திங்கள், 19 ஜனவரி, 2015

கார் வாங்குகிறீர்களா?

                                        

பொருளாதாரப் பாடத்திலே மனிதனின் தேவைகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.

1. அத்தியாவசியத்தேவைகள். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும் இதில் அடங்கும்.

2. சௌகரியங்கள். ஒரு இரு சக்கர வாகனம், படுக்க ஒரு கட்டில் மெத்தை, மின் விசிறி இப்படியாக வாழ்வதற்கு ஏற்படுத்திக்கொள்ளும் சில சௌகரியங்கள்.

3. ஆடம்பரப்பொருட்கள். அதிக பொருட் செலவில் ஏற்படுத்திக்கொள்ளும் வசதிகள் இதில் அடங்கும். பெரிய குளிரூட்டப்பெற்ற பங்களா, பெரிய கார், அத்தியாவசிய, தானாகச் செய்யக்கூடிய வேலைகளுக்குக் கூட ஆட்கள், இப்படி பல சமாச்சாரங்கள்.

நடைமுறை வாழ்க்கையில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போவதற்கு அனைவருமே முயற்சி செய்கிறோம். சைக்கிள் வைத்திருப்பவர் ஸ்கூட்டர் வாங்க ஆசைப் படுகிறார். ஸ்கூட்டர் வைத்திருப்பவர் கார் வாங்க ஆசைப் படுகிறார். இவ்வாறு ஆசைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நேர்மையான வழியில் பொருள் ஈட்டி இவ்வகையான ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டால் அந்தப் பொருட்களினால் சந்தோஷம் வரும்.

அப்படியில்லாமல், நான் முன்பு ஒரு பதிவில் சொன்ன மாதிரி கஞ்சா விற்று சம்பாதித்திருந்தால் அந்த வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பமே மிகுந்திருக்கும்.

இந்த தேவைகளில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், இவைகளை ஒன்றுக்கொன்று குழப்பிக்கொள்வதுதான். அதாவது எது அத்தியாவசியம், எது ஆடம்பரம், எது சௌகரியம் என்பதில் ஏற்படும் குழப்பங்கள்தான் ஒரு குடும்பத்தில் கருத்து வேறுபாடு வருவதற்குக் காரணமாக அமைகிறது.

கல்லூரியில் படிக்கும் மகன் ஒரு கைத் தொலைபேசி வேண்டும் என்று விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் படிப்பிற்கும் கைத்தொலை பேசிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை.  ஆனாலும் அவன் விரும்புகிறான் என்று தகப்பன் வாங்கிக்கொடுக்கிறான். அவன் ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் ரூபாயில் வாங்கலாம் என்று நினைத்திருப்பான். ஆனால் மகனோ லேட்டஸ்ட் ஆக வந்திருக்கும் ஐபோன் 50000 ரூபாய் விலையில் வேண்டுமென்று கேட்பான்.

வம்பு வந்து விட்டதல்லவா? இதுதான் இன்றைய தலைமுறையினரின் வியாதி. அந்த தகப்பன் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தக் கைபேசியை வாங்கிக் கொடுத்து விட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்பு நடப்பவற்றை நாம் வெகு சுலபமாக யூகித்துக்கொள்ளலாம்.

இன்று ஒரு புருஷனுக்கு வேலை உயர்வு வந்து  ஐந்து இலக்க சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டான் என்றால் உடனே அவன் மனைவிக்கு ஏற்படும் ஆசை ஒரு கார் வாங்கலாமே என்பதுதான். தன் புருஷனுடன் வேலை பார்க்கும் ஒருவன் கார் வாங்கி விட்டான் என்று அவன் பெண்டாட்டி பீத்திக்கொள்கிறாள். நாம் எப்போது கார் வாங்குவது என்று அவள் தினமும் புருஷனை நச்சரிப்பாள். புருஷனும் இந்த நச்சரிப்புத் தாங்காமல் அங்கே இங்கே கடன் வாங்கி ஒரு காரை வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவனுக்கு சனி திசை ஆரம்பமாகிவிட்டது என்று பொருள். தன்னுடைய நிலைக்கு மேல் ஆசைப்படும் எந்தப் பொருளும் ஆடம்பரம்தான். தகுதிக்கு மீறிய ஆடம்பரம் துன்பத்தையே கொண்டுவரும்.

