புதன், 25 ஏப்ரல், 2012

பதிவுகளில் எரிச்சலூட்டுபவை.


1. முகநூல் விளம்பரம்
நிறைய பதிவுகளில் இந்த முகநூல் விளம்பரம் முந்திரிக்கொட்டை மாதிரி முன்னால் வந்து நிற்கிறது. சின்னப் பசங்க அம்மா காலையே சுத்திச்சுத்தி வருவாங்களே அந்த மாதிரி. நாயை விட்டுகிற மாதிரி சூ, சூ என்றால் போகாமல் அப்படியே நிற்கிறது. பதிவை விட்டு ஓடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.


2. மேலும் படிக்க
பதிவுக்குள்ள போனமா, பதிவப் படிச்சமான்னு இருக்கணும். அதை உட்டுப்புட்டு மோர், தயிர், மேலும், இப்படீன்னு பல பதிவுகளில் போட்டிருக்கிறார்கள். அந்த மோரும் தயிரும் எங்கிருக்குதுன்னு கண்டுபிடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது.


3. கருப்பு பின்புலம்
வெள்ளையில் கருப்பு எழுத்துக்கள்தான் படிப்பதற்கு சுகம். சில பேர் கருப்பு பின்புலத்தில் வெள்ளை அல்லது வேறு கலர் எழுத்துகளை உபயோகிக்கிறார்கள். அந்த மாதிரி பதிவுகளைப் படிக்கவே முடிவதில்லை.


4. சிறிய எழுத்துகள்
எழுத்துகள் ஓரளவுக்கு படிக்கிற மாதிரி இருக்கணும். சின்ன சின்ன எழுத்துக்கள் படிப்பதற்கு கடினமாக இருக்கின்றன. அதைப் பெரிது பண்ணிப் படிக்க கம்ப்யூட்டரில் வசதி இருந்தாலும் அது ஒரு கூடுதல் வேலை. இதனால் பதிவைப் படிக்காமல் போவதற்கு வாய்ப்பு அதிகம்.


5. வரிகளுக்கிடையே போதிய இடைவெளி இல்லாமை.
ஒரு பக்கம் முழுவதும் இடைவெளி இல்லாமல் ஒரு பதிவு இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் போதிய இடைவெளி இருந்தால்தான் படிக்க சௌகரியம்.


6. பின்னூட்டம் போடுவதற்கு இடைஞ்சல்கள்
ஐயா பின்னூட்டம் போடுங்கள் என்று கோவில்களில் பிச்சைக்காரர்கள் கூவுகிற மாதிரி கூவுகின்ற பதிவுகளை நிறையப் பார்க்கின்றோம். சரி, ஐயோ பாவம் என்று பின்னூட்டம் போடப் போனால் வரும் உபத்திரவம் அதிகம். முதலில் தமிழில் பின்னூட்டம் போடுகின்றோம். முடித்து பப்ளிஷ் என்று சொன்னால் உடனே வேர்டு வெரிபிகேஷன் என்று ஒன்று. நீங்கள் ரோபோட் இல்லையென்று நிரூபியுங்கள் அப்படீன்னு ஒண்ணு. அதில மேகமூட்டத்தில கலங்கின மாதிரி ஆங்கில எழுத்துக்கள். அப்புறம் நீங்க ஆங்கிலத்திற்கு மாறி, அந்த எழுத்துக்களை ஒண்ணாம் கிளாஸ் பையன் மாதிரி எழுத்துக்கூட்டி டைப் பண்ணவேண்டும். அப்புறம் பப்ளிஷ் பண்ண வேண்டும்.


ஏதோ ரோபோட் வந்து இவங்க பதிவுல ஆயிரக்கணக்குல பின்னூட்டம் போட்ட மாதிரியும் அதைத் தடுக்க இந்த யுத்தியைக் கடைப்பிடிக்கற மாதிரியும் பாவலா. இதனால் வருகிற ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் ஓடிப்போய்விடும்.


பதிவுகள் போடுவது நாலு பேரு படிக்கட்டும் என்றுதானே. அதில் இவ்வளவு சங்கடங்கள் கொண்டு வந்தால் எப்படிங்க படிக்கிறது? எப்படிங்க பின்னூட்டம் போடறது? பதிவுலக கனவான்களே, சிந்தியுங்கள்.