திங்கள், 8 மார்ச், 2010
என்னாலெ முடியல, நான் வெலகிக்கிறேன் - பாகம் 1
நான் பிளாக் எழுத வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. முதல் வருடத்தில் ஏறக்குறைய ஒரு ஐம்பது பதிவுகள் எழுதியிருப்பேன். பல விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். அதில் குறிப்பாக ‘பிரபல பதிவர் ஆவது எப்படி?’ எனபதைப்பற்றி எட்டு பதிவுகள் போட்டிருக்கிறேன்.
எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு-அதாவது நெய்யறவன் கட்டறது கிழிசல்- அப்படீன்னு சொல்வாங்க. நெசவாளி ஊருக்கெல்லாம் புதுத்துணி நெய்து கொடுப்பான், ஆனால் அவனுக்கு உடுத்த முடிவதோ கிழிசல் துணிதான். அந்த மாதிரி நான் மற்றவர்களுக்கெல்லாம் பிரபலமாவது எப்படி என்று உபதேசம் செய்துவிட்டு நான் பிரபலமாகாமலேயே இருந்தேன். ஏன் என்றால் நான் உபதேசம் செய்தவைகளை நான் கடைப்பிடிக்கவில்லை.
ஒரு பதிவு பிரபலமானதா இல்லையா என்று எப்படி அறிவது? அதன் அளவுகோல்களாவன-
1. அந்தப்பதிவின் ஹிட்ஸ் அதிகமாக இருக்கவேண்டும். பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஹிட்ஸை தாண்டியிருக்க வேண்டும். (என்னுடையது 300 ஐத்தாண்டவில்லை).
2. அந்தப்பதிவின் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 100 ஐத்தாண்டியிருக்க வேண்டும். (நான் 5)
3. ஒவ்வொரு பதிவிலும் 50 க்கு குறையாமல் பின்னூட்டங்கள் போட்டிருக்கவேண்டும். அதில் 10 பர்சென்ட் பதிவரைத்திட்டி இருக்கவேண்டும். (முதல் வருடம் பூராவும் 50 பதிவிற்கும் சேர்த்து வந்த பின்னூட்டங்கள் மொத்தமே 10 க்கும் கீழ்)
4.அப்புறம் நம்ம பதிவுக்கு ஐயா, சாமீன்னு எல்லாத்தையும் கெஞ்சி ஓட்டு வாங்கவேண்டும்
5. ஒவ்வொரு பதிவிலும் குறைந்தது பத்து கொலைகளாவது நடந்திருக்க வேண்டும் - அதாவது தமிழ்க்கொலை. – கீழ்க்கண்டவற்றுக்குள் வித்தியாசம் பாராட்டக்கூடாது. எதை எங்கு வேண்டுமென்றாலும் உபயோகிக்கலாம்.
1. ல , ள
2. ர , ற
3. ன , ண , ந
4. எங்கு வேண்டுமானாலும் ‘ஒற்று’ சேர்க்கலாம். உ-ம். பயிற்ச்சி, முயற்ச்சி
இந்த அளவுகோல்களின்படி என்னுடைய பதிவு அடிமட்டத்தில் இருந்தது. நான் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதை சிறப்பாகச் செய்யவேண்டும் என்று எண்ணுபவன். என்னடா இந்த பதிவுலகத்திலே நாம் பிரபலமாகாமல் இருக்கிறோமே என்ற கவலை என்னைப்பீடித்தது. என் நண்பர்களும் என்னைக்கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த சமயத்தில்தான் அதாவது கரெக்டாக 2-3-2010 அன்று மாலை 8.30 மணிக்கு ஆபத்பாந்தவனாக ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த ஸவாமிகள் சன் டிவி மூலமாக தன் கடைக்கண்களை என் பக்கம் திருப்பினார். 8.35 க்கு எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது. சரியாக 8.40க்கு ஸ்வாமிகளைப்பற்றிய முதல் பதிவை இட்டேன். அதிலிருந்து நான்கு நாட்கள் தினமும் இரண்டு பதிவுகள் வீதம்(எல்லாம் ஸ்வாமிகளைப்பற்றித்தான்)போட்டேன். கூகுளாண்டவர் எந்த படம் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள் மகனே என்று அருள் பாலித்தார்.
அந்த வரிசையில்தான் கடைசியாக என்னுடைய பக்தி முற்றிப்போய் ஸ்வாமியின் பிரதம சிஷ்யை ரஞ்சிதா அவர்களின் ஒரு நல்ல படத்தைப்போட்டேன். என்ன, படம் ரொம்ப நன்றாக இருந்து விட்டது. என்னுடைய பதிவின் ஹிட்ஸ், பின்தொடருபவர்கள், பின்னூட்டங்கள் எல்லாம் மளமளவென்று தாறுமாறாக ஏறி, நானும் பிரபல பதிவர்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.
