காலம் காலமாக கேட்கப்பட்டு புளித்துப் போன கேள்வி. இருந்தாலும் அவ்வப்போது புளி போட்டுத்தேய்த்து புதிது பண்ணிக்கொள்ளவேண்டும்.
இறைவன் எங்கே இருக்கிறான் என்பதை ஆராய்வதற்கு முன் இறைவன் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது நல்லது. சின்னவயதில் கடவுள் மனிதன் செய்யும் எல்லாக் காரியங்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். நீ நல்லது செய்தால் உனக்கு சுகத்தைக் கொடுப்பார். தீமை செய்தால் கஷ்டத்தைக் கொடுப்பார் என்று பெரியவர்கள் சொல்லி சொல்லி, கடவுளைக் கணக்குப்பிள்ளை என்று நம்பி வந்தோம். பிற்காலத்தில் விவரம் தெரிந்த பிறகு, அவர் எல்லோருக்கும் கணக்கு வைப்பதில்லை, சாதாரண மனிதர்களுக்குத்தான் கணக்கு வைக்கிறார் என்று புரிந்தது.
அவர் கணக்கு வைத்துக்கொள்ள ஒரு பெரிய ஆபீசே நடத்துகிறார். சித்திரகுப்தன்தான் அதற்கு எக்சிக்யூடிவ் டைரக்டர். ஆனால் அவரும் வேலைப்பளு காரணமாக சிலரது கணக்குகளை விலக்கிவிட்டார். இந்த விஷயம் எனக்கு எப்படித் தெரிந்தது என்றால், சாதாரண மனிதர்களுக்கு விதித்துள்ள விதியான, நல்லது செய்தால் நல்லது விளையும், கெட்டது செய்தால் கெட்டது விளையும் என்ற விதி அநேகம் பேருக்கு விதிவிலக்கு கிடைத்திருக்கிறது. அவர்கள் விஷயத்தில் அவர்கள் கெட்டதே செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக மிக நன்றாக, சுகபோக வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இது எப்படி சாத்தியம் என்று யோசித்தபோதுதான் இந்த ஞானோதயம் ஏற்பட்டது. அதாவது அவர்களுக்கெல்லாம் சித்திர குப்தன் கணக்கு வைப்பதில்லை என்ற விஷயம். ஏனென்றால் அவர்களுக்கு கணக்கு வைக்க ஏகப்பட்ட குமாஸ்தாக்கள் தேவைப்பட்டன. ஏறக்குறைய ஒவ்வொருவருக்கும் ஒரு குமாஸ்தா தேவையாயிருந்தது. யமதர்மனிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொன்னபோது அவன் சிம்பிளாக இந்த வழியைச் சொன்னான். அதாவது அவர்களுக்கெல்லாம் கணக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
அப்படிப்பட்ட பாக்கியவான்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறதல்லவா? சொல்லிவிடுகிறேன். அரசு சம்பத்தப்பட்ட அனைத்து நபர்களும் இந்த விதிவிலக்கின் கீழ் வருகிறார்கள். நம் நாட்டை எடுத்துக் கொண்டால், ஜனாதிபதியிலிருந்து ஊர் பேர் தெரியாத பஞ்சாயத்து கடைநிலை ஊழியர் வரை அரசு சம்பத்தப்பட்டவர்கள்தான். எம்.பி., எம்.எல்.ஏ., பஞ்சாயத்து மெம்பர், எல்லாரும் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. வட்டம், மாவட்டம், எடுபிடிகள் இவர்களும் இவர்களுள் அடக்கம்.
இவர்களுக்கு இந்த விதி, அதாவது நல்லது, கெட்டது என்கிற விதி இல்லை. இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சித்திரகுப்தன் கணக்கு வைக்கமாட்டான். இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அவனுக்கு அவன் குடும்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கே நேரம் போதாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும்போது இதையெல்லாம் கவனிக்க எப்படி முடியும்?