திங்கள், 7 மார்ச், 2016

3. தேவலோக நகர்வலம்


காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தேடினேன். யாரையும் காணோம். காப்பி எப்படி குடிப்பது என்று தெரியவில்லை. பொதுவைக்கூப்பிட்டு விசாரித்தேன். அவரும் அதற்காகத்தான் அலைந்து கொண்டிருந்தார். செக்கும் வந்து சேர்ந்தார்.

அப்போது என் ஞானதிருஷ்டியில் பார்த்தபோது தேவலோகத்தில் ஒரு பயலும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. காலையில் டிபனும் சாப்பிடமாட்டார்களாம். சரி என்று காமதேனுவை வரச்சொன்னேன். அது வந்து "பிரபோ, என்ன வேண்டும்?" என்று கேட்டது.

இதோ பார் காமதேனு, இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருந்து எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சப்ளை செய். அப்புறம் வேறு ஏற்பாடு செய்யலாம். இப்போது எங்களுக்கு மூன்று காப்பி. நல்லா ஸ்ட்ராங்கா கொண்டு வா" என்றோம். உடனே காப்பி வந்தது. அருமையாக இருந்தது. காலை உணவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டது. ஆளுக்கு இரண்டு இட்லி, ஒரு உளுந்து வடை, ஒரு நெய் ரோஸ்ட், ஒரு காப்பி, அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு, காலைக்கடன்களை முடித்து, குளித்து விட்டு வந்தோம்.

இன்றைக்கு என்ன செய்தி, பார்க்கலாம் என்று பார்த்தால் ஒரு நியூஸ் பேப்பரையும் காணோம். அப்போது நாரதர் வந்தார். அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏதும் இல்லை. கையில் தம்புரா, வாயில் நாராயண நாமம். வாருங்கள் நாரதரே, சௌக்கியம்தானே என்று கேட்டேன். நான் சௌக்கியம், இந்திரன்தான் கொஞ்சம் சோர்ந்திருக்கிறான். மும்மூர்த்திகளுக்கு அவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை போலிருக்கிறது. அதுதான் உங்களை பூலோகத்திலிருந்து வரவழைத்திருக்கிறார்கள். உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும், என்றார்.

இந்த ஆளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், இவனுக்கு தேவைக்கு மேல் விஷயம் தெரிந்திருக்கிறது என்று முடிவு செய்து, நாரதரே, உங்களுக்கு ஒரு விசேஷப் பதவி கொடுக்கிறேன். அதாவது நீங்கள்தான் இனி தேவலோகப் பிரசுரகர்த்தர். அதாவது முதலில் இங்கு ஒரு செய்தித்தாள் ஆரம்பித்து அதில் தேவலோகத்தில் நடப்பவைகள் எல்லாம் பிரசுரிக்கவேண்டும். நீங்கள் எங்கள் புது ஆபீசிலேயே ஒரு ரூமில் இருந்து கொள்ளலாம் என்று சொன்னேன்.

அவர் ஒத்துக்கொண்டார். பத்திரிகைக்கு பெயர் வைத்தோம். "தேவ தந்தி"
நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் நீங்கள் ஆபீஸ் சென்று அங்கு மயன் இருப்பார். பத்திரிக்கை முதல் பிரதியை அச்சடித்து விநியோகியுங்கள் என்றேன். எத்தனை காப்பி அடிப்பது என்றார். இங்கு இருப்பது முப்பத்திமுக்கோடி நபர்கள். ஆளுக்கு ஒன்று. உபரியாக ஒரு பத்தாயிரம் காப்பிகள். அவ்வளவுதான் என்றேன். நாரதர் போய்விட்டார்.

நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போனோம். அன்றைய தேவதந்தி டேபிள்மேல் இருந்தது. அதில் நாங்கள் மூவரும் தேவலோகம் வந்து பதவி ஏற்றது, இந்திரனின் வருத்தம், நாங்கள் புது ஆபீசில் குடியேறியது, அன்று நகர்வலம் செல்வது ஆகிய விவரங்கள் அனைத்தும் விலாவாரியாக கொடுக்கப்பட்டிருந்தன. 

