இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்து என்னை பிரபல பதிவர் தகுதிக்கு உயர்த்திய பதிவர் தருமிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
பதின்ம வயது என்பது 10 லிருந்து 18 வரை என்று வைத்துக் கொள்ளலாம். என்னுடைய பதின்ம வயது ஆரம்பத்தில் இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்தது. எங்கள் நகரத்தைச்சுற்றிலும் எங்கு பார்த்தாலும் மிலிடரி கேம்ப்புகள். சிப்பாய்கள் தங்குவதற்காக வரிசை வரிசையாக பாரக்குகள். எங்கு பார்த்தாலும் மிலிடரி லாரிகளும் ஜீப்புகளும் போய்க்கொண்டே இருக்கும். மிலிடரி லாரி அடித்து யாராவது இறந்து விட்டார்களென்றால் கேள்வி முறை கிடையாது.
காலியாக இருக்கும் இடத்திலெல்லாம் பதுங்கு குழிகள் வெட்டி வைத்திருந்தார்கள். எதிரி விமானம் வருகிறது என்றால் அபாயச்சங்கு ஊதப்படும், அப்போது ரோட்டில் இருப்பவர்களெல்லாம் இந்த பதுங்கு குழிகளுக்குள் போய் ஒளிந்து கொள்ளவேண்டும். இப்படி நோட்டீஸ் அச்சடித்து வீடுவீடாய் விநியோகித்தார்கள்.
தெரு விளக்குகளுக்கெல்லாம் வெளிச்சம் மேலே செல்லாதபடி கவசம் அணிவித்திருந்தார்கள். எதிரி விமானம் இரவில் வரும்போது கீழே ஊர் இருப்பது தெரியாமல் இருக்க இந்த ஏற்பாடு. மேலும் இரவில் அபாயச்சங்கு ஒலித்தால் வீட்டுக்குள் இருக்கும் விளக்குகளையும் அணைத்துவிடவேண்டும். இவ்வாறு செய்கிறார்களா என்று கண்காணிக்க ஏ.ஆர்.பி போலீஸ் (Air Raid Prevention) என்று ஒரு தனி போலீஸ் பிரிவு இருந்தது. அவர்களுக்கு சாம்பல் கலரில் ஒரு யூனிபாரம். இருட்டில் தூரத்திலிருந்து பார்த்தால் அவர்கள் இருப்பது தெரியாது. அந்த துணி ஏஆர்பி துணி என்ற பெயரில் இன்றும் துணிக்கடைகளில் விற்கப்படுகிறது.
பெண்டு பிள்ளைகளெல்லாம் எங்கேயும் தனியாகச் சென்றால் மிலிடரிக்காரன் தூக்கிக்கொண்டு போய்விடுவான் என்று ஊர் பூராவும் வதந்தி. நிஜமாகவே எங்கள் வீட்டுக்குப்பக்கத்தில் உள்ள ஒரு டாக்டரின் பெண் ரோட்டில் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பட்டப்பகலில் மிலிடரிக்காரர்கள் அவளைக்கடத்த முயற்சித்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த என்னுடைய ஸ்கூல் ட்ரில் மாஸடர் தடுக்கப்போக, அவரை மிலிடரிக்காரர்கள் அடிக்க, அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அந்தப்பெண் தப்பித்து வீட்டுக்கு ஓடிவிட்டது.
இந்தியாவை ஜப்பான்காரன்தான் தாக்குவான் என்று பலமான வதந்தி. அவன் பர்மாவைப்பிடித்து இந்திய எல்லை வரை வந்துவிட்டான். டில்லியிலிருந்த வெள்ளைக்காரர்களில், பெண்கள், குழந்தைகள், ஆண்களில் அதிக முக்கியமில்லாதவர்கள்- இவர்களையெல்லாம் முன்பேயே இங்கிலாந்திற்கு அனுப்பி விட்டார்கள். ஜப்பான்கார ர்கள் எல்லோரும் அந்தக்காலத்தில் குள்ளமாக இருந்தார்களாம். அதனால் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் “குள்ளர்களை நம்பாதீர்கள்” என்று தீப்பெட்டிகளில் அச்சடித்து விற்றார்கள்.
ஜனங்கள் எங்கு சந்தித்தாலும் பேசுவது யுத்தத்தைப்பற்றித்தான். ஆனந்தவிகடனில் ஒருபக்கம் யுத்தச்செய்திகள் வரும். அப்போது எனக்கு அதன் மூலமாகத்தான் யுத்தத்தைப்பற்றி அறிந்துகொள்வேன். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் அவ்வப்போது ஏதாவது அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார்கள்.
