புதன், 12 நவம்பர், 2014

பதிவுலகில் ஏற்படும் அவலங்கள்.

பதிவுலகில் ஏற்படும் அவலங்கள்.
இன்று ஒரு பதிவரின் புலம்பல் பதிவை வாசித்தேன். அவரின் புலம்பல் என்னவென்றால் அவருடைய ஒரு பதிவை அப்படியே காப்பி எடுத்து இன்னொரு பதிவர் தன் தளத்தில் போட்டிருக்கிறார் என்பதே.
அந்த இரு பதிவுகளையும் இங்கே கொடுத்திருக்கிறேன். அவைகாப்பி ரைட்பெற்றவையல்ல. ஆகவே அவைகளை இங்கு பயன் படுத்தியிருக்கிறேன். பதிவர்கள் பெயர் இங்கு தேவையில்லை என்பதால் அவைகளை விட்டு விட்டேன்.
இப்படி ஒருவர் பதிவை அடுத்தவர் காப்பியடிக்கலாமா, கூடாதா என்பதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. பதிவர்கள் தாங்களே ஒரு கருத்துக்கு வரலாம்.


Nov.12, 2011

கடவுளோடு ஒரு உரையாடல்....

                               கடவுளோடு ஒரு உரையாடல்..
                              --------------------------------------------
(
கனவொன்று கண்டேன்.அதில் கடவுளைக் கண்டேன். 
 
அவருடன் உரையாடினேன். விழித்துப் பார்த்தேன். கண்டது 
 
அனைத்தும் தெளிந்தும் தெளியாமலும் உள்ளத்தில் ஓட, 
 
காகிதத்தில் எழுதி வைத்தேன்.உங்களிடம் பகிர்கிறேன். ) 


கடவுள்:-என்னைக் கூப்பிட்டாயா.?

நான் :-    கூப்பிட்டேனா.? இல்லையே...யார் நீங்கள் .?

கடவுள்:-நான் தான் கடவுள். உன் வேண்டுதல்கள் எனக்குக்
                  கேட்டது.உன்னுடன் கொஞ்சம் உரையாடலாமே
                  என்று வந்தேன்.

நான்:-    நான் அவ்வப்போது வேண்டுவது உண்டு. வேண்டும்
                போது மனம் லேசானதுபோல் தோன்றும். இப்போது
                 நான் மும்முரமாய் ( BUSY )இருக்கிறேன்


கடவுள்:-நீ எதில் மும்முரமாய் இருக்கிறாய்.? எறும்புகளும்தான்
                  வேலையில் மும்முரமாய் இருக்கின்றன..

நான்:-    தெரியவில்லை. ஆனால் எனக்கு நேரம் கிடைப்பது
                 இல்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே ஓட்டமாய்
                 இருக்கிறது

கடவுள்:-உண்மைதான். செயல்பாடுகள் (ACTIVITIES )உன்னை
                 மும்முரமாக்கும். பயன்பாடுகள் (PRODUCTIVITY )பலனை
                 தரும்.செயல்பாடுகள் நேரத்தைக் குடிக்கும். பயன்பாடு
                 அந்தத் தளையிலிருந்து விடுவிக்கும்.

நான்:-    புரிகிறார்போல் இருக்கிறது. இருந்தாலும் பூராவும்
                 விளங்க வில்லை. எப்படியானாலும் நீங்கள் பேசவருவீர்.
                கள் என்று நான் எண்ணவில்லை.

கடவுள்:-உன் நேரத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தீர்வு
                 காணவும்,சில தெளிவுகளைச் சொல்லவும் வந்துள்ளேன்

நான்:-    வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது.?

கடவுள்:-முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
                  வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
                  சிக்கலாக்கும்.

நான்:-    ஏன் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இல்லை.?

கடவுள்:-உன்னுடைய இன்று பற்றி, நேற்றின் நாளையாய் இருந்த
                  போதேஆராயத் தொடங்கி விட்டாய்.ஆராய்ந்து கவலைப்
                  படுவதே உன் வாடிக்கையாகிவிட்டது அதுவே நீ மகிழ்ச்சி
                  யாக இல்லாததன் காரணம்.

நான்:-     இவ்வளவு நிச்சயமில்லாத்தன்மை இருக்கும்போது
                  எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்.?

கடவுள்:-நிச்சயமின்மை தவிர்க்க இயலாதது. கவலை தேவை
                  இல்லாதது; தேடிக்கொள்வது.

நான்:-     நிச்சயமின்மை வலி தருகிறதே.

கடவுள்:-வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக
                  எண்ணுவது நாமே தேடுவது. ( PAIN IS INEVITABLE. BUT
                  SUFFERING IS OPTIONAL )

நான்:--  வேதனையால் வாடுவது நாம் தேடுவதென்றால் ஏன்
                 எப்போதும் நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.?

கடவுள்:-வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது,மின்னாது.
                  தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
                  நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
                  வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்
                 அவர்களை சிறப்பிக்கும். கசப்பிக்காது.

நான்:-    இந்த வெதனைகளும் சோதனைகளும் உதவும் என்று
                 சொல்கிறீர்களா.?

கடவுள்:-அனுபவம் ஒரு ஆசான். அவன் முதலில் தேர்வு வைத்து
                  பின் அதன் மூலம் பாடம் கற்பிக்கிறான்.

நான்:-    இருந்தாலும் நாம் ஏன் இந்த சோதனைகளுக்கு உட்பட
                 வேண்டும். ?இவற்றிலிருந்து விடுபட முடியாதா.?

கடவுள்:-சோதனைகள் என்பது, மனோதிடத்தை அதிகரிக்க 
                 
உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் 
                 
பாடங்களே. போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
                  வலிமை வரும். சோதனைகள் இல்லாதபோது அல்ல.

நான்:-    உண்மையில், இவ்வளவு வேதனைகளுக்கு உள்ளாகியும்
                 எங்குதான் போகிறோம் என்பதே புரிவதில்லை.

கடவுள்:-புறமே தேடினால் போகுமிடம் தெரியாது. உன் அகத்தில்
                  தேடு. வெளியே தேடினால் கனவாய்த் தெரியும். உள்ளே
                  தேடினால் காட்சிகள் விரியும். கண்களால் காண்பது
                  பொருட்களின் காட்சி. இதயக் கண் காட்டும்
                  பொருண்மையின் மாட்சி.

நான்:-     நேரான வழியில் செல்வதைவிட, வேகமாக வெற்றி
                  கிடைக்காதிருப்பதே நோகிறது. இதற்கு என்ன செய்ய.?

கடவுள்:-வெற்றி என்பது மற்றவர் தரும் குறியீடு. கடக்கப்போகும்
                   பாதையை உணர்ந்து, நீ நிர்ணயிக்கும் திருப்தி எனும்
                  வெற்றியின் அளவுகோல் கடந்துவந்த பாதையினால்
                  ஏற்பட்டதைவிட சிறப்பாக இருக்கும்.நீ திசைமானியை
                  உபயோகி. மற்றவர்கள் கடிகாரத்தை உபயோகிக்கட்டும்.

நான்:-     கஷ்ட காலங்களில் எப்படி திசை நோக்கி நிற்பது.?

கடவுள்:-கடக்கப்போகும் பாதையைவிட கடந்து வந்த பாதையை
                  கணக்கில் கொள்.உனக்குக் கிடைத்த வரங்களை
                  எண்ணில் கொள்.கிடைக்காததையும் தவறவிட்டதையும்
                  நினைத்துத் தளராதே.

நான்:-     மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?

கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது ஏன் எனக்கு
                  என்பவர்கள் வளர்ச்சி யடைகையில்எனக்கு ஏன் என்று
                  கேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் சிலரே.

நான்:-   சில நேரங்களில் நான் யார்.? நான் ஏன் இங்கிருக்கிறேன்?
                 என்று கேள்வி எழுகிறது. பதில்தான் கிடைப்பதில்லை.

கடவுள்:- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
                   வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
                   கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது
                   கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
                  தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)

நான்:-      வாழ்வில் ஏற்றமளிக்க ,பலன் கிடைக்க என்ன செய்ய
                   வேண்டும்.?

கடவுள்:-கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்.
                 
நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகு. வருங்காலத்தை
                  தைரியமாக எதிர்கொள்.

நான்:-     கடைசியாக ஒரு கேள்வி சில நேரங்களில் என் வேண்டு
                 தல்களுக்கு விடை கிடைப்பதில்லை என்று
                 உணர்கிறேன்.

