புதன், 17 பிப்ரவரி, 2010

திருச்செந்தூரில் ஆட்சி புரிவது யார்?

(மூன்றாம் நாள்)
[இந்த தலைப்பிலுள்ள விஷயத்திற்கு போவதற்கு முன்பாக இந்த பதிவை தொடர்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் பின்னூட்டம் இட்டவர்களுக்கும் இடப்போகிறவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்ளுகிறேன். இந்த பதிவுலகத்தில் நான் நுழைய காரணமாய் இருந்த என் நண்பர் டாக்டர் நாராயணனுக்கு என் தனியான நன்றி.
இந்த பதிவுலகத்தில் வேடிக்கை பார்க்கத்தான் நுழைந்தேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இதிலேயே மூழ்கிவிட்டேன். என்னுடைய பதிவுலக அனுபவம் ரொம்பவும் கம்மி. ஒரு வருடம் கூட முடியவில்லை. யாரையும் கேட்காமல் நானே கற்றுக்கொள்ளவேண்டும் என்ற கொள்கையைக்  (மண்டைக்கனம்!) கடைப்படிப்பதால் நான் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றன. ]
காலையில் எழுந்து ரூமிலேயே குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றோம். ஊரிலிருந்து புறப்படும்போதே என் மாப்பிள்ளை ஒரு அர்ச்சகரின் போன் நெம்பரைக்கொடுத்து திருச்செந்தூர் போன்வுடன் அவரை தொடர்பு கொண்டால் அவர் தரிசனத்திற்கு உதவி செய்வார் என்று சொல்லியிருந்தார்.
நாங்களும் முன்தினம் பகலிலிருந்தே அவரிடம் தொடர்பு கொண்டிருந்தோம். அவரும் திருச்செந்தூர் வந்தவுடன் பேசச்சொன்னார். அப்படியே நாங்கள் தொடர்பு கொண்டவுடன் மறுநாள் காலையில் 81/2 மணிக்கு கோவிலின் முன் மண்டபத்திற்கு வரச்சொன்னார். வந்தபிறகு அவரை செல்போனில் கூப்பிட்டால் வந்து எங்களை தரிசனத்திற்கு அழைத்துப்போவதாகவும் சொன்னார்.

அதன்படியே நாங்கள் சரியாக 81/2 மணிக்கு கோவில் முன் மண்டபத்தில ஆஜரானோம். அங்கே டஜன் கணக்கில் அர்ச்சகர்கள் எங்களை முற்றுகையிட்டு ஒவ்வொருவரும் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள். நாங்கள் முன்பே ஏற்பாடு செய்து விட்டோம் என்று சொல்லி அந்த அர்ச்சகரின் பெயரைச்சொன்னவுடன் எல்லோரும் பயபக்தியுடன் ஒதுங்கி வழி விட்டார்கள். அப்போதுதான் எங்கள் அர்ச்சகரின் பிரதாபம் எங்களுக்குப்புரிந்தது. கூடவே என் பர்ஸ் கணிசமாக இளைக்கப்போகிறது என்கிற உண்மையும் புரிந்தது.
முன் மண்டபம்