இரவில் நாங்கள் படுத்தபிறகு சில நாட்களில் அபாயச்சங்கு ஒலிக்கும். ஓ, ஜப்பான்காரன் குண்டுபோட வந்துவிட்டான் என்று நினைத்து பயந்து போர்வையை இளுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிவிடுவோம். விடிந்தபிறகுதான் தெரியும் அது வெறும் ஒத்திகைதான் என்று. நிஜமாகவே 1944 ல் ஜப்பான்காரன் மெட்ராஸுக்கு “எம்டன்” என்கிற கப்பலில் வந்து ஹார்பரின் மேல் குண்டு போட்டான். ஒன்றும் பெரிய சேதமில்லை. ஆனாலும் பாதி மெட்ராஸ் காலி ஆகிவிட்டது.
1945ல் அமெரிக்காக்காரன் ஜப்பான் மேல் அணுகுண்டு போட்டவுடன் யுத்தம் முடிவடைந்து விட்டது. அதைக்கொண்டாடும் விதமாக பள்ளிகளுக்கெல்லாம் மூன்று நாள் விடுமுறை விட்டார்கள். பிறகுதான் பிரிட்டிஷார் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவு செய்து 1947ல் நம் நாடு சுதந்திரம் பெற்றது.
"இரவில் நாங்கள் படுத்தபிறகு சில நாட்களில் அபாயச்சங்கு ஒலிக்கும். ஓ, ஜப்பான்காரன் குண்டுபோட வந்துவிட்டான் என்று நினைத்து பயந்து போர்வையை இளுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிவிடுவோம். விடிந்தபிறகுதான் தெரியும் அது வெறும் ஒத்திகைதான்"
பதிலளிநீக்குபடிக்கும் போது இப்படி என்றால் நிஜ வாழ்க்கையில் அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்
சிறந்த நினைவு பகிர்வு பதிவு
தேங்க்ஸ் அரும்பாவூர்.
பதிலளிநீக்குஅந்த பயம் போவதற்கு வெகு வருடங்கள் ஆயின.
யுத்தப் படம் பார்த்தது மாதிரி இருந்தது.
பதிலளிநீக்கு//உங்கள் நகரம்..//
எது?
யுத்தம் முடிந்தது .. சுதந்திரம் வந்தது .. எல்லாம் இன்னும் சொல்லுவீங்கல்ல?
//1944 ல் ஜப்பான்காரன் மெட்ராஸுக்கு “எம்டன்” என்கிற கப்பலில் ...// ஜெர்மன்காரன் ..?
தருமி ஐயா,
பதிலளிநீக்குஎங்கள் ஊர் கோயமுத்தூர்.
மெட்ராஸுக்கு வந்தது ஜப்பான்காரன் என்றுதான் நினைவு. எதற்கும் கூகுளாண்டவரை கேட்டுக்கொள்கிறேன்.
தருமி ஐயா,
பதிலளிநீக்குஎம்டன் ஜெர்மனி கப்பல்தான். அது மெட்ராஸ் வந்தது முதல் உலக மகா யுத்தத்தின்போது-1914ல்.
ஜப்பான்காரன் வந்தது இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது-1942ல். கப்பல் பெயர் தெரியவில்லை.
இரண்டுக்கும் குளறுபடி வந்துவிட்டது. 1942 ல் எனக்கு வயது ஏழு.
//தருமி ஐயா,//
பதிலளிநீக்குஅண்ணே ... உங்களுக்குமா நான் ஐயா?! அதெல்லாம் "சின்னப் பையங்க' என்னப் பார்த்து சொல்றது; வேண்டாம்னாலுக் கேக்காத "சின்னப் பையங்க" ..
//1942 ல் எனக்கு வயது ஏழு.//
பதிலளிநீக்குஎனக்கு minus 2 !
பயங்கரமான பதின்ம நினைவுகள்.
பதிலளிநீக்குஇருள் படிந்த காலங்களில் பயத்துடன் கழிந்த நினைவுகளில் என்னை நானும் கற்பனைத்துக் கொள்கிறேன்.
நன்றி ஐயா!
ஈராக், அமெரிக்கா போரில் குவைத்தில் பல போர் ஒத்திகைகள் அடிக்கடி நடக்கும். இரசாயன குண்டுகள் போடுவார்கள் என பயந்து வீட்டிற்குள் அனைத்து கதவு ஜன்னல்களையும் இறுக டேப் ஒட்டி மூடி வைத்ததையும், கேஸ் மாஸ்கை அருகிலேயே வைத்துக்கொண்டு இரவில் அரை தூக்கத்துடன் இருந்ததையும் நினைத்துப்பார்க்க வைத்துவிட்டீர்கள்.
பதிலளிநீக்குஎந்த அளவுக்கு கொடுமையாக நாட்கள் நகர்ந்து இருக்கும்..........பாவம்தான்.........
பதிலளிநீக்குநன்றி இந்த பகிர்வுக்கு.
