மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஏப்ரல், 2016

16.தலைவருக்கும் வட்டத்திற்கும் ஆப்பு


இரண்டு நாளில் மூவரும் திரும்பி வந்தார்கள். செக்கை கொஞ்சம் அலைய விட்டிருக்கிறார்கள். ஆனால் செக்கு சுதாரிப்பாக இருந்ததால் அவரை ஏமாற்ற முடியவில்லை. நான் தலையைப் பார்த்து இனி என்ன செய்வதாக உத்தேசம் என்றேன். இனி நான் பிச்சைதான் எடுக்கவேண்டும் என்றார். நல்லது, நானே அதைத்தான் சொல்லலாமென்று இருந்தேன், அதற்குள் நீயே சொல்லி விட்டாய். எந்தக் கோயிலுக்குப் போக விருப்பம், அதைச் சொன்னால் அந்தக் கோவில் அதிகாரிக்கு ஒரு லெட்டர் தருகிறேன் என்றேன்.

அதற்குள் பொது என் முதுகைச் சுரண்டினான். என்ன என்று திரும்பிக் கேட்டதற்கு குசுகுசுவென்று, இவர்களை இருவரையும் நாம் ஏன் நம் எடுபிடி வேலைகளுக்கு வைத்துக் கொள்ளக்கூடாது, இருவருக்கும் நல்ல அனுபவம் இருக்கிறது, நாம் அதை உபயோகப் படுத்திக் கொள்ளலாமே என்றார். பரவாயில்லையே, நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது, எதற்கும் அவர்கள் அபிப்பராயத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.

அவர்களை நீயே கேள் என்று பொதுவிடம் சென்னேன். பொது அவர்களை அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போனார். என்ன டீல் போட்டாரோ தெரியவில்லை. திரும்பும்போது தலைக்கும் வட்டத்திற்கும் வாயெல்லாம் பல். மந்திரி ஐயா, " அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். எனக்கு தலையும் செக்குவிற்கு வட்டமும் பி.ஏ. வாக இருப்பார்கள் " என்றார். சரி, ஆனால் அவர்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன்.

அவர்களைப் பார்த்து யமலோகம் பார்த்ததை மறக்காதீர்கள். இன்னொரு முறை போனால் திரும்பி வரமுடியாது, ஜாக்கிரதையாயிருங்கள், உங்கள் பழைய வேலைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பினேன்.

இப்படி நடந்து கொண்டிருக்கும்போதே ரெண்டு தடவை போன். யாரென்று பார்த்தால் நம் நிதி மந்திரி. என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், வரப்போகின்ற தேர்தல் விஷயமாக பி.எம். உங்களைப் பார்க்க விரும்புகிறார். உங்களுக்கு எப்ப சௌகரியப்படும் என்று கேட்கச்சொன்னார், என்றார். நாளைக்கு நான் ப்ரீதான். நீங்கள் மூவரும் பத்து மணிக்கு வந்து விடுங்களேன். அப்படியே லஞ்ச் இங்கேயே சாப்பிட்டுவிடலாம் என்றேன். சரி என்றார்.

மறுநாள் சரியாக பத்து மணிக்கு மூவரும் வந்து விட்டார்கள். என்ன விஷயம் என்று கேட்டேன். தேர்தல் வருகிறது. கட்சியில் இருந்த பணத்தைப் பூராவும் எடுத்து ரிசர்வ் வங்கி கஜானாவில் சேர்த்து விட்டோம். இப்பொழுது தேர்தல் செலவிற்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என்று கையைப் பிசைந்தார்கள்.

இதற்கா கவலைப் படுகிறீர்கள்? ஒரு கட்சிக்காரனிடத்திலும் காசு இல்லை. போய்க் கேட்டால் ஒருவனும் கொடுக்க மாட்டான். ஆகவே எல்லோரும் ஓட்டாண்டிகள்தான். ஆனால் உங்களுக்கு நான் இருக்கிறேன். கவலைப்படாதீர்கள். ஆனால் நான் சொன்ன மாதிரிதான் தேர்தலை நடத்தவேண்டும் என்றேன்.

மூவரும் சாமி மாடு மாதிரி தலையை ஆட்டினார்கள்.

இந்த தேர்தலில் பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரி ஆகிய நீங்கள் இருவர் மட்டும்தான் பழைய ஆட்கள். கட்சித்தலைவர் ஏதோ ஆசை வைத்திருக்கிறேன் என்றாரே, அது என்ன என்றேன். அது ஒண்ணும் இல்லீங்க, அவங்க மகனை கொஞ்சம் மேலுக்கு கொண்டு வரவேண்டும், அவ்வளவுதானே, செஞ்சுடுவோம். அவர் இப்போதைக்கு வெளி உறவு மந்திரியாக இருக்கட்டும். மற்ற மந்திரிகளைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு பேசுவோம்.

