நம் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்கிற பிரச்சாரம் பல காலமாக பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொள்பவர்களினால் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிகம் படித்தவர்கள் இந்த கொள்கைகளை ஒத்துக்கொண்டு இதைப்பரப்ப வேண்டும் என்று இந்த பகுத்தறிவுவாதிகள் படித்தவர்களை வற்புறுத்துகிறார்கள் அல்லது எதிர்பார்க்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று எனக்குப்புரியவில்லை.
இதில் முதலில் நான் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால் இவர்கள் எதையெதையெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்கிறார்கள் என்கிற லிஸட்டைத்தான். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கடவுள் நம்பிக்கை- கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இருக்கிறார் என்றால் பார்த்தவர்கள் யார்? எனக்கு காட்டமுடியுமா? நான் பார்த்தால்தான் நம்புவேன். இப்படிப்பட்ட கேள்விகளை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கேட்கிறார்கள்.
ஆகவே கடவுள் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கைகளின் லிஸ்ட்டில் முதலில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நான் சொல்வதை திறந்த மனதுடன் பாருங்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா? என்கிற வாதத்துடன் கடவுள் நம்பிக்கையை சம்பந்தப்படுத்தாதீர்கள். கடவுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என்னுடைய சொந்த வாழ்விற்கு கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தேவைப்படுகிறது என்று ஒருவன் சொன்னால், அவனது செயல்களில் அதைக்கடைப்பிடித்தால், என்ன தவறு? அவன் படித்திருந்தால் இதைச்செய்யக்கூடாதா? படித்தவன் என்றால் அவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் நிர்ணயிக்கவேண்டும்?
நமது நாட்டில் வருடந்தோறும் படித்தவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கோயில்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. படித்தவர்களின் கடவுள் நம்பிக்கை அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா? முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் ஏன் முடிச்சுப்போடுகிறாய்? என்று கேட்கலாம். இது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சமாச்சாரங்கள் அல்ல. ஆனால் நடைமுறை உண்மையைப்புரிந்து கொள்ள மறுத்து ஒரு மாயைக்கொள்கையை பிடித்துக் கொண்டிருப்பதைத்தான் நான் மூடநம்பிக்கை என்று நம்புகிறேன்.
மனிதனுக்கு சில நேரங்களில் சில ஊன்றுகோல்கள் அவசியம் தேவைப்படுகின்றன. கடவுளை நம்பகிறவனுக்கு அந்த நம்பிக்கை ஊன்றுகோலாக இருக்கிறது. கடவுளை நம்பாதவனுக்கு அந்த நம்பிக்கையே ஊன்றுகோலாக செயல்படுகிறது. எப்படிப் பார்த்தாலும்
மனிதனுக்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகின்றது. அது கடவுள் நம்பிக்கையாகவோ, அல்லது கடவுள் அவநம்பிக்கையாகவோ இருக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன. அவை சரியா, தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். சமகாலத்தில் வாழும் மனிதர்கள் அல்ல. ஒரு கருத்து பெரும்பான்மையான மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டால் அதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதே கருத்து சரியில்லை என்றால் அது காலப்போக்கில் அழிந்துவிடும்.
நன்மை எது தீமை எது என்று பகுத்து அறியும் அறிவுதான் பகுத்தறிவு. ஆனால் நாத்திகவாதிகள் இறைமறுப்புதான் பகுத்தறிவு என்று தவறாக நினைக்கிறார்கள். பெரும்பாலான விஞ்ஞானிகள் தத்துவ ஞானிகள் எல்லாம் ஆத்திகர்கள்தான். இவர்களுக்கெல்லாம் பகுத்தறிவு இல்லை என்று சொல்ல முடியுமா? இன்னும் விடை கண்டுபிடிக்கப்படாத கேள்விகள் உலகத்தில் உண்டு. முதலில் நாத்திகவாதிகள் உயிர் என்றால் என்ன என்பதற்கு விடை சொல்லட்டும். பிறகு இறைபக்தியை கிண்டல் செய்யட்டும்.