தருமி சொன்னது:
பதிலளிநீக்கு//அண்ணே ... உங்களுக்குமா நான் ஐயா?! அதெல்லாம் "சின்னப் பையங்க' என்னப் பார்த்து சொல்றது; வேண்டாம்னாலுக் கேக்காத "சின்னப் பையங்க" ..//
தம்பி, அது ஊரு வழக்கமுங்க. பேரப்பையன கூப்பிட்டாலும் "என்னங்க ஐயா" அப்படீன்னுதான் கூப்பிட்டு பழக்கமாயிட்டுது.
எல்லாம் சுயநல்ம்தான். அப்பத்தான் அவனும் "என்னங்க தாத்தா அப்படீன்னு நம்மளைக்கூப்பிடுவான்.
சினிமாவுல பார்த்திபன் சொன்னமாதிரி, "இதுதான் போட்டு வாங்கற டெக்னிக்".
மஞ்சூர் ராஜா சொன்னது-
பதிலளிநீக்கு//ஈராக், அமெரிக்கா போரில் குவைத்தில் பல போர் ஒத்திகைகள் அடிக்கடி நடக்கும். இரசாயன குண்டுகள் போடுவார்கள் என பயந்து வீட்டிற்குள் அனைத்து கதவு ஜன்னல்களையும் இறுக டேப் ஒட்டி மூடி வைத்ததையும், கேஸ் மாஸ்கை அருகிலேயே வைத்துக்கொண்டு இரவில் அரை தூக்கத்துடன் இருந்ததையும் நினைத்துப்பார்க்க வைத்துவிட்டீர்கள்.//
என்னுடைய பதிவு இவ்வளவு தூரம் விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கவேயில்லை.
ஜெகந்நாதன், சைவக்கொத்து பரோட்டா இருவருக்கும், உணர்வுகளைப் பங்கிட்டதுக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்கும்ம்ம்... அடேங்கப்பா அப்போ நீங்க எல்லாம் fossil மனிதர்கள் மாதிரிக்கா இருக்குது. பதிவில் குறிப்பிட்ட பதுங்கு குழிகளை நானும் முதுமலைக் காடுகளில் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்...
பதிலளிநீக்கு//எல்லாம் சுயநல்ம்தான். அப்பத்தான் அவனும் "என்னங்க தாத்தா அப்படீன்னு நம்மளைக்கூப்பிடுவான்.//
பதிலளிநீக்குபிடித்த சுயநலம்தான். அதனால் தான் ஒரு பதிவிட்டேன். ஆனால் பதிவிற்குப் பிறகு என் கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டேன். ஏனெனில் இப்போது நிலமை வேறு.
உங்கள் அனுபவங்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்வை மீள நினைக்க வைத்தது. நன்றி
பதிலளிநீக்குDr.M.K.Muruganandam said:
பதிலளிநீக்கு//உங்கள் அனுபவங்கள் நாங்கள் வாழ்ந்த வாழ்வை மீள நினைக்க வைத்தது. நன்றி//
வருகைக்கு நன்றி. உங்கள் அனுபவங்களை ஒப்பிட்டால் எங்களுடையது ஒன்றுமேயில்லை. அப்போது எங்களை யாரும் இரண்டாம்,மூன்றாம் தர பிரஜைகளாக கருதவில்லை என்பது மிகப்பெரிய விஷயமல்லவா?
உங்கள் போர்க்கால அவலங்கள் போல் என் தந்தையார் ,மாமன்மார் அவர்கள் 20 களில் அனுபவித்ததைக் கூறக் கேட்டுள்ளேன்.
பதிலளிநீக்குஎங்கள் மக்கள் இதைவிடக் கொடுமைகளை இப்போ அனுபவித்து விட்டார்கள்.
தெகா சொன்னது:
பதிலளிநீக்கு//ம்ம்ம்... அடேங்கப்பா அப்போ நீங்க எல்லாம் fossil மனிதர்கள் மாதிரிக்கா இருக்குது. பதிவில் குறிப்பிட்ட பதுங்கு குழிகளை நானும் முதுமலைக் காடுகளில் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்...//
இப்போது நினைத்தால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் கூறவேண்டும். அன்றைய அரசு மக்கள் நலனில் அக்கறை எடுத்துள்ளது.
இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைக்கவே மனது வலிக்கிறது.
நல்ல பதிவுங்க..வணக்கம் ..முதல் வருகை..ங்கோ.
பதிலளிநீக்குயோகன்-பாரிஸ் சொன்னது:
பதிலளிநீக்கு//உங்கள் போர்க்கால அவலங்கள் போல் என் தந்தையார் ,மாமன்மார் அவர்கள் 20 களில் அனுபவித்ததைக் கூறக் கேட்டுள்ளேன்.
எங்கள் மக்கள் இதைவிடக் கொடுமைகளை இப்போ அனுபவித்து விட்டார்கள்.//
உண்மை. நினைக்கும்போதே மனது வலிக்கிறது. அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும?
