வெள்ளி, 10 ஏப்ரல், 2015

அப்பப்பா, என்ன வெய்யில்?

                                  Image result for hot sun

நானும் ஒரு காலத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். சந்தேகம் வேண்டாம். என் S.S.L.C. புத்தகத்தை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். சந்தேகப்படுபவர்கள் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம்.

அப்போதெல்லாம் பரீட்சைகள் ஏப்ரல் மாதம் பாதிக்குள் முடிந்து விடும். மீதி பாதி ஏப்ரலும் மே முழுவதும் கோடை விடுமுறை. ஒரு சில தினங்கள் பாட்டி ஊருக்குப் போய் வந்த பின் சொந்த ஊரில்தான் வாசம். பாட்டியின் ஊர் ஒன்றும் அயல்நாட்டில் இல்லை. என் சொந்த வீட்டிலிருந்து மூன்று மைல் தூரத்தில்தான் இருந்தது. என் உறவினர்கள் அனைவரும் ஒரு ஐந்து மைல் சுற்றளவிற்குள்தான் இருந்தார்கள்.

வீட்டில் இருக்கும்போது உடன் படிக்கும் தோழர்களுடன் நாள் முழுவதும் ஊர் சுற்றுவோம். பகல் 12 மணிக்கு வீதிகளில் சுற்றிக்கொண்டு இருப்போம். அப்போது பெரிதாக வெய்யில் அடித்ததாக நினைவு இல்லை. அல்லது அந்த வயதில் அந்த வெய்யில் எங்களுக்கு உறைக்கவில்லையோ என்று தோன்றுகிறது.

அப்போதெல்லாம் கோவையில் எப்போதும் மேகமூட்டம் இருந்து கொண்டே இருக்கும். காற்றும் சிலுசிலுவென்று அடித்துக் கொண்டே இருக்கும். இதனால் நாங்கள் வெய்யிலை உணர்ந்ததே இல்லை. ஏழைகளின் ஊட்டி என்று வெள்ளைக்காரன் கோவைக்குப் பெயர் வைத்திருந்தான்.

இப்போது கோவையில் ஏப்ரல் மாதத்திலேயே வெய்யில் மிகக் கடுமையாக இருக்கிறது. 10 மணிக்கு மேல் வெளியில் தலை காட்ட முடிவதில்லை. அப்படிப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குடை பிடித்துக் கொண்டு செல்லவேண்டி இருக்கிறது.  இது ஏன் என்று யோசித்தேன். வெய்யில் அதுவாகவே அதிகம் ஆகி விட்டதா? இல்லை எனக்கு வயதாகி விட்டதால் வெய்யிலைப் பொறுத்துக்கொள்ளும் சக்தி குறைந்து விட்டதா? அல்லது இரண்டும் சேர்ந்து இம்மாதிரி உபத்திரவம் கொடுக்கிறதா? புரியாமல் மயங்குகிறேன்.

ஆனாலும் வீதிகளில் ஜனங்கள் நடமாட்டம் குறைந்தபாடில்லை. சாலைகளில் தார் உருக ஆரம்பித்து விட்டது. இந்த சாலைகளிலும் பலர் காலில் செருப்பில்லாமல் நடந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் எப்படி இவ்வாறு நடக்க முடிகிறது என்று யோசித்தால் சரியான விடை கிடைக்கவில்லை.

வாழ்க்கைத் தரம் உயர உயர நம் மன நிலையும் உடல் நிலையும் வெகுவாக மாறி விடுகின்றன என்று கருதுகின்றேன். இளம் வயதில் சர்வ சாதாரணமாக செய்த காரியங்களை இன்று செய்ய முடிவதில்லை. ஐந்து கிலோமீட்டர் சாதாரணமாக நடந்து போய் வந்ததை நினைத்தால் கற்பனை போல் தோன்றுகிறது.

வசதிகள் வளர வளர மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை நினைக்கும்போது அதிசயமாகத் தோன்றுகிறது. அந்தக் காலத்தில் பணக்காரர்களின் சில நடவடிக்கைகளைக் கேலி செய்த நான் இப்போது அதே நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. ஆனாலும் சுகத்திற்குப் பழகி விட்ட உடம்பு கஷ்டங்களை ஏற்க மறுக்கிறது. இதுதான் உலக நியதி என்று நினைக்கிறேன்.

