மைதா வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மைதா வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 செப்டம்பர், 2013

மைதா மாவும் மனிதர்களும்.


இந்தப்புரோட்டாவைப் பாருங்கள். உடனே சாப்பிடவேண்டும் என்று தோன்றவில்லையா? இதைப்போய் சிலர் வெறுக்கிறார்களே என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.

மைதா தயாரிக்கப்படும் விதம் பற்றி விக்கிபீடியா சொல்வது.

Maida is a finely milled and refined and bleached (using chemical bleach) wheat flour, closely resembling cake flour, and used extensively in making Indian fast food, Indian bakery products such as pastries and bread,[1] varieties of sweets and sometimes in making traditional Indian breads such as paratha and naan.[2] It is made from the endosperm (the starchy white part) of the grain, while the fibrous bran is removed in the mill.
Originally yellowish, maida is popular in a white color, bleached with benzoyl peroxide. The use of benzoyl peroxide in food is banned in China[3] and in theEuropean Union[3] (including the UK[4]).
Maida contains alloxan[citation needed], the source of which may be direct use as softener or the by-product of the bleaching agent chlorine dioxide. Maida is often softened using alloxan[citation needed] which is known to destroy beta cells in the pancreas of rodents and other species, causing diabetes mellitus. The agent, chlorine dioxide, used to bleach flour is reported to produce diabetes-causing contaminant alloxan when reacting with the proteins contained in flour. Studies show that alloxan, the chemical that makes white flour look "clean" and "beautiful," destroys the beta cells of the pancreas[citation needed] in rodents. Some studies have shown that alloxan is not toxic to the human beta-cell, even in very high doses, probably because of differing glucose uptake mechanisms in humans and rodents.[5][6]

ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.

ஒரு ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் சங்கீத வித்வான். இன்னொருவர் தத்துவ ஞானி. மூன்றாமவர் வைத்தியர்.

இந்த மூவரும் ஒரு சமயம் க்ஷேத்தராடனம் சென்றார்கள். ஒரு ஊரில் சென்று ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அந்தக் காலத்தில் ஓட்டல்கள் இல்லை. அவரவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளவேண்டும். இதற்காக அவர்கள் சத்திரத்து மணியகாரனிடம் சமையல் சாமான்களை வாங்கி சமைக்க ஆரம்பித்தார்கள்.

பக்கத்திலேயே அரிசி கிடைத்தது. சங்கீத வித்வானை சாப்பாடு வடிக்கச் சொல்லி விட்டு மற்ற இருவரும் காய்கறிகளும் நெய்யும் வாங்கச் சென்றார்கள். தத்துவ ஞானி நெய் வாங்கச் சென்றார். மருத்துவர் காய்கறிகள் வாங்கச் சென்றார்.

தத்துவ ஞானி நெய் வாங்கினார் கடைக்காரன் அந்த நெய்யை ஒரு தொன்னையில் ஊற்றிக் கொடுத்தான். வாங்கிக்கொண்டு வரும் வழியில் தத்துவ ஞானி சிந்தித்தார். இப்போது நம் கையில் இரண்டு வஸ்துக்கள் இருக்கின்றன. எது எதற்கு ஆதாரம்? இதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று சிந்தித்தார்.

இப்போது தொன்னையில் நெய் இருக்கிறது. ஆகவே தொன்னை நெய்க்கு ஆதாரம். ஏன் நெய் தொன்னைக்கு ஆதாரமாய் இருக்கக் கூடாது? கண்டு பிடித்து விடுவோம் என்று தொன்னையை தலைகீழாகப் பிடித்தார். நெய் முழுவதும் தரையில் சிந்தி விட்டது. ஆஹா, தொன்னைதான் நெய்க்கு ஆதாரம். இந்த தத்துவத்தைக் கண்டு பிடித்த சந்தோஷத்துடன் சத்திரத்திற்குத் திரும்பினார்.

காய்கறிகள் வாங்கப் போன மருத்துவர், காய்களைப் பார்த்தார். கத்தரிக்காய் -
பித்தம், வாழைக்காய் - வாயு, வெங்காயம் - சூடு. கருணைக்கிழங்கு - மந்தம், இப்படி ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு குறை சொல்லிக்கொண்டு ஒரு காயையும் வாங்காமல் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தார்.

