தேவலோகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவலோகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 மார்ச், 2016

9. சில புரட்சித் திட்டங்கள்



அடுத்த வாரம் அதே நாள் சரியாகப் பத்து மணிக்கு மூவரும் வந்தனர். நிதி அமைச்சர் நான் செய்த நிதி உதவிக்கு நன்றி தெரிவித்தார். நான் சொன்னேன், "என் தாய் நாட்டிற்கு இது கூடச் செய்யாவிட்டால் நான் என்ன மனிதன்? இதற்கெல்லாம் நன்றி எதற்கு" என்று சொன்னேன். நிதி அமைச்சர், "இருந்தாலும் இவ்வளவு பெரிய உதவி செய்ய ரொம்பப் பெரிய மனது வேண்டும்" என்றார்.

அது இருக்கட்டும், மேற்கொண்டு இந்தியாவை முன்னேற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றேன். நிதி அமைச்சர் சொன்னார், நாம் எவ்வளவு நல்ல திட்டங்களைப் போட்டாலும் அவைகள் மக்களைப் போய் சேருவதில்லை. போகும் வழியில் பல ஓட்டைகள். அவைகளை எப்படியாவது அடைக்கவேண்டும் என்றார்.

நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் ஒரு ஐடியா சொல்லுகிறேன். இந்திய நாட்டை இப்போது முன்னேற விடாமல் தடுப்பது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று லஞ்சம், இரண்டு கருப்புப் பணம். இந்த இரண்டையும் ஒழித்தால் நாடு வேகமாக முன்னேறும் என்றேன். மூவரும் இதை ஒத்துக்கொண்டு, "இந்த இரண்டையும் ஒழிக்க நீங்கள் என்ன திட்டம் சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்கள்.

அப்படியானால் நான் சொல்வதைச் செய்யுங்கள். நமது நாட்டில் கருப்புப் பணம் புழங்குவதற்கு முதல் காரணம் வரிகள்தான். அதிலும் குறிப்பாக வருமான வரிதான் கருப்புப் பணத்தை உண்டாக்குகிறது. ஆனால் உலகெங்கிலும் வருமான வரிகள்தான் அரசை நடத்துவதற்கான பணத்தைக் கொடுக்கிறது. நாம் என்ன செய்யவேண்டுமென்றால், வரி ஏய்ப்பைத் தடுக்கவேண்டும்.

அதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். என்னிடம் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் இருக்கிறது. அது என்னுடைய கன்ட்ரோல் ரூமில் இருக்கும். அதில் இந்திய நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருடைய வரவு செலவு கணக்குகளும் தெரியும். எல்லோருக்கும் அடையாள எண்கள் கொடுக்கப்பட்டு விட்டதல்லவா? அதை வைத்து அந்த கம்ப்யூட்டர் அதுவாகவே ஒவ்வொருவருடைய வருமான வரியையும் கணக்குப் போட்டு அவர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும். வருட முடிவில் அவர்களுக்கு ஸ்டேட்மென்ட் போய்விடும். இந்த கன்ட்ரோல் ரூமின் பொறுப்பை பேங்க் நடைமுறைகளில் நல்ல அனுபவம் வாய்ந்த பதிவர் திரு நடனசபாபதி பார்த்துக்கொள்வார். அவருக்கு வருட சம்பளம் மொத்தம் வசூலாகும் வரியில் 1 % கொடுக்கப்படும்.

அது தவிர லஞ்சமாக வாங்கும் பணத்தை கணக்கில் காட்ட முடிவதில்லை. ஏனெனில் இப்பொழுது லஞ்சம் சட்ட விரோதமாக இருக்கிறது. இதனாலும் கருப்பு பணம் அதிகமாகிறது. நீங்கள் என்ன செய்யுங்கள், லஞ்சத்தை சட்டபூர்வமானது என்று அறிவித்து விடுங்கள்.

"ஐயையோ, அப்புறம் கவர்ன்மென்டை எப்படி நடத்த முடியும்? ஊழலை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்" என்று மூன்று பேரும் ஒரே குரலில் அரற்றினார்கள். கவலைப் படாதீர்கள், அதற்கு வழி வைத்திருக்கிறேன். இனிமேல் லஞ்ச வரி என்று புதிதாக ஒரு வரி போட்டுவிடுங்கள். லஞ்சம் வாங்குவதைப் போல் ஐந்து மடங்கு வரி கட்டினால் போதும் என்று சட்டம் போட்டு விடுங்கள், என்றேன். இந்த டிபார்ட்மென்ட்டுக்கு பிரபல பதிவர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் மேற்பார்வையாளராகப் பணி புரிவார். இவர் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்டில் பல வருடங்கள் அனுபவம் உள்ளவர். அவருக்கும் வசூலாகும் மொத்த வரியில் 1 % ஊதியமாகக் கொடுக்கப்படும்.

நிதி மந்திரி திருதிருவென்று விழித்தார். பிரதம மந்திரிதான் முதலில் சுதாரித்தார்.  இது நல்ல திட்டமாக இருக்கிறது. ஆனால் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வரி வசூலை எங்கள் ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றேன். எப்படி என்றார்?

இதற்காக தனியாக ஒரு கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்துவோம். அதில் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் மாதிரி இன்னொன்று நிறுவப்படும். அதில் இந்தியாவில் யார் எங்கு லஞ்சம் வாங்கினாலும் ஸ்கிரீனில் தெரிந்துவிடும். அந்த நபர் பணம் எங்கு வைத்திருந்தாலும் அந்த லஞ்சப்பணத்தைப் போல் ஐந்து மடங்கு எங்கள் பேங்கிற்கு வந்து விடும். அதை அப்படியே அவ்வப்போது அரசு கஜானாவில் போட்டு விடுகிறோம் என்றேன். இந்த டிபார்ட்மென்டுக்கு மார்க்கெட்டிங்கில் நல்ல அனுபவம் மிக்க பதிவர் திண்டுக்கல் தனபாலன் என்று ஒருவர் இருக்கிறார். அவரைத் தலைவராகப் போட்டு விடலாம். அவருக்கும் மொத்த வசூலில் 1 % ஊதியமாக வழங்கப்படும். அவர்களுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. குதித்து கூத்தாடினார்கள்.

ஏற்கெனவே இந்த முறையை உபயோகித்து ஸ்விஸ் பேங்கில் இந்தியர்கள் வைத்திருந்த கறுப்புப் பணம் முழுவதையும் எடுத்துவிட்டோம். நேற்று உங்களுக்குக் கொடுத்தது முழுவதும் அந்தப் பணம்தான். இன்னும் கூட மிச்சம் இருக்கிறது. எப்போது தேவைப்பட்டாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றேன்.

அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இன்னும் பல திட்டங்கள் இருக்கின்றன. இப்போது நான் சொல்லும் திட்டங்களை கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்போது அயல்நாட்டு உள்நாட்டுக் கடன்களை எல்லாம் தீர்த்து விட்டபடியால் இனி மேல் நாம் யாருக்கும் தலை வணங்க வேண்டியதில்லை. வெளிநாட்டு மூலதனம் இனி நம் நாட்டுக்குள் எவ்வகையிலும் நுழையக்கூடாது. எந்த விதப் பொருட்களும் அயல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது. நம் தொழில்களுக்கு வேண்டிய கச்சாப் பொருட்களை மட்டும்தான் இறக்குமதி பண்ணலாம். இங்கு இருக்கும் அயல்நாட்டுக் கம்பெனிகளை எல்லாம் (குறிப்பாக கோக்கோ கோலா, பெப்சி, KFC, McDonald) மூட்டை முடிச்சுடன் அவரவர்கள் ஊருக்கு திருப்பியனுப்புங்கள்.

பெரிய பெரிய கம்பெனிகள், பணக்காரர்கள் எல்லாம் பேங்குகளில் கோடிக்கணக்காக கடன் வாங்கிக்கொண்டு, பல ஏமாற்று வேலைகள் செய்து அந்தக் கடன்களை கட்டுவது இல்லை என்று கேள்விப்பட்டேன், அது உண்மையா? என்று கேட்டேன். நிதி மந்திரி, அது உண்மைதான், என்றார். அந்த கடன்கள் எவ்வளவு இருக்கும் என்றேன். அந்தக் கடன்கள் எல்லாம் வசூலானால் ஒரு ஐந்து வருட இந்திய பட்ஜெட்டுக்குப் போதும் என்றார். அப்படியா, இன்று இரவு அந்தக் கடன்கள் மொத்தமாக வசூலாகி ரிசர்வ் பேங்கில் சேர்க்கப்படும், என்றேன். அது மாதிரியே அன்று இரவு செய்தேன்.

தவிர இந்தியா முழுவதிலும் இலவசம் என்பது எங்கும் எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது. வேலையில்லாமல் ஒருவரும் இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கக் கூடாது. தகுதிக்கு மீறி சொத்து வைத்திருப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு விடுங்கள். அவர்கள் பினாமி பெயரில் வைத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யுங்கள். இதற்காக நான் இங்கு ஒரு கன்ட்ரோல் ரூம் வைத்திருக்கிறேன். அதில் எல்லா விவரங்களும் பதிவு ஆகியிருக்கின்றன. நீங்கள் ஏதாவது தில்லு முல்லு செய்தால் அப்புறம் விளைவுகள் மோசமாக இருக்கும். ஜாக்கிரதை.

மாநிலத்திற்கு மூன்று டி.வி.ஸ்டேஷன்கள் தவிர மற்ற எல்லா டி.வி.ஸ்டேஷன்களையும் மூடிவிடுங்கள். இவைகளில் விளம்பரத்திற்காக பல கம்பெனிகள் செலவு செய்து விட்டு. அந்தச் செலவை மக்கள் மீது திணிக்கிறார்கள். இப்படி மூடப்பட்ட டி.வி.க்காரர்களின் சொத்துக்களையெல்லாம் அரசு எடுத்துக் கொள்ளட்டும். நடந்து கொண்டிருக்கிற டி.வி.க்கம்பெனிகளின் அளவுக்கு மீறின சொத்துக்களையும் பறிமுதல் செய்யுங்கள்.

தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தங்களை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள்,  அனைத்தும் தடை செய்யப்படுகின்றன. மோட்டார் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தனியார்மயமாகிறது. பெட்ரோல், டீசல் விலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு மாறக்கூடாது. ஆட்டோக்கள், டாக்சிகள் மீட்டர் கட்டணத்திற்கு மேல் வாங்கினால் அப்போதே யமகிங்கரர்களால் தண்டிக்கப்படுவார்கள்.