34 கருத்துகள்:

  1. இன்னும் அடுத்த மாதம் எப்படி இருக்குமோ...? எதையும் "அனுபவிப்போம்"...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :"அனுபவிப்போம்" நல்ல வார்த்தைதான். ஆனால் "சந்தோஷமாக அனுபவிப்போம்" என்றால் மனது கொஞ்சம் சாந்தமடையும். Accepting the inevitable என்னும் பாலிசி, நாம் படும் கஷ்டங்களின் வீர்யத்தை குறைத்து விடும்.

      சேலம் குரு

      நீக்கு
  2. // ஐந்து கிலோமீட்டர் சாதாரணமாக நடந்து போய் வந்ததை நினைத்தால் கற்பனை போல் தோன்றுகிறது.//
    // சுகத்திற்குப் பழகி விட்ட உடம்பு கஷ்டங்களை ஏற்க மறுக்கிறது. இதுதான் உலக நியதி என்று நினைக்கிறேன்.//

    உண்மைதான் ஐயா. 9 வது படிக்கும்போது தினம் போக வார 16 கிலோமீட்டர் நடந்து சென்று படித்த நான் இரண்டு கிலோ மீட்டர் தூரம் செல்ல சிற்றூந்து அல்லது தானியை நாடுகிறேன், வயது வசதியும் தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா

    //என் S.S.L.C. புத்தகத்தை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.//

    ஆமாம். பாஸ்போர்ட் வாங்க, பாண் கார்ட் வாங்க,ரேஷன் கார்ட் வாங்க, வாக்காளர் பட்டியலில்
    பெயர் சேர்க்க, ஆதார் கார்ட் வாங்க, டிரைவிங் லைசன்ஸ் வாங்க, என்று எல்லாவற்றிற்கும் தேவைப்படுகிறதே.

    இனி கடைசி யாத்திரையில் இறப்பு சான்று பதிய பிறப்பு சான்றாக S S L C Xerox காப்பி தர நேரிடும்.

    ஒரு S S L C எதற்க்கெல்லாம் தேவைப்படுகிறது பார்த்தீர்களா.


    --
    Jayakumar



    P.S.

    உங்களுடைய S S L C யை ஒரு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம். உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பாஸ்போர்ட் வாங்க, பாண் கார்ட் வாங்க,ரேஷன் கார்ட் வாங்க, வாக்காளர் பட்டியலில்
      பெயர் சேர்க்க, ஆதார் கார்ட் வாங்க, டிரைவிங் லைசன்ஸ் வாங்க, என்று எல்லாவற்றிற்கும் தேவைப்படுகிறதே.//

      படிக்காதவர்கள் என்ன செய்வார்கள். இவ்வளவும் வாங்க லோ லோ என்று அலைய வேண்டியதிருக்குமே. அதனால்தான் இடைத்தரகர்கள் அதிகமாகி விட்டார்களோ?

      காயத்ரி மணாளன்

      நீக்கு
    2. // உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா?//

      உண்மை என்னவென்று தெரிந்த பிறகு, என்னதான் இருந்தாலும் இவ்வளவு open ஆக சொல்லக்கூடாதில்லையா?

      துளசி மைந்தன்

      நீக்கு
    3. // உங்களுடைய தண்டவாளம் சே வண்டவாளம் எங்களுக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா?//

      இவ்வளவு அழகாக பதிவுகள் போடுபவர், வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியராக குப்பை கொட்டினவர், தனது அறையை இவ்வளவு அழகாக (மனைவியின் தொந்திரவு தாங்காமல்தான் என்றாலும் கூட) வைத்திருப்பவர், என்பதை நெருங்கும் வயதிலும் தனது அந்தப்புரத்துக்கு புதுப்புது ராணிகளை சேர்த்துக்கொண்டிருப்பவர், தன்னை யாராவது சீண்டினால் ஆக்ரோஷமாக பதிலளிப்பவர், எல்லாவற்றுக்கும் மேலாக "வண்டவாளம்" என்று கிண்டல் செய்யும் பின்னூட்டங்களையும் போடுபவர் - இவ்வளவும் செய்பவர் கண்டிப்பாக SSLC இல் நல்ல மதிப்பெண்தான் பெற்றிருப்பார் என்பது எனது யூகம்.