கார் வாங்குவதைப் பற்றி எழுதுமாறு ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார், "வரவு எட்டணா செலவு பத்தணா, மீதி இரண்டணா துந்தனா" என்று ஒரு சினிமாவில் பாடினார்கள். ஆடம்பரச் செலவுகள் சொய்து அந்தக் குடும்பம் எப்படி சிதறுண்டு போனது என்று அந்த சினிமாவில் துல்லியமாகக் காட்டினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் கார் வாங்குவது யாரால் முடியும் என்றால் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவர்களால் மட்டுமே முடியும். காரின் விலை குறைந்த பட்சம் ஆறு லட்சம் ஆகும். இதில் கடன் வாங்கினால் 2 லட்சம் கைப் பணம் 4 லட்சம் கடன் என்று வைத்துக்கொண்டால் மாதம் ஏறக்குறைய ஏழாயிரம் ரூபாய் அந்தக் கடனுக்காக கட்டவேண்டிவரும்.

குடும்பச் செலவு, வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு, பொழுதுபோக்கு செலவுகள், உடை, வேலைக்காரர்கள், குழந்தைகளுக்கான எதிர்காலச் சேமிப்பு, தன்னுடைய பென்ஷனுக்கான சேமிப்பு, வருமான வரி இப்படி கணக்குப் பார்த்தால் ஒரு லட்சம் வருமானம் வாங்குகிறவன் கூட செலவுகளைச் சமாளிக்கத் திணறித்தான் போவான்.

கார் வைத்துக்கொள்ள அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தனியாக அலவன்ஸ் கொடுக்காத பட்சத்தில் கார் பெரிய சுமையாக மாறி விடும்.

ஒரு காரின் நேரடி செலவுகள், மறைமுக செலவுகள் என்னென்ன என்று நான் கணக்குப்போட்டு வைத்துள்ளேன். அதைப் பாருங்கள்.

1. காரின் விலையான 6 லட்சத்திற்கு வட்டி மாதம் ஒன்றுக்கு  ரூ.6000
2. டிப்ரீஷியேஷன்                                                        "              "                ரூ.5000
3. கார் சர்வீஸ், இன்சூரன்ஸ், சில்லறை ரிப்பேர்             "                ரூ.2000
4. பெட்ரோல் 500 கி.மீ. ஓட்டம்                                  "             "                 ரூ.2000
                                                                                                                               --------------
                                                                               மொத்தம்                            ரூ.15000
                                                                                                                               --------------

கார் மாமனார் வீட்டு சீதனமாக இருந்தால் முதல் இரண்டு செலவுகள் இல்லை.

இது தவிர நீங்கள் கார் வைத்துக்கொண்டு இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது எங்காவது சுற்றுலா செல்லவேண்டி வரும். அதற்கான செலவுகளைக் கூட்டிக்கொள்ளவும்.

காரில் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்கப்போனால் வெறும் கையுடனா போகமுடியும். முன்பு பஸ்சில் போகும்போது ஒரு பிஸ்கட் பேக்கட் வாங்கிப்போனால் போதும். ஆனால் காரில் போகும்போது ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்வீட் இப்படி வாங்கிக்கொண்டு போனால்தான் காரில் செல்வதற்கு அடையாளம்.

இப்படியாக கார் வாங்குவது முற்றிலும் ஆடம்பரச் செலவே. அதற்கான வசதி இருந்தால் செய்யலாம்.

26 கருத்துகள்:

  1. // தன்னுடைய நிலைக்கு மேல் ஆசைப்படும் எந்தப் பொருளும் ஆடம்பரம்தான். தகுதிக்கு மீறிய ஆடம்பரம் துன்பத்தையே கொண்டுவரும். //

    சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாகவே சொன்னீர்கள். (குறிப்பு: உங்கள் பதிவை படித்து முடித்தவுடன் கார் வாங்கும் ஆசையே போய்விட்டது.)

