ஞாயிறு, 3 நவம்பர், 2013

தீபாவளி பிரளயம்



என்னங்க அய்யா! தீபாவளியை முன்னிட்டு நகைச்சுவையாக நாலு வார்த்தை எப்போதும் போல் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஒரு படத்தோடு நிறுத்தி விட்டீர்களே? 

இப்படி ஒருத்தர் பின்னூட்டம் போட்டு விட்டார். அவர் ஆசையை நிறைவேற்றவேண்டாமா?

அதுதான் இந்த உண்மைப் பதிவு.

தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு ஒரு சோதனை வந்தது. அதாவது என் நண்பர் ஒருவர் அவருடைய வீட்டில் ஸ்பெஷலாக ஒன்றும் செய்ய வசதி இல்லாததால் ஒரு பிரியாணிக்கடையில் ஒரு கிலோ பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். என்னிடம் உங்களுக்கும் ஒரு பங்கு வரும் என்று சொல்லியிருந்தார். இது நடந்தது நான்கைந்து நாள் முன்பு. நான் அதை பெரிய விஷயமாக கருதவில்லை. பிரியாணி சாப்பிடுபவர்கள் என் வீட்டில் என்னைத்தவிர வேறு யாருமில்லை. அதனால் ஒருவருடனும் சொல்லவில்லை.

வீட்டில் அன்று எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது இதை எதற்கும் சொல்லிவிடலாமே என்று சொன்னேன். பிரளயம் ஆரம்பித்தது.

"உங்களுக்கு மூளையே கிடையாது. நல்ல நாள் பொல்லா நாள் என்று எதுவும் கிடையாது. அதுக்கு மேலே ஒரு கட்டையில போறவன் கூட சகவாசம். அவனுக்கும் விவஸ்தை கிடையாது. அவனுக்கு வீட்டில் ஒன்றும் கிடைப்பதில்லை. அதனால் அலைகிறான். உங்களுக்கு என்ன கேடு. நான்தான் உங்களுக்கு வேண்டியதை செஞ்சு கொட்டிக்கொண்டு இருக்கிறேனே, அது பத்தாதா, ஓசியில எவனோ பிரியாணி கொடுத்தா அதை வாங்கீக்கறதா. ஆமா, சொல்லீட்டேன், வீட்டுக்குள் பிரியாணி வந்துதோ, நாங்க யாரும் வீட்டுக்குள் இருக்கமாட்டோம். ................................................................"

இதற்கு மேலும் தொடர்ந்த அர்ச்சனையை இங்கு எழுதுவது பதிவுலக நாகரிகம் கருதி தவிர்க்கிறேன்.

திடீரென்று மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. (எப்பவாவது இது போல் அபூர்வமாக நடக்கும்). நான் சொன்னேன். ஆமா நீ செஞ்சயே உலகத்தில இல்லாத பலகாரம். அதை அவனுக்குக் கொடுத்துட்டு வாங்க என்று நீதானே கொடுத்தனுப்பிச்சே. அவன் அதை பதில் பேசாமல் வாங்கிக்கொண்டான் இல்லையா. அப்புறம் அவன் ஏதாச்சும் கொடுத்தால் அதை மரியாதைக்காக நான் வாங்கிக்கொள்ள வேண்டாமா, என்னை என்னவென்று நெனச்சாய்? என்று ஒரு போடு போட்டேன்.

எக்கேடோ கெட்டுப்போங்க. ஆனா அந்த கருமாந்திரம் ஊட்டுக்குள்ள வரப்படாது. எங்கயோ வச்சு சாப்பிட்டுக்குங்க. அப்படீன்னு ஒரு பைசல் ஆச்சு.

சரீம்மா, அதை நான் வாசல்லயே வச்சு சாப்பிட்டுட்டு, வந்துடறேன், அப்படியே சாப்பிட்ட எடத்தையும் நல்ல கழுவி விட்டுட்டு வர்றேன், சரித்தானே என்று முடிவுரை வாசிச்சேன்.

தீபாவளி அன்று நண்பனிடமிருந்து நானே போய் பிரியாணியை வாங்கி வந்து என் மகள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு நல்ல பிள்ளையாக வீட்டிற்கு வந்து விட்டேன்.

இப்படியாக தீபாவளி பிரளயம் ஓய்ந்தது.