      சேலம் குரு

      நீக்கு
    4. இந்தப் பின்னூட்டங்களைப் படிக்கும்போது எனக்கே, நான் SSLC படித்தேனா என்ற சந்தேகம் வந்து விட்டது. ஒரு நாள் டைம் கொடுங்க, வீட்டையே பொரட்டி அந்த SSLC பொஸ்தகத்தைக் கண்டுபிடிச்சு போட்டோ எடுத்து ஒரு பதிவு போடாட்டி என் பேரை மாத்தி வச்சுக்கறேன்.

      நீக்கு
    5. அப்புறம் இன்னொரு விஷயம். உதவிப் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தா, அதே பதவியிலேயா இருப்பாங்க? ஏனுங்க புரமோஷன் எல்லாம் வராதாங்க?

      நீக்கு
    6. மன்னிச்சுக்கோங்க அய்யா.
      "உதவி பேராசிரியாக சேர்ந்து பதவி ஒய்வு பெறும்வரை மாணவர்களை தன teaching மூலம் ஒரு வழி பண்ணியவர், நல்ல நல்ல மாணாக்கர்களை உருவாக்கியவர்" என்று சொன்னால் சரியாக இருந்திருக்குமோ?

      சேலம் குரு

      நீக்கு
    7. அப்பாடா நீண்ட நாள் கனவு நிறைவேறியது.
      பதிவுகள் மூலம் எங்களை, எங்கள் மனத்தை கவர்ந்தவரை எப்படியாவது குழப்ப வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
      இந்த SSLC விவகாரத்தில் நாங்கள் பின்னூட்டங்கள் மூலம் குழப்பிவிட்டோம். அந்த குழப்பத்தினால் ஒரு பதிவும் கிடைக்கப்போகிறது. ஆனால் பதிவின் பொது சொல்லிவிடுங்கள். "அப்போதெல்லாம் பர்ஸ்ட் கிளாஸ் வாங்குவதே குதிரைகொம்பு. இன்று மாதிரி இருநூறுக்கு இருநூறு என்பதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது" என்ற முன்னுரையுடன் ஆரம்பியுங்கள். இல்லையென்றால் அந்த காலத்து மதிப்பெண்களையும் இந்த காலத்து மதிப்பெண்களையும் compare செய்து பின்னூட்டங்கள் வர ஆரம்பித்துவிடும்.

