என்னங்க அய்யா! தீபாவளியை முன்னிட்டு நகைச்சுவையாக நாலு வார்த்தை எப்போதும் போல் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஒரு படத்தோடு நிறுத்தி விட்டீர்களே?
இப்படி ஒருத்தர் பின்னூட்டம் போட்டு விட்டார். அவர் ஆசையை நிறைவேற்றவேண்டாமா?
அதுதான் இந்த உண்மைப் பதிவு.
தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு ஒரு சோதனை வந்தது. அதாவது என் நண்பர் ஒருவர் அவருடைய வீட்டில் ஸ்பெஷலாக ஒன்றும் செய்ய வசதி இல்லாததால் ஒரு பிரியாணிக்கடையில் ஒரு கிலோ பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். என்னிடம் உங்களுக்கும் ஒரு பங்கு வரும் என்று சொல்லியிருந்தார். இது நடந்தது நான்கைந்து நாள் முன்பு. நான் அதை பெரிய விஷயமாக கருதவில்லை. பிரியாணி சாப்பிடுபவர்கள் என் வீட்டில் என்னைத்தவிர வேறு யாருமில்லை. அதனால் ஒருவருடனும் சொல்லவில்லை.
வீட்டில் அன்று எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது இதை எதற்கும் சொல்லிவிடலாமே என்று சொன்னேன். பிரளயம் ஆரம்பித்தது.
"உங்களுக்கு மூளையே கிடையாது. நல்ல நாள் பொல்லா நாள் என்று எதுவும் கிடையாது. அதுக்கு மேலே ஒரு கட்டையில போறவன் கூட சகவாசம். அவனுக்கும் விவஸ்தை கிடையாது. அவனுக்கு வீட்டில் ஒன்றும் கிடைப்பதில்லை. அதனால் அலைகிறான். உங்களுக்கு என்ன கேடு. நான்தான் உங்களுக்கு வேண்டியதை செஞ்சு கொட்டிக்கொண்டு இருக்கிறேனே, அது பத்தாதா, ஓசியில எவனோ பிரியாணி கொடுத்தா அதை வாங்கீக்கறதா. ஆமா, சொல்லீட்டேன், வீட்டுக்குள் பிரியாணி வந்துதோ, நாங்க யாரும் வீட்டுக்குள் இருக்கமாட்டோம். ................................................................"
இதற்கு மேலும் தொடர்ந்த அர்ச்சனையை இங்கு எழுதுவது பதிவுலக நாகரிகம் கருதி தவிர்க்கிறேன்.
திடீரென்று மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. (எப்பவாவது இது போல் அபூர்வமாக நடக்கும்). நான் சொன்னேன். ஆமா நீ செஞ்சயே உலகத்தில இல்லாத பலகாரம். அதை அவனுக்குக் கொடுத்துட்டு வாங்க என்று நீதானே கொடுத்தனுப்பிச்சே. அவன் அதை பதில் பேசாமல் வாங்கிக்கொண்டான் இல்லையா. அப்புறம் அவன் ஏதாச்சும் கொடுத்தால் அதை மரியாதைக்காக நான் வாங்கிக்கொள்ள வேண்டாமா, என்னை என்னவென்று நெனச்சாய்? என்று ஒரு போடு போட்டேன்.
எக்கேடோ கெட்டுப்போங்க. ஆனா அந்த கருமாந்திரம் ஊட்டுக்குள்ள வரப்படாது. எங்கயோ வச்சு சாப்பிட்டுக்குங்க. அப்படீன்னு ஒரு பைசல் ஆச்சு.
சரீம்மா, அதை நான் வாசல்லயே வச்சு சாப்பிட்டுட்டு, வந்துடறேன், அப்படியே சாப்பிட்ட எடத்தையும் நல்ல கழுவி விட்டுட்டு வர்றேன், சரித்தானே என்று முடிவுரை வாசிச்சேன்.
தீபாவளி அன்று நண்பனிடமிருந்து நானே போய் பிரியாணியை வாங்கி வந்து என் மகள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு நல்ல பிள்ளையாக வீட்டிற்கு வந்து விட்டேன்.
இப்படியாக தீபாவளி பிரளயம் ஓய்ந்தது.
பதிலளிநீக்குஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
ஹிஹிஹி... வீட்டுக்கு வீடு வாசப்படி!
பதிலளிநீக்குஉலகத்தில இல்லாத பலகாரத்தைப் பற்றி விரிவான விளக்கங்களோடு ஒரு பதிவை எதிர்ப்பார்க்கிறேன்...!
