வியாழன், 22 ஜனவரி, 2015

வீடு வாங்குவது எப்படி? ஒரு புலம்பல்.


                                       

கார் வாங்குவதைப் பற்றி எழுதப்போக ஒருவர் வீடு வாங்குவதைப்பற்றி எழுதச்சொன்னார். நானும் பெரிய கித்தாப்பாக எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் இதைப் பற்றி யோசிக்கும்போதுதான் வீடு வாங்குவது என்பது இன்றைய கால நிலவரத்தில் எவ்வளவு கடினமான விஷயம் என்பது உறைத்தது.

இன்றைய பொருளாதார நிலையில் ஒருவன் எவ்வளவு சம்பாதித்தால் ஜீவிக்க முடியும் என்பதற்கு ஒரு நிலையான பதில் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். நடுத்தர வர்க்கம் என்று சொல்லக் கூடியவர்கள் படும்பாடுதான் சொல்லில் அடங்காதது.

ஒரு பெரு நகரத்தில் இன்று வீட்டு வாடகை ஆகாசத்தில் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளிச் செலவோ நினைத்துப் பார்க்க முடியாதபடி உயர்ந்து இருக்கிறது. உணவுப் பொருட்கள், கேஸ், காய்கறிகள் இவைகளைத் தவிர்க்க முடியாது. பண்டிகைகள், ஊர்ப்பிரயாணம், கல்யாணம் மற்றும் மற்ற விசேஷங்கள், வைத்தியம் இப்படி தவிர்க்கமுடியாத செலவுகளினால் மாதச் சம்பளக்காரர்கள் படும் சிரமங்களை எழுத்தில் வடிக்க முடியாது.

இப்படி இருக்கையில் எதிர் காலத்திற்காக எப்படிச் சேமிப்பது, வீடு வாங்குவது எப்படி, குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வது எப்படி என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. இந்த சோதனைகளையெல்லாம் எப்படித் தாண்டி வந்தேன் என்று நினைத்தால் ஒரு குழப்பம்தான் மிஞ்சுகிறது.

இந்த நிலையில் வீடு வாங்க என்ன யோசனை சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய வயதுதான் என்று நினைக்கவேண்டி இருக்கிறது. என்னால் இன்றுள்ள பொருளாதார நிலையை, அதில் வரும் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என் அனுபவம் இன்றைய காலகட்டத்தில் எதற்கும் உதவாது என்று புரிவதற்குத்தான் உதவும் என்று புரிகிறது.

நான் வளர்ந்த, வாழ்ந்த காலம் அப்படி. ஒரு மூட்டை (100 கிலோ) அரிசி 10 ரூபாய் என்று விற்றதைப் பார்த்தவன் நான். மார்க்கெட்டுக்கு ஐந்து ரூபாயைக் கொண்டு போனால் ஐந்து பேர் கொண்ட என் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வருவேன். என் கல்யாணத்திற்கு (1964) ல் மொத்தமாக 2000 ரூபாய் செலவு செய்தேன். நேற்று ஓட்டலுக்குப் போய் வந்த என் பேரன் ஆறு பேர் சாப்பிட்டதற்கு 2000 ரூபாய் பில் ஆகியது என்கிறான்.

இன்று ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு என்ன செலவு ஆகிறதென்பது எனக்குத் தெரியவில்லை. நான் பிறந்து வளர்ந்தது ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தின் அடி மட்டத்திலுள்ள ஒரு குடும்பத்தில்தான்.
ஆடம்பரம் என்றால் என்னவென்று தெரியாமலேயே வளர்ந்தவன் நான்.

அப்படி வளர்ந்த என்னாலேயே இன்றைய பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்று உள்ள பொருளாதார நிதர்சனங்களை உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை. ஆகையால் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனால் ஒரு வீடு எப்படி வாங்க முடியும் என்பதற்கு வழி காட்ட எனக்குத் தெரியவில்லை.  நான் என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்.