      காயத்ரி மணாளன்

      நீக்கு
  4. //சுகத்திற்குப் பழகி விட்ட உடம்பு கஷ்டங்களை ஏற்க மறுக்கிறது.//

    முற்ற முழுக்க உண்மைதான் அய்யா.
    முன்பு நமக்காக வாழ்ந்தோம்.
    இன்று aping அதிகமாகி விட்டது.
    பக்கத்து வீட்டுக்காரன் செய்தால் , வாங்கினால் நாமும் செய்ய வேண்டும் வாங்க வேண்டும் என்ற போலி கௌரவங்களில் வாழ்வதால் தேவையில்லாத சுகங்களை பெருக்கி கொண்டு அதன் பிடியில் சிக்கிக்கொண்டு திண்டாடுகிறோம். நமது வேலையை சுலபமாக்கிக்கொள்ள இயந்திரங்களை உபயோகித்தது போக ஐன்று அதே இயந்திரங்களின் பிடியில் நாம் சிக்கிக்கொண்டு உடலை வருத்திகொள்கிறோம்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  5. இன்று CBSE பள்ளிகளில் ஏப்ரலிலும் பள்ளி உண்டு. வடஇந்தியாவில் ஏப்ரலில்தான் வெயில் லேசாக தலை காட்ட ஆரம்பிக்கும். எனவே ஏப்ரல் பள்ளி வைப்பது சரி. ஆனால் நமது தமிழ் நாட்டில் இப்போதே வெயில் நம்மை கொன்று விடுகிறது. மார்ச்சில் பரீட்சை முடிந்தாலும் ஒரு 4-5 நாட்கள் விடுமுறை விட்டு விட்டு பின்னர் ஏப்ரல் முழுக்க பள்ளி வைத்து குழந்தைகளை வறுத்து எடுத்து விடுகிறார்கள். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு
    cbse பள்ளிகளுக்கு ஏப்ரல், மே இரண்டு மாதங்களும் விடுமுறைதான். இப்போதோ இந்த கல்விமுறையாளர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை ஏப்ரல் முழுக்க பள்ளி வைத்து விடுகிறார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக ஸ்டேட் போர்டு பள்ளிகளும் ( CBSE + state board ஒன்றாக உள்ள பள்ளிகள்) ஏப்ரல் முழுக்க பள்ளி வைத்து வைத்து விடுகின்றன. நாம் அந்த காலத்தில் என்ஜாய் செய்தது போல இப்போதைய குழந்தைகள் என்ஜாய் செய்ய முடிவதில்லை. காலத்தின் கோலம்தான்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  6. //அப்போது பெரிதாக வெய்யில் அடித்ததாக நினைவு இல்லை. அல்லது அந்த வயதில் அந்த வெய்யில் எங்களுக்கு உறைக்கவில்லையோ என்று தோன்றுகிறது.//

    அதுதான் உண்மை. அன்று நமது முக்கிய குறிக்கோள் நண்பர்களோடு வெளியில் சுற்றுவதுதான். முக்கிய காரணம் அன்று TV., செல் போன், வீடியோ கேம்ஸ், VCD போன்ற பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லை. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு ரேடியோ பெட்டி இருக்கும். அவ்வளவுதான். எனவே நேரத்தை போக்க வெளியே சுற்றுவதுதான் முக்கிய வேலையே. நாம் நமக்கு முக்கியமான காரியத்தில் ஈடுபட்டிருக்கும்போது பசியே எடுக்காது எனும்போது வெயிலாவது ஒன்றாவது. ஆனால் வேர்த்து விறுவிறுத்து உடம்பு நன்றாக இருந்தது. (உடல் சற்றே கறுத்துப்போனாலும்)

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  7. // அந்த வயதில் அந்த வெய்யில் எங்களுக்கு உறைக்கவில்லையோ என்று தோன்றுகிறது.//

    பின்னே சும்மாவா சொன்னார்கள் "மெய் வருத்தம் பாரார் கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் கருமமே கண்ணாயினார்" என்று. நமது வேலை விளையாடுவதுதான் ஊர் சுற்றுவதுதான் என்று நினைத்துக்கொண்டிரும்போது வெயிலாவது மழையாவது.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  8. // அந்த வயதில் அந்த வெய்யில் எங்களுக்கு உறைக்கவில்லையோ என்று தோன்றுகிறது.//

    " மாலை முழுவதும் விளையாட்டு" என்று பாரதியார் சொன்னதை "விடுமுறையானால் நாள் முழுவதும் விளையாட்டு" என்று மாற்றிப்பாடிகொண்டே வெயிலில் விளையடிக்களித்தவர்களல்லவா நமது தலைமுறையினர்.
    இந்த கால குழந்தைகள் ஆனாலும் பாவம், கையில் செல் போனை கொடுத்துவிட்டால் போதும் நேரம் போவதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் நம் விளையாடியது உடம்புக்கு நல்லது வேர்வை வடிய விளையாடும்போது உடல் நன்றாக இருந்தது. ஆனால் இன்று உட்கார்ந்த இடத்தில் இருந்து கேம்ஸ் விளையாடுவது couch potatos ஆகா நமது குழந்தைகளை மாற்றி விட்டது.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  9. //அல்லது இரண்டும் சேர்ந்து இம்மாதிரி உபத்திரவம் கொடுக்கிறதா?//

