வெள்ளி, 27 ஜூலை, 2012

வாழ்வின் நோக்கம் என்ன?



நாம் பிறந்தது ஏன் என்பது நமக்குத் தெரியாத ஒரு செயல். ஆனாலும் பிறந்து, வளர்ந்து கல்வி கற்று, வேலை தேடி, மணம் புரிந்து, குழந்தைகள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சூழ்நிலைகளின் வேறுபாடுகளினால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் வாழ்கிறோம். ஆனாலும் மனிதன் வாழ்வதற்கு ஏதாவது நோக்கம் இருக்கிறதா என்றால் சரியான பதில் எதுவும் சொல்லமுடிவதில்லை.

நாம் பிறந்து ஓரளவு அறிவு பெற்றவுடன் சிந்திக்கத் தொடங்குகிறோம். இந்நிலையில் நம் சிந்தனைகள் நாம் பழகும் மனிதர்களின் சிந்தனைகளை ஒட்டியே இருக்கிறது. குறிப்பாக நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் ஆகியோரின் எண்ணங்களையே நாமும் பிரதிபலிக்கிறோம். இவர்கள் நமக்கு காட்டும் வழி என்ன? நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல வேலை தேடிக்கொள்ளவேண்டும், கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் நிலைபெறவேண்டும், என்பவைதான். சராசரி மனிதன் ஒவ்வொருவனுக்கும் கிடைக்கும் வழி காட்டுதல் இவ்வளவே.

இவ்வாறு ஒரு சராசரி வாழ்வு வாழ்வதில் பல சௌகரியங்கள் இருக்கின்றன. சமூக அங்கீகாரம் கிடைக்கிறது. உங்கள் பெற்றோர்களும் உறவினர்களும் உங்களை மரியாதையுடன் பார்க்கிறார்கள். உங்கள் மனைவியும் மக்களும் இங்களைப் பற்றி பெருமை கொள்கிறார்கள். ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டிய அங்கீகாரங்கள் இவ்வளவே. ஏறக்குறைய செம்மறியாட்டு மந்தையில் ஒரு ஆடாக மனிதன் ஆகிவிடுகிறான்.

இதை விட்டு நீங்கள் வேறு வழியில் போக முயற்சித்தால் சமூகம் உங்களை விடுவதில்லை. அதை எதிர்த்து நீங்கள் செயல்பட்டால் உங்களை பைத்தியம் என்று பெயர் சூட்டி ஒதுக்கி விடுவார்கள். இந்த சூழ்நிலையை மீறி சிலர் செயல்படுகிறார்கள். அவர்கள்தான் அரசியல் தலைவர்களாக, சமூக சீர்திருத்த வாதிகளாக, பெரிய தொழிலதிபர்களாக, பெரிய வியாபாரிகளாக உருவாகிறார்கள். அவர்கள் அவ்வாறு உருவெடுக்க உதவுவது அவர்களின் மனோபாவமும் சூழ்நிலைகளும் ஆகும். எல்லோராலும் அவ்வாறு உருவாக முடியாது.

அப்படி உருவானவர்களின் கொள்கைகள் நியாயமானதாகவே இருக்கவேண்டும் என்ற சட்டம் இல்லை. பெரும்பாலாவர்கள் குறுக்கு வழிகளையே கடைப்பிடிக்கிறார்கள். நியாய அநியாயங்கள் அவர்களுக்கு இல்லை. எப்படியும் தாங்கள் மேல் நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக கொலைகளும் செய்வார்கள். இந்த வழி சாதாரண மக்களுக்கு உகந்ததல்ல.
அப்படியானால் என்னதான் செய்யலாம் என்று யோசித்தபோது கிடைத்த சில கருத்துகளை இங்கே பகிர்கிறேன்.

  1.   உண்மையாக இருங்கள். உங்கள் மனச்சாட்சி சொல்வதைக் கேளுங்கள்.
  2.   மற்றவர்களுக்கு உதவுங்கள். உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
  3.   அன்பாக இருங்கள். மற்றவர்கள் கஷ்டங்களைக் கண்டு மனம் உருகுங்கள். அக்கஷ்டங்களை உங்களால் முடிந்த அளவு குறைக்கப் பாடுபடுங்கள்.
  4.   தொழிலில் நேர்மையாக இருங்கள்.

எல்லோரும் இக்கருத்துகளை ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்தால், சமூகம் கொஞ்சமாவது மாறும் என்று நம்புகிறேன்.