எங்க ஊர்ல கடைவீதிக்குப் போனால் ஒவ்வொரு ஜவுளிக்கடை வாசலிலும் ஒரு பையன் அல்லது ஆள் இருப்பான். அந்த வழியில் போகிறவர்களையெல்லாம் " அம்மா வாங்க, ஐயா வாங்க, நல்ல துணிகள் சலீசாக இருக்கு" என்று கூவி அழைத்தவாறே இருப்பான். அவனுக்கு அதுதான் வேலை. சம்பளம் அதுக்காகத்தான்.
பழனிக்குப் போனால் பழக்கடைக்காரர்கள் இவ்வாறு ஆட்கள் வைத்து தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களைக் கவர்வார்கள்.
இதே டெக்னிக்கை சோப்புக் கம்பெனிகள் எப்படி உபயோகப்படுத்தினார்கள் என்றால், தங்கள் சோப் சுற்றிவரும் காகிதத்தை நல்ல வர்ணத்துடனும் ஒரு சினிமா நடிகை போட்டோவுடனும் போட்டார்கள். பிறகு ஏறக்குறைய எல்லாப் பொருட்களின் பேக்கிங்க்குகளும் மிகவும் கவர்ச்சிகரமாக மாறின.
சரக்கு எப்படியிருந்தாலும் அது நல்ல முறையில் கவர்ச்சிகரமாக பேக் செய்தால்தான் விறபனை ஆகும் என்ற நிலை வந்து விட்டது. எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் கல்யாண தினத்தில் பல ஆயாரம் செலவழித்து மேக்கப் போடுகிறார்கள்.
இந்த நிலை வந்த பிறகு விளம்பரக் கம்பெனிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. விளம்பரத்துக்காக பெரும் தொகையை கம்பெனிகள் செலவிடுகின்றன.
நிஜ உலகில் இருக்கும் இந்த நிலை பதிவுலகத்திலும் எதிரொலிக்கிறது. ஆள் வைத்துக் கூவுவதற்குப் பதிலாக ஈமெயில் ஆனுப்புகிறார்கள். கவர்ச்சி பேக்கிங்க்குக்குப் பதிலாக கவர்ச்சிகரமான தலைப்பு வைக்கிறார்கள். கால ஓட்டத்தில் இந்த டெக்னிக்குகளெல்லாம் தேவைப்படுகின்றன. என்னுடைய சரக்கு அருமையான சரக்காக்கும், எனக்கு இந்த கவர்ச்சிகளெல்லாம் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களின் சரக்கு விலை போவதில்லை.
என்னுடைய பதிவில் இந்தத் தத்துவத்தை பரிசோதனை செய்து பார்த்தேன். கவர்ச்சிகரமான தலைப்பு நிச்சயமாக அதிக வாசகர்களைக் கொண்டு வருகிறது. ஆனாலும் எனக்கு அந்த மாதிரி தலைப்புகள் வைக்க கஷ்டமாக இருக்கிறது. ஆகவே நான் பைத்தியக்காரனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.