பதிலளிநீக்கு//திடீரென்று மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. (எப்பவாவது இது போல் அபூர்வமாக நடக்கும்).//
பதிலளிநீக்குஎப்போவாவதுதானா?
கண்டிப்பாக
நீக்குஇந்த வயதில் மூளை என்று ஒன்று இருப்பதே நமக்கு மறந்து போய் இருக்கும். ஏனென்றால் ஓய்வு பெற்ற பிறகு நமது குழந்தைகள், மாப்பிள்ளைகள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் இவர்கள் சொல்வதைத்தானே கேட்க வேண்டியிருக்கிறது. ஏதாவது யோசிக்க முடிகிறதா? அப்படியே யோசித்தாலும் நமது தர்மபத்தினி போகிற வயசுல கிழவனுக்கென்ன என்று நம் வாயை அடக்கி விடுகிறாளே
எனவே மூளையில் ஸ்பார்க் அடிப்பது அபூர்வம்தான்
திருச்சி காயத்ரி மணாளன்
எப்படியோ பிரியாணி சாப்பிட்டுவிட்டீர்கள். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅடாது மழை பெய்தாலும் விடாது குடை பிடிப்பேன் ரகமல்லவா நாங்கள். பாரியாளின் ஈகோவை தொடுகிற மாதிரி சரியான ஒரு சாக்கு கண்டுபிடித்தார் பாருங்கள் நமது கவுண்டர். அலறிக்கொண்டு "என்னோவோ பண்ணுங்கள் வீட்டுக்கு மட்டும் கொண்டு வந்து விடாதீர்கள்" என்று சொல்லி விட்டார்கள் அல்லவா. கவுண்டர்னா கவுண்டர்தான் அடிச்சிக்க முடியாது
நீக்குதிருச்சி காயத்ரி மணாளன்
மழை பெய்தால் குடை பிடிக்காமல் வேறு என்ன செய்வார்களாம் (ஆனால் கையில் குடை இருக்க வேண்டும் என்பது வேறு விஷயம்)
நீக்குபழமொழியை மாற்றி விட்டீர்களே. "அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்துவோம்" என்பதுதான் பழமொழி.பிரியாணி என்றதும் உங்களுக்கும் எல்லாம் மறந்து பொய் விட்டதா என்ன
சேலம் குரு
பிரியாணி exchanged for வீட்டுப் பலகாரம்
பதிலளிநீக்குEquation என்னமோ mathematically சரி.
ஹிஹிஹி...
ஆனால் வீட்டில் ஒர்க் அவுட் ஆகவில்லை.
தீபாவளி வாழ்த்துக்கள்
இப்படி வொர்க் அவுட் ஆகும் என்று நினைத்தால் நீங்கள் ஹி ஹி
நீக்குஎனக்கும் இதே கதிதான் எதோ அய்யா அவர்களுக்கு நாதனது விட்டது. அய்யா அதிர்ஷ்டசாலிதான்
சேலம் குரு
வீட்டை பொறுத்த வரை ஆண்கள் எதை நினைத்தாலும் அது நடந்திருக்கிறதா என்ன? இதை படித்தவுடன் ஒரு ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. பழைய ஜோக்தான்.
நீக்குநண்பனிடம் ஒருவர் சொல்கிறார் - நேற்று நான் ஆரம்பம் சினிமா போகலாம் என்றேன்
நண்பர் - போனீர்களா?
முதல்வர் - என் மனைவி தீபாவளிக்கு போகும் போது கூட்டம் அதிகமாக இருந்ததால் புதிதாக திறந்திருந்த அந்த கடையை சரியாக பார்க்க முடியவில்லை என்றாள்.
நண்பர் - கடை நன்றாக இருந்ததா?
இந்த ஜோக் மாதிரிதான் நம் நிலைமையெல்லாம்.
மனைவி நினைத்து விட்டால் அதுதான் ஆண்களது முடிவும் என்பதில் எந்தவித மாற்றமும் எப்போதும் இருந்ததில்லை. இனிமேல் இருக்க போவதுமில்லை.
திருச்சி குருப்ரியா
மகளுக்குப் பயப்படாத ஒரு தந்தையா ...!
பதிலளிநீக்கு"எந்த வீட்டில் அய்யா மகளுக்கு தந்தை பயப்படுகிறார்?
நீக்குஇதென்ன விநோதமாக இருக்கிறது."
