பிரளயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரளயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஏப்ரல், 2015

எங்க வீட்டுப் பிரளயம்

                                  Image result for catastrophe
உலகத்தில் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு யுகப் பிரளயம் நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒருவரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல, வருடத்திற்கு மூன்று பிரளயங்களை நான் சந்திக்கிறேன்.

தமிழ் வருடப் பிறப்பு, ஆயுத பூஜை, பொங்கல் ஆகிய மூன்று சமயங்களிலும் என் வீட்டுக்காரிக்கு ஒரு வேகம் வந்து விடும். வீட்டை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து எல்லா சாமான்களையும் கழுவித் துடைத்து திரும்பவும் அதனதன் இடத்தில் வைக்காவிட்டால் அவள் தலையே வெடித்து விடும்.

இதற்காக அவள் ஒரு படையே வைத்திருக்கிறாள்.அந்தப் படையைத் திரட்டி வேலை கொடுத்து கண் கொத்திப் பாம்பாக கூடவே இருந்து அந்த வேலைகளை முடித்து வாங்கும் திறமை இருக்கிறதே, அது ஒரு தேசப் படைத் தலைவருக்குக் கூட வராது.

பலசரக்கு சாமான்கள், அரிசி, பருப்பு, லொட்டு லொசுக்கு என்று அத்தனையையும் எடுத்து வெளியில் வெய்யிலில் காயவைத்து, அவைகள் இருந்த பாத்திரங்கள், பாட்டில்கள், டப்பாக்கள் இத்தியாதிகளைக் கழுவி அவைகளையும் வெய்யிலில் காய வைத்து, பிறகு பழைய பிரகாரம் அவைகளை அந்தந்த ஏனங்களில் போட்டு அந்தந்த இடங்களில் வைக்கவேண்டும்.

பீரோவில் இருக்கும் துணிகளை எல்லாம் எடுத்து வெளியில் காற்றாடக் காயப் போட்டு, பீரோவின் ஒவ்வொரு தட்டிற்கும் புது நியூஸ் பேப்பர்களை மடித்துப் போட்டு, துணிகளை அடுக்கி வைக்க வேண்டும். கட்டிலில் இருக்கும் மெத்தைகளைத் தூக்கி வெய்யிலில் போட்டுக் காய வைக்கவேண்டும்.

இப்படியாக வீட்டைத் துடைத்து வைக்க ஏறக்குறைய ஒரு பத்து நாள் போல ஆகிவிடும். இந்த வேலைகளில் அவ்வப்போது எனக்கும் பங்கு வரும். அதை செய்யாவிட்டால் அர்ச்சனை ஆரம்பமாகிவிடும். நான் அதற்குப் பயந்து கொண்டு சொன்ன வேலைகளை உடனுக்குடன் முடித்து விடுவேன்.

இதுவெல்லாம் பரவாயில்லை. எனக்கு என்று சில ஏரியாக்கள் இருக்கிறதல்லவா? என் டேபிள், கம்ப்யூட்டர், புஸ்தக அலமாரிகள், இவைகளையும் சுத்தப்படுத்தச் சொல்லி பத்து நாட்களுக்கு முன்பிருந்தே நச்சரிப்பு ஆரம்பித்து விடும். இந்த சுத்தப்டுத்தலைக்கூடச் செய்து விடலாம். ஆனால் அதை அவள் கண் முன்னால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் சும்மா பொய் சொல்லுகிறேன் என்பாள். ஆகவே அவள் கண் முன்பாகவே எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வைத்து, பேப்பர் மாற்றி பின்பு பழையபடி அடுக்குவேன்.

அப்படி நான் சுத்தம் செய்த என் ஏரியாக்களை நீங்களும் பாருங்கள்.

என் டேபிள்.

டேபிளுக்கு மேல் உள்ள ரேக்குகள்.



என் புத்தக அலமாரிகள்




அதற்கு கீழ் உள்ள ரேக்குகள்


அதற்கு கீழ் உள்ள கம்ப்யூட்டர் ஏரியா




அதற்கும் கீழே உள்ள சிபியூ ஏரியா

ஷோகேஸ்

போட்டோக்கள் அனைத்தும் என்மனைவிக்குத் தெரியாமல் காலை 4 மணிக்கு என் புது டேப்பில் எடுக்கப்பட்டவை.

இது போக இன்னும் சோபா செட்டுகளில் இருக்கும் குஷன்களின் உறைகளை கழற்றி, அவை துவைத்து வந்த பின் அவைகளை திரும்பவும் மாட்டும் வேலை பாக்கி இருக்கிறது. என் நல்ல காலம் அவைகளை துவைக்க வேறு ஆள் வைத்திருக்கிறாள். இது ஒரு பெரிய கண்டம்.