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கார் வாங்கும் ஆசையைக் கெடுத்ததிற்கு மன்னிக்கவேண்டும், தமிழ் இளங்கோ. நான் சொல்ல விரும்புவது, தேவையான பொருளாதார வசதி இருந்தால் மட்டுமே ஆடம்பரங்களை விரும்பலாம். தன் வசதிக்குட்பட்டு வாழ்வதே பொருளாதாரச் சிக்கல்களைத் தவிர்க்கும் வழி.

      நீக்கு
  2. ஆசையே இல்லை ஐயா...

    அப்புறம் கார் ஓட்ட கற்றுக் கொண்ட அனுபவம் பற்றி எழுதுவீர்களா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா, பேஷா எழுதீடறேன். வேற என்ன வேலை எனக்கு? நண்பர்கள்னா இப்படியெல்லாம்தான் புது பதிவுகளுக்கு ஐடியா கொடுக்க வேண்டும்.

      நீக்கு
  3. ஐயா

    முக்கியமான ஒன்றை மறந்துவிட்டீர்கள். பார்கிங் இடம் கண்டுபிடிப்பது, பார்க்கிங் கட்டணம். பெட்ரோல் செலவைக்காட்டிலும் பார்க்கிங் கட்டணம் அதிகம் அதுவும் திரைஅரங்குகளில்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கிங்க் செலாவாவது கொடுத்து விடலாம். இப்பெல்லாம் பார்க்கிங்க் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாய் விட்டதே?

      நீக்கு
  4. இரண்டாவது பொண்டாட்டி கணினிக்கு மானிட்டர் மாற்றிய செலவும் கரண்ட் கட்டணமும்.
    மூனாவது பொண்டாட்டி லூமியாக்கு மாசாமாசம் ரீச்சார்ஜ் செலவு மாத்திரம்.
    நாலாவது பொண்டாட்டி கிண்டிலுக்கு அப்பப்போ புத்தகம் வாங்கிற செலவு.
    ஐந்தாவது பொண்டாட்டி ஆல்ட்டோவிர்க்கு கடன் அடைப்பு மற்றும் பெட்ரோல் செலவு.

    இப்போ தெரியுது ஐந்து பொண்டாட்டிக்காரன் கதை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. கொஞ்சம் பொறுங்க சிவகுமார். கொஞ்சம் டேட்டா கலெக்ட் பண்ணீட்டு ஒரு பதிவு போடறேன்.

    பதிலளிநீக்கு
  6. சார், நீங்கள் கார் வாங்கி மேய்த்தீர்களா? அதை சைலண்ட் மோடில் விட்டீர்களே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கதை ஒரு தனிக் கதை சார். நான் ரிடைர்டு ஆனவன். இளம் வயதுக்காரர்களுக்கு உண்டான பல செலவுகள் எனக்கில்லை. என் குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள். தேவையான சேமிப்பு வைத்துள்ளேன். பென்சன் போதுமான அளவில் வருகிறது. ஆகவே நான் கார் வாங்கியுள்ளேன். வெறும் ஆடம்பரத்திற்காகத்தான் என்றும் வைத்துக்கொள்ளலாம் அல்லது சௌகரியத்திற்காகவும் என்று வைத்துக்கொள்ளலாம்.

      தவிர நான் சொந்த ஊரில் வசிக்கிறேன். ஒரு கார் கூட வைத்துக் கொள்ளவில்லையானால் என் சொந்தக்காரர்கள் என்னை ஒரு மனிதனாக மதிக்க மாட்டார்கள். இந்தக் காரணங்களினால் நான் 15 வருடங்களாக கார் வைத்திருக்கிறேன். இப்போது வைத்திருக்கும் கார் (Maruti Alto K10 Autogear) வாங்கி ஒரு மாதம் ஆகிறது. நானே ஓட்டிக்கொள்வதால் டிரைவர் செலவு இல்லை.