கோவில் முழுவதும் ஜே ஜே என்று கூட்டம். எங்கு பார்த்தாலும் மனித தலைகளைத்தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்தக்கூட்டத்தில் நம் அர்ச்சகர் நமக்கு எப்படி தரிசனம் செய்து வைக்கப்போகிறார் என்கிற பயம் வேறு சேர்ந்துகொண்டது. அர்சகருக்கு போன் போட்டோம். அவர் மூலகர்ப்பக்ரகத்தினுள் இருந்திருக்கிறார். நான் பேசுவது அவருக்கு புரியவில்லை. அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை. அவரை நாங்கள் முன்பின் பார்த்ததில்லை. ஆனாலும் அந்த அர்ச்சகர் எங்களைப்போல் எத்தனை இளச்சவாயன்களைப் பார்த்திருப்பார். நான் போன் பண்ணின 5வது நிமிடத்தில் எங்கள் முன்னே வந்து நீங்கதானே கோயமுத்தூர் பார்ட்டி என்று எங்களைப் பிடித்துவிட்டார். (எங்கள் நெற்றியிலேயே எழுதி ஒட்டியிருக்கும் போல).
எங்களிடம் அவர் ‘என் பின்னாலேயே வாங்கோ, கூட்டம், நெரிசல் அதையெல்லாம் கண்டுக்கப்படாது. யார் என்ன சொன்னாலும் காதிலே வாங்கிக்காம ஒருத்தருக்கொருத்தர் இடைவெளி விடாம என் பின்னாலயே வாங்க இப்படி சொல்லிவிட்டு விருவிரு என்று முன்னால் போனார். நாங்களும் அவர் சொல்லிக்கொடுத்தபடியே ‘கருமமே கண்ணாகஎல்லோருடைய திட்டுகளைப்பொருட்படுத்தாது அவர் பின்னாலேயே போனாம். போனால் சிறிது நேரத்தில் கர்ப்பக்ரக வாசலில் நிற்கறோம். அர்ச்சகர் என் சம்பந்தி கையில் ஒரு அர்ச்சனைத்தட்டைக்கொடுத்துவிட்டு எல்லோர் பேர், நட்சத்திரம் சொல்லுங்கோங்கிறார். எங்களுக்கு இருந்த பதட்டத்தில் எப்படியே தட்டுத்தடுமாறி எல்லோருடைய பெயர் நட்சத்திரம் சொன்னோம்.
அர்ச்சகர் நாங்கள் சொல்லச்சொல்ல அந்தப்பெயர் நட்சத்திரங்களைத் திருப்பிச்சொன்னார். அதுதான் அர்ச்சனை. ஒரு குரூப் உட்கார்ந்து கொண்டிருந்ததை ‘போதும் எழுந்திருங்கோ என்று கிளப்பிவிட்டு அந்த இடத்தில் எங்களை உட்காரவைத்தார். நன்னா சாமிதரிசனம் செய்துக்கோங்க என்று மூன்று முறை சொல்லிவிட்டு எங்களை எழுப்பி விட்டார். ஆனாலும் சும்மா சொல்லப்படாது. அர்ச்சகருக்கு கோயிலுக்கு உள்ளே செம இன்பளூயென்ஸ். கர்ப்பக்ரகத்திலிருந்து வெளியே வந்தவுடன் ஆளுக்கு ஒரு மாலையைக்கொடுத்து (எங்கேயிருந்து எப்படி புடிச்சாருன்னு தெரியல) போட்டுக் கொள்ளச்சொன்னார். எனக்கு இந்த மாதிரி, கோயிலில் மாலை போட்டுக்கொள்வதில் விருப்பமில்லை. காரணம், சாமிக்கு போட்டமாலை புனிதமானது. அதை நாம் போட்டுக்கொண்டால் பிற்பாடு அதை என்ன செய்வது? அதை பத்திரமாக ஊருக்கு எடுத்துவந்து அது காய்ந்து சருகாகும் வரை காத்திருந்து பிற்பாடு அதை ஆறு குளம் கிணறு ஆகிய நீர்நிலைகளில் விடவேண்டும். இந்த சமாசாரமெல்லாம் நமக்கு கட்டுபடியாகாது. ஆகவே இப்படி மாலைகளைத் தவிர்த்து விடுவது என் வழக்கம்.
பிறகு நீங்கள் எல்லாம் வெளியில் சென்று நாம் புறப்பட்ட இடத்தில் இருங்கள். யான் பிரசாதம் எல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று எங்களை அனுப்பினார். நாங்கள் வெளியில் வந்த 15 நிமிஷத்தில் அவரும் வந்து பிரசாதம் எல்லாம் கொடுத்துவிட்டு எப்படி எல்லாம் திருப்திதானே என்றார். நாங்கள் என்ன சொல்லமுடியும், ஆஹா பரமதிருப்தி என்று சொல்லிவைத்தோம். அவருக்கு வேண்டியது அந்த வார்த்தைதானே.
சரி, நாங்கள் உத்திரவு வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு ஒரு தொகையைக்கொடுத்தோம். அவர் அதை வாங்கிக்கொண்டு,  இத பாருங்கோ, நீங்க 5 பேர், உள்ளே போக ஆளுக்கு 100 ரூபாய், அப்புறம் செக்யூரிட்டி. தேவஸ்தானம் ஆபீஸ் இதெல்லாம் இருக்கு என்றார். சரி ஸ்வாமி, இன்னும் எவ்வளவு வேண்டும் என்றேன். முதலில் கொடுத்ததைப்போல் இன்னொரு பங்கு வேண்டும் என்றார். இந்தாங்கோ என்று அவர் கேட்டதைக் கொடுத்துவிட்டு தலை தப்பியது தம்பிரான் (செந்திலாண்டவன்) புண்ணியம் என்று ரூமுக்கு திரும்பினோம். ஆகவே எல்லோருக்கும் சொல்லிக்கொள்ள வேண்டியது என்னவென்றால் திருச்செந்தூரில் செந்திலாண்டவன் ஆட்சி செய்கிறான் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். செந்திலாண்டவன் அர்ச்சகர்கள் கைப்பிள்ளை. (அப்பாடா, எப்படியோ தலைப்பிற்கு சம்பந்தம் கொடுத்தாகிவிட்டது)
அன்றே கன்னியாகுமரி சேரவேண்டியிருந்த்தால் ரூமைக்காலி செய்து விட்டு கன்னியாகுமரி புறப்பட்டோம்.
தொடரும்....