இந்தியா முழுவதும், குறிப்பாக மும்பய்யில் உள்ள அனைத்து தாதாக்களும் கட்டைப் பஞ்சாயத்துதாரர்களும், புரோக்கர்களும் இப்போதிலிருந்து யமகிங்கரர்களால் நீக்கப்படுவார்கள். பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் இந்த விநாடியிலிருந்து மூடப்படுகிறது. அனைத்துக் கம்பெனிகளின் அனைத்து ஷேர்களும் கேன்சல் செய்யப்படுகின்றன.

இந்தியா முழுவதும் மதுவிலக்கு உடனடியாக அமுலுக்கு வருகிறது. அதற்கு உபயோகமான எத்தனாலை எவ்வளவு சதம் பெட்ரோலில் கலக்க முடியுமோ அத்தனை சதம் கலந்து விற்பனையாகட்டும். குடிமகன்கள், தனியாக கவுன்சிலிங்க் மூலம் நல்ல குடிமகன்களாக மாற்றப்படுவார்கள்.

ரயில்கள் நேரத்திற்கு ஓடவேண்டும். எல்லா இலவச பாஸ்களும் இந்த நிமிடம் முதல் ரத்து செய்யப்படுகின்றன. எந்த ரயிலிலும் டிக்கட் வாங்காமல் ஒருவரும் பயணம் செய்யக்கூடாது. அப்படி பயணம் செய்பவர்களையும் அவர்களை அனுமதிக்கும் டிடிஆர் களையும் உடனடியாக தண்டிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். டிடிஆர் களுடன் சண்டைக்குப் போகும் பயணிகள் அப்போதைக்கப்போது என்னுடைய யமகிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

விமானப் போக்குவரத்தில் யாருக்கும் இலவசப் பாஸ்கள் கூடாது. யாருக்கும் தனி விமானங்கள் கிடையாது. விமான ஊழியர்களின் சம்பளம் தவிர அனைத்து இதர சலுகைகளும் ரத்து செய்யப்படுகின்றன. அரசு சம்பந்தப்பட்ட யாரும் வெளிநாடு செல்லவேண்டாம். உள்நாட்டிலும் அவசியமில்லாமல் பயணம் செய்யக்கூடாது.

இங்கிருந்து போனவுடன் வெடிகுண்டு தயாரிப்பாளர்களுக்கு ஒரு அறிக்கை விடுங்கள். இந்தியாவில் எந்த இடத்துல் யார் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டாலும் அந்த குண்டுகள் அங்கேயே வெடித்து அந்த குண்டுகள் தயார் செய்பவர்கள் மட்டும் இறந்து போவார்கள். இந்த டிபார்ட்மென்டை நான் நேரடியாக கன்ட்ரோல் செய்து கொள்கிறேன்.

தவிர கொலை, கொள்ளை, வழிப்பறி, ஏமாற்றுகள், பாலியல் பலாத்காரங்கள் யாவும் இந்த விநாடியிலிருந்து தடை செய்யப்படுகின்றன. அப்படி இந்தக் குற்றங்களில் யார் ஈடுபட நினைத்தாலும் அந்த விநாடியே அவர்கள் யம- கிங்கரர்களால் அப்புறப்படுத்தப்படுவார்கள்.

அரசு வேலைகள் அனைத்தும் ஜரூராக நடக்கவேண்டும் எதிலும் சுணக்கம் இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிடுங்கள். அப்புறம் இன்னொரு விஷயம். அரசு அதிகாரிகள் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்திருக்கும் அனைத்து சொத்துக்களும் இன்றிரவு அரசு கஜானாவிற்கு வந்து விடும்.

டில்லி, கொல்கத்தா, மும்பாய், சென்னை ஆகிய நகரங்களில் இன்று இரவு, 50 கி.மீ. தூரத்தில் சேடலைட் நகரங்கள் உருவாகிவிடும். மயனைக் கூப்பிட்டு இதைச் செய்யுமாறு சொன்னேன். அவன் தலையை ஆட்டிவிட்டுச் சென்று விட்டான். அனைத்து அரசு அலுவலகங்களும் அங்கு சென்று விடவேண்டும். நகர மையத்தில் எந்த விதமான டிராபிக் இடையூறுகளும் இருக்கக் கூடாது.

எல்லா மெட்ரோ நகரங்களிலும் மெட்ரோ ரயில் உடனடியாக அமைக்கப்பட்டு உபயோகத்திற்கு வருகிறது. இன்றிரவு மயன் அந்த வேலையை முடித்துவிடுவான்.

இந்தியாவில் உள்ள கார்பரேட் சாமியார்களின் அனைத்துச் சொத்துகளும் இன்றிரவு பறிமுதல் செய்யப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்படும். அவர்களின் ஆசிரமங்கள் கல்லூரிகளாக செயல்படும். அந்த சாமியார்கள் எல்லோருக்கும் இமய மலையில் ஒரு ரிசார்ட் உருவாக்கப்பட்டு அங்கு எல்லா வசதிகளுடனும் வசிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் பணிவிடை செய்யத் தேவையான தேவலோக அப்ஸரஸ் மங்கையர்கள் ஏற்பாடு செய்யப்படுவார்கள்.

அதேபோல் அனைத்து கோவில் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். கோவில்களை நடத்த தேவையான பணம் தனி பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படும்.

இந்த மாறுதல்களுக்குத் தேவையான அனைத்து நடைமுறை உத்திரவுகளையும் இன்றிரவே பிறப்பித்து இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று பிரதம மந்திரியிடம் சொன்னேன். அவர் சரி என்றார்.

அப்புறம் ஒரு விஷயம் என்றேன், என்ன? என்று கேட்டார்கள்.

என்னைக் கேட்காமல் எந்த புது திட்டத்தையோ பாலிசி மேட்டரையோ அமல்படுத்தக்கூடாது. என்னுடைய திட்டங்களையெல்லாம் மறுப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதில் எந்த மாற்றமும் கூடாது என்றேன். அடுத்த வாரம் சந்திப்போம். சரியென்று ஒப்புக்கொண்டு டில்லி கிளம்பினார்கள்.

ஞாயிறு, 20 மார்ச், 2016

8. இந்திய நிதி அமைச்சருடன் சந்திப்பு.

(இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே)


மறுநாள் சரியாக 10 மணிக்கு பிரதம மந்திரியும் நிதி அமைச்சரும் வந்தார்கள். அவர்களை வரவேற்று கான்பரன்ஸ் ரூமுக்குப் போனோம்.    

                               

நிதி அமைச்சர் எங்களைக் கூப்பிட்ட விஷயம் என்ன? என்றார்.

நான் இருவரையும் பார்த்துச் சொன்னேன். தற்போது நமது நாட்டு நடப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. வெளிநாட்டுக்காரர்கள் நம்மைக் கேவலமாக மதிப்பீடு செய்கிறார்கள். இதையெல்லாம் மாற்றி நம் நாட்டை உலகின் ஒன்றாம் நெம்பர் நாடு என்று மாற்றவேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்றேன்.

எங்களுக்கும் அது விருப்பமே. ஆனால் அதை எப்படி நிறைவேற்றுவது என்றுதான் தெரியாமல் விழிக்கிறோம் என்றார்கள். நான் சொன்னேன், என்னிடம் இப்போது ஏராளமான செல்வம் மற்றும் சகல வல்லமைகளும் இருக்கின்றன. நீங்கள் சரி என்று சொன்னால் என் திட்டங்களை விவரிக்கிறேன், என்றேன். அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு,  பிறகு சொன்னார்கள். எங்களுக்கு விருப்பமே, ஆனால் பாருங்கள், இதில் எங்கள் கட்சித் தலைவரும் சம்பந்தப் பட்டிருக்கிறார். அவர் அனுமதி இல்லாமல் நாங்கள் எந்த முடிவும் எடுக்கமுடியாதே, என்றார்கள்.

அப்படியானால் அவரையும் கூப்பிட்டுக்கொள்வோம் என்றேன். அவர்கள் செல்போனில் பேசினார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அவரும் வந்தார். அவரை மிக மரியாதையாக வரவேற்று அமரச்செய்தோம். அவருக்கும் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர் எனக்கும் சில நீண்ட காலத் திட்டங்கள் இருக்கின்றன. அதை நீங்கள் நிறைவேற்றுவதானால் எனக்கு உங்கள் திட்டத்தில் ஆட்சேபணை இல்லை என்றார்கள்.

அதற்கென்ன, அப்படியே செய்து விட்டால் போகிறது என்று சொல்லிவிட்டு என் முதல் கேள்வியைக் கேட்டேன். இப்போது நமது இந்திய அரசுக்கு கடன் எவ்வளவு இருக்கிறது என்றேன். நிதி அமைச்சர் உள்நாட்டிலா, வெளி நாட்டிலா என்றார். இரண்டையும் சொல்லுங்களேன் என்றேன்.

உள் நாட்டுக்கடன் பத்தாயிரத்தெட்டு லட்சம் கோடி ரூபாய்கள், வெளிநாட்டுக் கடன் இருபத்தி இரண்டாயிரத்து மூன்று லட்சம் கோடி டாலர்கள் என்றார். இது போக வட்டி தனி என்றும் சொன்னார். இந்தத் தொகையைக் கேட்டு நான் கொஞ்சம் அசந்து விட்டேன்.

சரி, நிதி அமைச்சரே, இந்தத் தொகையை மொத்தமாக நான் தேவலோக பேங்கிடமிருந்து ஒரே தவணையில் தானமாகக் கொடுக்கச் சொல்கிறேன். இந்தக் கடன்களையெல்லாம் பட்டுவாடா செய்து முடிக்க எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டேன். ஒரு வாரத்தில் முடித்து விடுவோம் என்றார்.

குபேரனைக்கூப்பிட்டு, இவர் கேட்கும் பணத்தைக் கொண்டுபோய் டில்லியில் இவருடைய ஆபீசில் கொடுத்து விட்டு வாருங்கள் என்றேன் அவன் சரியென்று போய்விட்டான். இத பாருங்க நிதி அமைச்சரே, இதில் எந்த சொதப்பலும் இருக்கக்கூடாது. அடுத்த வாரம் இதே நாள் நாம் எல்லோரும் இங்கே கூடுவோம். அப்போது எந்தக் கடனும் நிலுவை இருக்கக் கூடாது, பார்த்து செய்யுங்கள், என்றேன். அவர்கள் மூவரும் சரியென்று தலை ஆட்டிவிட்டுப் புறப்பட்டார்கள்.

புறப்படும்போது அவர்கள் மூவருக்கும் ஒவ்வொரு சூட்கேஸ் பரிசளித்தேன். இதில் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நீங்கள் இந்த மீட்டிங்க்கில் கலந்து கொண்டதற்கான தினசரி அலவன்ஸ் என்றேன். சரி என்று வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த சூட் கேசுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தேன்.