இவைகள் எல்லாம் முடிந்து வருடப் பிறப்பு வருவதற்குள் என் முதுகெலும்பு கணிசமாகத் தேய்ந்து விடும். வருடப் பிறப்பு அமர்க்களத்தைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.

என் நிலையைக் கண்டு ஆறுதல் கூறுவீர்க்ள என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவைப் போட்டிருக்கிறேன்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

தீபாவளி பிரளயம்



என்னங்க அய்யா! தீபாவளியை முன்னிட்டு நகைச்சுவையாக நாலு வார்த்தை எப்போதும் போல் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஒரு படத்தோடு நிறுத்தி விட்டீர்களே? 

இப்படி ஒருத்தர் பின்னூட்டம் போட்டு விட்டார். அவர் ஆசையை நிறைவேற்றவேண்டாமா?

அதுதான் இந்த உண்மைப் பதிவு.

தீபாவளிக்கு முதல் நாள் எனக்கு ஒரு சோதனை வந்தது. அதாவது என் நண்பர் ஒருவர் அவருடைய வீட்டில் ஸ்பெஷலாக ஒன்றும் செய்ய வசதி இல்லாததால் ஒரு பிரியாணிக்கடையில் ஒரு கிலோ பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். என்னிடம் உங்களுக்கும் ஒரு பங்கு வரும் என்று சொல்லியிருந்தார். இது நடந்தது நான்கைந்து நாள் முன்பு. நான் அதை பெரிய விஷயமாக கருதவில்லை. பிரியாணி சாப்பிடுபவர்கள் என் வீட்டில் என்னைத்தவிர வேறு யாருமில்லை. அதனால் ஒருவருடனும் சொல்லவில்லை.

வீட்டில் அன்று எல்லோரும் ஒன்றாக இருக்கும்போது இதை எதற்கும் சொல்லிவிடலாமே என்று சொன்னேன். பிரளயம் ஆரம்பித்தது.

"உங்களுக்கு மூளையே கிடையாது. நல்ல நாள் பொல்லா நாள் என்று எதுவும் கிடையாது. அதுக்கு மேலே ஒரு கட்டையில போறவன் கூட சகவாசம். அவனுக்கும் விவஸ்தை கிடையாது. அவனுக்கு வீட்டில் ஒன்றும் கிடைப்பதில்லை. அதனால் அலைகிறான். உங்களுக்கு என்ன கேடு. நான்தான் உங்களுக்கு வேண்டியதை செஞ்சு கொட்டிக்கொண்டு இருக்கிறேனே, அது பத்தாதா, ஓசியில எவனோ பிரியாணி கொடுத்தா அதை வாங்கீக்கறதா. ஆமா, சொல்லீட்டேன், வீட்டுக்குள் பிரியாணி வந்துதோ, நாங்க யாரும் வீட்டுக்குள் இருக்கமாட்டோம். ................................................................"

இதற்கு மேலும் தொடர்ந்த அர்ச்சனையை இங்கு எழுதுவது பதிவுலக நாகரிகம் கருதி தவிர்க்கிறேன்.

திடீரென்று மூளையில் ஒரு ஸ்பார்க் அடித்தது. (எப்பவாவது இது போல் அபூர்வமாக நடக்கும்). நான் சொன்னேன். ஆமா நீ செஞ்சயே உலகத்தில இல்லாத பலகாரம். அதை அவனுக்குக் கொடுத்துட்டு வாங்க என்று நீதானே கொடுத்தனுப்பிச்சே. அவன் அதை பதில் பேசாமல் வாங்கிக்கொண்டான் இல்லையா. அப்புறம் அவன் ஏதாச்சும் கொடுத்தால் அதை மரியாதைக்காக நான் வாங்கிக்கொள்ள வேண்டாமா, என்னை என்னவென்று நெனச்சாய்? என்று ஒரு போடு போட்டேன்.

எக்கேடோ கெட்டுப்போங்க. ஆனா அந்த கருமாந்திரம் ஊட்டுக்குள்ள வரப்படாது. எங்கயோ வச்சு சாப்பிட்டுக்குங்க. அப்படீன்னு ஒரு பைசல் ஆச்சு.

சரீம்மா, அதை நான் வாசல்லயே வச்சு சாப்பிட்டுட்டு, வந்துடறேன், அப்படியே சாப்பிட்ட எடத்தையும் நல்ல கழுவி விட்டுட்டு வர்றேன், சரித்தானே என்று முடிவுரை வாசிச்சேன்.

தீபாவளி அன்று நண்பனிடமிருந்து நானே போய் பிரியாணியை வாங்கி வந்து என் மகள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டு நல்ல பிள்ளையாக வீட்டிற்கு வந்து விட்டேன்.

இப்படியாக தீபாவளி பிரளயம் ஓய்ந்தது.