கடவுள்:-விடை கிடைக்காத பிரார்த்தனைகள் என்று சொல்வதை
                  விட, விடை இல்லை என்பதே பதிலாயிருக்கும்.

நான்:-    உங்கள் வரவுக்கும் அறிவுரைக்கும் நன்றி.புதுப்பொலி
                வுடன் ஒவ்வொரு புது நாளையும் எதிர் கொள்வேன்.

கடவுள்-நன்று. பயத்தைக் களை. நம்பிக்கையை தக்கவை.
                  சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கையை
                  சந்தேகிக்காதே.
                  -----------------------------------------------------------------------      



Feb 29,2012

கடவுளுடன் ஒரு உரையாடல்

கடவுளுடன் ஒரு உரையாடல்
கடவுள்: ஹலோ! என்னை கூப்பிட்டாயா?
மனிதன்: கூப்பிட்டேனா? உன்னையா? இல்லையே? யார் நீ?
கடவுள்: நான்தான் கடவுள். உன் பிரார்த்தனை காதில் விழுந்தது; பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.
மனிதன்: நீ சொல்லுவது சரி. நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். அது என் மனதுக்கு பிடித்திருக்கிறது; இப்போது எனக்கு பேச அவகாசமில்லை; வேலையில் மும்முரமாக இருக்கிறேன்.
கடவுள்: எறும்பு கூடத்தான் வேலையில் மும்முரமாக இருக்கிறது.
மனிதன்: எறும்பு ஈயைப் பற்றி எனக்குத் தெரியாது; எனக்கு இப்போது உன்னுடன் பேச அவகாசம் இல்லை; வாழ்க்கை மிகவும் அவசரமானதாகி விட்டது; எப்போதுமே அவசரம் தான்; எப்போதும் நெருக்கடி தான்.
கடவுள்: உண்மைதான். ஏதாவது செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கை மும்முரம் தான். செயல்பாடு உன்னை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது; உழைப்பினால் கிடைக்கும் பலன் உனக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது. உழைக்கும்போது நேரத்திற்கு அடிமையாகும் நீ, பலனை அனுபவிக்கும் போது அந்த அடிமைத்தனத்தில் இருந்து  விடுபடுகிறாய்.
மனிதன்: நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று சரிவர புரிவதில்லை. அது இருக்கட்டும்; இணையதள உடனடி தகவல் chat-ல் நீ என்னைக் கூப்பிடுவாய் என்று எதிர்பார்க்கவில்லை.
கடவுள்: என்ன செய்வது? நீ நேரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து உதவலாம் என்று வந்தேன். சில விஷயங்களை தெளிவுபடுத்த ஆசைப் பட்டேன். இது இணையதளத்தால் செய்யப்பட உலகம் ஆகிவிட்டது. இணையதளத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும் உன்னை இணையதளம் மூலமாக சந்திக்க வந்தேன்.
மனிதன்: சரி, என் கேள்விகளுக்கு பதில் சொல்லு. ஏன் வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது?
கடவுள்: முதலில் வாழ்க்கையை அலசி அலசிப் பார்ப்பதை நிறுத்து. வாழ்க்கையை வாழ கற்றுக் கொள். ரொம்பவும் அலசுவதால் தான் வாழ்க்கை சிக்கலாகிறது.
மனிதன்: நாங்கள் ஏன் எப்போதுமே வருத்தத்தில் இருக்கிறோம்? சந்தோஷம் என்பதே இல்லையா?
கடவுள்: நேற்று நீ கவலைப் பட்ட நாளை என்பது தான் இன்று இந்த நாள். இந்த நாளை வாழாமல் நாளையைப் பற்றிக் கவலைப் படுவதே உன் வழக்கமாகிவிட்டது. அதனால் வருத்தமே வாழ்க்கை ஆகிவிட்டது.
மனிதன்: ஆனால் வாழ்க்கை என்பதே நிச்சயமில்லாத போது வருத்தப் படாமல் என்ன செய்வது?
கடவுள்: நிச்சயமின்மை என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் வருத்தப் படுவது நீ தெரிவு செய்வது.
மனிதன்: நிச்சயமின்மையால் வாழ்வில் எத்தனை வலிகள்……
கடவுள்: வலிகள் தவிர்க்கமுடியாதவை; அதனால் ஏற்படும் துன்பம் தவிர்க்கப்பட வேண்டும்.
மனிதன்: துன்பம் தவிர்க்கப் படவேண்டுமானால்  மக்கள் ஏன் துன்ப படுகிறார்கள்?
கடவுள்: வைரத்தை உரசாமல் மின்ன வைக்க முடியாது; தங்கத்தை நெருப்பில் புடம் போடாமல் சுத்தப் படுத்த முடியாது. நல்லவர்கள் வாழ்க்கையில் சோதனைக்கு ஆட்படுவார்கள். ஆனால் துன்ப பட மாட்டார்கள். சோதனைகள் அவர்கள் வாழ்க்கையை  வளமாகும். நலிவடையச் செய்யாது.
மனிதன்: இந்த வருத்தப் பட வைக்கும் அனுபவங்கள் எங்களுக்குத் தேவையா?
கடவுள்: ஆமாம். அனுபவம் ஒரு தேர்ந்த ஆசிரியை. முதலில் பரீட்சை வைப்பாள். பிறகு பாடம் கற்றுத் தருவாள்.
மனிதன்: ஆனால் நாங்கள் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக  வேண்டும். கவலைகளில் இருந்து விடுதலை அடைய முடியாதா?
கடவுள்: வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் உனக்கு பயன் தரக் கூடியவை. பாடம் புகட்டக் கூடியவை. அவை உன்னைப் புடம் போட்டு உன்னை எல்லா வகையிலும் மேம்படச் செய்கின்றன. மனவலிமை படைத்தவனாக ஆக்குகின்றன. மன வலிமை போராட்டங்களிலிருந்தும், சகிப்புத் தன்மையிலிருந்தும் வருகிறது. உனக்கு பிரச்சினைகள் இல்லாத போது இவை உனக்குக் கிடைப்பதில்லை.
மனிதன்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் நாங்கள் எங்கே போகிறோம் என்பதே புரியவில்லை.
கடவுள்: நீ உனக்கு வெளியில் பார்த்தால், நீ எங்கே போகிறாய் என்று தெரியாது. உனக்கு உள்ளே பார். வெளியில் பார்ப்பது கனவு காண்பது போல. உள்ளே பார்ப்பது உனக்குள் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கண்கள் பார்வையைக் கொடுக்கும். மனம் விழிப்புணர்வை உண்டாக்கும்.
மனிதன்: சில சமயங்களில் சரியான பாதையில் போகிறோமா என்பதை விட, சீக்கிரம் வெற்றி பெறவில்லையே என்பது மிகவும் வலிக்கிறது.
கடவுள்: வெற்றி என்பது பிறர் உன்னைப் பற்றி அறிய உதவும்  ஒரு அளவுகோல். திருப்தி என்பது உன்னால் தீர்மானிக்கப் படுகிறது. நீ போகும் பாதையைத் தெரிந்து கொள்ளுவது உனக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கும். நீ திசை காட்டியை வைத்துக் கொண்டு வேலை செய். மற்றவர்கள் கடியாரத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யட்டும்.
மனிதன்: கடினமான நேரத்திலும் நான் எப்படி உற்சாகம் குறையாமல்  இருப்பது?
கடவுள்: எப்போதும் நீ எத்தனை தூரம் பயணித்து இருக்கிறாய் என்று பார். இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்று யோசிக்காதே. உனக்குக் கிடைத்த நல்லவற்றை எண்ணிப் பார். எதையெல்லாம் இழந்தாய் என்று எண்ணாதே.
மனிதன்: நான் எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேனோ அதையே சொல்லுகிறாய். மனிதனின் எந்த குணம் உனக்கு வியப்பூட்டுகிறது?
கடவுள்: கஷ்டங்கள் வரும்போது எனக்கு ஏன் என்று சொல்லுபவர்கள் சுகப் படும் போது எனக்கு ஏன் என்று கேட்பதே இல்லை. ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர உண்மையின் பக்கத்தில் அவர்கள் இருக்க ஆசைப் படுவதில்லை.
மனிதன்: வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை எப்படி அடைவது?
கடவுள்: நடந்து போனவைகளைப் பற்றி வருந்தாதே. இன்றைய நாளை தைரியமாக எதிர் கொள்; இன்றைய நாள் நல்ல நாள் என்ற நம்பிக்கை இருக்கட்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் வரப் போகும் வாழ்க்கைக்கு உன்னை தயார் செய்து கொள்.
மனிதன்: கடைசியாக ஒரு கேள்வி: சிலசமயங்களில் ஏன் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைப்பது இல்லையே, ஏன்?
கடவுள்: பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை. சில சமயங்களில் பதில் இல்லைஎன்றும் இருக்கலாம்;
மனிதன்: உனக்கு பல கோடி வந்தனங்கள். உன்னுடன் பேசிக் கொண்டே ஒரு புது நாளைத் தொடங்குகிறேன். ஒரு புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.
கடவுள்: நல்லது. நம்பிக்கையை வளர்த்துக் கொள். பயத்தை விட்டுவிடு. உன்னுடைய சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல; விடுவிப்பதற்கு. பிரச்சினையும் அல்ல, விடை  கண்டுபிடிக்க. என்னை நம்பு. வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு!
published in oorooo.com