பதிலளிநீக்குRobin said
பதிலளிநீக்கு//நன்மை எது தீமை எது என்று பகுத்து அறியும் அறிவுதான் பகுத்தறிவு.//
நன்றாகச்சொன்னீர்கள். நன்றி.
பெரியாரைத் தவிர மற்ற எல்லோரும் இடையில மூட்டை கட்டியவர்கள்தான்.மழையும் பெய்வதுதான்.தவளையும் கத்துவதுதான்
பதிலளிநீக்குநல்ல அலசல்!
பதிலளிநீக்குஉங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
நன்றி!
இவன் சொல்லுகிறான்... அவன் சொல்லுகிறான் என்பதை விடுத்து... பகுத்து ஆராய்ந்து தான் பார்ப்போமே இரண்டையும்... :-)
பதிலளிநீக்கு// நமது நாட்டில் வருடந்தோறும் படித்தவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கோயில்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. படித்தவர்களின் கடவுள் நம்பிக்கை அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா?//
பதிலளிநீக்குDr.P.Kandaswamy.
உண்மைதான், அதேசமயம் வித விதமான வகை வகையான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதே ! ஆண்களுக்கு ஈடாக பெண்களும் இதற்க்கு சளைத்தவர்கள் அல்ல என்ற கால கட்டத்தில் தானே இருக்கிறோம்?
படித்தவர்கள் அதிகமாகி விட்டனர், இது வெறும் எண்ணிக்கையில்தான்,புத்தி சாலிகள் இல்லை.அறிவாளிகள் இல்லை.
கோயில்கள் அல்லது வழிபாட்டுத்தலங்கள் (இதுதான் பொருத்தமாக இருக்கிறது)அதிகமாகி விட்டன.ஆனால் தனி மனித நேர்மையும் , நற்குணங்களும், பிறர் நலமும் காக்கும் பெரிய மனதும் வழக்கொழிதலவா போய்விட்டது!
எம்மதமாயினும் எந்த தெய்வமாயினும் அதில் நம்பிக்கை கொண்டோர் அதிகம் என்றால் நாம் எவருமே இங்கே இந்த கருத்துக்களை பரி மாற அவசியமே இருந்திருக்காதே!
கடவுள் நம்பிக்கையில் "எதுவும் செய்யலாம் " என்ற எண்ணம் எங்கும் எல்லோருக்கும் பரவி, விரவி நிற்கிறது.
இல்லையென்றால் பிரேமானந்தா ஜெயிலில் இருந்து வெளியில் வரும்போது அவன் காலில் விழுந்து ஏன் வணங்க்கின்றனர் பெண்கள்?
காஞ்சி சங்கராச்சாரி மீது கொலை வழக்கும் பாலியல் வழக்குகளும் இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆனால் டி.வி.யில் அவன் காலில் விழுந்து வணங்க்கின்றனர் அரசியல் புள்ளிகள் , சினிமா காரர்கள் என்ன காரணம்?
கிருஸ்துவ பாதிரிமார்கள் என்னவெல்லாம் செய்து தங்களின் காம களியாட்டங்களை நடத்துகின்றனர்? எத்தனை பெண்களை கெடுத்துள்ளனர்?எத்தனை சிறுவர்கள் இவர்களின் பாலியல் இச்சைகளுக்கு பலியாகின்றனர்?
இஸ்லாத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக அறியப்பட்டவர்கள்தான் குண்டு வெடிப்புகளுக்கு 'தாங்களே ' என்று மார் தட்டிகொல்கின்றனர்.
மதமும், கடவுள் நம்பிக்கையும் இவர்கள் எல்லோரின் வக்கிர மான செயல் களுக்கு கிடைத்த ஒரு "சாய்மானம் "
இந்த "சாய்மானத்தில்"சாய்த்து கொண்டு இவர்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம் என்றால் அந்த" சாய்மானம் "
உடைத்தெறிந்து போக வேண்டாமா? மனதர்கள் மனிதர்களாக வாழ்வே மதம் கடவுள் நம்பிக்கை என்றால் அந்த கடவுளும் அதன் நம்பிக்கையும் நாசமாய் போகட்டும்!