    உண்மைதான். இயந்திர மாயம் அதிகமாக அதிகமாக வெப்பம் அதிகமாகி விட்டது. காடுகளின் பரப்பு குறைவதால் மழையின் அளவும் குறைகிறது. நாற்பது வயதுக்கு மேல் நமது உடம்பில் செல்களின் வளர்சிதை மாற்றத்தில் பெரிய மாற்றம் நிகழ்கிறது. எனவே நமது எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதன் மொத்த வெளிப்பாடு இந்த மாதிரி உபத்திரவங்கள்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  10. //சாலைகளிலும் பலர் காலில் செருப்பில்லாமல் நடந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் எப்படி இவ்வாறு நடக்க முடிகிறது //

    அவர்கள் மனமெல்லாம் இன்றைய பிழைப்பை பார்ப்பதெப்படி என்ற எண்ணம்தான். அதன் தாக்கத்தில் இந்த வெயிலை பொறுத்து கொள்கிறார்கள். வேறு வழியில்லையே. தான் மட்டுமின்றி தன்னை நம்பியுள்ள குடும்பத்தின் வயிறும் கவா கவா என்று கூவாமல் இருக்க வேண்டுமென்றால் தானாக மனசு சமாதானமாகி விடும்.
    இதுதான் வாழ்க்கையின் நிதர்சனமான உண்மை

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  11. // இளம் வயதில் சர்வ சாதாரணமாக செய்த காரியங்களை இன்று செய்ய முடிவதில்லை. ஐந்து கிலோமீட்டர் சாதாரணமாக நடந்து போய் வந்ததை நினைத்தால் கற்பனை போல் தோன்றுகிறது.//

    உண்மைதான். அன்று 2 கிலோமீட்டர் தூரம் இருந்த பள்ளிக்கு நான்கு முறை (காலை, மாலை ஒரு முறை, மதியம் சாப்பாட்டுக்காக இரண்டு முறை) நடந்து சென்று வந்தோம். இன்றோ பக்கத்தில் இருக்கும் (அரை கிலோமீட்டர் தூரம் கூட இல்லை) பள்ளிக்கு ஆட்டோவில்தானே அனுப்புகிறோம். பக்கத்தில் இருக்கும் கடைக்கு செல்லக்கூட வண்டி வேண்டியிருக்கிறதே. சொகுசுக்கு உடல் பழக்கமாகி விட்டால் பின்னர் அதை வழிக்கு கொண்டு வருவது கஷ்டம்தான்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  12. // இளம் வயதில் சர்வ சாதாரணமாக செய்த காரியங்களை இன்று செய்ய முடிவதில்லை. ஐந்து கிலோமீட்டர் சாதாரணமாக நடந்து போய் வந்ததை நினைத்தால் கற்பனை போல் தோன்றுகிறது.//

    உண்மையாக சொல்லுங்கள். அன்று சாவகாசமாக காலையில் அமர்ந்து 5-6 இட்லிகள் சாப்பிட்டோம். இன்றோ குழந்தைகளை 2 இட்லி சாப்பிட வைப்பதற்குள் நமது உயிர் போய்விடுகிறது. இதில் fast food culture வேறு நன்கு வேரூன்றி விட்டது. இதில் ஐந்து கிலோமீட்டர் நடப்பதெங்கே? எல்லாம் கனவில் கூட நடக்காது.


    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படி இட்லியைக் குறைச்சுப் போட்டீங்களே? நான் எட்டு இட்லி சாப்பிடுவேனாக்கும், தெரியுமா?

      நீக்கு
    2. இட்லி என்றாலும் 8
      தமிழ் மன ரேங்கும் 8
      கலக்குங்க அய்யா

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  13. //அந்தக் காலத்தில் பணக்காரர்களின் சில நடவடிக்கைகளைக் கேலி செய்த நான் இப்போது அதே நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கிறேன் என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது.//.

    அன்று பணக்காரன் செய்தது இன்று அனைவரும் செய்வதால்தான் (வாகனங்களில் மட்டுமே செல்வது போன்றவை) அன்று பணக்கார வியாதி என்று சொல்லப்பட்ட சர்க்கரை, பிரசர் எல்லாம் அனைவருக்கும் பொதுவான வியாதி ஆகி விட்டது. நமக்கு நாமே ஒரு முகமூடி போட்டுக்கொண்டு சமுதாயத்தை satisfy செய்ய இந்த மாதிரி போலி வேடங்களில் வாழ ஆரம்பித்து விட்டதுதான் இவற்றுக்கு காரணம்.