தயவு சித்து இதை பிரசுரித்து விடுங்கள். இது என் மகள் சொல்லி நான் எழுதியது. இல்லையென்றால் நான் என் மகள் வீட்டுக்கு போக முடியாது
திருச்சி காயத்ரி மணாளன்
உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர். மகளுக்கே இந்த பயம் படுகிறவர் மனைவி என்றால் எந்த அளவு பயப்படுவீர்கள் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அதனால்தான் சொல்கிறேன் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் என்று.
நீக்கு(இதை நான் என் மனைவி சொல்லித்தான் எழுதுகிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நான் நானேதான் சுயமாக சிந்தித்து பின்னூட்டமிடுகிறேன்)
சேலம் குரு
நாங்கள் நம்பிவிட்டோம்.
நீக்கு"நீங்களே சுயமாக சிந்தித்து " எதற்கு இந்த பில்டப் எல்லாம்.
நாமெல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தானே.
உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். எங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும்.
அப்புறமென்ன. கல்யாணம் ஆகிற வரைதான் ஆண்களுக்கு சுய சிந்தனை எல்லாம். அதற்கப்புறம் அவன் ஒரு கருவிதான் சிந்திப்பதெல்லாம் அவன் பார்யாள்தான்.
திருச்சி காயத்ரி மணாளன்
உண்மையாகவா.? கற்பனை இல்லையே.
பதிலளிநீக்குஅய்யா சார்பில் நான் சொல்லி விடுகிறேன்.
நீக்கு"முக்காலும் உண்மை
நான் சாப்பிட்ட பிரியாணி மேல் சத்தியமாக உண்மைதான்"
சேலம் குரு
உண்மை. என் பொண்டாட்டி மேல் வேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன்.
நீக்குஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅட .... :)
பதிலளிநீக்குஸ்ரீராம் கமெண்ட் ரசித்தேன்!
அய்யா பெரியவரே தீபாவளி அன்று பிரியாணி சாப்பிடக்கூடாது என்பது சில வீடுகளில் ஒரு பழக்கம். இதை மனைவி வீட்டில்(உங்கள் வீட்டில் என்றும் வைத்துகொள்ளலாம்) வைத்து சாப்பிட்டால் என்ன? மகள் வீட்டில் வைத்து சாபிட்டால் என்ன? பழக்கத்தை உடைத்து விட்டீர்கள். ஆமாம் மகள் வீட்டில் வைத்து சாப்பிட்டு விட்டேன் என்று மனைவியிடம் சொல்லி விட்டீர்களா?
பதிலளிநீக்குசேலம் குரு
//எக்கேடோ கெட்டுப்போங்க. ஆனா அந்த கருமாந்திரம் ஊட்டுக்குள்ள வரப்படாது. எங்கயோ வச்சு சாப்பிட்டுக்குங்க. அப்படீன்னு ஒரு பைசல் ஆச்சு.//
பதிலளிநீக்குஇப்படியாகத்தானே நமது நல்ல ஒரு சில பழக்க வழக்கங்களும் கெட்டு போய் விடுகின்றன. பண்டிகை நாளன்று கவுச்சு சாப்பிடகூடாது என்று முடிவு எடுத்த பிறகு தனது ஆம்படையானுக்காக எங்கேயோ சென்று சாப்பிட்டு தொலையுங்கள் என்று ஒரு சலுகை கொடுத்தது தப்பில்லையா ?
உங்கள் பார்யாளிடம் கேட்டு சொல்லுங்களேன்.
திருச்சி அஞ்சு
இங்குதான் நமது தமிழ் பெண்கள் மாறுபடுகிறார்கள். மணாளனே மங்கையின் பாக்கியம் என்பதெல்லாம் சும்மா இல்லை.
நீக்குகொஞ்சம் அப்படி இப்படி இருக்க நம்மை விடுகிறார்களே அங்குதான் நம்மை வெற்றி கொண்டு விடுகிறார்கள். அதற்கப்புறம் நாமே எல்லாத்தையும் சொல்லி (உளறி விட்டு ) மாட்டிகொள்கிறோம்.
சேலம் குருப்ரியா
//உங்களுக்கு மூளையே கிடையாது. நல்ல நாள் பொல்லா நாள் என்று எதுவும் கிடையாது//
பதிலளிநீக்குஇதை கண்டு பிடிக்க இவ்வளவு நாட்கள் ஆகி விட்டதா?
கல்யாணம் ஆனா முதல் வருசத்திலேயே இந்த உண்மை வெளி வந்து விடுமே
அப்புறம் என்ன நமது பிரதம மந்திரி, ஜனாதிபதி எல்லாமே நமது பொண்டாட்டிதானே
சேலம் குரு
//உங்களுக்கு மூளையே கிடையாது. நல்ல நாள் பொல்லா நாள் என்று எதுவும்
பதிலளிநீக்குகிடையாது //
இந்த உண்மையை சொல்ல ஒரு நல்ல நாள் பொல்லா நாள் கிடையாத? தீபாவளிதான் கிடைத்ததா?