30 கருத்துகள்:

  1. கித்தாப்பு என்ற வார்த்தை எங்கிருந்து வந்திருக்கும்! இதே போல இன்னொரு வார்த்தை அல்டாப்பு!

    நீங்கள் சொல்லியிருக்கும் ரூபாய் விவரங்கள் எனக்கும் ஒரு விஷயத்தை நினைவு படுத்தியது. சிறு வயதில் என் பிறந்த நாளுக்கு அப்பா ஹோட்டலில் (கேண்டீன்) சாப்பிட ஒரு ரூபாய் கொடுத்தனுப்பினார். நான் இரண்டு இட்லியும் தோசையும்,சாப்பிட்டு விட்டு, என் தங்கைக்கு ஒரு தோசை பார்சல் வாங்கிக் கொண்டு மிச்ச காசை அப்பாவிடம் கொடுத்து விட்டேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் விவசாயக் கல்லூரியில் 1953-56 ல் படித்தபோது காலை டிபனுக்கு நான்கு அணாதான் (25 நயா பைசா) அலவன்ஸ் வீட்டில் கொடுப்பார்கள். அங்குள்ள ஆபீசர்ஸ் மெஸ்சில் இரண்டு இட்லி ஒரு அணா, ஒரு தோசை ஒன்றரை அணா, ஒரு காப்பி ஒன்றரை அணா, இப்படி நாலணாவில் காலை டிபனை முடித்து விடுவேன்.

      இன்று நாலணா அதாவது 25 பைசா வழக்கொழிந்து போயிற்று. இப்பொழுது காலை டிபன் சாப்பிட குறைந்தது 100 ரூபாய் வேண்டுமென்று என் பேரன் சொல்லுகிறான்.

      நீக்கு
    2. அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம். கல்யாணமான புதிதில் (1992 இல்தான் ) நாங்கள் மூன்று நடுத்தர வர்க்க நண்பர்கள் குடும்பத்தோடு (மொத்தம் 9 பேர் குழந்தைகளோடு சேர்ந்து) ஒரு சுமாரான ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டோம். ஆளுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு ரோஸ்ட் என்று. குழந்தைகளுக்கு தோசையோடு கப் ஐஸ் கிரீம் வேறு. பில் எவ்வளவு தெரியுமா?
      மூர்ச்சை போட்டு விடாதீர்கள். வெறும் 37 ரூபாய்தான். இன்று திருச்சியில் உள்ள சங்கீதா ஹோட்டலுக்கு (கலைஞர் அறிவாலத்திற்கு எதிரில் உள்ளது) சென்று ஒரு செட் இட்லி சாப்பிட்டு விட்டு (டிப்ஸ் 10 ரூபாய்க்கு குறைந்து வாங்குவதில்லையாம்) வந்த பில் + டிப்ஸ் சேர்ந்து 38 ரூபாய் ஆயிற்று.
      சாப்பிட்ட இட்லி உடனே ஜீரணம் ஆகி விட்டது.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  2. ம்ஹீம்... நினைத்துப் பார்க்கக் கூட முடிவதில்லை...

    ஆனால் குடும்பத்தலைவிக்கு இந்த விசயம் சர்வ சாதாரணம்...!!!

    பதிலளிநீக்கு
  3. பல ஆண்டுகளுக்கு முன் வீடு என்ற ஒரு திரைப்படம் வந்தது. நடுத்தர வர்க்கத்தினர் ஒரு வீட்டுக்காக ஏங்கும் ஏக்கத்தை அதில் காணமுடியும். தங்கள் பதிவிலும் அந்த ஏக்கத்தைக் காணமுடிந்தது.