மயனைக்கூப்பிட்டு நகர்வலம் போகலாமா என்றேன். அவர் சரி என்றார். நாங்கள் மூவர், மயன், நாரதர் ஆகக்கூடி ஐந்து பேர். ஆபீசை விட்டு வெளியில் வந்தோம். வெளியில் எந்த வாகனமும் காணவில்லை. மயனிடம் என்ன, வாகனம் எதுவுமில்லையா? என்றேன். மந்திரி, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு லொடலொட புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானை இருக்கிறது. அதை வேண்டுமானால் வரச்சொல்லட்டுமா என்றான்.

மயன், யானையெல்லாம் சரிப்படாது. புஷ்பக விமானத்தில் பூலோகத்திலிருந்து வந்த உடம்பு வலியே இன்னும் சரியாகவில்லை. பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் "ஹெலிகாப்டர்" என்னும் பெயரில் விற்கிறார்கள். அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும். ஒரு அரை டஜன் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன். கூடவே அதை ஓட்டுவதற்கு ஆறு பைலட்டுகளையும் ஆறு மாத டெபுடேஷனில் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றேன்.

மயன் ஆனாலும் படு சுறுசுறுப்பு. அடுத்த சில நிமிடங்களில் ஆறு ஸ்பெஷல் விஐபி ஹெலிகாப்டர்கள் பைலட்டுகளுடன் தயாராக நின்றன. இன்று நாம் எல்லோரும் ஒரு ஹெலிகாப்டரிலேயே போகலாம் என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டோம்.

எங்கு பார்த்தாலும் தேவர்கள். ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். ஜிகுஜிகு துணிகளில் பஞ்சகச்சமும், மேலாடைகளும் அணிந்திருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். பொது - நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே, தலைவா, என்றார். சும்மா இரும் பொது என்று சொல்லிவிட்டு, அந்த தேவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன்.

தேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. நாரதரே, நாம் கீழே இறங்கி அவர்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டேன். அவர் பேஷாப் பேசலாமே என்றார். ஹெலிகாப்டரை கீழே இறக்கினோம்.

நாரதர் போய் நாலைந்து ஜோடி தேவர்களைக் கூட்டிவந்தார். நெருக்கத்தில் பார்க்கும்போதுதான் மேலும் பல விஷயங்கள் தெரிய வந்தன. இந்தப் பயல்களின் கால்கள் தரையிலிருந்து ஒரு ஜாண் மேலேயே இருந்தன. எல்லோருடைய மூஞ்சிகளும் ஜப்பான்காரன் மூஞ்சி மாதிரி ஒரே மாதிரியாக இருந்தன. ஒரு ஆளைக் கூப்பிட்டு உன் பெயரென்ன என்று கேட்டேன். அவன் விழித்தான்.

நாரதரிடம் இவன் பெயர் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். நாரதர் இவர்களுக்கெல்லாம் பெயர் இல்லை என்றார். என்ன, இவன்களுக்குப் பெயர் இல்லையா, அப்புறம் எப்படி ஒவ்வொருத்தனையும் கூப்பிடுவீர்கள் என்று கேட்டேன். அவர்களை எதற்குக் கூப்பிடவேண்டும்?அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்? என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.

நாரதரே, எங்கள் பூலோகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அவர்கள் அந்தப் பெயரினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், அப்படி இங்கே இவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையா? என்றேன். இல்லை என்றார். சரிதான், நம் ஊரில் தெருவில் திரியும் ஆடுமாடுகளுக்கெல்லாம் பெயரா வைத்திருக்கிறோம், அது மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்த மாதிரி இருந்தால் நம் திட்டங்களுக்குச் சரிப்படாதே, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சித்திரகுப்தன் ஞாபகம் வந்தது.

அவனை அழைத்தேன். உடனே வந்து "வணக்கம் மந்திரி பிரபோ" என்றான். அன்றைய பத்திரிக்கையைப் படித்திருக்கிறான். சித்திரகுப்தா, இதென்ன இங்குள்ளவர்களுக்கெல்லாம் பெயரே கிடையாதாமே, ஏன் என்றேன். பிரபோ, அதற்கு அவசியமே ஏற்படவில்லை என்றான். நான் "அதற்கு அவசியம் இப்போது வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் பெயர் கொடு" என்றேன். பிரபோ, அவ்வளவு பெயர்களையும் உடனே கண்டுபிடிப்பது சிரமம். நடைமுறைச் சிக்கலும் வந்து விடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் நெம்பர் கொடுத்துவிடலாமென்றான்.

