சமீபத்தில் மோடி அரசு ரயில் கட்டணங்களை அதிகரித்துள்ளது. இது மிகவும் நியாயமான ஒரு நடவடிக்கை. ரயில்வே நிர்வாகம் தினமும் 30 கோடி ரூபாய் அளவில் நஷ்டத்தை சந்திக்கிறதாம். எந்த ஒரு ஸ்தாபனத்தையும் இப்படி நஷ்டத்தில் நடத்த முடியாது. ஆகவே மோடி கட்டணங்களை அதிகரித்ததில் எந்த வித தவறும் கிடையாது.
ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் மாநில ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இட்லி ஒரு ரூபாய்க்கு கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு பணம் எங்கிருந்தாவது வர வேண்டுமல்லவா? இப்படி மத்திய அரசு செய்வதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தால் அப்புறத் மத்திய சர்க்கார் எப்படி நடக்கும்?
சரி, அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஒரு சம்பிரதாயமான கடமை. மருமகள் கால் பட்டாலும் குற்றம், கை பட்டாலும் குற்றம் என்பது போல், மத்திய சர்க்கார் என்ன செய்தாலும் அதை எதிர்த்து ஒரு அறிக்கை விடுவது மாநில சர்க்காரின் பிறப்புரிமை. தினமும் தூங்கி எழுவது போல் இது ஒரு "நித்தியானுஷ்டானம்". ("நித்தியானுஷ்டானம்" அப்படீன்னா என்னன்னு கேட்கப்படாது. எனக்குத் தெரியாததைக் கேட்டால் நான் என்ன பண்ண முடியும்?)
இது புரிகிறது. ஆனால் இந்த பொது ஜனம் என்று சொல்லப்படுகின்ற ஜந்து எதற்காக ஊளையிடுகிறது என்று புரியவில்லை? தென்னாட்டில்தான் இந்த ஓலம். வடநாட்டில் இப்படி யாரும் ரயில் கட்டண உயர்விற்காக ஓலமிடுவதாய் தெரியவில்லை. அதனால்தான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்கிறார்கள்.
வட மாநில மக்கள் ஏன் ரயில் கட்டண உயர்வைப்பற்றி ஓலமிடவில்லை என்பது வட மாநிலங்களுக்குப் போய் வந்தவர்களுக்குத் தெரியும். டிக்கட் வாங்கி ரயில் பயணம் செய்பவர்களுக்குத்தான் ரயில் கட்டண உயர்வைப் பற்றி கவலை. வட மாநில மக்கள் எப்போதும் ரயிலில் செல்வதற்கு டிக்கட் வாங்குவதில்லை. (சில அரசியல் வாதிகள் உட்பட.) நம் அரசின் ரயில், நாமெல்லோரும் இந்நாட்டு மன்னர்கள், நாம் எதற்கு டிக்கட் வாங்க வேண்டும்? இது அவர்கள் கொள்கை.
வாழ்க மத்திய அரசு.