பல பதிவர்களும் பயணங்கள் போகிறார்கள், பயணக் கட்டுரை எழுதுகிறார்கள் (நான் உட்பட). நானும் பல உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். ஆனாலும் எல்லாப் பயணங்களும் சிரமம் கொண்டவையே. இந்த சிரமங்களையெல்லாம் அனுபவித்த பின் புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானோதயம் வந்த மாதிரி, எனக்கும் ஒரு நாள் ஒரு அரச மரத்தடியில் ஞானோதயம் வந்தது.
அரச மரமும் போதி மரமும் ஒன்றுதான் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? தெரியாதவர்கள் இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த ஞானோதயம் வந்த பிறகு எனக்குள் இந்த பயணங்கள் போவதைப் பற்றி நிறைய யோசனைகள் உதயமாயின. என் கற்பனையை ஓடவிட்டேன். இந்த ஓட்டத்தில் நான் அறிந்தவைகளை எல்லோரும் பயன் பெற வேண்டி இங்கே பதிகிறேன்.
இந்த மாதிரி பயணம் செல்ல முதலில் வேண்டியது அனைத்து அரசு வங்கிகளிலும் நிறைய பணமும் ஓவர்டிராப்ட் வசதியும். அனைத்து வங்கிகளின் பண அட்டைகள் கைக்கு வந்தவுடன் பயணம் புறப்படலாம்.
இரண்டாவது தேவை, ஒரு நல்ல டிராவல் ஏஜென்ட். உங்கள் விருப்பத்தைச் சொல்லிவிட்டால் பயணத்திட்டம் வகுத்துக் கொடுப்பது அவருடைய வேலை.
முடிந்தவரை விமானப் பயணமே சிறந்தது. அதிலும் பிசினஸ் கிளாஸ்தான் உத்தமம். ஏர் இந்தியா, கிங்க் பிஃஷர், கோஏர், ஜெட் ஏர்வேஸ், இந்த மாதிரி லோகல் பிளேன்களைத் தவிர்க்கச் சொல்லி விடவும்.
அடுத்து 5 ஸ்டார் ஓட்டல்களில் மட்டுமே ரூம் ரிசர்வ் செய்யச் சொல்லவும். அடுத்து பயணத்தில் உங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு இளம் (20 அல்லது 22 வயதுக்கு மேல் போகாமல்) உதவியாளரை தேர்ந்தெடுக்கச் சொல்லவும். நல்ல பிரபல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து இதற்கு ஆளைத் தேர்ந்தெடுக்கவும். அவருடைய வேலை என்னவென்றால் உங்கள் பயணத்திற்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டும்.
உங்கள் வேலை குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது, அந்தந்த ஊரில் இருக்கும் முக்கியமான இடங்களைப் பார்ப்பது, இவ்வளவுதான். உங்கள் துணிமணிகளை எடுத்து வருவது, ரூம் செக்இன் செய்வது, டாக்சி ஏற்பாடு செய்வது முதலானவை உங்கள் உதவியாளர் செய்து விடுவார். நீங்கள் உங்கள் உதவியாளர் தவிர வேறு யாருடனும் பேச வேண்டியதில்லை. உங்கள் உதவியாளர் அவ்வளவு பொறுப்புடனும் சாமர்த்தியத்துடனும் செயல்படவேண்டும். அப்படிப்பட்ட உதவியாளரைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டியது டிராவல் ஏஜென்ட் பொறுப்பு. சம்பளம் எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை.
பயண நாள் வந்து விட்டது. பிளேன் எத்தனை மணிக்கு, நீங்கள் எத்தனை மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும் என்கிற விவரத்தை உங்களை உதவியாளர் காலையிலேயே சொல்லி விடுவார். அந்த நேரத்திற்கு நீங்கள் தயாராகி வீட்டு ஹாலுக்கு வருகிறீர்கள். டாக்சி வருகிறது. பென்ஸ் கார்தான். அதில் ஏறுகிறீர்கள். உதவியாளரும் ஏறிக்கொள்கிறார். ஏர் போர்ட் போகிறீர்கள். செக்இன் நடைமுறைகளை உதவியாளர் பார்த்துக்கொள்கிறார். பிளைனில் ஏறியாகிவிட்டது.
நீங்கள் போகவேண்டிய ஊருக்கு பிளேன் சென்றடைந்தாகிவிட்டது. பிளேனை விட்டு இறங்கி வெளியே வருகிறீர்கள். டாக்சியில் ஏறி ஹோட்டலுக்குப் போகிறீர்கள். உங்கள் உதவியாளர் உங்களை ரூமுக்கு அழைத்துப் போய் விடுகிறார். உங்கள் டிரஸ்களை கழட்டிப்போட்டு விட்டு படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கிறீர்கள். இதுவரை நீங்கள் யாருடனும் பேசவேண்டிய அவசியம் வரவில்லை என்பதைக் கவனிக்கவும்.
அடுத்த நாள் காலையில் 7 மணிக்கு உங்களுக்கு பெட் காபியும் அன்றைய புரொக்ராம் ஷீட்டும் வருகிறது. நீங்கள் காப்பியைக் குடித்துக்கொண்டே அந்த புரொக்ராமைப் பார்க்கிறீர்கள். இன்டர்காமில் உதவியாளரைக் கூப்பிட்டு ஓகே சொல்கிறீர்கள். அன்று காலை முழுவதும் அந்த ஊரில் உள்ள இரண்டு முக்கியமான இடங்களைப் பார்க்கிறீர்கள். பென்ஸ் அல்லது பிஎம்டபிள்யூ கார். கூட உதவியாளர்.
மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம். மாலை அந்த ஊரில் உள்ள ஒரு மால் விசிட். இரவு சாப்பாடு முடிந்து நல்ல தூக்கம். நடு இரவில் ஒரு புயல் காற்று. இடி மின்னலுடன் பேய் மழை. நடுவில் ஒரு குரல். "சேர்லயே உட்கார்ந்துட்டு என்ன தூக்கம்? எழுந்து போய் கட்டிலில் படுத்துக்கொண்டு தூங்குவதுதானே?" அப்படியென்று ஒரு பேய்க்குரல். லேசாக கண் விழித்துப் பார்த்தால் பார்யாள் எதிரே நின்றுகொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள். மணி பிற்பகல் இரண்டு. சாப்பிட்டு விட்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவன் அப்படியே தூங்கிப்போய்விட்டேன். அவ்வளவும் கனவு.