திங்கள், 10 நவம்பர், 2014

VGK 10 ] மறக்க மனம் கூடுதில்லையே !

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.


கதையின் விமர்சனம்.

ஒவ்வொருவர் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களும் மகிழ்ச்சியும் வேதனைகளும் கலந்துதான் ஆரம்பித்திருக்கின்றன. அவரவர் விதிப்படி அவர்கள் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிறார்கள்.
அந்தக் காலத்து ஸ்டோர் வாழ்க்கை என்பதை இன்று நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. ஆனால் மக்கள் அவைகளில் வசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

அந்த வாழ்க்கை முறையை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் கதாசிரியர். அந்த வாழ்க்கையிலும் இளம் பருவ ஆசைகள் வரத்தான் செய்யும்.

அப்படி அவர் வாழ்வில் வந்தவர்கள் மூவர். ஆனால் ஒருவருடன்தான் வாழ்க்கைப் பிணைப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் குடும்ப பாரம்பரியம். குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறப்பவனுக்கு சில கடமைகள் இருக்கின்றன. தன் சுகத்தை மட்டும் பார்த்துக்கொண்டு போக முடியாது. அவனுக்குப் பின் இருக்கும் தம்பி தங்கைகளின் வாழ்வும் அவன் கையில்தான் இருக்கிறது.

அந்தக்காலத்தில் இந்தப் பொறுப்பை மக்கள் உணர்ந்து நடந்து கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. இது ஒரு வேள்வி என்றே சொல்லலாம். இந்த வேள்வியில் அவ்வப்போது தோன்றும் ஆசாபாசங்கள் எரிந்து போகும்.


அப்படி எரிக்கப்பட்டவைகளில் சில பிற்காலத்தில் வாழ்வில் தலை காட்டலாம். அப்போது அவை எந்த நிலையிலும் இருக்கலாம். இந்த உண்மையை இரண்டு சம்பவங்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இது போன்ற நிகழ்வுகள் வெறும் கற்பனையல்ல. நிஜவாழ்விலும் நடக்கலாம். அப்படியான ஒரு கதையைப் படித்த திருப்தி ஏற்பட்டது.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

சன் டிவி மகாபாரதம்.



மகாபாரதக் கதையை சிறு வயதிலிருந்து அறிந்திருந்தாலும் இப்போது வரும் டிவி சீரியல்களைப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யத்தைத் தருகிறது.

விஜய் டிவி யில் வந்து கொண்டிருந்த மகாபாரத சீரியல் முடிந்து விட்டது. சன் டிவியில் இன்னும் வந்து கொண்டிருக்கிறது.

நான் டிவி யில் ஒளி பரப்பாகும்போது நேரடியாகப் பார்க்க முடிவதில்லை. யூட்யூப்பில் வருவதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  விஜய் டிவியில் வரும் அனைத்து எபிசோடுகளும் யூட்யூபில் வந்து விட்டன.

ஆனால் சன் டிவியில் வரும் மகாபாரத எபிசோடுகள் 82 வது எபிசோடு வரைக்கும் யூட்யூபில் பிரசுரமாகியது. அதன் பின்னர் நின்று விட்டது. சாம் என்பவர் இதை செய்து வந்திருக்கிறார், காப்பிரைட் பிரச்சினையால் என்னால் தொடர முடியவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.

இந்த சன் டிவி மகாபாரத சீரியல் வேறு எங்காவது கிடைக்கிறதா? பதிவுலக நண்பர்கள் தெரிந்தால் சொல்லவும்.

புதன், 29 அக்டோபர், 2014

அஞ்சலை - சிறுகதை


வைகோ வின் அஞ்சலை கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

இந்தக் கதைக்கு என் விமர்சனம். ஒரு சமாச்சாரம். எனக்கு சிறுகதை எழுதத் தெரியாது. ஒரு செய்தியை விரிவாக எழுதவும் தெரியாது. ஆகவே சுருக்கமான விமர்சனம் மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்தக் கதைக்கு பல  உப-சிறுகதைகளை பலரும் எழுதியிருக்கிறார்கள். அவைகளைப் படிக்க இந்தப்  போட்டியில் வெற்றி பெற்ற விமர்சனங்களைப் பார்க்கவும்.

விமர்சனம்.

“அஞ்சலை”

தாய்ப் பாசம் என்பது பல வகைகளில் வெளிப்படும். மனிதர்களிடையே மட்டுமல்ல, விலங்குகளிடையேயும் இந்தப் பாசத்தை காண்கிறோம்.

ஆனால் இந்தப் பாசம் சூழ்நிலையின் அழுத்தத்தால் மாற வேண்டிய அவசியம் உண்டாகிறது. இந்தக் கதையின் கதாநாயகியும் இந்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறாள்.

தன் குழந்தை தன்னிடமே இருக்கவேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம். ஆனால் இதை குழந்தை இல்லாத தம்பதியினருக்கு கொடுத்தால் அது நல்ல சூழ்நிலையில் வளருமே என்ற ஆசை இன்னொரு பக்கம்.

இந்த பாசப் போராட்டத்தில் அவள் தன் குழந்தையை தத்துக் கொடுத்து விடலாம் என்கிற முடிவை எடுக்கிறாள். இதைத் தவிர அவளுக்கு தான் இருக்கும் சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் போகிறது. இந்த சோக முடிவில் நாமும் நம்மை அறியாமல் கண்ணீர் சிந்துகிறோம்.

இதுவே கதாசிரியரின் வெற்றியாகும்.   

வெள்ளி, 24 அக்டோபர், 2014

அமுதைப் பொழியும் நிலவே !



 இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

“காற்று வாங்கப்போனேன், காதல் வாங்கி வந்தேன்” என்ற சினிமா பாட்டு பாணியில் நம் கதாநாயகர் பஸ் பிரயாணத்தில் ஒரு காதலியைக் கண்டு பிடித்திருக்கிறார். ஆனால் அது ஒரு பகல் கனவாய்ப் போனதுதான் ஒரு சோகம். கனவென்றால் சாதாரணக் கனவா? அப்படியே ஆகாயத்தில் பறக்க வைத்த கனவு.

இருந்தாலும் அந்த நினைவுகள் இனிமையானவைகளே. கனவில் வந்த நிலவின் அழகு, படிக்கும் நம்மையே சொக்கவைக்கிறது. அரைத்த சந்தனம் போல் மேனி. மேனியில் இருந்து சந்தன வாசம் வந்திருக்குமோ. வந்திருக்கலாம்.

பாரதியிலிருந்து இன்றைய கதாசிரியர் வரை கேரள அழகிகள் மேல் அப்படியென்ன மோகமோ தெரியவில்லை. அதுவும் பாலக்காடாம். நானும் பாலக்காட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறேன். என் கண்ணில் அப்படி சந்தன மேனிக்காரிகள் யாரும் கண்ணில் படக் காணோம்.

இப்படி சொர்க்க லோகத்தில் உலா வந்து கொண்டிருந்தவரை பூலோகத்திற்கு இழுத்த அந்த படுபாவி கண்டக்டர் அடுத்த ஜன்மத்தில் நபும்சகனாகத்தான் பிறப்பான்.

அத்தோடு விதி விட்டதா? திரும்பி வரும்போது பக்த்து சீட்டில் ஒரு கர்ண கடூரக் கிழவி. இதுதான் விதியின் விளையாட்டோ?