ஆடற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடற மாட்டை பாடி கறக்கவேண்டும், அல்லவா?

வெள்ளி, 18 மார்ச், 2016

7. தூதரகம் திறப்பு.


மறுநாள் எழுந்தவுடன் மயனைக் கூப்பிட்டு, நீங்கள் செக்குவுடன் உடனே பூலோகத்திற்குப் போய் நமக்கு கொடுத்துள்ள நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் "தேவேந்திர நகர்" என்ற நகரத்தை சகல வசதிகளுடன் நிர்மாணியுங்கள். ஒரு பத்தாயிரம் பேர் தங்குவதற்கான வசதிகளும், ஹெலிகாப்டர் தளம் மற்றும் தூதரக ஆபீஸ்களும், நல்ல பாதுகாப்பான மதில் சுவர்களும், மற்றும் அந்த ஊருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.

அப்படியே நமது தேவ்லோக் பேங்கிற்கும் அந்த தூதரகத்துக்குள்ளேயே ஒரு கிளை கட்டுங்கள். அதில் எல்லாவித சௌகரியங்களும் இருக்கட்டும்.

நாளை காலை பத்து மணிக்கு இந்த தூதரக திறப்பு விழா நடக்கட்டும். இந்திரனும் இந்திய ஜனாதிபதியும் இந்த தூதரகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைப்பார்கள். இங்கிருந்து நாம் எல்லோரும் செல்வோம். இந்தியாவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேரை அழைக்கலாம்.

இந்தியாவில் இந்த மாதிரி விழாக்களை நடத்த "Event Manager" கள் இருப்பார்கள். அவர்களில் ஒரு நல்ல நிறுவனத்திடம் இந்த வேலையை ஒப்படைத்து விடுங்கள். விழா மிகப் பிரமாதமாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிடுங்கள். விழா முடிந்தவுடன் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் ஆடம்பரமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லி விடுங்கள். நீங்கள் போகலாம் என்று சொன்னேன். அவர்களும் புறப்பட்டுப் போனார்கள்.

இந்திரன் இந்த விழாவிற்காக பூலோகத்திற்குப் போய்வர புருனே சுல்தான் வைத்திருக்குற மாதிரி ஒரு பிளேன் உடனடியாக வாங்குங்கள், அதன் விடியோ இதோ இருக்கிறது. அதனுள் 100 பேர் அமரும்படியான ஒரு நடன அரங்கம் அவசியம் இருக்கட்டும். இந்திரனால் நாட்டியம் பார்க்காமல் கொஞ்சநேரம் இருந்தால் அவனுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அதனால் ஜாக்கிரதை.

                                            

தூதரகத் திறப்பு விழா அழைப்பிதழ் இந்தியாவின் அனைத்து பாரலிமென்ட் உறுப்பினர்கள். வெளிநாட்டுத் தூதுவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள்,
அனைத்து தமிழ் பதிவர்கள், ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும், மத்திய அரசு அனைத்து செயலர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும், அனைத்து மத்திய மாநில மந்திரிகளுக்கும் உடனடியாக கொடுத்து விடுங்கள்.

அப்படியே அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, மறுநாள் காலை திறப்பு விழாவிற்கு அனைத்துப் பிரமுகர்களும் வந்து விட்டார்கள். தூதரக வாசலில் அனைவருக்கும் சோமபானம் கொடுத்து வரவேற்கப்பட்டார்கள். வாசலில் கட்டப்பட்டிருந்த ரிப்பனை இந்திய ஜனாதிபதி அவர்கள் விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோலால் வெட்டி தூதரகத்தைத் திறந்து வைத்தார். ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் அந்த கத்தரிக்கோலை பவ்யமாக வாங்கி தன் பைக்குள் வைத்துக்கொண்டார். இதை பிற்பாடு ஜனாதிபதி வாங்கிக் கொள்வார். இது பல காலமாக அனுஷ்டிக்கப்படும் சம்பிரதாயம்.

பிறகு எல்லோரும் விழாப் பந்தலுக்குள் நுழைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் தனியாக அழைத்துக்கொண்டு போய் அலங்கார மேடையில் அமரச் செய்தார்கள். கடவுள் வாழ்த்துக்குப் பின்னர், நான் வரவேற்புரை வழங்கினேன். அப்போது நான் சொன்னதாவது.

இந்த நாள் இதுவரை பூலோகத்திலேயே யாரும் பார்த்திராத பொன்னாள். இந்த தேவலோகத் தூதரகத்தை புண்ணிய பூமியான இந்தியாவில்தான் முதலில் அமைக்கவேண்டும் என்று மும்மூர்த்திகளும் விரும்பினார்கள். அதனால்தான் இங்கு அமைத்தோம்.

இன்று முதல் இந்தப் புண்ணிய பூமியில் பல அதிசயங்கள் நடைபெறப் போகின்றன. உலகிலேயே பெரிய வல்லரசாக இந்தியா பரிணமிக்கப் போகிறது. அதன் பலனை இந்திய மக்கள் அனைவரும் அனுபவிப்பார்கள்.

தேனும் பாலும் இனி இந்திய ஆறுகளில் ஓடும். வறுமை என்பதே எங்கும் இருக்காது. ஒரு பெண் சகல ஆபரணாதிகளுடன் டில்லி தெருவில் இரவு பனிரெண்டு மணிக்கு தனியாக, பயமில்லாமல் நடமாடலாம். இந்தியா சொர்க்கபூமியாக மாறப்போகிறது. மகாத்மா காந்தி சொன்ன ராம  ராஜ்யம் வரப்போகிறது. எல்லோரும் அதற்குத் தயாராகுங்கள்.

இந்த விழாவிற்கு வந்துள்ள அனவரையும் இரு கரம் கூப்பி வருக, வருக என்று வரவேற்கிறேன்.

கைதட்டல் வானைப் பிளந்தது. பிறகு ஜனாதிபதி இரண்டு மணிநேரம் பேசினார். வேத காலத்தில் இந்தியாவிற்கும் தேவலோகத்திற்கும் இருந்த தொடர்பிலிருந்து ஆரம்பித்து, இருபத்தியோராம் ஆண்டுக்கு வருவதற்குள் எல்லோருக்கும் பசி வந்து விட்டது. நன்றி நவிலலை சுருக்கமாக கூறிவிட்டு கூட்டத்தை அவசரமாக முடித்து விட்டு எல்லோரும் சாப்பிடப் போனோம்.

சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்த பின் தேவலோக நடன மங்கையர் நால்வரின் நடனம் தொடங்கியது. எல்லோரும் வாயில் ஈ போவது கூடத் தெரியாமல் அந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நடனம்  முடிந்து இரவு உணவு அருந்தியபின் எல்லோரும் அவரவர் ஊருக்குப் புறப்பட்டுப் போனார்கள். இதற்கு முன்பாகவே நான் இந்திய பிரதம மந்திரியையும் நிதி அமைச்சரையும் பார்த்து மறுநாள் காலை பத்து மணிக்கு ஒரு முக்கிய மீட்டிங்க் வைத்திருக்கிறேன். நீங்கள் இருவரும் அவசியம் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டார்கள்.

தேவேந்திரன் ஊருக்குப் போய்விட்டான். நாங்கள் மூவரும் (நான், பொது, செக்கு) உறங்கச்சென்றோம்.

புதன், 16 மார்ச், 2016

6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.

(இந்தத் தொடர் முற்றிலும் கற்பனையே. சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே.)


மறுநாள் எழுந்தவுடன் மந்த்ராலோசனை சபை கூடியது. சபை என்றால் நான், பொது மற்றும் செக்கு மட்டும்தான்.

பொது= நான் நேற்று சொன்ன மேட்டரைப் பற்றி சிந்தித்தீர்களா என்றான். பொது, அவசரப்படாமல் நாம் காய்களை நகர்த்தவேண்டும், அவசரப்பட்டால் மும்மூர்த்திகள் நம்மைக் காலி பண்ணிவிடுவார்கள். நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். கேளுங்கள்.

முதலில் நம் தேவலோகத்திற்கு இந்தியாவில் ஒரு தூதரகம் நிர்மாணிக்கவேண்டும். அது சட்டபூர்வமானதாக இருக்கவேண்டும். ஒரு ஐயாயிரம் ஏக்கரில் அந்த தூதரகம் கட்டப்படவேண்டும். சுற்றிலும் உயரமான மதிற்சுவர்களும், நல்ல பாதுகாப்பான வாயிற்கதவுகளும் அமைக்கவேண்டும். இந்திய ஜனாதிபதியையும் தேவேந்திரனையும் சேர்த்து அதற்கு திறப்பு விழா நடத்துவோம்.


இந்தியாவில் இதற்கு முன்பு இப்படியொரு விழா நடக்கவில்லை என்கிற மாதிரி அந்த விழா இருக்கவேண்டும். பொது, நீ முதலில் சென்று இதற்கான சட்டபூர்வமான அனுமதிகளைப் பெற்று வா. செலவைப்பற்றிக் கவலைப்படாதே. எவ்வளவு செலவு ஆனாலும் எப்படியோ காரியத்தை முடித்து வா என்றேன்.

நம் தேவலோக பேங்கில் இப்போது இந்திய கரன்சி இருக்காது. ஆகவே நீ 24 கேரட் தங்க பார்களாக கொண்டுபோய் அங்கே மாற்றிக்கொள். சீக்கிரம் புறப்படு என்றேன்.

அவன் ஒரு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றான். நான் மயனைக் கூப்பிட்டு நம் தேவலோகத்திற்கு நல்ல நான்கு சக்கர வாகனங்களும் விமானங்களும் வேண்டுமே. சீக்கிரம் நாம் பூலோகத்திற்கு விமான சர்வீஸ் ஆரம்பிக்கவேண்டும்.

நீங்கள் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஏர்பஸ் கம்பெனியில் ஒரு ஆயிரம் ஏர்பஸ் 380 ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு உடனடியாக அனுப்பச்சொல்லுங்கள். விமானம் ஓட்ட நம் ஆட்களுக்குப் பயிற்சி கொடுக்க நல்ல பயிற்சியாளர்களை ஒரு வருட கான்ட்ராக்டில் கூட்டி வாருங்கள். இந்தியாவில் "கிங்பிஷர்" என்ற ஏரோப்பிளேன் கம்பெனி போண்டியாகிவிட்டதால் அதன் ஆட்கள் எல்லோரும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மொத்தமாக நம் ஏரோப்பிளேன் கம்பெனிக்கு கூட்டி வந்துவிடுங்கள்.