என்னுடைய இந்த இமாலய வளர்ச்சியைப்பார்த்து பொறாமை கொண்ட ஒரு சில பதிவர்கள் அதெப்படி ஸ்வாமியின் பிரதம சிஷ்யையின் படத்தை நீ மட்டும் போடலாம், நாங்கள் போடலாமென்று இருந்தோமே என்று என்னிடம் சண்டைக்கு வந்தார்கள். (முகுந்த் அம்மா – மன்னிக்கவும்). நான் சண்டை போடும் வயதெல்லாம் தாண்டி (சும்மா 75 தான்) விட்டபடியால் எதற்கு வம்பு என்று அந்த படத்தை எடுத்துவிட்டேன்.
இப்போது நான் பிரபலமாகிவிட்டேன் அல்லவா! அதனால் நான் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளைப்பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சரியான குசும்பு பதிவு
பதிலளிநீக்குகலக்குங்க சார்
வாழ்த்துக்கள்
ஹாய் அரும்பாவூர் சொன்னது
பதிலளிநீக்கு//சரியான குசும்பு பதிவு
கலக்குங்க சார்
வாழ்த்துக்கள்//
ஏம்ப்பா பேராண்டி, இந்த வயசில குசும்பு பண்ணாம பின்ன எப்ப பண்றது. என் பிறந்த வருஷம் என் ஈமெயிலிலேயே இருக்கிறது.
வாழ்த்துக்கு நன்றி. நல்லா இரு.
பிரபலம் ஆனாலே பிராபளம் என்று தான் சொல்லுகிறார்கள்.
பதிலளிநீக்குஅந்த வகையில் நீங்க கொடுத்துவச்சவர்.
:)
அய்யோ கோவி.கண்ணன் அவர்களே,
பதிலளிநீக்குஇது முன்னாலயே தெரியாமப்போச்சுங்களே, இப்ப கொஞ்சம் போல பிரபலம் ஆகிட்டனுங்களே, நெறய பிராப்ளம் வர ஆரம்பிச்சுட்டுதுங்களே, கண்ணா, என்ன செய்வேன், காப்பாத்துங்க கண்ணா.
//நான் சண்டை போடும் வயதெல்லாம் தாண்டி (சும்மா 75 தான்)//
பதிலளிநீக்குபழுத்த பழம் நீங்கள். எல்லாப் படங்களையும் சமமாக பாவித்து சண்டை போடுபவர்களை பொறுத்தருள வேண்டும்..,
ஹைய்யோ:-)))))
பதிலளிநீக்குஉங்கள் Satire எனக்கு ரெம்பவும் பிடிக்கும்.
பதிலளிநீக்குPlease,carry on Sir.
அன்புள்ள மாணிக்கம் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஇந்த உணர்வுதான் என் ஜீவநாடியாக இருந்து வருகின்றது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பழனி சுரேஷ் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஅப்படித்தான் நடந்துகொண்டு வருகிறேன்.
தங்களின் ஆதங்கம் நியாயமானது,அதற்காக கொலை பண்ணுமளவுக்குத் துணிய வேண்டாம்.
பதிலளிநீக்குகாலமும் நேரமும் வந்தால் காரியம் கை கூடிவிடும்,காலத்தையும் நேரத்தையும் கை கூட வைப்பது நமது கடமை.
அய்யா! என் கருத்துக்கு மதிப்பளித்து தாங்கள் அந்த படத்தை எடுத்ததற்கு நன்றி. ஏதோ என் மனதில் பட்டது அதனால் கேட்டு விட்டேன்! தவறானால் மன்னியுங்கள். மற்றபடி நித்தியானந்தா பற்றியோ அவரின் சிஷ்யகோடிகள் பற்றியோ எழுதும் எந்த எண்ணமும் எனக்கு இல்லை அய்யா அவர்களே.
பதிலளிநீக்குபிரபலம் என்று எண்ணிக் கொள்வது ஒரு மனவியாதி - சீன நாட்டு அறிஞர் கவாஸாகி மிட்சுபிஷி சொன்னராம் :))
பதிலளிநீக்குஜெகந்நாதன் சொன்னது;
பதிலளிநீக்கு//பிரபலம் என்று எண்ணிக் கொள்வது ஒரு மனவியாதி - சீன நாட்டு அறிஞர் கவாஸாகி மிட்சுபிஷி சொன்னராம் :))//
பொண்ணு டாக்டருங்க, பக்கத்திலதான் இருக்குது. இப்பவே போயி மருந்து வாங்கி சாப்பிட்டு சீக்கைச் சரி பண்ணிவிடுகிறேன். :):)
ஜமாய்ங்க - பிரபல பதிவர் ஆனதுக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் அய்யா
பதிலளிநீக்கு