ஒரு சாதாரண நிகழ்வை ரசனை மிக்க கதையாக மாற்றிய வைகோவும் கேரள கன்னிகளும் நீடூழி வாழ்க.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

பதிவுகளில் கோளாறா இல்லை எனக்குக் கோளாறா, தெரியலையே?



கடந்த நான்கு நாட்களாக பதிவுகளைத் திறந்தால் சில விநாடிகளில் அது கருப்பாக மங்கி விடுகிறது. ஒரு சில பதிவுகள் அப்படியே மங்காமல் இருக்கின்றன.

இந்த கோளாறு எப்படி வருகிறதெனத் தெரியவில்லை.

1. என் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதா?

2. அல்லது என் கண்ணில் வைரஸ் புகுந்து விட்டதா?

எனக்கு மட்டும்தான் இப்படியா? வேறு யாருக்காவது இப்படி இருக்கிறதா?

என்ன கோளாறென்று தெரியாமல் விழிக்கிறேன். யாராவது வழி அல்லது விழி காட்ட முடியுமா?

திங்கள், 20 அக்டோபர், 2014

ஆப்பிள் கன்னங்களும் ....... அபூர்வ எண்ணங்களும் !

இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

விமர்சனம்

இளம் வயதில் ஏற்படும் உறவுகள் பல பரிமாணங்களில் ஏற்படும். அறியாப் பருவ சிநேகிதம் கால ஓட்டத்தில் எப்படி பரிணமிக்கும் என்று யூகிக்க முடியாது. சகோதர பாசமாகவோ அல்லது காதலாகவோ மாறும் சாத்தியக் கூறுகள் சூழ்நிலையைப் பொருத்தே அமையும்.

இந்தக் கதையில் அவன் அதைக் காதலாக எண்ணுகிறான். ஆனால் அந்தப் பெண்ணோ அதை சகோதர பாசமாக எண்ணிக் கொண்டிருக்கிறாள். இதற்கு காரணம் பெண்களின் மன வளரச்சி ஆண்களை விட துரிதமாக ஏற்பட்டு விடுகிறது. பெண் தன் எதிர் காலத்தை துல்லியமாகத் திட்டமிடுகிறாள். ஆணுக்கு அந்த திறமை வெகு நாட்களுக்குப் பிறகே ஏற்படுகிறது.

இந்த நுணுக்கமான உணர்ச்சிப் போராட்டத்தை வெகு நாசூக்காக கதாசிரியர் சொல்லியிருக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது. எந்த விதமான விரசங்களும் இல்லாமல் ஒரு காதல் கதையை சொல்வது மிகவும் சிரமம். திரு வை.கோ. அதை நிறைவாக செய்திருக்கிறார்.

தன் கற்பனைகள் சிதையும்போது கதாநாயகன் அதை மிகவும் நாகரிகமாக எடுத்துக் கொள்கிறான். இந்தக் கதை ஐம்பது வருடங்களுக்கு முன்  இருந்த சமூக சூழ்நிலையில் நடக்கக் கூடிய கதை. இன்று காலம் மாறி விட்டது. கதாநாயகன் கதாநாயகிக்கு தான் வரைந்த அவளுடைய ஓவியத்தை பரிசாக தருவதற்குப் பதில் முகத்தில் ஆசிட் வீசியிருப்பான்.

ஒரு நல்ல எளிமையான கதை. மனதிற்கு இதமாக இருந்தது.


வெள்ளி, 17 அக்டோபர், 2014

நான் என் வாழ்நாளில் இதுவரை சாப்பிடாத இனிப்பு


எனக்கு சிறு வயது முதற்கொண்டே இனிப்பு மேல் அதிகப் பிரியம். நான் ஐந்து வயதாயிருக்கும்போது டிராயர் பாக்கெட்டில் சர்க்கரையை திருடிப் போட்டுக்கொண்டு சிறிது சிறிதாக சாப்பிடுவேன். வெல்லம் கிடைத்தால் இன்னும் அதிக குஷி. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சாப்பிட்டுத்தான் இன்று டயாபெடீஸ் என்னும் நோவை வாங்கி வைத்திருக்கிறேன்.

அதற்காக ஸ்வீட் சாப்பிடுவதை விட முடியுமா, என்ன? நோவு ஒரு பக்கம், ஸ்வீட் சாப்பிடுவது இன்னொரு பக்கம்.

சமீபத்தில் நான் இரண்டு ஸ்வீட்டுகள் (தனித்தனியான விசேஷங்களில்தான்) சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. இது வரை அந்த ஸ்வீட்டுகளை நான் பார்த்ததே இல்லை. சாப்பிட்டதும் இல்லை. (பார்க்காதபோது எப்படி சாப்பிட முடியும்? அது வேறு விஷயம்) அவைகளின் சுவை எழுத்தில் சொல்லி முடியாது. சாப்பிட்டால்தான் அனுபவிக்க முடியும்.

இதில் என்ன கொடுமை என்றால், அந்த ஸ்வீட்டுகளின் பெயர் எனக்குத் தெரியவில்லை. பந்தியில் சாப்பிடும்போது பட்டிக்காட்டான் மாதிரி அதன் பெயரைக் கேட்க முடியுமா என்ன? நாம் அது வரை அந்த ஸவீட்டை பார்த்ததில்லை, சாப்பிட்டதில்லை என்கிற விஷயத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டால் நம் கௌரவம் என்ன ஆகிறது? ஆகவே ஏதோ தினமும் அந்த மாதிரி ஸ்வீட்டுகளைத்தான் வீட்டில் சாப்பிடுவது மாதிரி ஒரு பாவ்லா காட்டிக்கொண்டு வந்து விட்டேன்.

இப்போது என் வருத்தம் என்னவென்றால் எங்காவது பெரிய ஓட்டலில் யாராவது ஓசியில் விருந்து வைத்தால் இந்த ஸ்வீட்டை எப்படி கேட்பது என்பதுதான்? இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டித்தான் இந்தப் பதிவு. நண்பர்கள் உதவ வேண்டும்.

முதல் ஸ்வீட் ஒருவருடைய சதாபிஷேக விருந்தில் சாப்பிட்டது. அவர் மைசூரைச் சேர்ந்தவர். அந்த விருந்தில் பூரி மாதிரி ஒன்றைப் போட்டு அதன் மேல் ஜீரா சக்கரையைத் தூவினார்கள். ஜீரா சர்க்கரை என்றால் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். சாதா சர்க்கரையை நைசாக அரைத்ததுதான் ஜீரா சர்க்கரை.  பிறகு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றினார்கள். இந்தக் கலவையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டால் தேவாம்ருதம் தோற்றது போங்கள்? அவ்வளவு சுவை.

முழுவதும் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னொன்று சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அத்தனை பேருக்கு முன்னால் கேட்க வெட்கமாய் இருந்ததினால் கேட்காமல் வந்து விட்டேன். ஆனாலும் இந்த பாழாய்ப்போன மனசு அந்த ஸ்வீட்டுக்காக ஏங்கிக்கொண்டே இருக்கிறது.

அந்த ஸ்வீட்டின் பெயரும் அது தமிழ் நாட்டில் எங்கு கிடைக்கும் என்று யாராவது தெரிவித்தால் நான் என் ஆயுளுக்கும் (என் ஆயுள் இன்னும் கொஞ்ச காலம்தான்) நன்றியுடையவனாக இருப்பேன்.

இரண்டாவது ஸ்வீட் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் வீட்டு விசேஷத்திற்காக சென்றிருந்த என் மனைவியிடம் கொடுத்தனுப்பிய ஸ்வீட் பேக்கட்டில் இருந்தது. அவர்கள் ஆந்திராக்காரர்கள். இந்த ஸ்வீட் பேக்கட் மேல் ஒரு கடையில் பெயர் இருந்தது. SIRI A Sweet World, Shop No. 13, NTR Stadium Complex, Brindhavan Gardens,Guntur-7.

அந்த ஸ்வீட் ஒரு காகித ரோல் போல இருந்தது. அது காகிதம் தான் என்று நினைத்துக்கொண்டு அதை பிரித்தேன். பெரிய காகிதமாக பிரிந்தது. உள்ளே பிரவுன் கலரில் ஏதோ இருந்தது. தொட்டு சுவைத்துப் பார்த்தேன். இனிப்பாக இருந்தது. இதை ஏன் இவ்வளவு பெரிய காகிதத்தில் சுருட்டி வைத்திருக்கிறார்கள் என்று யோசித்தேன். என்னுடைய கிழட்டு மூளையில் ஒரு பொறி தட்டியது. அந்தக் காகிதத்தை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டேன் அது வாயில் கரைந்தது.