      நீக்கு
    2. எனக்கு தெரிந்து பல பேர் கார் வாங்கி விடுவார்கள் ஆனால் அதை முறையாக பராமரிப்பதில்லை. குறிப்பாக எத்தனை கி.மீ. ஒரு முறை டயர் மாற்றவேண்டும் என்பதே தெரியாது. இதை பற்றி ஒரு பதிவு போடுங்களேன். (நேயர் விருப்பம் மாதிரி...ஹிஹி)

      நீக்கு
    3. டயர்கள் சாதாரணமாக 30000 கி.மீ. ஓடும். நன்றாகப் பராமரித்தால், அதாவது நல்ல ரோடுகளில் மட்டும் ஓடியிருந்தால் 35000 கி.மீ. வரை வரும்.

      நீக்கு
  7. மிகவும் சிறப்பான அறிவுரை! கார் வைத்திருப்பவர்கள் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்று இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே!..

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான அறிவுரை ஐயா..
    கார் வாங்கும் எண்ணம் எழவேயில்லை...

    பதிலளிநீக்கு
  9. இப்படியாக கார் வாங்குவது முற்றிலும் ஆடம்பரச் செலவே. அதற்கான வசதி இருந்தால் செய்யலாம்.

    கடைசியாக கொடுத்த இந்த வரிகள் அருமை ஐயா
    தகுதிக்கு மீறினால் எதுவுமே ஆடம்பரம்தான் ஐயா அருமை
    எனது புதிய பதிவு என் நூல் அகம் 3 காண வருக.....
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  10. ஐயா தங்களது தளத்தில் என்னை இணைக்க முடியவில்லையே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி நான் ஒன்றும் தடுப்பான் ஏற்படுத்தவில்லையே, கில்லர்ஜி. எதற்கும் எனக்குத் தெரிந்த வித்தையை உபயோகித்து என்னவென்று பார்க்கிறேன். உங்கள் ஆதாரவிற்கு நன்றி.

      நீக்கு
  11. இத.,இத.,இதத்தான். அய்யா, தங்களிடமிருந்து எல்லோரும்
    எதிபார்க்கிறோம். அசர அடிப்பது வேறு.
    தாங்கள் அடிப்பதற்கு பெயர் வேறு.

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. இப்படி ஒரேயடியாக சாமியார் ஆகவேண்டாம். கார் வாங்க வசதி இருந்தால் கார் ஒரு வசதிதான்.

      நீக்கு
  13. ஐயா நீங்கள் போட்டுள்ள செலவுக்கணக்கில் தேய்மானத்திற்கான (Depreciation) செலவு ரூ.5000 எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில் அது செலவு அல்ல. காரணம் நம் கையை விட்டு எந்த பணமும் போவதில்லை. அது ஒரு Non cash expense. தேய்மானம் என்பது நாம் உபயோகிக்கும் காரின் ஆயுள் முடியும்போது அதை மாற்ற ஆகும் செலவுக்குக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பதாகும். அது கடைசியில் காரை நாம் மாற்றும்போது உபயோகப்படும். இத்தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்படி விலக்கும் உண்டு. மேலும் அனுமதிக்கப்பட்டுள்ள தற்போதைய தேய்மான விகிதம் 15 விழுக்காடு.

    எது எப்படியோ. பதிவின் கடைசியில் நீங்கள் சொல்லியிருப்பது நடுத்தரக் குடும்பத்திருக்கு முற்றிலும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேய்மானத்தைப் பொருத்த வரையில் நீங்கள் கூறியது மிகவும் சரியே. சில காலத்திற்குப் பிறகு காரை மாற்றும் போது ஏற்படும் செலவுதான் அது. தாயறியாத சூல் உண்டா என்று சொல்வார்கள். அது போல் பேங்கர் அறியாத டிப்ரீஷியேஷனா?

      நீக்கு
  14. தரமான கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது , போதுமான நிதி சம்பாதித்த பிறகு தான் சாத்தியம். எதையும் கடன் வாங்கி செய்வதில் உடன்பாடில்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தரமான கார்" -
      1.நம்மால் எந்தக் காரை வாங்க முடியுமோ அதுதான் தரமான கார்.
      2.கடன் வாங்காமல் கார் வாங்குவது உத்தமம்.
      3. முடிந்தவரை சீக்கிரம் வாங்குவது நல்லது. தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும் நாம் ஏதோ ஒன்றை இழக்கிறோம்.

      நீக்கு