வைத்திய முறைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வைத்திய முறைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 ஏப்ரல், 2012

தீராத தும்மலைத் தீர்க்க! (பாகம் 1)


எனக்கு சிறு வயதில் தீராத தும்மலும் சளியும் இருந்தன. காலையில் எழுந்ததும் ஒரு ஐம்பது தும்மல் போடுவேன். பிறகு அவ்வப்போது தும்மல் வரும். மூக்கிலிருந்து எப்போதும் நீராகக் கொட்டிக் கொண்டே இருக்கும். எப்போதும் கைக்குட்டை கையிலேயே இருக்கும். (கைக்குட்டை கையில் இல்லாமல் வேறெங்கு இருக்கும்னு யாரோ முணுமுணுக்கிறார்கள். இது ஒரு சீரியஸ் பதிவு. நக்கலெல்லாம் வேண்டாம்).

என் பாட்டி என்னை தன் கிராமத்தில் ஒரு நாட்டு வைத்தியரிடம் கூட்டிக்கொண்டு போய் காண்பித்தார்கள். அந்த அம்மா (வைத்தியர்) என் பாட்டியிடம் ஒரு கவுளி வெத்திலையும் அரைப்படி பசு நெய்யும் வாங்கி வரச்சொன்னார்கள். அவைகளை வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு நாள் கழித்து வரச்சொன்னார்கள்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் போனோம். அந்த அம்மா அந்த வெற்றிலைச் சாற்றையும் நெய்யையும் சேர்த்துக் காய்ச்சி ஒரு திரவப் பதத்திற்கு மாற்றி, ஒரு பாட்டிலில் போட்டுக் கொடுத்தார்கள். அதை உபயோகிக்கும் விதம் எப்படியென்றால், அதில் இரண்டு சொட்டு வீதம் எடுத்து என் இரண்டு மூக்கிற்குள்ளும் விடவேண்டும். நான் கீழே படுத்துக் கொண்டு தாடையை மேல் நோக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

ஐந்து நிமிடம் அப்படியே படுத்திருக்கவேண்டும். இந்த மருந்து மூக்கிற்குள் போனதுமே சுறுசுறு என்று மூக்கைப் பிராண்டும். மூக்கிற்குள் பெரிய அரிப்பாயிருக்கும். ஆனால் நான் மூக்கை ஒன்றும் செய்யக்கூடாது. ஐந்து நிமிடம் கழித்து எழுந்திருந்து மூக்கை சுத்தம் செய்து விட்டால், அப்புறம் சில மணி நேரம் தும்மல் வராது. ஆனால் அந்த மருந்தின் வேகம் குறைந்தவுடன் மறுபடியும் "பழைய குருடி கதவைத் திறடி" கதைதான்.

ஒரு ஆறு மாதம் இந்த வைத்தியம் நடந்தது. பிறகு என் பாட்டி சலித்துப் போய் இந்த வைத்தியத்தை விட்டு விட்டது. இப்படியே நானும் என் அடுக்குத் தும்மலும் வளர்ந்தோம். நான் படிப்பை முடித்து விட்டு வேலைக்குப் போன பிறகு என் தும்மல் வாழ்வில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது.

அது என்னவென்று இரண்டாம் பாகத்தில் சொல்லுகிறேன். காத்திருங்கள்.