ஆஹா, இதுவா விஷயம் என்று புரிந்தது. அதாவது அந்தக் காகிதச்சுருளைப் பிரிக்காமல் அப்படியே சாப்பிடவேண்டும் போல என்ற உண்மை புரிந்தது. இதை அப்படியே சுருட்டி சாப்பிட்டேன். இந்த ஸ்வீட் முழுவதும் நெய்யோ நெய். கையில் ஒட்டிக்கொண்ட நெய் வாசனை இரண்டு நாள் போகவில்லை. ருசியோ ருசி. அப்படி ஒரு ருசியை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை.

அடுத்த நான் இன்னொரு ஸ்வீட் மிச்சம் இருந்தது. முதல் நாள் சாப்பிட்டபோது வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் பங்கு போட்டு கொடுத்ததினால் எனக்கு குறைவாகத்தான் கிடைத்தது. மனதிற்குத் திருப்தி ஏற்படவில்லை. ஆகவே இந்த மிச்சம் இருந்த ஸ்வீட்டை நான் ஒருவனாகவே சாப்பிட்டு முடித்து விட்டேன். நன்றாக இருந்தது. திருப்தி அடைந்தேன்.

இதன் விளைவு ஒன்றே ஒன்றுதான். அடுத்த இரண்டு நாட்களுக்குப் பசியே தோன்றவில்லை. இந்த தீபாவளிக்கு குண்டூர் போய் இந்த ஸ்வீட் ஒரு நூறு பீஸ் வாங்கி வரலாமா என்று யோசித்தேன். வீட்டிற்குத் தெரியாமல் அவ்வளவு தூரம் சென்று வருவது சாத்தியமில்லையாதலால் வீட்டில் பர்மிஷன் கேட்டேன். ஒரு ஸ்வீட் சாப்பிட்டே இரண்டு நாள் வயிற்று மந்தத்தில் இருந்தீர்கள். நூறு ஸ்வீட் வாங்கி வந்து எல்லோரும் ஆஸ்பத்திரிக்குப் போகவா என்று என் முயற்சியை தடுத்து விட்டார்கள்.

இது என்ன ஸ்வீட்? இது எங்கு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். தெரிந்தவர்கள் உதவ வேண்டும்.

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.



வெள்ளி, 10 அக்டோபர், 2014

உடம்பெல்லாம் உப்புச்சீடை

மனித இயல்புகளை துல்லியமாக படம் பிடித்துக்காட்டும் இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டுங்கள்.


விமர்சனம்

மனித மனத்தின் அவலங்களை போட்டோ பிடித்தது போல் காட்டியிருக்கும் இக்கதை எல்லோருடைய மனதிலும் நீண்ட நாள் இடம் பிடித்துக் கொள்ளும்.

வெளித்தோற்றங்கள் ஒருவரின் குணங்களை பிரதிபலிக்கிறது என்கிற ஆழ்ந்த நம்பிக்கையில் நாம் வாழ்கிறோம். புறத்தோற்றத்தைத் தாண்டி உள் மனதின் அழகைக் காண நம் அனுபவ அறிவு நம்மை அனுமதிப்பதில்லை. அதுவே மனிதனின் பெரிய குறைபாடு.

சிறு குழந்தைகளுக்கு அத்தகைய குணங்கள் இன்னும் வரவில்லை என்பதை மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. அவர்களும் பெரியவர்களானதும் இந்த கபடமற்ற தன்மை மறைந்து போகுமோ என்னமோ?

ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் ரயில் பயணம் அந்தக்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை தத்ரூபமாக பட்டாபி-பங்கஜம் தம்பதியினர் மூலமாக அனுபவிக்கிறோம். நீண்ட தூரப் பயணத்தில் தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை பட்டாபி பாதுகாக்கும் விதம் எல்லோரும் செய்யும் முறையே.

ஆனால் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பொருட்களை எண்ணி கொண்டு போனாலும் தவறு ஏற்படுவது உண்டு என்பதை காண்கிறோம். ஆனால் அந்தத் தவறு சக மனிதரின் மேல் ஏற்பட்ட வெறுப்பினால் விளைந்தது என்பதை அழகாக கதாசிரியர் சுட்டிக் காண்பிக்கிறார்.

அந்த தவறு அவர்கள் வெறுத்த ஒருவராலேயே நிவர்த்திக்கப்படும்போது அவர்களுக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சியை வார்த்தைகளால் அளவிட முடியாது. அதற்கு பிராயச்சித்தமாக அவர்கள் செய்யும் தானம் மனதில் வெறுப்பைத்தான் உண்டு பண்ணுகிறது. மனித மனம் நொடியில் எவ்வாறு தன்னை மாற்றிக்கொள்கிறது என்பதை நம்மால் எளிதாக ஜீரணம் செய்ய முடியவில்லை.

இந்தக் கதையை பல நாட்களுக்கு முன்பே படித்திருக்கிறேன். மனதை விட்டு அகலவில்லை. என்றும் சிரஞ்சீவியாக வாழும் கதைகளில் இதுவும் ஒன்று.

பழனி.கந்தசாமி

http://swamysmusings.blogspot.com

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

பத்துமலை முருகன்

தமிழ் இளங்கோவின் இந்தப் பதிவைப் படித்த பின் இந்தப் படங்களைப் பார்க்கவும்.


மலேசியாவில் யாரும் கோவிலில் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்வதில்லை. பத்துமலை முரிகன் கோவிலில் எடுத்த படம்.

                                         .

அதே போல் சிங்கப்பூரிலும் மாரியம்மன் கோவிலில் எடுத்த படம். அங்கும் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை. நான்தான் பயந்து கொண்டே போட்டோ எடுத்தேன்.


செவ்வாய், 30 செப்டம்பர், 2014

காதலாவது கத்திரிக்காயாவது

விமர்சனம்.


காதலாவது கத்திரிக்காயாவது என்ற வைகோவின் சிறுகதைக்கு என் சிறு விமர்சனம். இதைப் படித்த பின் இந்த சிறுகதையைப் படிக்கத் தோன்றினால் இங்கே செல்லவும்.

காதலாவது கத்திரிக்காயாவது என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அதன் பொருள் என்னவென்றால் சமூகத்தில் வாழும் சாதாரண மனிதர்களுக்கு காதல் என்பது ஒரு எட்டாக்கனி அல்லது காதல் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒன்றல்ல என்பதேயாகும்.

ஆனாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் இயற்கையை ஒட்டிய உணர்வுகள் வரும் என்பதை அன்றாட வாழ்க்கைப் போராட்ட நிகழ்வுகளுக்கிடையே பின்னியிருக்கும் விதம் அருமை. ஒரு ஆதரவற்ற இளைஞனுக்கும் இளைஞிக்கும் தற்செயலாக ஏற்படும் சந்திப்பு, பரஸ்பர நட்பாக மாறி இறுதியில் காதலாக உருவெடுக்கும் ரசாயன மாற்றத்தை கதாசிரியர் மிக நுணுக்கமாக விவரித்துள்ளார்.

கதையில் குறிப்பிடும் நிகழ்வுகள் சாதாரணமாக யாருக்கும் ஏற்படக்கூடியவை. அவைகளைப் பின்னி ஒரு காதல் கதையை புனைந்த வை.கோ. அவர்களை பாராட்டவேண்டும். கதையின் ஓட்டம் ரோல்ஸ்ராய் காரில் பயணம் செய்வது போல் அவ்வளவு சுகமாக இருக்கிறது. இது அவரின் ஒரு தனித்துவம்.


பரமு காமாட்சி ஜோடியின் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்று கதையைப் படித்தவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இயற்கையாகவே தோன்றும். 

திங்கள், 22 செப்டம்பர், 2014

காதல் வங்கி - சிறுகதை விமர்சனம்.

காதல் வங்கி

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

விமர்சனம்:

ஆற்று நீர் சலசலப்பில்லாமல் அமைதியாக ஓடும்போது அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு சுகம். மனதிற்கு சாந்தியளிக்கும் ஒரு அனுபவம். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது.