சரி, அப்படியே செய்துவிடு. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள அட்டை தயார் செய்து, அதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லிவிடு என்றேன். நெம்பர் கொடுப்பதற்கு முன் சில வேலைகள் இருக்கின்றன. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு மயனைக் கூப்பிட்டேன்.

மயன், இவர்களை ஒரு ஒழுங்கில் குடியமர்த்தவேண்டும். இப்போது இவர்கள் எங்கே குடியிருக்கிறார்கள் என்றேன். அப்படியென்றால்.... என்று மயன் இழுத்தார். இவர்கள் இப்படியே உலாத்திக்கொண்டு இருப்பார்கள், இவர்களுக்கு வீடு வாசல் என்று ஒன்றும் கிடையாது என்றார். என்னடா, நம் பூலோக தெரு நாய்கள் கதி மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.

அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். செக்கு, நீயும் இதைக் கேட்டுக்கொள். நீதான் இனிமேல் இந்த குடியமர்ப்புகளை பரிபாலனம் செய்யவேண்டும். இந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரித்து குடியமர்த்தவேண்டும். இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம். ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோடி தேவர்கள். மாநிலத் தலைநகரில் பத்து லட்சம் தேவர்கள் இருக்கட்டும். மாவட்டத் தலைநகரில் ஒரு லட்சம் தேவர்கள். வட்டத் தலைநகரில் பத்தாயிரம் தேவர்கள். மீதி 70 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் மொத்தம் உள்ள 7000 கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் பேராக இருக்கட்டும். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆளுக்குப் பத்து ஹெக்டேர் (25 ஏக்கர்) நிலம் இருக்கட்டும். அதில் கிணறு, மோட்டார் பம்ப்செட் வசதியும் இருக்கட்டும்.

எல்லோருக்கும் குடியிருக்க வீடுகள் தயாராகட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஜோடி தங்கட்டும். ஆக மொத்தம் 16 கோடி 50 லட்சம் வீடுகள் இப்போதைக்குப் போதும். ஜனத்தொகை பெருகும்போது அவர்களுக்கு, பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர், மின்சாரம், பாதாளச்சாக்கடை இணைப்பு ஆகியவைகளைக் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டில், மெத்தை, மாடுலர் கிச்சன், டிவி, டெலிபோன் ஆகியவை இருக்கட்டும். அவைகளுக்கு உடனடியாக உபயோகம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தேவைப்படும்.

மாநிலத் தலைநகரங்கள், மாவட்டத்தலைநகரங்கள், வட்டத்தலைநகரங்கள் ஆகியவற்றில் அந்தந்த இடங்களுக்குத் தகுந்த மாதிரி அலுவலங்கள் கட்டுங்கள். அவை சகல வசதிகளும் பொருந்தியதாக இருக்கட்டும். இது தவிர ஒவ்வொரு நகரத்திற்கு அருகாமையிலும், கூடவே பத்துப் பத்து சேடலைட் நகரங்கள் அமைக்க தேவையான காலி இடம் வைத்திருங்கள்.

அனைத்து மாநிலத்தலைநகர்களும் ஆறு வழிப்பாதை மூலம் இணையுங்கள். மாவட்டங்களுக்கு இடையே நான்கு வழிப்பாதைகள். வட்டங்களுக்கு இடையேயும் கிராமங்களுக்கு இடையேயும் இரு வழிப்பாதைகள் தயாராகட்டும்.

மயன் இந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். சித்திரகுப்தனிடம் இந்த தேவர்களை இந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்துங்கள். அப்புறம் அவர்களுக்கு நெம்பர் கொடுப்பது எளிது. ஒவ்வொரு  ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள். முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும். அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும். மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன். சித்திரகுப்தன் சரி என்று சொல்லிவிட்டு அந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான்.