அப்படியே பக்கத்திலுள்ள ஜெர்மனி நாட்டிற்குப் போய் பிஎம்டபிள்யூ வகைக் கார்கள் ஓரு லட்சம் கார்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வாருங்கள். இரண்டு கம்பெனிக்கும் கேஷ் தங்கமாக கொடுத்துவிடுங்கள். நீங்கள் ஒரு ஹெலிகாப்டரில் உடனடியாகப் புறப்படுங்கள் என்று உத்திரவு போட்டேன்.


குபேரனைக் கூப்பிட்டு, இதோ பாரும், குபேரா, நாம் அடுத்த நாடுகளுடன் வியாபாரம் செய்ய தங்கத்தையே நம்பியிருக்கக்கூடாது. பூலோகத்தில் புழங்கும் சில நாடுகளின் நோட்டுக்கள் நம்மிடம் இருக்கவேண்டும். அமெரிக்க டாலர்,  ஐரோப்பிய யூரோ, இந்த இரண்டும் இப்போதைக்குப் போதும். நீங்கள் போய் இந்த இரண்டு நாடுகளின் பேங்குகளுடன் பேசி, அவர்களுக்குப் போதுமான தங்கத்தைக் கொடுத்து அந்த கரன்சிகளை வாங்கி வாருங்கள்.

அத்துடன் ஸ்விஸ் வங்கிக்குப் போய் இந்தியர்கள் அங்கு கருப்புப் பணமாக வைத்திருக்கும் அனைத்து ரூபாய்களையும் வாங்கி வந்து விடுங்கள். அவர்கள் சட்டம், விட்டம் என்று பேசுவார்கள். அதைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களை அப்படியே நிற்கப் பண்ணிவிட்டு இந்திய ரூபாய்கள் அனைத்தையும் கொண்டு வந்து விடுங்கள், என்றேன்.

அரை மணி நேரத்தில் குபேரன் வந்து விட்டான். பிரபோ, ஸ்விஸ் நாட்டுக்கு இன்னொரு முறை நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றான். ஏன் என்று கேட்டதற்கு, இந்திய ரூபாய்கள் அனைத்தையும் நான் போன ஹெலிகாப்டரில் ஏற்ற முடியவில்லை, அதனால்  நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கொண்டு போனால்தான் சரியாக இருக்கும் என்றான். அப்படியே போய்விட்டு வா என்றேன். போய்விட்டு  அரை மணி நேரத்தில் வந்து விட்டான். ஸ்விஸ் பேங்கில் எத்தனை இந்திய ரூபாய் இருந்தது என்றேன். அவன் சுமார் ஐம்பதாயிரம் லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றான். சரி, எல்லாவற்றையும் லாக்கரில் வையுங்கள் என்றேன்.


அடுத்து சில நிமிடங்களில் மயன் வந்து விட்டான். பிரபோ, நீங்கள் சொன்னபடி ஏர் பஸ்களும், கார்களும் வந்து விட்டன, அவைகளை எங்கே நிறுத்துவது என்றான். தேவலோகத்துக்கு வெளியே இதற்குப் போதுமான ஷெட்கள் கட்டி அங்கே நிறுத்துங்கள் என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த வேலையை முடித்து விட்டு மயன் வந்து விட்டான்.

மயன், இந்த ஏர்பஸ்களையும் கார்களையும் ஓட்டுவதற்கு வேண்டிய ஆட்களை சித்திரகுப்தனிடம் சொல்லி வாங்கிக்கொள். அவர்களைப் பழக்கத் தேவையானவர்களை பூலோகத்திலுருந்து டெபுடேஷனில் வரவழைத்துக்கொள். பிரஹஸ்பதி சும்மாதானே இருக்கிறார். அவரை இந்த ஓட்டுநர் பயிற்சியைப் பார்த்துக்கொள்ளட்டும். பிறகு அவரே இந்த வாகனங்களுக்கெல்லாம் பொறுப்பாக இருந்து கொண்டு அவைகளை நிர்வகிக்கட்டும்.

மாலை ஆகிவிட்டது. எங்கே இந்தியாவிற்குப் போன பொதுவைக் காணோமே என்று நினைத்தபோது அவன் வந்து விட்டான். அவன் வாயெல்லாம் பல். தலைவா, வெற்றி, வெற்றி என்று கூவிக்கொண்டே வந்தான்.

அவனை உட்காரவைத்து ஆசுவாசப்படுத்திய பிறகு, விவரங்கள் கேட்டேன். எல்லாம் நான் எதிர் பார்த்தபடியேதான் நடந்திருக்கிறது. இவன் நேராக பிரதம மந்திரியின் ஆபீசுக்குப் போயிருக்கிறான். அங்கு இவனுக்குத் தெரிந்த ஒரு எம்.பி. இருந்திருக்கிறார். அவர் கொஞ்சம் பெரிய புள்ளி. இவன் விவரம் சொன்னவுடனே, இருவரும் நேராக பிரதம மந்திரியின் ரூமுக்குப் போயிருக்கிறார்கள். விவரம் சொன்னவுடன், அவர் எல்லாம் பேசிவிட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். பேசிவிட்டேன், நீங்கள் ஒரு பிகர் சென்னால்போதும் என்றார். உடனே அவர் போனில் அவருடைய செக்ரட்டரியைக் கூப்பிட்டு இவர்கள் மேட்டரை முடித்துக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அந்த செக்ரட்டரி ரூமுக்குப் போனவுடன் ஐட்டம் எங்கே என்று கேட்டிருக்கிறார். எம்.பி. எவ்வளவு என்று கேட்க அவர் பத்தாயிரம் (கோடி) என்று சொல்லியிருக்கிறார். அவர் பொதுவைப் பார்க்க, பொது இதோ என்று பத்து சூட்கேசைக் கொடுத்திருக்கிறார். அடுத்த அரை மணி நேரத்தில் தேவலோக தூதரகத்திற்காக தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலமும் அதற்குண்டான நடைமுறை உத்திரவுகளும் கையெழுத்தாகிவிட்டன. நம்முடைய தூதரகத்திற்கு தனிப்பட்ட முறையில் Special Diplomatic Immunityகொடுத்திருக்கிறார்கள். இந்திய ஜனாதிபதியும், பிரதம மந்திரியையும் தவிர்த்து வேறு யாரும் நம் தூதரக நடவடிக்கைகளில் தலையிடமுடியாது. தவிர, தேவலோகத்தில் இந்தியாவிற்கும் ஒரு தூதரகம் வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்போதுதான் இரு வழிப் போக்குவரத்திற்கு ஏதுவாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்படியா, அதுவும் நியாயம்தான், அப்படியே செய்து விடுவோம் என்றேன்.

நிலம் தமிழ்நாட்டில் எங்கே கொடுத்திருக்கிறார்கள் என்றேன். நீலகிரி மலை அடிவாரத்தில் பவானி ஆற்றை அடுத்து கொடுத்திருக்கிறார்கள் என்றார். தமிழ்நாட்டில் யாராவது இதற்கு ஏதேனும் சங்கடங்கள் கொடுப்பார்களோ என்றேன். என் நண்பர் எம்.பி. இதை அங்கேயே சுட்டிக் காட்டினார்.  நாங்கள் நேராக தமிழ்நாடு சென்று அங்கிருந்து ஏதும் தடங்கல்கள் வராதபடி ஏற்பாடு பண்ணிவிட்டோம் என்றார்.

பிறகு ஏன் நீ வருவதற்கு  இவ்வளவு லேட் என்றேன். அது இந்த ஆர்டரை எல்லாம் காப்பி எடுக்க ஜீராக்ஸ் மிஷினுக்கு கரன்ட் இல்லை. கரன்ட் வந்தவுடன் காப்பி எடுத்துக்கொண்டு வர நேரம் ஆகிவிட்டது என்றார்.

நல்ல வேலை செய்தீர். இப்போது எல்லோரும் ஓய்வெடுப்போம். மற்ற வேலைகளை நாளை பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனோம்.
தொடரும்

திங்கள், 14 மார்ச், 2016

5. தேவலோகத்தில் பேங்க் உதயம்

மறு நாள் விடிந்ததும் நாரதர் பேப்பரும் கையுமாக வந்தார். அவர் வாயெல்லாம் பல்.


மந்திரி பிரபோ, தேவலோகம்  முழுவதும் நேற்று இரவு எங்கும்  ஒரே ஆட்டபாட்டம்தான். தேவர்களின் உற்சாகம் கரை புரண்டோடுகிறது, என்றார். நல்லது, கேட்க சந்தோஷமாக இருக்கிறது. இதற்காகத்தானே மும்மூர்த்திகள் என்னை இங்கு வரச்சொன்னார்கள். இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன், பார்த்துக்கொண்டிருங்கள் என்றேன். நாரதர் சரி என்றார்.

அப்புறம் நாரதரே, மகாபாரதத்தில் யுத்தம் ஆரம்பிக்கு முன்பாக தருமர் இங்கு யாரிடமோ கடன் வாங்க வந்தாராமே, அது யார் என்றேன். அதுங்களா, இங்கே குபேரன் என்று ஒருவன் அம்பாரம் அம்பாரமாக வைரம், வைடூர்யம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைகளை வைத்துக்கொண்டு இருக்கிறான், என்றார். அவனைக்கூப்பிடுங்கள் என்றேன்.

சிறிது நேரத்தில் அவன் வந்தான். வந்து மந்திரி பிரபோ வணக்கம், என்றான். வாரும் குபேரா, நீ அந்த இலங்கை ராவணனின் தம்பியல்லவோ என்றேன். அவன் கொஞ்சம் அசந்து விட்டான். பிரபுவிற்கு என்னுடைய குலம் கோத்திரம் எல்லாம் அத்துபடி போலிருக்கிறது என்றான். நான் எல்லாம் அறிவேன், இப்படி உட்கார் என்றேன்.

நீ வைத்திருக்கும் செல்வங்களையெல்லாம் என்ன செய்கிறாய் என்றேன். ஒன்றும் செய்வதில்லை என்றான். அப்படியா, அப்படி செல்வ லக்ஷ்மியை சும்மா வைத்திருக்கலாமோ, அது அபச்சாரமல்லவா? நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்யலாம் என்றான்.

அப்படியானால் இங்கு ஒரு தேவலோக பேங்க் ஆரம்பிக்கலாம், மயனைக்கூப்பிடுங்கள் என்றேன். மயன் வந்தான். மயா. இங்கு ஒரு பேங்க் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு தேவ்லோக் பேங்க் என்று பெயர். ஸ்விட்சர்லாந்து என்று ஒரு நாடு பூலோகத்தில் இருக்கிறது. அங்குதான் உலகின் மிகப்பெரிய பேங்க் இருக்கிறது. நீயும் குபேரனும் அங்கு போய் அந்த பேங்க்கின் கட்டிடங்கள், பணம் வைக்கும் அறைகள் மற்றும் அதன் நடைமுறைகளைத் தெரிந்து வாருங்கள் என்றேன்.

ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விட்டார்கள். எல்லாம் பார்த்து விட்டோம் என்றார்கள். மயனே, அந்த மாதிரி இங்கு இன்னும் அலங்காரமாகவும், குபேரனின் செல்வங்கள் அனைத்தும் வைக்கும்படியாகவும் ஒரு பேங்க் கட்டுங்கள் என்றேன். உடனே தயாராகிவிட்டது.


குபேரா, இந்த பேங்கிற்கு நான் பிரசிடென்ட், நீதான் தலைமைக் கேஷியர், பொதுவும் செக்கும் டைரக்டர்கள். உனக்கு உதவிக்கு வேண்டிய ஆட்களை யமனிடமிருந்து வாங்கிக்கொள். இன்று மாலை திறப்பு விழா வைத்துக்கொள்ளலாம். இந்திரனுக்கு சமீபத்தில் ஒரு வேலையும் கொடுக்கவில்லை. அவனை வைத்து திறப்பு விழா நடத்துவோம். மும்மூர்த்திகளையும் விழாவிற்கு அழைத்துவிடுங்கள் என்றேன்.

மாலை நான்கு மணிக்கு "தேவலோக் பேங்க்" ஐ இந்திரன் ரிப்பன் வெட்டி திறந்தார். பேங்கிற்குள் இருக்கும் வசதிகளைப் பார்த்து மும்மூர்த்திகளும் அசந்து போய் விட்டனர். எல்லோரும் என்னை வாழ்த்த எனக்கு மிகவும் கூச்சமாகப் போய்விட்டது.


பிறகு விருந்துபசாரம் அரம்பித்தது. மேனகை, திலோத்தமை நடனத்துடன் ஆரம்பித்தோம். நளனும் பீமனும் தங்கள் திறமைகளை எல்லாம் காட்டி பலவித உணவு ஐட்டங்களை தயாரித்திருந்தார்கள். எல்லோரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு அவரவர் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

நாங்களும் தூங்கச்சென்றோம்.

வெள்ளி, 11 மார்ச், 2016

4. புரட்சிகரமான மாற்றங்கள்


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

இளைப்பாறிவிட்டு எல்லோரும் ஆபீசில் கூடினோம். சித்திரகுப்தன் எல்லா தேவர்களையும் குடியிருப்பில் இருத்திவிட்டு எல்லோருக்கும் அடையாள அட்டை கொடுத்தாயிற்று என்றான். நல்லது உட்கார் என்று சொல்லிவிட்டு மந்திராலோசனையை ஆரம்பித்தேன்.

பகல்-இரவு தோற்றுவித்தல் - நாரதரிடம் கேட்டேன். இங்கு ஏன் எப்பொழுதும் பகலாகவே இருக்கிறது. இரவு ஏன் இல்லை?

அவர் சொன்னார், பல கோடி காலமாக இப்படியேதான் இருக்கிறது. யாரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.

நான் இதை எப்படி மாற்றுவது? பூலோகம் மாதிரி 12 மணி நேரம் பகலாகவும் 12 மணி நேரம் இரவாகவும் மாற்றவேண்டுமே என்றேன்.

நாரதர் அதற்கென்ன, அப்படியே செய்து விடலாம். நான் சூரியனைக் கூப்பிடுகிறேன். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என்றார்.

சூரியன் வந்தார். நாரதர் அவரிடம் விஷயத்தைச் சொன்னார். சூரியன் இந்திரனிடம் கேட்கவேண்டுமே என்றார். நாரதர் சொன்னார், சூரியரே, இப்போது இங்கு இவர்தான் சகல காரிய அதிகாரஸ்தர். இந்திரன் வேலைகளையெல்லாம் இவர்தான் பார்க்கிறார், ஆகையால் நீ இவருடைய ஆணையை ஏற்றுக்கொள்ளலாம் என்றார். சூரியனும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தேவர்களை தூங்குவித்தல் - நாரதரே, இந்தத் தேவர்களை இரவில் தூங்க வைக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன். பிரபோ, அவர்கள் கண் இமைப்பதில்லையாதலால் அவர்கள் தூங்க முடியவில்லை என்றார்.

அப்படியா, சங்கதி, இந்த நொடி முதல் எல்லாத் தேவர்களுக்கும் இமைகள் இமைக்கட்டும். அப்படியே அவர்கள் பேய் மாதிரி மிதக்காமல் அவரவர்கள் கால்களினால் நடக்கட்டும் என்றேன். இந்த விஷயங்களை விவரமாக தேவதந்தியில் போட்டு விடுங்கள் என்றேன்.

தேவலோகத்தில் நடைமுறை பாஷை - இனிமேல் தேவலோகத்தில் தமிழ்தான் நடைமுறை பாஷையாக இருக்கும். அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் தமிழிலேயே நடக்கும். திருவள்ளுவர், தொல்காப்பியர், பரிமேலழகர் ஆகியோர் உடனடியாக அனைத்து தேவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கவேண்டும்.

தேவர்களுக்கு பசி தாகம் உண்டாக்குதல் - நாரதரே, நீங்கள் எல்லாம் உணவின் ருசியை அறியாமலிருப்பதால்தான் உங்களுக்கு வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை. ஆகையால் நாளை காலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பசி, தாகம் உண்டாகட்டும். அவர்கள் தாங்களாகவே சமையல் செய்யக் கற்றுக்கொள்ளும் வரை காமதேனு அவர்களுக்கு உணவு சப்ளை செய்யட்டும்.

நளன், பீமன் இருவரும் இங்குதானே இருக்கிறார்கள் என்றேன். நாரதர் அவர்களை உடனே வரவழைத்தார். என்ன, நள பீமர்களே, நலமா? என்றேன். அவர்கள் என்ன ஊருங்க இது, ஒரு வேலை வெட்டி இல்லை, சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை, மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார்கள்.

உங்கள் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு தீர்ந்து விட்டன. இனி தேவர்களுக்கு பசி, தாகம் உண்டாகும். அவர்களுக்கு சமையல் கலையை நீங்கள் இருவரும் கற்றுக்கொடுக்கவேண்டும். உடனே ஆரம்பியுங்கள் என்றேன். அவர்களை மிகுந்த சந்தோஷத்துடன் போய்விட்டார்கள்.

கற்பகதருவைக் கூப்பிட்டு அனைத்து தேவர்களுக்கும் ஒரு வருடத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணை வகையறாக்களை உடனே சப்ளை செய்யவும் என்றேன். அதுவும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது.

நாரதரே, ஒரு வருடத்திற்கான உணவு ஏற்பாடுகளைச் செய்தாய் விட்டது. அடுத்த வருடத்திலிருந்து தேவர்கள் அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். அதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன்.

இது கொஞ்சம் கடினமான வேலை, பிரபோ. தேவர்கள் இதுநாள் வரை உடம்பை வருத்தி எந்த வேலையையும் செய்து பழகியவர்களல்ல. தவிர, அவர்கள் ஆளும் வர்க்கமாகவே இருந்து விட்டதால் அவர்கள் விவசாய வேலை செய்ய பிரயோஜனப்பட மாட்டார்கள். நமது சித்திரகுப்தனைக் கேட்டால் இந்த வேலைக்குத் தகுந்த ஆட்களை அடையாளம் காட்டுவார் என்றார்.

சித்திரகுப்தா, இதற்கு என்ன வழி என்றேன். பிரபோ, இதற்கு நல்ல வழி இருக்கிறது. யமலோகத்தில் பலர் அவர்கள் தண்டனை காலம் முடிந்து சும்மா இருக்கிறார்கள். அவர்கள் எந்த கடின வேலையையும் செய்து பழகியவர்கள். அவர்களை தேவலோகத்தில் விவசாயம் செய்ய கூப்பிட்டுக்கொள்ளலாம் என்றான். அப்படியே ஆகட்டும் என்றேன்.

இப்படியாக தேவர்களின் இருப்பிடம், உணவு ஏற்பாடுகள் முடிந்தன.

தேவலோகத்தில் மின்சாரம், சமையல் எரிவாயு, குடிதண்ணீர் ஆகி வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி மயனுக்கு உத்திரவு போட்டேன். அவனும் அதை செய்து முடித்தான்.

எல்லோரையும் அவரவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் மூவரும் விடுதிக்குத் திரும்பினோம். அப்போது பொது, தலைவா, நாம் இப்படித் தேவர்களுக்கே பாடுபட்டுக் கொண்டிருந்தால், நம் பிள்ளை குட்டிகளின் கதி என்ன ஆவது? என்றான். நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினாய், நானும் இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு யோசனை இருக்கிறது.

அதாவது இங்கு ஏகப்பட்ட இடம் காலியாக இருக்கிறது. இந்தத் தேவர்களோ ஒரே எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதனால் இந்த உபரியாக இருக்கும் இடத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கலாமா என்று ஒரு ஐடியா மனதில் இருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் இரவு யோசித்து காலையில் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனேன்.

தொடரும்-

திங்கள், 7 மார்ச், 2016

3. தேவலோக நகர்வலம்


காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தேடினேன். யாரையும் காணோம். காப்பி எப்படி குடிப்பது என்று தெரியவில்லை. பொதுவைக்கூப்பிட்டு விசாரித்தேன். அவரும் அதற்காகத்தான் அலைந்து கொண்டிருந்தார். செக்கும் வந்து சேர்ந்தார்.

அப்போது என் ஞானதிருஷ்டியில் பார்த்தபோது தேவலோகத்தில் ஒரு பயலும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. காலையில் டிபனும் சாப்பிடமாட்டார்களாம். சரி என்று காமதேனுவை வரச்சொன்னேன். அது வந்து "பிரபோ, என்ன வேண்டும்?" என்று கேட்டது.

இதோ பார் காமதேனு, இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருந்து எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சப்ளை செய். அப்புறம் வேறு ஏற்பாடு செய்யலாம். இப்போது எங்களுக்கு மூன்று காப்பி. நல்லா ஸ்ட்ராங்கா கொண்டு வா" என்றோம். உடனே காப்பி வந்தது. அருமையாக இருந்தது. காலை உணவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டது. ஆளுக்கு இரண்டு இட்லி, ஒரு உளுந்து வடை, ஒரு நெய் ரோஸ்ட், ஒரு காப்பி, அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு, காலைக்கடன்களை முடித்து, குளித்து விட்டு வந்தோம்.