இப்போது நாம் அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். பஞ்சாயத்து தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் இரண்டையும் முதலில் முடித்து விடுவோம். அப்போது நமக்கு ஓரளவு ஜனங்களை எடை போட்டுவிடலாம். இந்த அடிமட்ட தேர்தல்களில் இது வரைக்கும் அரசியலில் ஈடுபடாதவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் நம் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவேண்டும். இந்த வேலையை அடிமட்ட கிராமங்களிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு துடிப்பான இளைஞனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்கவேண்டும். ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி கொடுக்கவேண்டும். நீதி, நேர்மை, நியாயம். சட்டம், ஒழுங்கு, சமூக முன்னேற்றம், தனிநபர் ஒழுக்கம், கல்வி, தொழில், விவசாயம் ஆகிய துறைகளில் அவர்களை சிறந்தவர்களாக மாற்றவேண்டும்.

இவர்கள்தான் இனிமேல் இந்தியாவை நிர்வகிப்பார்கள். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைத் தழுவுவார்கள். இவர்களைத்தான் பஞ்சாயத்திற்கும் உள்ளாட்சிகளுக்கும் வரப்போகும் தேர்தலில் நிற்கவைத்து ஜெயிக்கவைக்கப் போகிறோம். இன்னும் இருபது ஆண்டுகளுக்கு எதிர்க் கட்சிகள் எந்தப் பொறுப்பிற்கும் வரக்கூடாது. அதை நான் கவனித்துக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தல்கள் இவர்களின் பயிற்சி முடிந்ததும் வைத்துக் கொள்ளலாம். பயிற்சி நடக்கும்போதே அவர்களின் திறமைகளை கவனித்து அவரவர்களின் தகுதிக்கு ஏற்ற பதவிகளுக்கு நிற்க வைப்போம். நாம் நிறுத்தும் அனைத்து வேட்பாளர்களும் ஜெயிப்பார்கள். ஏனெனில் அவர்கள் அந்தந்த கிராம மக்களின் ஆதரவு பெற்றவர்கள். இந்தப் பயிற்சிக்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

இந்த தேர்தல்கள் முடிந்த பிறகு அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்கு பதிவர்கள் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நல்லவர்கள். நீதி,நேர்மைக்குப் பேர் போனவர்கள். அவர்களை முடிந்த மட்டில் வேட்பாளர்களாக நிறுத்துவோம். எதிர்க்கட்சி என்பதே இந்த தேர்தலுக்கு அப்புறம் இருக்கக் கூடாது.  பாராளுமன்றத்திற்கு இனி யமகிங்கரர்ளை  காவலுக்குப் போட்டுவிடலாம். தகராறு பண்ணுகிறவர்களை அவர்கள் நேராக யமபட்டணமே தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்.

மிச்சம் இருக்கும் பதிவர்களை சட்டசபை உறுப்பினர்களாக்கி விடுவோம்.

 சரியென்று சொல்லிவிட்டு மூவரும் சாப்பிட்டுவிட்டு சென்றார்கள்.

பின் குறிப்பு: இந்த பயிற்சி மற்றும் தேர்தல்கள் நடந்து முடிய கொஞ்ச நாட்கள் ஆகும். அது வரையில் நாம் வேறு பொருட்களைப் பற்றி சிந்திப்போம்.

திங்கள், 10 நவம்பர், 2014

VGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே !

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


கதையின் விமர்சனம்.

ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களும் மகிழ்ச்சியும் வேதனைகளும் கலந்துதான் ஆரம்பித்திருக்கின்றன. அவரவர் விதிப்படி அவர்கள் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிறார்கள்.
அந்தக் காலத்து ஸ்டோர் வாழ்க்கை என்பதை இன்று நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ஆனால் மக்கள் அவைகளில் வசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

அந்த வாழ்க்கை முறையை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கதாசிரியர். அந்த வாழ்க்கையிலும் இளம் பருவ ஆசைகள் வரத்தான் செய்யும்.

அப்படி அவர் வாழ்வில் வந்தவர்கள் மூவர். ஆனால் ஒருவருடன்தான் வாழ்க்கைப் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் குடும்ப பாரம்பரியம். குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறப்பவனுக்கு சில கடமைகள் இருக்கின்றன. தன் சுகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு போக முடியாது. அவனுக்குப் பின் இருக்கும் தம்பி தங்கைகளின் வாழ்வும் அவன் கையில்தான் இருக்கிறது.

அந்தக்காலத்தில் இந்தப் பொறுப்பை மக்கள் உணர்ந்து நடந்து கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. இது ஒரு வேள்வி என்றே சொல்லலாம். இந்த வேள்வியில் அவ்வப்போது தோன்றும் ஆசாபாசங்கள் எரிந்து போகும்.


அப்படி எரிக்கப்பட்டவைகளில் சில பிற்காலத்தில் வாழ்வில் தலை காட்டலாம். அப்போது அவை எந்த நிலையிலும் இருக்கலாம். இந்த உண்மையை இரண்டு சம்பவங்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இது போன்ற நிகழ்வுகள் வெறும் கற்பனையல்ல. நிஜவாழ்விலும் நடக்கலாம். அப்படியான ஒரு கதையைப் படித்த திருப்தி ஏற்பட்டது.