திருச்சி தாரு
//சரீம்மா, அதை நான் வாசல்லயே வச்சு சாப்பிட்டுட்டு, வந்துடறேன், அப்படியே சாப்பிட்ட எடத்தையும் நல்ல கழுவி விட்டுட்டு வர்றேன், சரித்தானே என்று முடிவுரை வாசிச்சேன்.//
பதிலளிநீக்குசரி சரி நீங்களும் போடுன்னா எண்ணிக்கோங்கிற ரகம்தானா
சரி நமக்கு ஒரு துணை கிடைத்தது என்று நான் சந்தோசமாக இருக்கிறேன்
சேலம் குரு
//இப்படி ஒருத்தர் பின்னூட்டம் போட்டு விட்டார். அவர் ஆசையை நிறைவேற்றவேண்டாமா?//
பதிலளிநீக்குஇதுதான் எங்கள் அய்யா கோயம்புத்தூர் கவுண்டர் எங்களிடம் பிரசித்தம் பெற காரணம். இதே மாதிரி தொடரவும்.
திருச்சி காயத்ரி
//உங்களுக்கு என்ன கேடு. நான்தான் உங்களுக்கு வேண்டியதை செஞ்சு கொட்டிக்கொண்டு இருக்கிறேனே, அது பத்தாதா//
பதிலளிநீக்குகொடுத்து வைத்தவர் அய்யா நீங்கள்.
வேண்டியதை செய்து கொடுக்க ஒரு ஆம்படையாள்
எங்களுக்கெல்லாம் என்ன தட்டில் விழுகிறதோ அதை சாப்பிட்டு விட்டு போக வேண்டியதுதானே இந்த வயதில் என்ன நாக்கு கேட்கிறது என்று வசவுதான்
சேலம் குரு
//வீட்டில் அன்று எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது இதை எதற்கும் சொல்லிவிடலாமே என்று சொன்னேன். பிரளயம் ஆரம்பித்தது.//
பதிலளிநீக்குஇப்படித்தான் எப்போது எதை சொல்வது என்று தெரியாமல் சொல்லிவிட்டு வாங்கி கட்டிக்கொள்வதில் நமக்கு நாம்தான் சமர்த்தர்கள். நாவடக்கம் சாப்பாட்டில் மட்டுமில்லை வார்த்தையிலும் வேண்டும் என்பதற்கு இது ஒரு நாள் எடுத்துக்காட்டு
அடுத்த தீபாவளி எங்கே மகள் வீட்டில்தானே
திருச்சி காயத்ரி மணாளன்
//அதை மரியாதைக்காக நான் வாங்கிக்கொள்ள வேண்டாமா, என்னை என்னவென்று நெனச்சாய்? என்று ஒரு போடு போட்டேன்.//
பதிலளிநீக்குநொண்டி சாக்கு கண்டுபிடிப்பதில் நாமை அடிக்க ஆளே இல்லை
சாமார்த்தியம்தான் சமாளித்து விட்டீர்கள்
சேலம் குரு
சாக்கு கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் நாமெல்லாம் பொழைக்க முடியுங்களா?
நீக்குதிருச்சி காயத்ரி மணாளன்
//இப்படியாக தீபாவளி பிரளயம் ஓய்ந்தது. //
பதிலளிநீக்குஇது போதும் அய்யா
இது போதும்
இனி அடுத்த தீபாவளி முடிய ஒரு வருடத்திற்கு படித்து படித்து சிரித்துகொண்டிருக்க இது போதும்
எப்படி இப்படி?
நகைச்சுவை தென்றல் அல்ல அல்ல நகைச்சுவை சுனாமி நீங்கள்
திருச்சி காயத்ரி மணாளன்
//வீட்டுக்குள் பிரியாணி வந்துதோ, நாங்க யாரும் வீட்டுக்குள் இருக்கமாட்டோம்//
பதிலளிநீக்குகிடச்ச நல்ல சான்சை விட்டு விட்டீர்களே.
இதுதான் சாக்கு என்று உடனடியாக திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணியை வாங்கிட்டு வந்து ஒரு அடி அடிச்சிருந்தா சுவையான சாப்பாடும் ஆச்சு மனைவியையும் வீட்டை விட்டு (அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காவது) அனுப்புன மாதிரியும் ஆச்சு.