அப்புறம் ஒரு ஜோடியைக்கூப்பிட்டு மற்ற விஷயங்களை விசாரித்தோம். அந்த விசாரணையில் தெரிய வந்தது அவர்களை பேசுவது தேவபாஷை அதாவது வடமொழி. அவர்களுக்கு பசி தாகம் கிடையாது. அங்கு எப்போதும் பகல்தான். அவர்கள் தூங்குவது இல்லை. அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வப்போது கொஞ்சம் சோம்பானம் மட்டும் அருந்துவார்கள். அது இந்திரன் மாளிகையில் பீப்பாய் பீப்பாயாக வைத்திருக்கிறது. அந்தப் பீப்பாய்கள் தீரத்தீர, காமதேனு அவைகளை நிரப்பி வைத்து விடும்.

ஏறக்குறைய பூலோகத்தில் தெருவில் திரிந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சரி, இவைகளை ஒவ்வொன்றாக கவனிப்போம் என்று முடிவு செய்தேன்.

காலையில் சாப்பிட்ட டிபன் ஜீரணமாகிவிட்டிருந்தது. நாரதரிடம் என்ன, மதிய உண்வு சாப்பிடலாமா என்று கேட்டேன். அது என்ன மதிய உணவு? அதை எதற்கு சாப்பிடவேண்டும்? என்றார். வாருங்கள், காட்டுகிறேன் என்று சொல்லி, அவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் இருப்பிடம் சென்றோம். காமதேனு காத்துக் கொண்டு இருந்தது.

அதனிடம் டில்லி அசோகா ஹோட்டலில் மதிய உணவிற்கு என்னென்ன செய்திருக்கிறார்களோ, அதில் எல்லாவற்றிலும் எங்களுக்குத் தேவையான அளவு கொண்டுவா என்று சொல்லிவிட்டு, கைகால்கள் கழுவிவிட்டு டைனிங்ஹால் வந்தோம். சாப்பாடு தயாராக இருந்தது. நாங்கள் நால்வரும் (நாரதர் உட்பட) உட்கார்ந்தோம். இதுதான் மதிய உணவா என்று நாரதர் கேட்டார். ஆமாம் நாரதரே, இங்கே நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பிட மாட்டீர்களா என்று கேட்டேன். அவர் சொன்னார், தேவலோகத்தில் பசி, தாகம் கிடையாதாகையால் இதற்கெல்லாம் அவசியமில்லை என்றார்.


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

தொடரும்...

9 கருத்துகள்:

  1. செய்தித்தாள் தேவதந்தி. வித்தியாசமான சிந்தனை. நன்கு ரசித்தேன். உங்களுடன் நாங்களும் வந்துகொண்டிருக்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஐயா! அங்கு போயும் படித்த போதித்த பாடத்தை விடவில்லை போலும். தேவர்களுக்குத்தான் வேளாண்மை பற்றி ஒன்றும் தெரியாதே. எனவே ஒரு வேளாண்மைக் கல்லூரி தொடக்குவது அடுத்த திட்டமோ? பதிவை இரசித்தேன்! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. Most Respected Sir, ’வாஷிங்கடனில் திருமணம்’ எழுதிய சாவி அவர்கள் போல தங்களிடம் ஏராளமான நகைச்சுவை உணர்வுகளும், எழுத்துத்திறமையும் குவிந்துள்ளன.

    ஒரு துக்கச்செய்தியைக் கேள்விப்பட்டு உடலும் உள்ளமும் மிகவும் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவ்வப்போது அழுதுகொண்டிருக்கும் எனக்குத் தங்களின் இந்த நகைச்சுவைப் பதிவுதான் மனதுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல ஓர் ஆறுதலைத் தந்து வருகிறது.

    ஒவ்வொரு வரியையும் ரஸித்து ருசித்துப் படித்து வருகிறேன்.

    இந்தத்தொடரை சீக்கரமாக முடித்துவிடாமல், ஒரு 100 பகுதிகள் கொண்ட மிக நீள நகைச்சுவைத் தொடராக எழுத வேண்டும் எனத்தங்களை நான் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  4. தேவலோகத்துக்குச் சென்று அவர்கள் போல் வாழாமல் அவர்களை நம் வழிக்குக் கொண்டு வரும் முயற்சிகள் ரசிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  5. பெயரே இல்லாதவர்கள் ஹாஹாஹா ஸூப்பர்
    நானும் தொடர்ந்து வருகிறேன் ஐயா
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  6. நானும் தொடர்ந்து வருகிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  7. very innovative ,absolutely innocuous yet thought - provoking ...தொடர்கிறேன் ..
    மாலி

    பதிலளிநீக்கு