    துளசி மைந்தன்

    பதிலளிநீக்கு
  14. //ஒரு சில தினங்கள் பாட்டி ஊருக்குப் போய் வந்த பின் சொந்த ஊரில்தான் வாசம். //

    இன்று பாட்டி ஊர் எங்கே போவது? விடுமுறை விட்ட உடனே ஊட்டி, கொடைகானல். மூனாறு என்றுதானே நச்சு பண்ணுகின்றன.
    காசுக்கு காசும் செலவு. உறவினர்களையும் மறந்து விடுகிறோம். இதெல்லாம் கலாச்சார கேடுகள்தான்.

    காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  15. 1980களில் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன். அண்மையில் இரண்டாண்டுகளுக்கு முன் கோவை வந்தேன். பருவ நிலை தாங்கள் சொல்வதுபோலத்தான் இருக்கிறது. முன்பு இருந்த நிலையில் மாற்றத்தை உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  16. இந்தமாதிரி எழுதுவதற்குப் பெயர் உரத்த சிந்தனை அத்தனையும் உண்மை.

    பதிலளிநீக்கு
  17. ////////ஆனாலும் சுகத்திற்குப் பழகி விட்ட உடம்பு கஷ்டங்களை ஏற்க மறுக்கிறது.///
    உண்மை! உண்மை! காலம் மாறுது, காலத்துடன் கஷ்டங்களை ஏற்க நம் மனது மறுக்கிறது. நல்ல தத்துவம்.

    இப்படிக்கு அன்புள்ள
    வா.பே. வருண்

    பதிலளிநீக்கு
  18. காடுகள் அழிவதால் மழை வளம் குறைவதால் வெயிலின் அளவும் கூடி விட்டது தங்களின் வயதும் கூடி விட்டது உண்மைதான் ஐயா.
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  19. அப்பப்பா, என்ன வெயில்?

    இங்கு திருச்சியிலும் வெயில் கொளுத்தித்தான் வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நம் வயது ஓராண்டு அதிகரிப்பதால், நம்மால் வெயிலின் வெப்பத்தின் அளவினை, சென்ற ஆண்டுவரை தாங்கிய அளவுக்கு, இப்போது தாங்க முடியாமல் உள்ளது என்பதே இதில் உண்மையாக இருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  20. கோவையில் மட்டுமல்ல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது வெயில்! சுகத்திற்கு பழகிவிட்டால் அப்புறம் கஷ்டம் என்பது உண்மைதான்!

    பதிலளிநீக்கு
  21. உண்மைதான். சுகத்திற்குப் பழகி விட்டோம். மார்ச் மத்தியிலேயே ஏஸி போட்டுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  22. சரிதான் ஐயா! இன்றைய வாழ்க்கை முரையும் மாறிவிட்டது. மனித மனமும் மாறிவிட்டது. சுயநலமும் அதிகமாகிவிட்டது. அதனால் இயற்கைச் சீரழிவு. பண வரத்தும் அதிகமாகி உள்ளதோ? மனித மனம், உடல் சில சுகங்களுக்குப் பழகிவிட்டதால் இருக்கலாம். என்ன சொன்னாலும் மனிதன் சில வற்றிற்கு அடிமையாவதென்னவோ உண்மை.

    பதிலளிநீக்கு
  23. இப்போதே இப்படி சொல்கிறீர்கள் ....அடுத்து மே மாதம் என்ன செய்வது ?!.....கத்தரி வெயில் நம்மை இன்னும் வாட்டபோகிறது !..... ஏசி என்று ஒன்று இல்லாவிடில் நம் நிலைமை ?! - chudachuda.com

    பதிலளிநீக்கு
  24. கோவை முன் போல இல்லை என்பது வருத்தம் தரும் விஷயம். முதன் முதலில் 1990-ஆம் ஆண்டு கோவைக்குச் சென்றேன். அப்போதைய கோவைக்கும் இப்போதைய கோவைக்கும் எத்தனை வித்தியாசம். கோடை அதிகரித்து தான் விட்டது.

    பதிலளிநீக்கு