    பதிலளிநீக்கு

  4. //ஒரு வீடு எப்படி வாங்க முடியும் என்பதற்கு வழி காட்ட எனக்குத் தெரியவில்லை.//

    நீங்களே இப்படி சொன்னால் எப்படி? இது ஒன்றும் ‘கம்ப சூத்திரம்’ அல்ல. எல்லா விவரங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. அவைகளை ஒருங்கிணைத்து தரவேண்டும். அப்படி இணைத்து சுவையாகத் தர உங்களால்தான் தரமுடியும். எங்களைப் போன்றோர் எழுதினால் அது வெறும் புள்ளி விவர தகவல்களாகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள்.
      வீடு வாங்குவது பற்றி அய்யா அவர்கள் எழுதினால் வீடு வாங்குகிறோமோ இல்லையோ அந்த பதிவை படிக்கும்போது வீடு வாங்கிக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு feeling ஐ அய்யா அவர்கள் பதிவு உண்டாக்கிவிடும். அந்த சந்தோசத்தை எங்களுக்கு கொடுப்பதற்காவது அய்யா அவர்கள் ஒரு பதிவை போட வேண்டும்

      திருச்சி தாரு

      நீக்கு
  5. என்னங்க அய்யா இது.
    1987 இல் மஞ்சகடுதாசி கொடுத்த இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மகன் அபிஷேக் (அதுதான் உலக அழகி ஐஸ்வர்யாவின் கணவர்) ஒரு சதுர அடி 1,06,000 ரூபாய் கொடுத்து சுமார் 42 கோடிக்கு வீடு வாங்குகிறார்.
    நீங்கள் என்னடாவென்றால் வீடு வாங்குவது கடினம் என்கிறீர்கள்.
    அவர்கள் சேர்த்த செல்வம் எல்லாம் நாம் பார்க்கும் சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் காசுதானே.
    அந்த 42 கொடியும் நம்மைபோன்ற 100 கோடி பேர்களின் காசுதானே.
    நமக்கு எப்படி காசு சேர்ப்பது என்ட்ரி தெரியவில்லை. அவ்வளவுதான்.

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நேர் வழியில் சம்பாதிப்பவர்களை மனதில் வைத்துத்தான் இந்தப் பதிவை எழுதினேன். சினிமா, லஞ்சம், போதைப் பொருள் வியாபாரம், பங்குச் சந்தை இத்தியாதிகளில் சம்பாதிப்பவர்களைப் பற்றி எனக்கு அறிவு பூஜ்யம்.

      நீக்கு
    2. சென்ற வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அப்போதைய நிதி அமைச்சர் சொன்ன ஒரு உண்மை. வருமான வரி கட்டுபவர்கள் பட்டியல்படி இந்தியாவில் வருடத்திற்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள் 42,800 பேர்தானாம். அபிஷேக் 42 கோடிக்கு வீடு வாங்குகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நாமும் அதே இந்தியாவில்தான் இருக்கிறோம்.

      சேலம் துளசி மைந்தன்

      நீக்கு
  6. அய்யா அவர்களே
    உங்கள் அலசல் சரியானதே
    சமீபத்தில் ஒரு பொருளாதார கட்டுரையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
    அதில் இருக்கும் தகவல்கள் நம்ப முடியாத அளவுக்கு இருந்தன.
    "நகரம் - ஒரு பிளாட்டின் சராசரி விலை - தனி மனித சராசரி வருமானம் - வீடு வாங்க ஒதுக்கும் தொகை - தேவையான கால அளவு" என்ற தலைப்புகளில் பார்த்தோமானால்
    மும்பை - 1.34 கோடி - 1.97 லட்சம் - 78,800 ரூபாய் - 170 வருடங்கள்.
    டெல்லி - 75 லட்சம் - 2.31 லட்சம் - 92,400 ரூபாய் - 81 வருடங்கள்
    பூனா - 58 லட்சம் - 1.83 லட்சம் - 73,200 ரூபாய் - 79 வருடங்கள்
    ஹைதராபாத் - 75 லட்சம் - 1.46 லட்சம் - 58,400 ரூபாய் - 128 வருடங்கள்.
    மலைப்பாகத்தான் இருக்கிறது.
    நம்மை போன்ற நடுத்தர வர்கத்தினர் வீட்டை பற்றிய நினைப்பை மூட்டை கட்டி வைத்து விட வேண்டியதுதானா என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.