அதேபோல் கோயிலில் கடவுள் விக்கிரகத்தை ஒரு நல்ல அர்ச்சகர் தேர்ச்சியாக அலங்காரம் செய்திருந்தால் அதையே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்றே தோன்றும்.

சில கதைகள்தான் அத்தகைய அனுபவத்தைக் கொடுக்க வல்லவை. காதல் வங்கி அந்த மாதிரியான ஒரு சிறுகதை. எந்த விதமான நெருடலும் இல்லாமல், அபஸ்வரம் அற்ற ஒரு நல்ல சங்கீதத்தைக் கேட்கும் அனுபவத்தைத் தருகிறது.

அழகை அனுபவிப்பது பல வகைப்படும். அழகில் தெய்வீகத்தைப் பார்ப்பது ஒரு வகை. குழந்தையின் கபடமற்ற அழகு ஒரு வகை. பெண்களைத் தெய்வமாகப் பார்ப்பது ஒரு வகை. இப்படி அழகின் பல பரிமாணங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் திரு. வை.கோ. அவர்கள்.

கண்டதும் காதல் என்பதை நாசூக்காக கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர். இக்காலத்து நவநாரீமணிகளுக்கு மிகவும் வேறுபட்டவளாக கதாநாயகியை சித்தரித்திருப்பது மனதை தொடுகிறது. மிக இயல்பாக அவள் தன் நாயகனுடைய பழக்கவழக்கங்களுக்கு மாற்றிக்கொள்கிறாள்.


ஆனால் நடைமுறையில் இத்தகைய சம்பவங்கள் நடக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாய் மனதில் தங்குகிறது.

சனி, 13 செப்டம்பர், 2014

இன்னுமொரு விமர்சனம்




இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.(சுடிதார் வாங்கப் போறேன்)

சிறுகதைகளுக்கு ஒரு சம்பவத்தை அப்படியே கண்முன் காட்சியாகக் கொண்டுவரும் வல்லமை உண்டு. ஆனால் இந்த திறமை அந்த கதையின் ஆசிரியரின் சாமர்த்தியம். அப்படிப்பட்டவர்களே சிறுகதை மன்னன் என்று போற்றப்படுகிறார்கள். திரு வை.கோ. அவர்களிடம் இந்தத் திறமை நன்றாக பளிச்சிடுகிறது.

கல்கி, தேவன், கி.வா.ஜ., அகிலன், மு.வ., புதிமைப்பித்தன் ஆகியோர் சிறுகதைகளைப் படித்து வளர்ந்தவன் நான். ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் ஆகிய பத்திரிக்கைகளில் அவர்களது
கதைகள் வெளிவரும். தவிர அந்தப் பத்திரிக்கைகளின் தீபாவளி மலர்களிலும் அவர்களது சிறப்புக் கதைகள் வெளியாகும். இது எல்லாம் ஒரு காலம்.

அப்படிப்பட்ட பத்திரிக்கைகளின் இன்றைய இதழ்களைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒரு துணுக்கைப் போட்டுவிட்டு இதுதான் ஒரு பக்கக்கதை என்கிறார்கள். சிறுகதை எழுதும் ஆசிரியர்களே இல்லையோ என்று மனது வெறுத்துப் போய் இருக்கும்போது பதிவுலகத்திலே திரு வை.கோ. அவர்களின் கைகளைப் படித்து வெகுவாக இன்புற்றவன் தான்.

இந்த சுடிதார் வாங்கும் கதையில் ஒரு மூத்த குடும்பஸ்தனின் மன எண்ணங்களை அப்படியே தத்ரூபமாக காட்டியிருக்கிறார். இவர் வாங்கி வரும் சேலைகளையே அலட்சியமாக எடுத்துக் கொள்ளும் மனைவிக்கு சுடிதார் போட்டுப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததுதான் வயதான குடும்பஸ்தனுக்கு வரக்கூடாத ஆசை. ஆனாலும் வருவதை எப்படி தடுக்க முடியும்? இதை வெகு நாசூக்காக கோடி காட்டியிருப்பது எல்லோருக்கும் பொருந்தும்.

வரப்போகும் மருமகளுக்கு சுடிதார் வாங்கிக்கொடுத்து நல்ல பெயர் வாங்கவேண்டுமே என்ற ஆதங்கத்தை நுணுக்கமாக விவரித்திருக்கிறார். தெருவில் போகும் பெண்களின் சுடிதார் பேஷன்களைப் பார்த்து மதி மயங்குவது இயற்கையான ஒரு உணர்ச்சி. நாம் அதிக விலை கொடுத்து வாங்கின பொருளுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவேண்டுமே என்ற மனதின் வேட்கை அந்த வார்த்தைகளில் புலப்படுகிறது.

ஜவுளிக்கடைகளில் ஜவுளிகளோடு அந்த விற்பனைப் பெண்களும் விற்பனைப் பொருளானால் நன்றாக இருக்கும் என்ற கற்பனை எல்லா இளைஞர்களுக்கும் இனிப்பாக இருக்கும். (பெரிசுகளுக்கும் கூடத்தான்)

கடைசியில் தான் வாங்கின சுடிதாருக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று அறியும்போது தான் பட்ட கஷ்டங்களெல்லாம் மறந்து ஒரு சந்தோஷம் கிடைக்கிறதே, அதற்காகத்தான் திரும்பத் திரும்ப மனிதர்கள் இந்தக் கஷ்டங்களை வலுவில் சுமக்கிறார்கள். இந்த உண்மையை மறைமுகமாக கதாசிரியர் இக்கதையின் மூலம் வலுவாக சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு நல்ல சிறுகதை படித்த மனத்திருப்தி கொடுத்த ஆசிரியரைப் பாராட்டுகிறேன்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

நான் பெற்ற விருது

திருமதி ரஞ்சனி நாராயணனுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றி. இவர் ஒரு பிரபல பதிவர். பல வருடங்களாக பிளாக்கில் எழுதி வருகிறார். பதிவர் சந்திப்புகளில் நேரிலும் சந்தித்திருக்கிறேன்.

அவர்கள் எனக்கு ஒரு விருது கொடுத்து என்னை மிகவும் கௌரவப்படுத்தி இருக்கிறார்கள்.

                              versatile-blogger
இந்த விருது ஒரு பெரிய விருது என்று கருதுகின்றேன்.  இந்த விருதை எனக்களித்தற்காக அவருக்கு மீண்டும் நன்றி.

உலகில் எதுவும், தாயன்பு உட்பட, இலவசம் அல்ல என்று எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அப்படியே இந்த விருதுக்கும் சில விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.

1. இந்த விருதினை என்னுடைய பிளாக்கில் போடவேண்டும். இது ஒரு ஜுஜுபி வேலை. காப்பி, பேஸ்ட் வேலை. அதைத்தான் தினமும் செய்து பழகி விட்டோமே. அதனால் அதை சுலபமாகச் செய்து விட்டேன்.

2. விருது கொடுத்தவருக்கு நன்றி சொல்லவேண்டும். இதுவும் மிகவும் சுலபம்தான். அதையும் செய்து விட்டேன்.

3. என்னைப்பற்றி சில விஷயங்கள் கூற வேண்டும். இது கொஞ்சம் கடினமான வேலை. நான் இப்போதெல்லாம் எந்த கடின வேலையையும் செய்வதில்லை. ஆகவே இந்த வேலையைத் தவிர்க்கிறேன். தவிர தற்பெருமை குற்றம் என்று நன்னூலில் சொல்லியிருக்கிறது. நான் ஒரு நன்னூல்தாசன்.

4. இந்த விருதை இன்னும் சில பேர்களுக்கு அளிக்கவேண்டும். இதுதான் இந்த விருதின் மிகக் கடுமையான நிபந்தனை. இந்தக் காரணத்திற்காகவே இந்த விருதினையே மறுக்கலாமா என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் அன்புடன் ஒருவர் கொடுக்கும் எதையும் நிராகரிக்கலாகாது என்னும் கருத்து காரணமாக இந்த விருதை ஏற்றுக்கொண்டேன்.

இப்படி நான் சொல்வதற்கு காரணம் இப்படியே ஒவ்வொருவரும்  பலருக்கு இந்த விருதைக் கொடுக்க முற்பட்டால் கொஞ்ச நாளில் இந்த விருதை வாங்குவதற்கு பதிவர்கள் யாரும் மிஞ்ச மாட்டார்கள். இந்தக் காரணத்தை முன்னிட்டு நான் இந்த விருதை யாருக்கும் வழங்கப்போவதில்லை.