இன்றைக்கு என்ன செய்தி, பார்க்கலாம் என்று பார்த்தால் ஒரு நியூஸ் பேப்பரையும் காணோம். அப்போது நாரதர் வந்தார். அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏதும் இல்லை. கையில் தம்புரா, வாயில் நாராயண நாமம். வாருங்கள் நாரதரே, சௌக்கியம்தானே என்று கேட்டேன். நான் சௌக்கியம், இந்திரன்தான் கொஞ்சம் சோர்ந்திருக்கிறான். மும்மூர்த்திகளுக்கு அவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை போலிருக்கிறது. அதுதான் உங்களை பூலோகத்திலிருந்து வரவழைத்திருக்கிறார்கள். உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும், என்றார்.

இந்த ஆளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், இவனுக்கு தேவைக்கு மேல் விஷயம் தெரிந்திருக்கிறது என்று முடிவு செய்து, நாரதரே, உங்களுக்கு ஒரு விசேஷப் பதவி கொடுக்கிறேன். அதாவது நீங்கள்தான் இனி தேவலோகப் பிரசுரகர்த்தர். அதாவது முதலில் இங்கு ஒரு செய்தித்தாள் ஆரம்பித்து அதில் தேவலோகத்தில் நடப்பவைகள் எல்லாம் பிரசுரிக்கவேண்டும். நீங்கள் எங்கள் புது ஆபீசிலேயே ஒரு ரூமில் இருந்து கொள்ளலாம் என்று சொன்னேன்.

அவர் ஒத்துக்கொண்டார். பத்திரிகைக்கு பெயர் வைத்தோம். "தேவ தந்தி"
நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் நீங்கள் ஆபீஸ் சென்று அங்கு மயன் இருப்பார். பத்திரிக்கை முதல் பிரதியை அச்சடித்து விநியோகியுங்கள் என்றேன். எத்தனை காப்பி அடிப்பது என்றார். இங்கு இருப்பது முப்பத்திமுக்கோடி நபர்கள். ஆளுக்கு ஒன்று. உபரியாக ஒரு பத்தாயிரம் காப்பிகள். அவ்வளவுதான் என்றேன். நாரதர் போய்விட்டார்.

நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போனோம். அன்றைய தேவதந்தி டேபிள்மேல் இருந்தது. அதில் நாங்கள் மூவரும் தேவலோகம் வந்து பதவி ஏற்றது, இந்திரனின் வருத்தம், நாங்கள் புது ஆபீசில் குடியேறியது, அன்று நகர்வலம் செல்வது ஆகிய விவரங்கள் அனைத்தும் விலாவாரியாக கொடுக்கப்பட்டிருந்தன. 

மயனைக்கூப்பிட்டு நகர்வலம் போகலாமா என்றேன். அவர் சரி என்றார். நாங்கள் மூவர், மயன், நாரதர் ஆகக்கூடி ஐந்து பேர். ஆபீசை விட்டு வெளியில் வந்தோம். வெளியில் எந்த வாகனமும் காணவில்லை. மயனிடம் என்ன, வாகனம் எதுவுமில்லையா? என்றேன். மந்திரி, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு லொடலொட புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானை இருக்கிறது. அதை வேண்டுமானால் வரச்சொல்லட்டுமா என்றான்.

மயன், யானையெல்லாம் சரிப்படாது. புஷ்பக விமானத்தில் பூலோகத்திலிருந்து வந்த உடம்பு வலியே இன்னும் சரியாகவில்லை. பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் "ஹெலிகாப்டர்" என்னும் பெயரில் விற்கிறார்கள். அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும். ஒரு அரை டஜன் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன். கூடவே அதை ஓட்டுவதற்கு ஆறு பைலட்டுகளையும் ஆறு மாத டெபுடேஷனில் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றேன்.

மயன் ஆனாலும் படு சுறுசுறுப்பு. அடுத்த சில நிமிடங்களில் ஆறு ஸ்பெஷல் விஐபி ஹெலிகாப்டர்கள் பைலட்டுகளுடன் தயாராக நின்றன. இன்று நாம் எல்லோரும் ஒரு ஹெலிகாப்டரிலேயே போகலாம் என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டோம்.

எங்கு பார்த்தாலும் தேவர்கள். ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். ஜிகுஜிகு துணிகளில் பஞ்சகச்சமும், மேலாடைகளும் அணிந்திருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். பொது - நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே, தலைவா, என்றார். சும்மா இரும் பொது என்று சொல்லிவிட்டு, அந்த தேவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன்.

தேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. நாரதரே, நாம் கீழே இறங்கி அவர்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டேன். அவர் பேஷாப் பேசலாமே என்றார். ஹெலிகாப்டரை கீழே இறக்கினோம்.

நாரதர் போய் நாலைந்து ஜோடி தேவர்களைக் கூட்டிவந்தார். நெருக்கத்தில் பார்க்கும்போதுதான் மேலும் பல விஷயங்கள் தெரிய வந்தன. இந்தப் பயல்களின் கால்கள் தரையிலிருந்து ஒரு ஜாண் மேலேயே இருந்தன. எல்லோருடைய மூஞ்சிகளும் ஜப்பான்காரன் மூஞ்சி மாதிரி ஒரே மாதிரியாக இருந்தன. ஒரு ஆளைக் கூப்பிட்டு உன் பெயரென்ன என்று கேட்டேன். அவன் விழித்தான்.

நாரதரிடம் இவன் பெயர் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். நாரதர் இவர்களுக்கெல்லாம் பெயர் இல்லை என்றார். என்ன, இவன்களுக்குப் பெயர் இல்லையா, அப்புறம் எப்படி ஒவ்வொருத்தனையும் கூப்பிடுவீர்கள் என்று கேட்டேன். அவர்களை எதற்குக் கூப்பிடவேண்டும்?அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்? என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.

நாரதரே, எங்கள் பூலோகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அவர்கள் அந்தப் பெயரினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், அப்படி இங்கே இவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையா? என்றேன். இல்லை என்றார். சரிதான், நம் ஊரில் தெருவில் திரியும் ஆடுமாடுகளுக்கெல்லாம் பெயரா வைத்திருக்கிறோம், அது மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்த மாதிரி இருந்தால் நம் திட்டங்களுக்குச் சரிப்படாதே, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சித்திரகுப்தன் ஞாபகம் வந்தது.

அவனை அழைத்தேன். உடனே வந்து "வணக்கம் மந்திரி பிரபோ" என்றான். அன்றைய பத்திரிக்கையைப் படித்திருக்கிறான். சித்திரகுப்தா, இதென்ன இங்குள்ளவர்களுக்கெல்லாம் பெயரே கிடையாதாமே, ஏன் என்றேன். பிரபோ, அதற்கு அவசியமே ஏற்படவில்லை என்றான். நான் "அதற்கு அவசியம் இப்போது வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் பெயர் கொடு" என்றேன். பிரபோ, அவ்வளவு பெயர்களையும் உடனே கண்டுபிடிப்பது சிரமம். நடைமுறைச் சிக்கலும் வந்து விடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் நெம்பர் கொடுத்துவிடலாமென்றான்.

சரி, அப்படியே செய்துவிடு. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள அட்டை தயார் செய்து, அதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லிவிடு என்றேன். நெம்பர் கொடுப்பதற்கு முன் சில வேலைகள் இருக்கின்றன. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு மயனைக் கூப்பிட்டேன்.

மயன், இவர்களை ஒரு ஒழுங்கில் குடியமர்த்தவேண்டும். இப்போது இவர்கள் எங்கே குடியிருக்கிறார்கள் என்றேன். அப்படியென்றால்.... என்று மயன் இழுத்தார். இவர்கள் இப்படியே உலாத்திக்கொண்டு இருப்பார்கள், இவர்களுக்கு வீடு வாசல் என்று ஒன்றும் கிடையாது என்றார். என்னடா, நம் பூலோக தெரு நாய்கள் கதி மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.

அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். செக்கு, நீயும் இதைக் கேட்டுக்கொள். நீதான் இனிமேல் இந்த குடியமர்ப்புகளை பரிபாலனம் செய்யவேண்டும். இந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரித்து குடியமர்த்தவேண்டும். இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம். ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோடி தேவர்கள். மாநிலத் தலைநகரில் பத்து லட்சம் தேவர்கள் இருக்கட்டும். மாவட்டத் தலைநகரில் ஒரு லட்சம் தேவர்கள். வட்டத் தலைநகரில் பத்தாயிரம் தேவர்கள். மீதி 70 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் மொத்தம் உள்ள 7000 கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் பேராக இருக்கட்டும். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆளுக்குப் பத்து ஹெக்டேர் (25 ஏக்கர்) நிலம் இருக்கட்டும். அதில் கிணறு, மோட்டார் பம்ப்செட் வசதியும் இருக்கட்டும்.

எல்லோருக்கும் குடியிருக்க வீடுகள் தயாராகட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஜோடி தங்கட்டும். ஆக மொத்தம் 16 கோடி 50 லட்சம் வீடுகள் இப்போதைக்குப் போதும். ஜனத்தொகை பெருகும்போது அவர்களுக்கு, பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர், மின்சாரம், பாதாளச்சாக்கடை இணைப்பு ஆகியவைகளைக் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டில், மெத்தை, மாடுலர் கிச்சன், டிவி, டெலிபோன் ஆகியவை இருக்கட்டும். அவைகளுக்கு உடனடியாக உபயோகம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தேவைப்படும்.

மாநிலத் தலைநகரங்கள், மாவட்டத்தலைநகரங்கள், வட்டத்தலைநகரங்கள் ஆகியவற்றில் அந்தந்த இடங்களுக்குத் தகுந்த மாதிரி அலுவலங்கள் கட்டுங்கள். அவை சகல வசதிகளும் பொருந்தியதாக இருக்கட்டும். இது தவிர ஒவ்வொரு நகரத்திற்கு அருகாமையிலும், கூடவே பத்துப் பத்து சேடலைட் நகரங்கள் அமைக்க தேவையான காலி இடம் வைத்திருங்கள்.

அனைத்து மாநிலத்தலைநகர்களும் ஆறு வழிப்பாதை மூலம் இணையுங்கள். மாவட்டங்களுக்கு இடையே நான்கு வழிப்பாதைகள். வட்டங்களுக்கு இடையேயும் கிராமங்களுக்கு இடையேயும் இரு வழிப்பாதைகள் தயாராகட்டும்.

மயன் இந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். சித்திரகுப்தனிடம் இந்த தேவர்களை இந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்துங்கள். அப்புறம் அவர்களுக்கு நெம்பர் கொடுப்பது எளிது. ஒவ்வொரு  ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள். முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும். அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும். மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன். சித்திரகுப்தன் சரி என்று சொல்லிவிட்டு அந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான்.

