திங்கள், 10 நவம்பர், 2014

VGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே !

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


கதையின் விமர்சனம்.

ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களும் மகிழ்ச்சியும் வேதனைகளும் கலந்துதான் ஆரம்பித்திருக்கின்றன. அவரவர் விதிப்படி அவர்கள் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிறார்கள்.
அந்தக் காலத்து ஸ்டோர் வாழ்க்கை என்பதை இன்று நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ஆனால் மக்கள் அவைகளில் வசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

அந்த வாழ்க்கை முறையை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கதாசிரியர். அந்த வாழ்க்கையிலும் இளம் பருவ ஆசைகள் வரத்தான் செய்யும்.

அப்படி அவர் வாழ்வில் வந்தவர்கள் மூவர். ஆனால் ஒருவருடன்தான் வாழ்க்கைப் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் குடும்ப பாரம்பரியம். குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறப்பவனுக்கு சில கடமைகள் இருக்கின்றன. தன் சுகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு போக முடியாது. அவனுக்குப் பின் இருக்கும் தம்பி தங்கைகளின் வாழ்வும் அவன் கையில்தான் இருக்கிறது.

அந்தக்காலத்தில் இந்தப் பொறுப்பை மக்கள் உணர்ந்து நடந்து கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. இது ஒரு வேள்வி என்றே சொல்லலாம். இந்த வேள்வியில் அவ்வப்போது தோன்றும் ஆசாபாசங்கள் எரிந்து போகும்.


அப்படி எரிக்கப்பட்டவைகளில் சில பிற்காலத்தில் வாழ்வில் தலை காட்டலாம். அப்போது அவை எந்த நிலையிலும் இருக்கலாம். இந்த உண்மையை இரண்டு சம்பவங்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இது போன்ற நிகழ்வுகள் வெறும் கற்பனையல்ல. நிஜவாழ்விலும் நடக்கலாம். அப்படியான ஒரு கதையைப் படித்த திருப்தி ஏற்பட்டது.