய்யலாம் என்று செயலாளரைக் கேட்டேன்.
ஒரு பல்கலைக் கழகத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அங்குள்ள தமிழ்த்துறை தலைவருடன் பேசி இதற்கு ஒரு செயல் திட்டம் தீட்டுவோம் என்றார். இது நல்ல யோசனையாக இருக்கிறதே, அப்படியே செய்வோம், ஒரு நல்ல பல்கலைக்கழகமாகத் தேர்வு செய்யுங்கள் என்றேன்.
எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். அனைத்து ஏற்பாடுளையும் செய்து விட்டு உங்களைச் சந்திக்கிறேன் என்றார். அப்படியே செய்யுங்கள் என்று விடைகொடுத்து அவரை அனுப்பி வைத்தேன்.