ஒரு நரி ஒரு நாள் ஒரு திராட்சைத்தோட்டம் வழியாகப் போய்ட்டு இருந்ததாம். அந்த திராட்சைத் தோட்டத்தில திராட்சைப் பழங்கள் கொத்துக் கொத்தாக் காய்ச்சு தொங்கிட்டு இருந்ததாம். அதைப் பார்த்த நரிக்கு வாயில் எச்சில் ஊறினதாம். தோட்டத்திற்குள் எப்படியோ நுழைஞ்சு, அந்த திராட்சைக் கொலைகளைப் பறிக்க எம்பி, எம்பி (நம்ம எம்.பி. இல்லைங்க) குதிச்சுப் பார்த்ததாம். திராட்சைக் கொலையைப் பறிக்க முடியவில்லையாம். கொஞ்ச நேரம் கழித்து அது தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு போய்விட்டதாம்.
இந்தக் கதையைப் பொதுவாக ஒருவரைக் கேலி செய்வதற்காகச் சொல்வதுதான் வழக்கம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால்தான் இந்தக்கதையின் உள்ளர்த்தம் விளங்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் குடும்பத்துடன் ஒரு சினிமா பார்க்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அன்று அந்தப் படத்திற்கு ஏகப்பட்ட கூட்டம். திருட்டு டிக்கெட்தான் கிடைக்கும். உங்கள் நாலு பேருக்கும் டிக்கெட்டுக்கே ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். பிறகு ஓட்டல் செலவு, ஆட்டோ எல்லாம் சேர்த்தால் உங்கள் பர்ஸ் போண்டியாகிவிடும். அந்த மாதம் குடும்ப வண்டியை ஓட்ட கடன் வாங்கவேண்டும். அதை எப்போது கட்ட முடியமோ தெரியாது. இந்த நிலையில் அந்தப் படம் வேண்டாம், பீச்சுக்குப் போய்விட்டு, சுண்டலைச் சாப்பிட்டு விட்டு பஸ்சில் வீட்டுக்குப் போகலாம் என்று முடிவெடுப்பதுதான் சிறந்த முடிவு.
அப்போதுதான் நரி தத்துவம் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த சினிமா புளிக்கும் என்று உங்கள் குடும்பம் ஒத்துக் கொண்டால் அது ஆரோக்கியமான குடும்பம். உங்களுக்கு மன வேதனை வராது. இல்லாமல் ஐயோ, இந்த சினிமா பார்க்க முடியவில்லையே என்று புலம்ப ஆரம்பித்தால் வீண் வருத்தம்தான் மிஞ்சும்.
சினிமா மட்டுமல்ல. வாழ்க்கையில் எல்லா முயற்சிகளிலும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறித்தான் வரும். வெற்றியைக் கண்டு அதீத மகிழ்ச்சி அடைவதும், தோல்வியைக் கண்டு அதிகம் துவண்டு போவதும் வாழ்க்கைக்கு உகந்ததல்ல. அப்படி இருந்தீர்களென்றால் எப்போதும் நீங்கள் புலம்பிக்கொண்டேதான் இருக்கவேண்டும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியைத் தொலைத்தவராகி விடுவீர்கள்.
சர்வ மதப் பிரார்த்தனை ஒன்றைக் கேட்டிருப்பீர்கள்.
"கடவுளே, இந்த உலகில் மாற்ற வேண்டியவைகளை மாற்றக்கூடிய திறனையும், மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய
மன வலிமையையும், இந்த இரண்டையும் அடையாளம் கண்டு கொள்ளும் விவேகத்தையும் எனக்கு அருள்வாயாக".
இந்த வாழ்க்கை நமக்கு வாய்த்தது இறைவன் அருள். அதை மகிழ்ச்சியாக வாழத் தேவையான புத்தியையும் அவனே கொடுத்திருக்கிறான். அதைவிட்டு நான் புலம்பிக்கொண்டுதான் இருப்பேன் என்றால் அதறகான சுதந்திரத்தையும் அவனே கொடுத்திருக்கிறான். எப்படி வாழப்போகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம்.