ஒரே தாய் தந்தைக்குப் பிறந்து ஒரே சூழ்நிலையில்,
ஒரே மாதிரி வளர்க்கப்பட்ட இரு சகோதரர்கள் ஒரே மாதிரி குணங்கள் உடையவர்களாக இருப்பதில்லை.
இது ஏன் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
சோதிடர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒருவன்
பிறக்கும்போது இருக்கும் கிரக நிலைகள் அவனுடைய குணங்களையும் அவனுடைய செயல்பாடுகளையும்
கட்டுப்படுத்துகிறது என்கிறார்கள். அதனால்தான் கிரக நிலைகள் மாறும்போது அவனுடைய செயல்பாடுகளும்,
சுக துக்கங்களும் மாறுகின்றன என்றும் கூறுகிறார்கள். இதை சோதிடத்தின் மூலம் கணித்து
எதிர்காலப் பிரச்சினைகளைக் குறைக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இந்த தத்துவம் விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொள்ள முடியாததாக
இருக்கலாம். ஆனால் விண்வெளியிலிருந்து வரும் கதிர் வீச்சுக்கள் மனிதனின் குணங்களை மாற்றுகின்றன
என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். இந்த மாற்றம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக
இருப்பதில்லை என்பதையும் விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. ஆகவே சோதிடம் உண்மைதான் என்று
வாதாடுபவர்கள் இருக்கிறார்கள்.
மனிதர்களுக்குள் வேறுபாடுகள் ஏற்படுவதற்கு ஒவ்வொருவர்
பிறக்கும்போதும் இருந்த கிரக நிலைகள்தான் காரணம் என்று சோதிடர்கள் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.
ஆனால் விஞ்ஞானம் இதை ஒப்புக்கொள்வதில்லை. ஏன் என்று நாம் இப்போது ஆராயவேண்டாம்.
விஞ்ஞானிகள் என்னசொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஏன் மனிதர்களுக்குள் இந்த மாதிரி வேறுபாடுகள் இருக்கின்றன என்றால் ஒவ்வொருவரின் மரபணுக்களும்,
அவற்றின் மூலக்கூறுகளும் வேறுபடுகின்றன. இந்த மரபணுக்கள் பல தலைமுறைகளாக வாழையடி வாழையாக
வந்தவை என்பதை நினைவு கொள்ளவேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் பல தலைமுறைகளின் மரபணுக்களைக்
கொண்டுள்ளார்கள். எப்படி இரு மனிதர்களுக்கு விரல் ரேகைகள் ஒரே மாதிரி இருப்பதில்லையோ,
அதே மாதிரி இரண்டு மனிதர்களின் மரபணுக்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
மனிதனின் உடல், மன வளர்ச்சியில் இந்த மரபணுக்கள்
மிகுந்த பங்கு ஆற்றுகின்றன. ஒரே அனுபவத்திலிருந்து இரு மனிதர்கள் இரு விதமான அனுபவங்களைப்
பெறுகிறார்கள். காரணம் இந்த மரபணுக்களிலுள்ள வித்தியாசங்களே. இப்படி வித்தியாசமான அனுபவங்களைப்
பெறுபவர்களின் புத்தியும் குணங்களும் வேறுபட்டுத்தானே இருக்கும். மனிதர்களின் குணங்கள்
இவ்வாறுதான் வேறுபடுகின்றன.
பெரும்பாலான மனிதர்களின் குணங்கள் நல்லவையாகவே இருக்கின்றன.
ஆனாலும் சிலரின் குணங்கள் மிகவும் மாறுபட்டு குடும்பம், சமூகம், நாடு இவைகளுக்கு கேடு
விளைவிக்கும் விதமாக அமைந்து விடுகின்றன.
ஏன் இவர்கள், மற்றவர்களைப் பார்த்து, அல்லது அவர்களின்
அறிவுரைகளைக் கேட்டு தங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்ற ஐயம் ஏற்படுவது இயற்கையே.
ஏன் என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?