'
ராபின் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.
பதிலளிநீக்கு//முதலில் நாத்திகவாதிகள் உயிர் என்றால் என்ன என்பதற்கு விடை சொல்லட்டும். பிறகு இறைபக்தியை கிண்டல் செய்யட்டும்//
சரியான கேள்வி!!
"ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நம்பிக்கைகள் இருக்கின்றன. அவை சரியா, தவறா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்"
பதிலளிநீக்குgood
உங்கள் முதல் வேலை அனுபவம் பற்றி எழுதலாமே
அப்போ சம்பளம் எவ்வளவு அப்போதைய வேலை திறன் பற்றி
அன்புள்ள உருத்திரா,
பதிலளிநீக்குதந்தை பெரியார் பிராமணரல்லாதாருக்கு ஏற்படுத்திய விழிப்புணர்விற்கு நாம் எல்லோரும் மிகக்கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் அவருடைய கொள்கைகளை காலத்திற்கு ஏற்ப வடிவமைத்து கொண்டு செல்ல நல்ல தலைமை உருவாகவில்லை என்பதுதான் வருத்தத்திற்கு உரியது.
Maximum India, said
பதிலளிநீக்கு//நல்ல அலசல்!
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!//
நன்றிகள் பல.
ஐந்து பிளாக்குகள் வைத்துக்கொண்டு பைனான்ஸ் களத்தில் அசத்திக்கொண்டு இருக்கிறீர்கள். ஒவ்வொன்றாக வந்து பார்க்க வேண்டும்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!
பதிலளிநீக்குதிண்ணையில் இருக்கத் தெய்வம் படியளக்காது.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!
இந்த வரிசையை உணர்ந்தோர், முன்னேறுகிறார்கள்.
இதைப் பார்த்து பலர் 1 வது, 2 வதுக்குப் பின் ஒரு அடியும் வைக்காமல்
நிற்கிறார்கள்.
கோவிலால் வயிறு வளர்ப்போரும், அதுபற்றிக் கூறாமலே!
மந்திரத்தால் மாங்காய் பிடுங்கும் மனநிலையை வளர்த்துப் பிழைக்கிறார்கள்.
அதுவே வெறுப்பைத் தருகிறது.
ரோஸ்விக் சொன்னது:
பதிலளிநீக்கு//இவன் சொல்லுகிறான்... அவன் சொல்லுகிறான் என்பதை விடுத்து... பகுத்து ஆராய்ந்து தான் பார்ப்போமே இரண்டையும்... :-)//
கருத்துகள் மோதினால்தான் மாற்றம் பிறக்கும் ! நீங்கள் சொல்வது மிகச்சரி, ரோஸ்விக்.
மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//மதமும், கடவுள் நம்பிக்கையும் இவர்கள் எல்லோரின் வக்கிர மான செயல் களுக்கு கிடைத்த ஒரு "சாய்மானம் "//
பெரிய பின்னூட்டம். உங்கள் கருத்துகளை நான் அப்படியே ஒத்துக்கொள்கிறேன். இந்த "நம்பிக்கை" பற்றி எல்லோரையும் சிந்திக்க வைக்கவேண்டும் என்பதே என் பதிவின் நோக்கம். இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்துத்தெளிவு எப்போது ஏற்படும்/அல்லது ஏற்படுமா என்று சொல்வது மிக கடினம்.
அரும்பாவூர் சொன்னது:
பதிலளிநீக்கு//உங்கள் முதல் வேலை அனுபவம் பற்றி எழுதலாமே
அப்போ சம்பளம் எவ்வளவு அப்போதைய வேலை திறன் பற்றி//
கண்டிப்பாய் எழுதுகிறேன். உங்க மாதிரி கேக்கற ஆளுக கெடச்சா நாங்க உட்டுருவமா? வயசான காலத்தில நாங்க பேசறத யாரும் கேக்கலீங்கறதுதானே எங்க குறையெல்லாம்! :-)
//
பதிலளிநீக்குகடவுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என்னுடைய சொந்த வாழ்விற்கு கடவுள் இருக்கிறார் என்கிற நம்பிக்கை தேவைப்படுகிறது என்று ஒருவன் சொன்னால், அவனது செயல்களில் அதைக்கடைப்பிடித்தால், என்ன தவறு? அவன் படித்திருந்தால் இதைச்செய்யக்கூடாதா? படித்தவன் என்றால் அவன் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் நிர்ணயிக்கவேண்டும்?