ஆக மொத்தம் நான் பதிவர்களிலேயே வித்தியாசமானவன் என்பதை உணர்த்தி விட்டேன். அந்த வகையில் இந்த விருது எனக்கு மிகவும் பொருத்தமே.

திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கள், 8 செப்டம்பர், 2014

பாசப் போராட்டம்

VGK 02 ] தை வெள்ளிக்கிழமை

இந்தக்கதையைப் படிக்க இங்கே சுட்டவும்

விமர்சனம்.

தாய்மை என்பது ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் இயற்கை உணர்வு. ஐந்தறிவு மட்டும் இருக்கும் மிருகங்களில் கூட இந்த உணர்வை பல நேரங்களில் பார்க்கலாம். அந்தப் பாசப்பிணைப்புக்கு முன்னால் வேறு எந்த உணர்வும் இணையல்ல. இந்த உணர்வை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இந்தக் கதாசிரியர்.

மனித மனம் விசித்திரமானது. ஒரு சமயம் எடுக்கும் முடிவுகள் வேறொரு சமயத்தில் மாறி விடுகின்றன. இதுதான் இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் இந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதை குற்றம் என்று சொல்ல முடியாது. பிரசவம் பார்த்த டாக்டர் இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அந்த கதா பாத்திரம் மனதில் நிலை பெறுகிறது.

சராசரி இந்தியக் குடும்பங்களில் நடைபெறும் பாசப் போராட்டங்கள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பங்களை நாம் நம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக சந்திக்க முடியும். சிறுகதையின் சிறப்பே அதுதான். நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கக் கூடிய மனிதர்களையும் சம்பவங்களையும் நம் முன்னால் நிறுத்துவதுதான் ஒரு கதாசிரியரின் வெற்றி.


அந்த வகையில் இந்தக் கதை நம் மனதில் நீங்கா இடம் பெறுகிறது.

இந்த விமர்சனத்திற்குத்தான் இரண்டாம் பரிசு கிடைத்தது.

சனி, 6 செப்டம்பர், 2014

கதை கதையாம்...


பிரபல பதிவர் வை.கோபாலகிருஷ்ணன் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். எழுத்தில் இன்பம் கண்டவர். தாம் பெற்ற இன்பத்தை இவ்வைகயமும் பெறட்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடு ஒரு விமர்சனப்போட்டி நடத்தி வருவது அனைத்துப் பதிவர்களும் அறிந்ததே.

இந்தப் போட்டியில் பல பதிவர்கள் கலந்து கொண்டு பரிசுகளைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பேர்களுக்கு பரிசு கொடுக்கிறார். எனக்கும் கூஊஊஊஊஊஊஊஊட ஒரு மூன்றாம் பரிசு கிடைத்ததென்றால் பாருங்களேன்.

இந்த மூன்றாம் பரிசு கிடைத்த ஊக்கத்தினால் நானும் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்கிறேன். ஆனாலும் பரிசு ஒன்றும் கிடைப்பதாகக் காணவில்லை. இருந்தாலும் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற முதுமொழிக்கேற்ப விடாமல் ஒவ்வொரு போட்டிக்கும் விமர்சனம் எழுதியனுப்பிக்கொண்டிருக்கிறேன். கடைசியாக ஒரு ஆறுதல் பரிசாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

பரிசு பெற்ற விமர்சனங்களை வைகோ தன்னுடைய பதிவில் பிரசுரிக்கிறார். அந்தப் பரிசு பெற்ற விமர்சனங்கள் எல்லாம் அந்த கதையை விட நீளமாக இருக்கின்றன. இவ்வளவு திறமை உள்ளவர்கள் ஏன் தாங்களாகவே கதை எழுதாமல் அடுத்தவர் கதைகளுக்கு விமர்சனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற என் சந்தேகத்திற்கு இது வரை விடை கிடைக்கவில்லை.

சரி, அது எப்படியோ போகட்டும். நான் ஒவ்வொரு சிறுகதைக்கும், 80 வயதானபின் எஞ்சியிருக்கும் கொஞ்நஞ்ச  என் மூளையைக் கசக்கிப் பிழிந்து விமர்சனங்கள் எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறேன். சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் நன்னூல் சூத்திரத்தை சிறுவயதில் படித்த காரணத்தினால் மற்றவர்கள் ஒரு நாவல் அளவிற்குச் சொல்வதை நான் ஒரு வரியில் சொல்லி விடுவேன்.

என்னுடைய விமர்சனங்கள் எல்லாம் இந்த அளவுகோலின்படி எழுதப்பட்டவை. பரிசு பெறாத விமர்சனங்களை வைத்துக்கொண்டு வைகோ என்ன செய்யப்போகிறார்? ஆகவே அவருடைய அனுமதி உண்டு என்கிற நம்பிக்கையில் நான் எழுதிய விமர்சனங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

விமர்சனம் 1.

ஜாங்கிரி. நினைத்தாலே இனிக்கும் ஒரு இனிப்பு. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அத்தனை இன்பங்களும் இதற்கு உண்டு. இதை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இதை உருவாக்குபவனும் ஒரு மனிதன்தான். அவன் உருவாக்கும் இந்த ஜாங்கிரி.

மற்றவர்களுக்குத்தான் இனிமையே தவிர, அதை உருவாக்குபவன் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. எந்த உணவும் அப்படித்தான். அதை செய்பவன் அதை ரசித்து உண்ண முடியாது.

தவிர, அவன் வாழ்க்கையில் இனிப்பு சுவை இல்லாததுதான் ஒரு சோகமான உண்மை. இந்த உண்மையை ஒரு நிகழ்வின் மூலம் நம் கண்முன் நிறுத்தும் கதைதான் “ஜாங்கிரி”. மனிதர்களின் பல பரிமாணங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
நிறைய செலவு செய்து பெரிய விழா நடத்தும் பெரிய மனிதர்களுக்கு சாதாரண மனிதப் பண்பு இல்லாமல் போனது நடைமுறையில் பல இடங்களில் சந்தித்திருந்தாலும் இக்கதையில் அது ஆணித்தரமாக காட்டப்பட்டுள்ளது.


சிறுகதையின் வெற்றியே வாசகர்களை கதாபாத்திரங்களோடு கட்டிப்போடுவதுதான். அதை மிகத் திறம்பட இந்த கதையில் ஆசிரியர் செய்திருக்கிறார். அந்த சமையல்காரர் ஏன் வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சிகள் செய்யவில்லை என்று அவர் மீது கோபம் வருகிறது. அதுதான் கதாசிரியரின் வெற்றி.  


கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மாறிவரும் கலாசாரங்கள்


"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று அந்தக் காலத்திலேயே நன்னூலில் எழுதி வைத்துச் சென்றார்கள் நம் முன்னோர்கள். இந்தக் காலத்து நடப்புகள் அதை நிரூபணம் செய்கின்றன.

நான் சிறுவனாக இருந்தபோது கல்யாணங்களில் பெண்ணும் பையனும் பார்த்துக்கொள்வது என்பது தாலி கட்டும் சமயத்தில்தான். இருவரும் உறவினர்களாக இருந்தால் அது வேறு விஷயம்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழக்கம் மாறி கல்யாணத்திற்கு முன்பு பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு கோயிலிலோ அல்லது ஒரு பொது இடத்திலோ பார்த்துக்கொள்வது பழக்கமாகியது. நான் சொல்வது பிராமணரல்லாத சமூகங்களில் நடக்கும் பழக்கவழக்கங்கள்.

கொஞ்ச நாள் கழித்து நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண்ணும் பையனும் சேர்ந்து ஓட்டலுக்குப் போவதும் சினிமாவிற்குப் போவதும் சகஜமாயிற்று. இவை எல்லாம் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன்தான் நடந்தன.