    சேலம் காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ உங்கள் அப்பன் பாட்டன் வீடு வாங்கி வைத்திருந்தாலொழிய நீங்களாக வீடு வாங்குவது என்பது குதிரைக் கொம்புதான். மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள்தான் வீடு வாங்குவதைப் பற்றி நினைக்க முடியும்.

      நீக்கு
    2. இதுவெல்லாம் சும்மா படிக்க நன்றாக இருக்கும். மற்றபடி சரியில்லை. stastistics அப்படித்தான் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் உங்கள் தலையை எரியும் அடுப்பிலும் (100° சென்டிகிரேடு) காலை freezer இலும் ( - 20° சென்டிகிரேடு)வைத்திருந்தால் நீங்கள் சரியாகத்தான் இருகிறீர்கள் என்று பொருள்.
      ஏனென்றால் சராசரி வெப்ப நிலை (100 + (-20)) / 2 = 40° சென்டிகிரேடு தானே. அப்படி அடுப்பில் தலையும் பிரீசரில் காலும் இருந்தால் அடுப்பும், பிரீசரும் இருக்கும். நாம் இருப்போமா என்பது சந்தேகமே.
      அதே போலத்தான் இந்த மலைக்க வைக்கும் அலசலும்.
      அலசலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட எண்கள் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த நம்பர்கள் எல்லாம் மேலே சொன்ன 100°, -20° கதைதான்.
      மும்பையில் slum இல் வசிக்கும் ஏழை தமிழனின் வருமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் தனி மனித சராசரி வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த அளவு பணம் கொடுத்து வீடு வாங்க மேல் தட்டு மக்கள் கண்டிப்பாக இருப்பதால்தான் வீடுகளும் கட்டப்பட்டுகொண்டிருக்கின்றன.
      எனவே சேலம் காயத்ரி மணாளன் போன்றவர்கள் மலைத்து போய் விட வேண்டாம். நன்றாக திட்டமிட்டு வங்கி கடன் வழியாக சென்றால் கண்டிப்பாக வீடு வாங்க முடியும். ஆனால் திருச்சி தாருவின் பின்னூட்டத்தில் உள்ள மாதிரி 42 கோடிக்கெல்லாம் வீடு வாங்க முடியாது என்பது உண்மைதான். அனால் 42 லட்சத்திற்கு கண்டிப்பாக வீடு வாங்க முடியும்.

      சேலம் குரு

      நீக்கு
    3. அவ்வளவு பின்னால் செல்ல வேண்டாம். கல்யாணமான புதிதில் (1992 இல்தான் ) நாங்கள் மூன்று நடுத்தர வர்க்க நண்பர்கள் குடும்பத்தோடு (மொத்தம் 9 பேர் குழந்தைகளோடு சேர்ந்து) ஒரு சுமாரான ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டோம். ஆளுக்கு ரெண்டு இட்லி, ஒரு வடை, ஒரு ரோஸ்ட் என்று. குழந்தைகளுக்கு தோசையோடு கப் ஐஸ் கிரீம் வேறு. பில் எவ்வளவு தெரியுமா?
      மூர்ச்சை போட்டு விடாதீர்கள். வெறும் 37 ரூபாய்தான். இன்று திருச்சியில் உள்ள சங்கீதா ஹோட்டலுக்கு (கலைஞர் அறிவாலத்திற்கு எதிரில் உள்ளது) சென்று ஒரு செட் இட்லி சாப்பிட்டு விட்டு (டிப்ஸ் 10 ரூபாய்க்கு குறைந்து வாங்குவதில்லையாம்) வந்த பில் + டிப்ஸ் சேர்ந்து 38 ரூபாய் ஆயிற்று.
      சாப்பிட்ட இட்லி உடனே ஜீரணம் ஆகி விட்டது.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
    4. முடிந்த வரை பெரிய அமௌன்ட் கையில் வரும்போது (அதிர்ஷ்டம் இருந்து இரண்டு விட்ட அத்தை உங்களுக்கு சொத்து எழுதி வைத்தால்) லோனை கட்டி விடுவது உத்தமம்.