//
யாருடைய வாழ்க்கையையும் யாரும் நிர்ணயிக்க முடியாது ...
எழுத்துக்கள் பிடித்திருந்தது
//
பதிலளிநீக்குஒரு கருத்து பெரும்பான்மையான மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்துவிட்டால் அதை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதே கருத்து சரியில்லை என்றால் அது காலப்போக்கில் அழிந்துவிடும்.
//
அய்யா நம்ம நாட்டில நடக்குர சில கொடுமையான நம்பிக்கைகள் இன்னும் அழிய வில்லை. அது சமூகத்திலிருந்து நீங்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும்.
அவ்வளவு நாள் நாம் அதற்கு காத்திருக்க வேண்டும் தானா?
இன்னொரு சின்ன கேள்வி நடராஜர் படம் வைத்திருக்கிறீர்கள்?
பதிலளிநீக்குஏதாவது சிறப்பான காரணம் இருக்கிறதா ?
Natarajar - cosmic dancer of Hindu Mythological God Shiva
புல்லட் மணி அவர்களுக்கு,
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
நடராஜர் படம் ஒரு கடவுள் படம் என்கிற முறையில்தான் போட்டேன். வேறு காரணம் ஒன்றுமில்லை.
கருத்துப்புரட்சி வருவது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. வருவதற்கு நம் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
//நமது நாட்டில் வருடந்தோறும் படித்தவர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கோயில்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது. படித்தவர்களின் கடவுள் நம்பிக்கை அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம் அல்லவா?//
பதிலளிநீக்குமுன்பெல்லாம் எனக்கு தெரிந்து மருந்து கடைகள் எனப்படும் பார்மஸிகளை தேடிப் பிடிக்க வேண்டும், இப்போதெல்லாம் தெருவுக்கு 2 - 3 வரை நகரங்களிலும் மாநகரங்களில் 5 வரையில் கூட இருக்கிறது.
கடவுள் நம்பிக்கைக்கும் படிப்புக்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லை. படித்தவர்களில் ஏமாறுபவர்களே இல்லை என்று நீங்கள் நம்பினாலும் ஏமாற்றுபவர்களில் அவர்கள் தான் அதிகம் என்று ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
படிப்பை அளவுகோளாக வைத்து கடவுள் உட்பட்ட சமூக சிந்தனைகளுக்கு தீர்ப்பு சொல்வது ஞாயமாகப்படவில்லை.
***
மீண்டும் கோவில் எண்ணிக்கைக்கு வருகிறேன்.
மக்கள் பிரச்சனைகள் தீர்ந்த பிறகு மார்கெட்டிங் டிமாண்ட் எனப்படும் சந்தைக்கான தேவை குறைந்துவிடும், பிரச்சனைகளும் தேவைகளும் தீராது இருக்கும் போது தான் சந்தையின் தேவைகள் பெருகி பல புதிய சந்தைகளும் உருவாக காரணமாக அமையும்.
ஆகவே சந்தைகளின் அதிக எண்ணிக்கையை வைத்து பிரச்சனைகள் தீர்ந்து கொண்டு இருப்பதாகச் சொல்ல முடியாது. மேலும் சந்தைகள் மக்களை திருப்தி படுத்தியது என்றும் சொல்ல முடியாது.
நான் சொல்லவந்தது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். கோவில்களின் எண்ணிக்கை தவிர்த்து கடவுள் நம்பிக்கை தனிப்பட்ட மனிதனுக்கு தேவையா இல்லையா என்பதில் எனக்கு தனியாக கருத்து எதுவும் இல்லை