16 March 2010 04:15
தருமி சொன்னது:
பதிலளிநீக்கு//பிடித்த சுயநலம்தான். அதனால் தான் ஒரு பதிவிட்டேன். ஆனால் பதிவிற்குப் பிறகு என் கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டேன். ஏனெனில் இப்போது நிலமை வேறு.//
உங்கள் பதிவைப் பார்த்தேன். நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள்.
குறிப்பாக மனைவியை மரியாதையுடன் குறிப்பிடுவது மகவும் அவசியம். ஒருக்கால் அவர்கள் நம்மை "வா,போ" என்று அழைத்தால் எப்படி உணர்வோம்?
தாராபுரத்தான் அவர்களே,
பதிலளிநீக்குமொத மொதலா வந்திருக்கீங்க, நம்ம ஊர்லெ எல்லாரும் சொகமா இருக்காங்களா? இருந்து சாப்டுட்டு போகோணுங்க!
அப்புறம் அடிக்கடி வாங்க.
ஒரு சிறு திருத்தம் ஐயா!
பதிலளிநீக்குஎஸ் எம் எஸ் எம்டன் என்ற ஜெர்மானிய யுத்தக் கப்பல், சென்னை மீது குண்டு வீசியது பதிவில் இருப்பது போல 1944 இல் அல்ல!
எம்டன் சென்னைத் துறைமுகத்தில் இருந்த எண்ணெய்க் கிடங்கின் மீது குண்டு வீசியது முதல் உலக யுத்த சமயத்தில்! 22-09-1914 அன்று இரவு அந்த குண்டு வீச்சு நடந்தது, வெறும் பத்தே நிமிடம் தான்! கப்பல் தலைவர் நினைத்திருந்தால், சென்னையையே அழித்திருக்க முடியும்! ஆனால் செய்யவில்லை.
S M S எம்டன் 22-09-1914 என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து என் பதிவில் தேடிப் பாருங்கள், இது விஷயமாக இரண்டு பதிவுகள் கிடைக்கும்.
அடேங்கப்பா... படிக்கும்போதே போர் கலவரம் கொஞ்சம் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது...
பதிலளிநீக்குதொடருங்கள் இன்னும்...
கிருஷ்ணமூர்த்தி சொன்னது:
பதிலளிநீக்கு//எஸ் எம் எஸ் எம்டன் என்ற ஜெர்மானிய யுத்தக் கப்பல், சென்னை மீது குண்டு வீசியது பதிவில் இருப்பது போல 1944 இல் அல்ல!//
பதிவு இடும்போது முதல் + இரண்டாவது உலக மகா யுத்தங்களின் சம்பவங்களை குழப்பிக்கொண்டுவிட்டேன். (வயதானதின் கோளாறு). நீங்கள் சொல்வதுதான் சரியான தகவல்.
தருமி அவர்கள் பின்னூட்டத்தில் ஏற்கெனவே சொல்லி நானும் எதிர்வினையில் ஒத்துக்கொண்டுவிட்டேன்.
நான் செய்த தவறு அப்படியே இருக்கட்டும் என்றுதான் பதிவை மாற்றவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
ரோஸ்விக் சொன்னது:
பதிலளிநீக்கு//அடேங்கப்பா... படிக்கும்போதே போர் கலவரம் கொஞ்சம் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது...
தொடருங்கள் இன்னும்...//
உங்கள் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி
சும்மா வந்தேனுங்க...நீங்கதான அடிக்கடி வரச்சொன்னீங்க....யாரு கூப்பிடுவாங்கன்னு பார்த்துகிட்டே இருக்கோம..ங்கோ.
பதிலளிநீக்குதாராபுரத்தான் சொன்னது:
பதிலளிநீக்கு//சும்மா வந்தேனுங்க...நீங்கதான அடிக்கடி வரச்சொன்னீங்க....யாரு கூப்பிடுவாங்கன்னு பார்த்துகிட்டே இருக்கோம..ங்கோ.//
வாங்க, வாங்க. சும்மா வந்தா என்னங்க, நம்மூட்டுக்கு வரதுக்கென்னங்க. இருங்க காபி வைக்கச்சொல்றேன், குடிச்சுட்டு போலாங்க.
அன்புள்ள அய்யா
பதிலளிநீக்குபதின்ம வயது - இடுகை இட தருமி அண்ணனும் அழைத்திருக்கிறார் - தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறேன் - சீக்கிரம் எழுத வேண்டும்.
ம்ம்ம்ம் எழுதுகிறேன்
யுத்த காலத்தை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து விட்டீர்கள்
நன்று நன்று - ஆமா இவ்வளவு சீரியஸா எழுதணுமா - அடுத்த பகுதி - 13-19 வயசு பத்தி எழுதுங்க அய்யா