      நீக்கு
    5. முன்பெல்லாம் ஏதாவது பிரச்னையை பற்றி பேசும்போது "வாங்க ஒரு காபி குடித்துகொண்டே பேசலாம்"என்போம். ஆனால் இன்றோ ஹோட்டலில் காபியின் விலையை பார்த்தால் காபி குடிப்பதே பிரச்சனை என்று ஆகி விட்டது. பேசாமல் வீட்டுக்கு வந்து மூன்றாவது அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் இரண்டாவது டிகாசனில் போட்ட காபிதண்ணியை குடிக்க வேண்டியதுதான்

      சேலம் காயத்ரி மணாளன்

      நீக்கு
  7. //நம்மை போன்ற நடுத்தர வர்கத்தினர்//

    ????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் நடுத்தர வர்க்கத்தினர் பாடுதான் ஜாலி.
      வீட்டைக்கட்டினவனுக்கு ஒரு வீடுதான். ஒரு changeக்கு கொஞ்சம் மாற்றனும்னு நினைத்தாலும் லட்சக்கணக்கில் செலவு.
      நமக்கோ வாடகை வீடு. நினைத்தால் மாற்றிகொள்ளலாம். அதவும் செலவேயில்லாமல்.
      என்ன சின்ன சின்ன அசௌகர்யங்கள். அவ்வளவுதான்.
      மற்றபடி குறைந்த செலவில் நிறைய சௌகர்யங்கள் வாடகை வீட்டில்தான் என்பது உண்மையே

      சேலம் குரு

      நீக்கு
    2. நம்பிக்கைதான் வாழ்க்கையே
      நம்பிக்கை இழக்க வேண்டாம்
      நல்ல காலம் பிறக்கும் நாமும் வீடு கட்டுவோம் என்று நினையுங்கள் கண்டிப்பாக வீடு கட்டுவீர்கள். கிரக பிரவேசத்திற்கு அய்யாவை அழையுங்கள்.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  8. உண்மையான பதில்தான்! வீடு வாங்குவது என்பது எட்டாக் கனிதான் நடுத்தர வர்கத்தினருக்கு!

    பதிலளிநீக்கு
  9. நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஐடி துறை மக்களில் பலருக்கு நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் இருப்பது சர்வ சாதாரணம்....

    பதிலளிநீக்கு
  10. எப்படியோ பல நடுத்தரக் குடும்பங்கள் வீட்டுக்கனவை இன்றைய கால கட்டத்தில் நனவாக்கிக் கொண்டிருக்கின்றன.இ.எம்.ஐ.என்ற மந்திரத்தின் மூலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான திட்டமிடல் மூலம் வீடு வாங்குவது முடியக் கூடியதே. சிரமங்களை உணர்ந்தால்தான் அதை எப்படி சமாளிப்பது என்ற விழிப்புணர்வு வரும். அந்த நோக்கத்தில்தான் இந்தப் பதிவை எழுதினேன்.

      நீக்கு
  11. அப்படின்னா ஊருலே வீடு கட்டிக்கிட்டு இருக்கிறவன் எல்லாமே பணக்காரன் மட்டும்தானா ?ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பதைப் போல எல்லோராலும் வீடு கட்டிக்க முடியும் :)
    த ம 7

    பதிலளிநீக்கு
  12. இங்கு பிரான்சு நாட்டில் ஒருவர் வீடு வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து
    வங்கியில் வீட்டு லோன் கேட்டோமேயாயின் அவர்கள் பார்ப்பது கடனில் மாத தவணை போக மீதி உனது வருமானத்தில் 33 சத வீதம் இருப்பு தொகை இருக்க வேண்டும் என்பதே ஆகும் . இது நான் அறிந்த செய்தி! நல்ல பதிவு அய்யா!
    தொடர்கிறேன். நன்றி!

    இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு,
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Take Home Pay என்கிற தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு தங்கள் பொருளாதாரத்தை சீர்படுத்தும் மனிதர்கள்தான் தங்கள் வாழ்வை செம்மையாக்க முடியும்.

      நீக்கு