சாதம் வடிப்பதற்காக விட்டுப் போன பாகவதரோ, அடுப்பு பற்ற வைத்து பானையை வைத்து அதில் அரிசியைப் போட்டார். தேவையான தண்ணீரை ஊற்றி அடுப்பை நன்றாக எரிய விட்டார். உலை சூடாகி தளதளவென்று கொதுக்க ஆரம்பித்தது. அந்த சத்தம் நல்ல தாள சத்தமாய் இருந்தது. அந்த தாளத்திற்கேற்ப பாகவதர் பாட ஆரம்பித்தார். கச்சேரி நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. அப்போது சாதம் நன்கு வெந்து விட்டபடியால் கொதி அடங்கி விட்டது. தாளச் சத்தம் நின்று போய்விட்டபடியால் பாகவதரால் தொடர்ந்து பாட முடியவில்லை.

அவருக்கு கோபம் வந்து விட்டது. சோற்றுப் பானையை ஒரு உதை விட்டார். பானை கீழே விழுந்து உடைந்து போய் சோறு எல்லாம் வீணாகிப்போய் விட்டது. பிறகு என்ன செய்வது? மூவரும் அன்று பட்டினி கிடந்தனர்.

இந்தக் கதையை எதற்காகச் சொன்னேன் என்றால், இப்படி ஒவ்வொரு பொருளிலும் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருந்தால் அப்புறம் ஒன்றையும் சாப்பிட முடியாது என்பதை வலியுறுத்தத்தான்.

மைதா மாவில் செய்யப் படும் புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இப்போது சொல்லுகிறார்கள். புரோட்டா, இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்பட்ட பதார்த்தம் அல்ல. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக புழக்கத்தில் இருந்து வரும் ஒரு உணவுப் பண்டம். நமக்கு முந்தி இரண்டு தலைமுறையினர் இந்த புரோட்டாவை சாப்பிட்டு ஜீரணம் பண்ணி வாழ்ந்து செத்துப் போனார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போதும் டாக்டர்கள் இருந்தார்கள்.

சரி, புரோட்டாவை விட்டு விடுவோம். புரோட்டா தவிர மைதா மாவில் வேறு என்னென்ன தின்பண்டங்கள் செய்கிறார்கள் என்று பார்ப்போமா. அனைத்து பிஸ்கோத்துகள், கேக்குகள், முதலான அனைத்து பேக்கரி ஐட்டங்களுக்கும் மூலப் பொருள் மைதாவே. மைதா மாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கணக்கிலடங்கா. அனைத்து ஓட்டல்களிலும் தயாரிக்கப்படும் பூரி, சப்பாத்திகளில் பாதிக்கு மேல் மைதா கலக்கப்படுகிறது. "நான்", "ருமானி" ரொட்டி இவைகளுக்கு மூலப்பொருள் மைதா மட்டுமே.

மைதா மாவிற்கு எதிராக சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, வளர்ந்த நாடுகளில் இதை புறக்கணித்து விட்டார்களாம். அதனால் நாமும் இதை புறக்கணிக்க வேண்டுமாம். வளர்ந்த நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு முறைகளை நாமும் கடைப் பிடிக்கவேண்டுமென்றால் இந்தியாவில் சாப்பிடுவதற்கு லாயக்கான உணவு வகைகள் எதுவுமே மிஞ்சாது.

மைதா மாவு கோதுமை மாவை வெளுப்பாக்கி செய்யப்படும் ஒரு மாவு. இந்த வெளுப்பாக்குதலுக்கு "பென்சாயில் பெர்ஆக்சைடு" என்னும் போருளை உபயோகிக்கிறார்கள். அதானால் அந்த ரசாயனம் விஷம் என்று சொல்கிறார்கள். ரிபைஃன்டு ஆயில், சர்க்கரை, இரண்டும் இவ்வாறு ரசாயனங்கள் மூலம்தான் வெளுப்பாக்கப்படுகின்றன. இந்த இரண்டும்தான் சமையலறையின் உயிர்நாடி. இவைகளை என்ன செய்யப்போகிறோம்?