அப்புறம் ஒரு ஜோடியைக்கூப்பிட்டு மற்ற விஷயங்களை விசாரித்தோம். அந்த விசாரணையில் தெரிய வந்தது அவர்களை பேசுவது தேவபாஷை அதாவது வடமொழி. அவர்களுக்கு பசி தாகம் கிடையாது. அங்கு எப்போதும் பகல்தான். அவர்கள் தூங்குவது இல்லை. அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வப்போது கொஞ்சம் சோம்பானம் மட்டும் அருந்துவார்கள். அது இந்திரன் மாளிகையில் பீப்பாய் பீப்பாயாக வைத்திருக்கிறது. அந்தப் பீப்பாய்கள் தீரத்தீர, காமதேனு அவைகளை நிரப்பி வைத்து விடும்.

ஏறக்குறைய பூலோகத்தில் தெருவில் திரிந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சரி, இவைகளை ஒவ்வொன்றாக கவனிப்போம் என்று முடிவு செய்தேன்.

காலையில் சாப்பிட்ட டிபன் ஜீரணமாகிவிட்டிருந்தது. நாரதரிடம் என்ன, மதிய உண்வு சாப்பிடலாமா என்று கேட்டேன். அது என்ன மதிய உணவு? அதை எதற்கு சாப்பிடவேண்டும்? என்றார். வாருங்கள், காட்டுகிறேன் என்று சொல்லி, அவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் இருப்பிடம் சென்றோம். காமதேனு காத்துக் கொண்டு இருந்தது.

அதனிடம் டில்லி அசோகா ஹோட்டலில் மதிய உணவிற்கு என்னென்ன செய்திருக்கிறார்களோ, அதில் எல்லாவற்றிலும் எங்களுக்குத் தேவையான அளவு கொண்டுவா என்று சொல்லிவிட்டு, கைகால்கள் கழுவிவிட்டு டைனிங்ஹால் வந்தோம். சாப்பாடு தயாராக இருந்தது. நாங்கள் நால்வரும் (நாரதர் உட்பட) உட்கார்ந்தோம். இதுதான் மதிய உணவா என்று நாரதர் கேட்டார். ஆமாம் நாரதரே, இங்கே நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பிட மாட்டீர்களா என்று கேட்டேன். அவர் சொன்னார், தேவலோகத்தில் பசி, தாகம் கிடையாதாகையால் இதற்கெல்லாம் அவசியமில்லை என்றார்.


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

தொடரும்...

வெள்ளி, 4 மார்ச், 2016

2. இந்திரனுடன் ஒரு ஒப்பந்தம்.



அரண்டு போன இந்திரனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போனேன். இங்க பாரு, இந்திரா. கவலைப்படாதே, உனக்கு என்ன வேண்டுமோ அதைச்சொல்லு, நான் ஏற்பாடு செய்கிறேன் என்றேன். அப்போதுதான் அவன் கொஞ்சம் தெம்பானான்.

இந்திரன் சொன்னான். இதப்பாருங்க புது ராஜா, நான் இந்த "சேர்ல" உக்காந்து பல கோடி வருஷம் ஆச்சு. இந்த ரம்பை, ஊர்வசி நாட்டியம், சோமபானம், இந்திராணியுடன் சல்லாபம் இப்படி எல்லாம் பழகிப்போச்சு. இது எல்லாம் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

சில பேர் இந்த "சேருக்கு" ஆசைப்பட்டு என்னென்னமோ யாகம் எல்லாம் செஞ்சாங்க. அவங்களையெல்லாம் சாம, பேத, தான, தண்ட உபாயங்களினால் ஒழிச்சுக் கட்டி விட்டேன். இப்ப இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கிறாங்களே, இது நியாயமா என்று அழுதான்.

நான் யோசிச்சேன். நமக்கும் இந்த ஊரு புதுசு, பழைய ஆள் ஒருத்தன் நம்ம பக்கம் இருந்தா, நாம தைரியமா இருக்கலாம் என்று யோசனை செய்து இந்திரனிடம் கூறினேன்.

இந்திரா, பயப்படாதே. உன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. நீ எப்போதும்போல் டான்ஸ் பார்த்துக்கொண்டு இந்திராணியுடன் சந்தோஷமாக இருக்கலாம். உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு, அதை நான் செய்து தருகிறேன். நீ செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் என்ன செய்தாலும் அவைகளை நீ கண்டு கொள்ளாதே என்றேன்.

இந்திரன் மிகவும் சந்தோஷப்பட்டு, நீதான் என் கண்கண்ட தெய்வம். எனக்கு இந்த "சேரும்" பழைய வாழ்க்கையும் இருந்தால் போதும், நீ என்ன செய்தாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன், என்ன, எனக்கு அவ்வப்போது கொஞ்சம் "சபலம்" வரும், அப்போது மட்டும் நீ கவனித்துக் கொண்டால் போதும் என்றான்.

அதற்கென்ன, அப்படியே செய்தால் போகிறது என்று சொல்லிவிட்டு, இனி நீதான் இங்கு ராஜா, நான் வெறும் மந்திரிதான், என்னை மந்திரி என்று கூப்பிட்டால் போதும் என்று சொல்லி விட்டு அடுத்து என் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் எதிர்ப்பை வெற்றிகரமாகச் சமாளித்த கர்வம் என் முகத்தில் தெரிந்தது. அதை கர்சீப்பினால் அழுந்தத் துடைத்தேன். ஆரம்பத்திலேயே இந்த கர்வம் வந்தால் காரியங்கள் கெட்டுப்போகும் அல்லவா?

அடுத்து, நான் கூட்டிக்கொண்டு வந்திருந்த பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூப்பிட்டேன். இதுவரை நடந்தவைகளை அவர்கள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இப்போதுதான் வாயைத் திறந்தார்கள். பஞ்சாயத்துத் தலைவர் சென்னார் - "தலைவரே, அருமையான டீல், இனி நமக்கு இங்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள், உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணட்டுமா" என்றார்.

நாம ஒருத்தருக்கொருவர் பாராட்டுவது இப்போது வேண்டாம், நிறைய வேலைகள் இருக்கின்றன, வேலையைத் துவங்குவோம் என்று சொல்லிவிட்டு, இனிமேல் பஞ்சாயத்து தலைவர் பெயர் "பொது உறவுச் செயலாளர்" சுருக்கமாக "பொது". ரெவின்யூ இன்பெக்டர் என் "ஸ்பெஷல் செக்ரடரியாக" (சுருக்கமாக "செக்கு") இருப்பார்.

முதலில் நமக்கு நல்லதாக ஒரு ஆபீஸ் வேண்டுமே என்றேன். அங்கு திரிந்து கொண்டிருந்த ஒரு தேவனைக் கூப்பிட்டு இந்த ஊரில் நல்ல பில்டிங்க் கான்ட்ராக்டர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவன் திருதிருவென விழித்தான். மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டேன். மறுபடியும் அப்படியே விழித்தான். நமது "பொது" வைக்கூப்பிட்டு இதைப் பாருங்க, பொது, நம்ம ஆபீஸ் கட்ட ஒரு நல்ல கான்ட்ராக்டர் வேணுமே, இந்த ஊர்ல யார் இருக்காங்கன்னு இவங்கிட்ட விசாரிச்சு சொல்லுங்க, என்றேன்.

அவர் அவனை நைசாக அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போய் பேசினார். கொஞ்ச நேரம் கழித்து இருவரும் வந்தனர். அந்த தேவன் வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டே வந்தான். "பொது" சொன்னார். நம்ம பாஷை முதலில் இவனுக்குப் புரியலைங்க. அப்புறம் நான் புரிய வச்சேனுங்க. இங்க "மயன்" அப்படீன்னு ஒரு கான்ட்ராக்டர் இருக்காராம். ஊர்ல என்ன வேலைன்னாலும் அவர்தான் செய்வாராம். இந்த ஆள் அவரோட செக்ரட்டரியாம். நாம சொன்னா அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவாராம். இந்த சேவைக்காக நாம் இவரைக் கவனித்துக் கொள்ளவேண்டுமாம்.

என்னடா இது, இந்த ஊர் நம்ம ஊரை விட மோசமாக இருக்கும் போல இருக்குதே, சரி அதை அப்புறம் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு அந்த தேவனிடம் மயனை கூட்டிக்கொண்டு வரும்படி சொன்னேன். கொஞ்ச நேரத்தில் மயன் வந்தான். அவனைப் பார்த்ததும் நான் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன்.

தலையில் வைரக் கிரீடம், கழுத்தில் ஏறக்குறைய ஒரு கிலோ தங்க நகைகள், தங்க வாள், பத்துவிரல்களிலும் தங்க மோதிரங்கள், இப்படி ஒரு நடமாடும் நகைக் கடை மாதிரி தெரிந்தான். சரி இருக்கட்டும், இவனை இன்று சரி செய்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தேன்.

நான் - நீர்தான் இந்த ஊரில் கான்டராக்டராமே.

மயன் - என்னை தேவலோக சிற்பி என்பார்கள். நீ யார்?

நான் - நான்தான் இந்த ஊருக்கு இப்போது ராஜா. என்னை மந்திரி என்று கூப்பிடவேண்டும். முதலில் என்னை மரியாதையுடன் அழைத்துப் பழகும்.

மயன் - என்னை உட்காரச் சொல்லக்கூட உனக்குத் தெரியவில்லையே.

நான் - அப்படியா, உட்கார்.

மயன் - எங்கே உட்காருவது?

நான் - தரையில்தான்.

மயன் - என்னை என்னவென்று நினைத்தாய், மானிடப் பயலே

என்று சொல்லிக்கொண்டு என் மேல் பாய்ந்தான். அவனைக் கையசைத்து அப்படியே நிற்கவைத்தேன். அவனைப் பார்த்து "இது என்ன டிரஸ், ஜிகிஜிகு வென்று டிராமாக்காரன் போல் டிரஸ். முதலில் இதை மாற்றி காக்கி அரைச்சட்டையும் காக்கி அரை டிராயரும் போட்டுக்கொண்டு வா" என்றேன். அவனுக்கு பயங்கர கோபம் வந்தது. என்னை கடிப்பவன்போல் பாய்வதற்கு எத்தனித்தான்.

இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று அவனுடைய ஆடை ஆபரணங்களைக் களைந்து வெறும் உள்ளாடையுடன் அவன் கைகளைக் கட்டி நிற்கவைத்தேன். அட, மடக்கான்ட்ராக்டரே, இனி நான்தான் உங்களுக்கு எஜமான், என் பேச்சைத்தான் நீ இனிமேல் கேட்கவேண்டும். மறுத்தால் உன்னை நரகத்திற்கு அனுப்பிவிடுவேன் என்றேன். அவனுக்கு இப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.

