அன்புடையீர்,
ஒரு வார காலத்திற்கு
என்னை பதிவுலக நட்சத்திரமாக மாற்றிய தமிழ்மண நட்சத்திரப் பதிவுகளின் நிர்வாகிகளுக்கும்,
குறிப்பாக திரு. சங்கரபாண்டி அவர்களுக்கும், இந்த தகுதிக்கு என்னை முன்னிலைப்படுத்திய
நண்பர் கோவி. கண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நடசத்திரப்
பதிவுகளுக்குப் பெருவாரியாக வந்து ஆக்கபூர்வமான பின்னூட்டமிட்டவர்களுக்கும், வாழ்த்து
கூறியவர்களுக்கும், உற்சாகப்படுத்தியவர்களுக்கும், பார்வையிட்டவர்களுக்கும், திரட்டிகளில்
ஓட்டுப் போட்டவர்களுக்கும் நான் மிகுந்த கடன்பட்டிருக்கிறேன். இக்கடனை எவ்வாறு தீர்ப்பேன்
என்ற எண்ணம் என்னை ஒருவித குற்ற உணர்விற்குத் தள்ளியிருக்கிறது.
என் வயதின் காரணமாகவும்,
உடல், மன நிலை காரணமாகவும் என்னால் அதிகமான பதிவுகளைப் படித்து பின்னூட்டம் போட முடிவதில்லை.
ஆகவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், கம்பன் காட்டிய இலங்கை வேந்தன் போல் கலங்குகிறேன். நண்பர்கள் இந்நிலைக்காக
என்னை மன்னிக்கவேண்டும்.
என்னுடைய இந்த
வாரப் பதிவுகள் நட்சத்திரப் பதிவுகளின் தரத்தை எட்டாமல் இருந்திருக்கலாம். அதற்கு நான்
முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னால் நான் எழுதியவற்றைத் திரும்பவும் படித்து
மெருகேற்ற முடிவதில்லை. என் சோம்பேறித்தனம்தான் அதற்கு முக்கிய காரணம். அதற்காக தமிழ்மண
நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
தவிர, என்னால்
விரிவாகவும் எழுத முடிவதில்லை. சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்ற நன்னூல் சூத்திரம்
என் ஆழ்மனத்தில் பதிவாகியிருப்பதே இதற்குக் காரணம். ஆகவே என்னுடைய இந்த நட்சத்திரப்
பதிவுகள் அனைத்தும் சுருக்கமாகவே அமைந்து விட்டன. சில சமயம் அவை திடீரென்று முடிந்து
விட்ட மாதிரியோ அல்லது குறையுடன் முடிந்து விட்ட மாதிரியோ கூடத் தோன்றலாம். இது என்னுடைய
பலகீனம். இதைப் பொறுத்துக்கொண்டு என்னை உற்சாகப்படுத்திய அத்துணை நல்ல நெஞ்சங்களுக்கும்
மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இந்த வாய்ப்பை
தமிழ் மணமும் பதிவுலகமும் எனக்களித்த பெரும் பேறாகக் கருதுகிறேன். இனிமேல் நான் எழுதுவது
படிப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும் என்ற உணர்வை இந்த வாய்ப்பு என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது.
இனி வரும் பதிவுகளில் இந்த உணர்வை செயல்படுத்த முயற்சிக்கிறேன்.
நன்றி, வணக்கம்.