நம் கசாப்புக்கடைகளைப் பார்த்தால் வெள்ளைக்காரன் ஆயுசுக்கும் மட்டனை விட்டு விடுவான். நம் ஓட்டல் கிச்சனைப் பார்த்தால் என்றால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அவன் ஊருக்கே ஓடி விடுவான். கல்யாண வீட்டில் உணவு தயாரிப்பதைப் பார்த்தால் நமக்கே வாந்தி வந்து விடும்.

கைக்குத்தலரிசிதான் உடலுக்கு நல்லது. எத்தனை பேர் இதைச் சாப்பிடுகிறோம்? டபிள் பாலிஷ் செய்த அரிசிதான் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அந்த அரிசி சாப்பாடுதான் மல்லிகைப்பூ மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கிறது. அதைத்தானே சாப்பினுகிறோம்.

இத்தனை சீர்கேடுகள் இருந்தும் இந்தியன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்கு இந்த உணவு கிடைப்பதே பெரும் அதிர்ஷ்டமாக இருக்கிறது. தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற உணவைத்தான் சாப்பிடுவேன் என்று இருந்தால் இந்திய ஜனத்தொகை ஒரே வருடத்தில் சுதந்திரம் வாங்கியபோது இருந்த அளவிற்கு வந்து விடும்.

சரி ஐயா, அப்படி மைதாவில் என்ன விஷத்தை கலக்கிறார்கள் என்று பார்த்தால், மாவை வெள்ளையாக்குவதற்கு பென்சாயில் பெர்ஆக்சைடு என்ற பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது செற்கையாகத் தயார் செய்யப்பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அங்ககப் பொருளே. எல்லா அங்ககப் பொருட்களும் குறுகிய காலத்திலேயே வேதியல் மாற்றம் அடைந்து மறைந்து விடும். மைதா மாவு கடைக்கு விற்பனைக்கு வரும்போது இந்த வேதியல் பொருளின் அளவு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்குத்தான் இருக்கும். இந்த விஷயத்தை அரசாங்கம் கட்டாயம் கவனித்துக்கொண்டிருக்கும்.

ஏன் இப்போது இந்த மைதா மாவு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது என்றால், கேரளாவில்தான் முதலில் இந்தப் பிரச்சினை துவங்கியிருக்கிறது. கேரளாவைப் பொருத்த வரையில் தினம் ஒரு போராட்டம் நடத்தாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. மைதா மாவை ஒழிப்போம் என்று காலையில் ஊர்வலம் போய்விட்டு மத்தியானம் டீக்கடைக்குப் போய் ரெண்டு புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்குப் போவார்கள். ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்கள் அவர்கள்.

இந்த மாதிரி சமாச்சாரங்கள் இப்போது ஒரு பேஃஷனாகப் போய்விட்டது. மேனகா காந்தி என்று ஒரு அம்மாள் நாய்களுக்காக கோர்ட்டுக்குப் போய் தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பு வாங்கியிருக்கிறாள். நாய்க்கடி பட்டு ஆஸ்பத்திரிக்குப் போவது சாதாரண ஜனங்கள்தான்.

அந்தக் காலத்தில் பால்தான் சரிவிகித உணவு, எல்லோரும் பால் குடியுங்கள் என்று எல்லா டாக்டர்களும் பரிந்துரைத்தார்கள். இப்போது பால் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்களாம். நான் இன்றும் படுக்கப்போகும்போது ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டுத்தான் படுக்கிறேன்.

ஆகவே உணவுக் கலப்படத்தைப் பற்றிய சிந்தனையாளர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தயவு செய்து இந்தக் கருமாந்திரம் பிடித்த ஊரில் குடியிருக்காதீர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குப் போய்விடுங்கள். நாங்கள் நிம்மதியாக புரோட்டா, சால்னா சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து கொள்கிறோம். புரோட்டா இந்தியன் உள்ளளவும் இருக்கும். புரோட்டா வாழ்க.