மந்திரி ஐயா, என்னை மன்னியுங்கள், உங்கள் பிரபல்யம் தெரியாமல் தப்பு செய்துவிட்டேன். இனி நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று காலில் விழுந்தான். சரி என்று சொல்லிவிட்டு, இத பார், மயன், நாங்கள் மூன்று பேர் வந்திருக்கிறோம், எங்களுக்கு ஆபீஸ் நல்ல முறையில் கட்டிக்கொடுக்கவேண்டும். அதில் இன்னும் பல டிபார்ட்மென்ட்டுகளை இருத்த கூடுதல் இடம் வேண்டும்.  கூடவே, நாங்கள் தங்குவதற்கான் வசதிகளையும் கட்டவேண்டும். எப்போது ரெடியாகும் என்றேன். அவன் நீங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது நேரம் இளைப்பாருங்கள், அதற்குள் முடித்து விடுகிறேன் என்றான்.

நாங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது இளைப்பாறி விட்டு வந்தால் நிஜமாகவே எங்கள் ஆபீஸ் ரெடியாக இருந்தது. மயனைப் பாராட்டினேன். மயனே, நீ கெட்டிக்காரன், உனக்கு நிறைய வேலை இருக்கிறது. உன் பரிவாரங்களுடன் இந்த ஆபீசுக்கே வந்து விடு என்றேன். அவனும் சரியென்றான்.

எங்களுக்கு பிரயாணக் களைப்பு அதிகமாக இருந்ததால் தூங்கப் போனோம். மயன் நிஜமாகவே 5 ஸ்டார் வசதிகளுடன் எங்கள் இருப்பிடத்தை தயார் செய்திருந்தான். நன்றாகத் தூங்கி எழுந்தோம். முகம், கைகால்களை கழுவிக்கொண்டு டீ சாப்பிட்டு விட்டு ஆபீஸ் போனோம். 

சும்மா சொல்லப்படாது. மயன் உண்மையிலேயே படு கெட்டிக்காரன். ஆபீசை வெகு ஜோராக கட்டியிருந்தான். என்னுடைய ரூம் சகல வசதிகளுடன் இருந்தது. மயன் வெராண்டாவில் கையைக்கட்டிக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான். காக்கி அரை டிராயரும் காக்கி அரைச்சட்டையும் போட்டிருந்தான். பரிதாபமாக இருந்தது. அவனையும் நம்ம பொது மற்றும் செக்கை ரூமுக்கு கூப்பிட்டேன்.

முதல் மந்திராலோசனை கூட்டம் துவங்கியது.

இங்க பாருங்க மயன் (இனி இவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்போம் என்று முடிவு செய்தேன்), இனி உங்கள் பதவி "சீப் இன்ஜியர்". இனிமேல் நீங்கள் கோட், சூட் போட்டுக்கொண்டு ஆபீஸ் வரலாம். உங்கள் கீழ் பணிபுரியும் ஆட்கள் இந்த காக்கி யூனிபார்ம் போட்டுக் கொள்ளட்டும். நாளை காலை நாம் எல்லோரும் இந்த தேவலோகத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு என்னென்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம்.

அப்போது மயன் சொன்னார்- மந்திரி சார், நாம் நகர் வலம் போகும்போது நாரதர் இருந்தால் நன்றாக இருக்கும். அவருக்குத்தான் நாட்டு நிலவரம் நன்றாகத் தெரியும் என்றார். அப்படியே ஆகட்டும், காலையில் வரச்சொல்லி செய்தி அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டு எங்கள் இருப்பிடத்திற்கு சென்றோம்.

சரி தூங்கலாம் என்று பார்த்தால் எங்கும் வெளிச்சமாகவே இருக்கிறது. இருட்டே ஆகவில்லை. சூரியன் மறையவே இல்லை. சரி இதை தூங்கி எழுந்து கவனிக்கலாம் என்று முகத்தை போர்வையால் நன்கு மூடிக்கொண்டு தூங்கினேன்.  

வெள்ளி, 8 மார்ச், 2013

4. புரட்சிகரமான மாற்றங்கள்


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

இளைப்பாறிவிட்டு எல்லோரும் ஆபீசில் கூடினோம். சித்திரகுப்தன் எல்லா தேவர்களையும் குடியிருப்பில் இருத்திவிட்டு எல்லோருக்கும் அடையாள அட்டை கொடுத்தாயிற்று என்றான். நல்லது உட்கார் என்று சொல்லிவிட்டு மந்திராலோசனையை ஆரம்பித்தேன்.

பகல்-இரவு தோற்றுவித்தல் - நாரதரிடம் கேட்டேன். இங்கு ஏன் எப்பொழுதும் பகலாகவே இருக்கிறது. இரவு ஏன் இல்லை?

அவர் சொன்னார், பல கோடி காலமாக இப்படியேதான் இருக்கிறது. யாரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.

நான் இதை எப்படி மாற்றுவது? பூலோகம் மாதிரி 12 மணி நேரம் பகலாகவும் 12 மணி நேரம் இரவாகவும் மாற்றவேண்டுமே என்றேன்.

நாரதர் அதற்கென்ன, அப்படியே செய்து விடலாம். நான் சூரியனைக் கூப்பிடுகிறேன். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என்றார்.

சூரியன் வந்தார். நாரதர் அவரிடம் விஷயத்தைச் சொன்னார். சூரியன் இந்திரனிடம் கேட்கவேண்டுமே என்றார். நாரதர் சொன்னார், சூரியரே, இப்போது இங்கு இவர்தான் சகல காரிய அதிகாரஸ்தர். இந்திரன் வேலைகளையெல்லாம் இவர்தான் பார்க்கிறார், ஆகையால் நீ இவருடைய ஆணையை ஏற்றுக்கொள்ளலாம் என்றார். சூரியனும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தேவர்களை தூங்குவித்தல் - நாரதரே, இந்தத் தேவர்களை இரவில் தூங்க வைக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன். பிரபோ, அவர்கள் கண் இமைப்பதில்லையாதலால் அவர்கள் தூங்க முடியவில்லை என்றார்.

அப்படியா, சங்கதி, இந்த நொடி முதல் எல்லாத் தேவர்களுக்கும் இமைகள் இமைக்கட்டும். அப்படியே அவர்கள் பேய் மாதிரி மிதக்காமல் அவரவர்கள் கால்களினால் நடக்கட்டும் என்றேன். இந்த விஷயங்களை விவரமாக தேவதந்தியில் போட்டு விடுங்கள் என்றேன்.

தேவலோகத்தில் நடைமுறை பாஷை - இனிமேல் தேவலோகத்தில் தமிழ்தான் நடைமுறை பாஷையாக இருக்கும். அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் தமிழிலேயே நடக்கும். திருவள்ளுவர், தொல்காப்பியர், பரிமேலழகர் ஆகியோர் உடனடியாக அனைத்து தேவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கவேண்டும்.

தேவர்களுக்கு பசி தாகம் உண்டாக்குதல் - நாரதரே, நீங்கள் எல்லாம் உணவின் ருசியை அறியாமலிருப்பதால்தான் உங்களுக்கு வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை. ஆகையால் நாளை காலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பசி, தாகம் உண்டாகட்டும். அவர்கள் தாங்களாகவே சமையல் செய்யக் கற்றுக்கொள்ளும் வரை காமதேனு அவர்களுக்கு உணவு சப்ளை செய்யட்டும்.

நளன், பீமன் இருவரும் இங்குதானே இருக்கிறார்கள் என்றேன். நாரதர் அவர்களை உடனே வரவழைத்தார். என்ன, நள பீமர்களே, நலமா? என்றேன். அவர்கள் என்ன ஊருங்க இது, ஒரு வேலை வெட்டி இல்லை, சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை, மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார்கள்.

உங்கள் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு தீர்ந்து விட்டன. இனி தேவர்களுக்கு பசி, தாகம் உண்டாகும். அவர்களுக்கு சமையல் கலையை நீங்கள் இருவரும் கற்றுக்கொடுக்கவேண்டும். உடனே ஆரம்பியுங்கள் என்றேன். அவர்களை மிகுந்த சந்தோஷத்துடன் போய்விட்டார்கள்.

கற்பகதருவைக் கூப்பிட்டு அனைத்து தேவர்களுக்கும் ஒரு வருடத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணை வகையறாக்களை உடனே சப்ளை செய்யவும் என்றேன். அதுவும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது.

நாரதரே, ஒரு வருடத்திற்கான உணவு ஏற்பாடுகளைச் செய்தாய் விட்டது. அடுத்த வருடத்திலிருந்து தேவர்கள் அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். அதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன்.

இது கொஞ்சம் கடினமான வேலை, பிரபோ. தேவர்கள் இதுநாள் வரை உடம்பை வருத்தி எந்த வேலையையும் செய்து பழகியவர்களல்ல. தவிர, அவர்கள் ஆளும் வர்க்கமாகவே இருந்து விட்டதால் அவர்கள் விவசாய வேலை செய்ய பிரயோஜனப்பட மாட்டார்கள். நமது சித்திரகுப்தனைக் கேட்டால் இந்த வேலைக்குத் தகுந்த ஆட்களை அடையாளம் காட்டுவார் என்றார்.

சித்திரகுப்தா, இதற்கு என்ன வழி என்றேன். பிரபோ, இதற்கு நல்ல வழி இருக்கிறது. யமலோகத்தில் பலர் அவர்கள் தண்டனை காலம் முடிந்து சும்மா இருக்கிறார்கள். அவர்கள் எந்த கடின வேலையையும் செய்து பழகியவர்கள். அவர்களை தேவலோகத்தில் விவசாயம் செய்ய கூப்பிட்டுக்கொள்ளலாம் என்றான். அப்படியே ஆகட்டும் என்றேன்.

இப்டியாக தேவர்களின் இருப்பிடம், உணவு ஏற்பாடுகள் முடிந்தன.

தேவலோகத்தில் மின்சாரம், சமையல் எரிவாயு, குடிதண்ணீர் ஆகி வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி மயனுக்கு உத்திரவு போட்டேன். அவனும் அதை செய்து முடித்தான்.

எல்லோரையும் அவரவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் மூவரும் விடுதிக்குத் திரும்பினோம். அப்போது பொது, தலைவா, நாம் இப்படித் தேவர்களுக்கே பாடுபட்டுக் கொண்டிருந்தால், நம் பிள்ளை குட்டிகளின் கதி என்ன ஆவது? என்றான். நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினாய், நானும் இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு யோசனை இருக்கிறது.

அதாவது இங்கு ஏகப்பட்ட இடம் காலியாக இருக்கிறது. இந்தத் தேவர்களோ ஒரே எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதனால் இந்த உபரியாக இருக்கும் இடத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கலாமா என்று ஒரு ஐடியா மனதில் இருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் இரவு யோசித்து காலையில் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனேன்.