திங்கள், 5 செப்டம்பர், 2011

என் பதிவுலக வயிற்றெரிச்சலும் ஆற்றாமையும்



இனிய உளவாக இன்னாத கூறுதல்
கனி இருப்ப காய் கவர்ந்தற்று – குறள் (100)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு – குறள் (784)

இந்த இரண்டு குறள்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத் தோன்றுகின்றன அல்லவா? தெய்வப்புலவர் தம் நூலில் இவ்வாறு முரண்பாடான கருத்துக்களைக் கூறியிருப்பாரா என்ற கேள்விக்கு தமிழ் அறிஞர்கள்தான் விடை கூற இயலும்.

தமிழ் அஞ்ஞானியான நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவரவர்களுக்கு பொருத்தமான குறளை அவரவர்கள் கடைப்பிடிக்கலாம் என்பதே. இக்கொள்கைப்படி இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போய்விட்டது. இதை மாற்ற கடும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறேன். உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும். பொய்தான் இனிக்கும். கசப்பு மாத்திரைக்கு சர்க்கரைப்பூச்சு பூசி கொடுப்பதில்லையா என்று இதைப் படிப்பவர்கள் நினைக்கலாம். நான் அதை “பசப்பு” என்று கருதுகிறேன். “பசப்பு” பத்தினிகளின் குணமாகாது. ஆகவே இடித்துக் கூறுவதே என் இயல்பாகப் போனது. அப்படியிருக்க மற்றவர்கள் இடித்துக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். சந்தோஷமாக  ஏற்றுக்கொள்கிறேன்.

இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இது தவறு என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. என்னுடைய போன பதிவில் “வயிற்றெரிச்சல்” என்பதற்குப் பதிலாக “ஆற்றாமை” என்று போட்டிருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். ஆனால் இவ்வளவு பின்னூட்டங்கள் வந்திருக்காது. மேலும் என் பதிவுலக வாழ்வில் முதன் முறையாக தமிழ்மணம் ஓட்டுப் பட்டையில் மைனஸ் ஓட்டுகளும் விழுந்திருக்காது. தவிர, அருமையான பல கருத்துக்கள் ஜனனமாகாமலேயே மரித்துப் போயிருக்கும். அதனால் பதிவுலகத்திற்கு எப்படிப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?! ஆகவே எந்த ஒரு கெடுதலிலும் ஒரு நன்மை உண்டென்பது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்தக் கிழடுகளுக்கே எதையும் குறை கூறத்தான் தெரியும், இன்றைய இளைஞர்களுக்கு ஆக்க பூர்வமாக ஏதாவது அறிவுரைகள் கூறுகிறார்களா? என்று ஒருவர் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். அது மிகவும் நியாயமான கருத்து. அடுத்த பதிவு இந்த குறிப்புகள்தான். தயை கூர்ந்து பொறுத்திருங்கள்.