என்ன செய்வது. அவர்கள் சொல்வது மாதிரி நமக்கு தலயில் மூளை இல்லைதான் போலிருக்கிறது.
சேலம் குரு
இருந்தாலும் உங்களுக்கு ரொம்பவுமே தைரியம்தான்.
நீக்குபார்யாளை விரட்டி விடலாம் என்று இவ்வளவு துணிச்சலோடு சொல்கிறீர்களே. அநேகமாக நீங்கள் பிரமசாரியாகத்தான் இருக்க வேண்டும். சரியா நான் சொல்வது ? இல்லையென்றால் ஆம்பிளைகளுக்கு கல்யாணத்திற்கு பின் எங்கிருந்து இவ்வளவு தைரியம் இருக்கப்போகிறது.
திருச்சி காயத்ரி மணாளன்
அய்யா,பிரியாணி வரப்ப ஏதோ ஒரு பெரிய நிகழ்வை பகிந்து அளிக்க போகிறீர்கள் என்று நினைத்தேன். சப்புனு முடித்து விட்டீர்கள் . நிச்சியமாக சுவரசியமாக இருந்து இருக்கும் என் நினைத்த எனக்கு பெரிய ஏமாற்றம்.
பதிலளிநீக்குவர வர மூளை ஸ்லோவாகிக்கொண்டு வருதுங்க. அதான்!!!!!
நீக்குதீபாவளி ரெண்டாம்தேதி. அய்யா பிரியாணி சாப்பிட்டது அன்னிக்கு சாயங்காலம். பதிவு போட்டது மூணாம் தேதி காலையில். பிரியாணி சாப்பிட்ட வாசனை கையை விட்டுக்கூட போகாத நிலையில் பதிவிட்டிருக்கிறார். முக்கியமாக இதில் கவனிக்க வேண்டியது பார்யாலை எப்படி சமாளித்தார் என்றதுதான். இதை விட சுவாரஸ்யமாக என்ன இருக்க முடியும். நாமாக இருந்தால் "செய்து கொடுக்கத்தான் (கொடுக்காமலிருக்கத்தான் என்று சொன்னால்தான் சரியோ?) ஆயிரத்தெட்டு சாங்கியங்கள் சொல்கிறீர்கள் கொடுக்கிறவன் கொடுக்கும் போது அதையும் வாங்கிகொள்ளகூடாது என்றால் எப்படி" என்று பேசி ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டிருப்போம். அதவும் பண்டிகை நாளும் அதுவுமாக நன்றாகவா இருந்திருக்கும். எப்படி பார்யாளையும் சமாளித்தார் எப்படி பிரியாணியையும் சாப்பிட்டார் என்பதுதான் சுவாரஸ்யமே.
நீக்குதிருச்சி காயத்ரி மணாளன்
அய்யா அவர்களே உங்கள் மூளை எப்போதும் போல நல்ல ஷார்ப்பாகத்தான் இருக்கிறது. எப்படி நிலைமையை சமாளித்தீர்கள் என்று நானும் என் மனைவியும் சொல்லி சொல்லி சிரித்து கொண்டிருந்தோம்.
நீக்குஎன்ன இந்த பின்னூட்டத்துக்கு பதில் அளிக்கும்போதுதான் கொஞ்சம் பாதி தூக்கத்தில் இருந்திருப்பீர்கள் போலிருக்கிறது. பிரியாணி சாப்பிட்ட ஆயாசம்தான் காரணம் போலிருக்கிறது.
சேலம் குரு
அய்யா,பிரியாணி வரப்ப ஏதோ ஒரு பெரிய நிகழ்வை பகிந்து அளிக்க போகிறீர்கள் என்று நினைத்தேன். சப்புனு முடித்து விட்டீர்கள் . நிச்சியமாக சுவரசியமாக இருந்து இருக்கும் என் நினைத்த எனக்கு பெரிய ஏமாற்றம்.
பதிலளிநீக்குஎன்ன ஆரிப் அவர்களே இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவாரஸ்யம் கிடைத்து விட்டதா? பதிவுகளை விட பின்னூட்டங்கள் நன்றாக நீங்கள் எதிர்நோக்கும் சுவாரஸ்யங்களுடன் இருந்திருக்குமே.
நீக்குபொதுவாக எல்லா பின்னூட்டங்களும் நன்றாக இருந்தாலும் திருச்சி காயத்ரி மணாளனின் நீண்ட (நிஜமாகவே நீ.......ண்......ட) விளக்கங்கள் சுவாரஸ்யமாகவே இருந்தன
சேலம் குரு
தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
பதிலளிநீக்குதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.