வெள்ளி, 25 நவம்பர், 2016

உயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது.

bala murugan உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"உயிர் போனால் என்ன ஆகும்?": 



உயிர் ஏன் உடலை விட்டு பிரிகிறது. 

இப்படி ஒருவர் பின்னூட்டத்தில் கேள்வி கேட்டிருக்கிறார். பதில் சொல்லாவிட்டால் நம் மதிப்பு என்ன ஆவது? ஆகவே இதோ பதில் எழுதுகிறேன்.


இந்த வாக்கியத்தை நன்றாக கவனியுங்கள்.


உயிர் ஏன் உடலை விட்டுப் பிரிகிறது ?


அதாவது உயிர் என்ற ஒரு வஸ்து உடல் என்ற வஸ்துவை விட்டுப் பிரிகிறது என்பது இதில் மறைந்திருக்கும் பொருள். காலம் காலமாக மக்கள் இவ்வாறுதான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். உடல் என்பதுவும் உயிர் என்பதுவும் வெவேறு வஸ்துகள். ஒரு கால கட்டத்தில் உயிர் உடலை விட்டுப் பிரிகிறது, அப்போது அந்த உடலை சவம் என்கிறோம், அதை மண்ணில் புதைக்கிறோம் அல்லது எரிக்கிறோம்.


இது ஒரு மாயை. மனிதன் பிறக்கிறான், வளர்கிறான், வாழ்கிறான், பின்பு இறக்கிறான். இது வாழ்க்கையில் நிதரிசனமாகப் பார்க்கிறோம். ஆனால் இறப்பு என்றால் என்ன என்று சிந்திப்பதில்லை. காரணம் இறப்பைக் கண்டு இனம் தெரியாத ஒரு பயம். யாரும் தங்களுடைய இறப்பைப் பற்றி சிந்திப்பதில்லை. தான் இறக்க மாட்டோம் அல்லது தன்னுடைய இறப்பிற்கு இன்னும் வெகு காலம் இருக்கிறது என்றே ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.


இந்த காரணத்தினால்தான் இறப்பு என்றால் என்ன? இறப்பிற்குப் பின்னால் என்ன? என்று யாரும் வெளிப்படையாகப் பேசப் பயப்படுகிறார்கள். எனக்குப் புரிந்த சில தத்துவங்களை இங்கே கூறுகிறேன்.
முதலாவது உயிர் என்பது ஒரு வஸ்துவே அல்ல. அது ஒரு செயற்பாட்டு நிலை. மனிதன் பிறக்கும்போது அவனுடைய அவயவங்கள் செயல்பட ஆரம்பிக்கின்றன. அவன் வளரும்போது அந்த செயல்கள் தொடர்கின்றன. இந்த நிலையை அவன் உயிருடன் இருக்கிறான் என்று குறிப்பிடுகிறோம். அவன் முதுமை அடையும்போது இந்த செயற்பாடுகள் குறைந்து ஒரு நிலையில் முற்றிலுமாக நின்று போகிறது. அந்த நிலையில் அவன் உயிருடன் இல்லை என்று கூறுகிறோம்.


செயல்பாடுகள் நிற்பதுதான் இயற்கையின் விதி. மனிதனின் உடலில் உயிர் என்று தனியாக ஏதும் இல்லை. அவன் செயல்கள் முற்றிலுமாக நின்று விடும்போது அவன் உயிர் பிரிந்தது என்று கூறுகிறோமே தவிர, வேறு எந்த மாற்றமும் நடைபெறுவது இல்லை.


ஆனால் நம் ஆன்மிக வாதிகள் இந்த உயிர் என்று வழக்கத்தில் உள்ள வார்தையை ஆன்மா என்று கூறி, ஒருவன் இறக்கும்போது அவனுடைய ஆன்மா அந்த உடலை விட்டு வெளியேறி வேறு ஒரு உடலில் புகுந்து ஒரு புதுப் பிறவி எடுக்கிறது என்று சொல்லி வருகிறார்கள். இது முற்றிலும் ஒரு புனைவே ஆகும். மனித மனத்திற்கு ஒரு ஆறுதல் தரவே இவ்வாறு சொல்லப்படுகிறது.


மற்றபடி, ஆன்மா என்பது ஒரு பொய்யான கற்பனை. அப்படி ஆன்மா பிரிந்து வேறு ஒரு உடலுக்குள் புகுகின்றது என்பதுவும் ஒரு மாபெரும் பொய்யே. இறப்பிற்குப் பின் எதுவும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் கற்பனையே தவிர வேறொன்றுமில்லை. இவை எல்லாம் மக்களின் அறியாமையை வைத்து ஆன்மீக வாதிகள் நடத்தும் வியாபாரமேயாகும் .