இப்போது புதிதாக ஒரு வழக்கத்தை எங்கள் பக்கத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். பஞ்சாங்கம் பார்ப்பவர்களுக்குத் தெரியும். அதில் ஒரு இடத்தில் விருந்திற்குப் போகக் கூடாத நாட்கள் என்று ஒரு குறிப்பு இருக்கும். அதாவது ஒருவர் வீட்டிற்குப் புதிதாக விருந்திற்குப் போவதாக இருந்தால் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் போகக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கும். ஏன் என்றால் அப்படிப் போய் விருந்துண்டால் அந்த உறவு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதை கல்யாணப் பெண்ணுக்கும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது கல்யாண முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் அன்று அந்தப்பெண் புருஷன் வீட்டிற்குப்போவதும் ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும் அல்லவா ? பஞ்சாங்கப்படி அப்படி விலக்கப்பட்ட நாளில் பெண் புருஷன் வீட்டிற்குப் போனால் உறவுகள் பாதிக்கப்படும் என்று யாரோ ஒரு அதி மேதாவி சொல்லி, அதற்கு ஒரு மாற்று ஏற்பாடும் சொல்லியிருக்கிறான்.

அதாவது அந்தக் கல்யாண நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அந்தப் பெண் புருஷன் வீட்டிற்குப் போய்விட்டு வந்தால் இந்த பஞ்சாங்க விதிக்கு தப்பித்து விடலாமாம். இப்போது எங்கள் பக்கம் இப்படி ஒரு புது நடைமுறை பழக்கத்திற்கு வந்துள்ளது.

முற்காலத்தில் உண்டான பழக்கவழக்கங்கள்  அனுபவத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. அவைகளில் பல நன்மைகள் உண்டு. ஆனால் தற்காலத்தில் அந்தப் பழக்க வழக்கங்களை நாகரிகத்தின் பெயரால் மாற்றி அமைக்கிறோம். அவைகளின் விளைவுகள் எப்படியிருக்கும் என்று நாளாவட்டத்தில்தான் தெரிய வரும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கல்யாணமாகாத இளைஞனும் இளைஞியும் "சேர்ந்து வாழுதல்" என்ற ஒரு கலாச்சாரம் உருவாகியுள்ளதை அறிவீர்கள். அப்படி சில மாதங்கள் அல்லது வருடங்கள் வாழ்ந்து இருவருக்கும் ஒத்துப்போனால் பிறகு கல்யாணம் செய்து கொள்வார்கள். இதற்குள் அவர்களுக்கு ஓரிரு குழந்தைகள் கூடப் பிறந்திருக்கலாம். இந்தப் பழக்கம் நம் நாட்டில் கூட பெரிய நகரங்களில் பரவ ஆரம்பித்திருப்பதாக கேள்விப்படுகிறோம்.

பழங்காலத்தில் ஆதிவாசிகள் சமூகத்தில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது என்று படித்திருக்கிறோம். ஆக மொத்தம் நாம் பழங்கால கலாச்சாரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம். வாழ்க நாகரிகம். 

புதன், 13 ஆகஸ்ட், 2014

வணிக நாணயம்



நாணயம் என்று ஒரு வார்த்தை பழக்கத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும். தெரியாதிருந்தால் இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பணத்திற்கும் நாணயம் என்று சொல்வார்கள். நாம் இப்போது பார்க்கப்போவது அந்த நாணயம் அல்ல.

வியாபாரத்தில் நேர்மை என்று ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு பொருளை விற்பவன் அதற்கு வாங்கும் விலைக்குத் தகுந்ததான பொருளைக் கொடுக்கவேண்டும். அந்தப் பொருளின் தரத்திலோ, பயன்பாட்டிலோ ஏதாவது குறை இருந்தால் அதற்கு விற்பவன் பொறுப்பேற்க வேண்டும். இதைத்தான் வியாபாரத்தில் நாணயம் இருக்கவேண்டும் என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள்.

அப்படி நாணயமாக வியாபாரம் செய்தவர்கள் முன்னேற்றமடைந்தார்கள். மக்கள் அப்படிப்பட்வர்களைத்தான் ஆதரித்தார்கள்.

ஆனால் இன்றைய விளம்பர உலகில் நாணயம் என்றால் அது எங்கே விற்கிறது என்று கேட்கும் அளவிற்கு வந்து விட்டது. சமீபத்தில் நடந்த என் அனுபவத்தைக் கேளுங்கள்.

இப்போதெல்லாம் எந்தப் போருள் வாங்கினாலும், அதற்கு விற்பனைக்குப் பிறகு தரப்படும் பராமரிப்பு பணியை விற்பவர் ஏற்றுக்கொள்வதில்லை. பராமரிப்புக்கென்று தனியாக ஒரு கம்பெனியை ஒவ்வொரு உற்பத்தியாளரும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள்தான் அந்தப் பொருளுக்கு "விற்பனைக்குப் பின் பராமரிப்பு" (After Sales Service) என்கிற பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நாம் என்ன நம்புகிறோம் என்றால் "நாம் வாங்கும் பொருளுக்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அதை அவர்கள் சரி செய்து தருவார்கள்" என்று.

இந்த மாதிரி பராமரிப்புக்கென்று தனி அமைப்பு வைத்திருப்பதே நம்மைப் போன்ற இளிச்சவாயன்களை ஏமாற்றுவதற்காகவே. அவர்களுக்கென்று கட்டணமில்லா போன் நெம்பர் ஒன்று இருக்கும். அந்த நெம்பருக்குப் போன் செய்தால் எப்போதும் அதை யாரும் எடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்தக் கசமாலங்களுக்குத் தெரியும் - ஒவ்வொரு போன்காலும் ஒரு பிரச்சினையைத் தான் கொண்டு வரும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள்.

அப்படித் தப்பித் தவறி யாராவது எடுத்தால் மறு முனையிலிருந்து "க்யா பாத் ஹை" என்று ஒரு கேள்வி வரும். நாம் சுதாரித்துக் கொண்டு "இங்கிலீஷ் மே போலோ" சொல்வதற்குள் லைனை கட் செய்து விடுவார்கள். அநேமாக உங்களில் பலர் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பீர்கள்.

நான் ஐந்து வருடங்களுக்கு முன் பிரபல கம்பெனி ஒன்றின் பிரிட்ஜ்  20000 ரூபாய் கொடுத்து வாங்கினேன். சமீபத்தில் அதனுடைய கைப்பிடி உடைந்து விட்டது. இது என்ன சாதாரண ரிப்பேர்தானே என்று அந்தக் கம்பெனியின் சர்வீஸ் சென்டருக்குப் போனேன். விஷயத்தைச் சொன்னதும் அங்கு வரவேற்பில் இருந்த நவநாகரிக யுவதி, "சார், நீங்க உங்க பிரிட்ஜை இங்கு கொண்டு வந்தால் நாங்கள் ரிப்பேர் செய்து கொடுப்போம். இல்லையென்றால் இந்த நெம்பருக்குப் போன் செய்யுங்கள், அவர்கள் உங்கள் வீட்டிற்கே வந்து ரிப்பேர் செய்து தருவார்கள்" என்று மிழற்றியது. (மிழற்றியது என்றால் என்ன அர்த்தம் என்று தமிழறிஞரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இந்த மாதிரி ஒரு சர்வீஸ் சென்டருக்கு ஒரு முறை போய் வாருங்கள்.)

அந்த நெம்பருக்குப் பலமுறை போன் செய்து ஒருவாறாக லைன் கிடைத்தது. அதிலிருந்த நபர் விவரத்தைக் கேட்டுக்கொண்டு  எங்கள் சர்வீஸ் இன்ஜனியர் உங்களைத் தொடர்பு கொள்வார் என்று சொல்லி என் மொபைல் நெம்பரை வாங்கிக்கொண்டார். உங்கள் கம்ளெய்ன்ட் நெம்பர் என்று ஒரு பதினைந்து இலக்க யெம்பரைத் தந்தார். நானும் இது பெரிய கம்பெனியாச்சே. நம் பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். நம்பிக்கைதானே வாழ்க்கை.

அடுத்த நாள் சர்வீஸ் இன்ஜினியர் போன் செய்து எல்லா விவரங்களையும் விலாவாரியாக கேட்டு விட்டு, சரி சார் நான் கம்பெனிக்கு இந்த ஸ்பேர் பார்ட் வேண்டுமென்று ஆர்டர் போட்டு விடுகிறேன், பார்ட் வந்ததும் நான் உங்கள் வீட்டிற்கு வந்து பிரிட்ஜை சரி செய்து தந்து விடுகிறேன் என்றார். எனக்கும் அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது.

இரண்டு நாள் கழித்து என் மொபைலுக்கு ஒரு செய்தி. உங்கள் பிரிட்ஜ்ஜுக்கு வேண்டிய ஸ்பேர் பார்ட் எங்களிடம் இல்லை. ஆகவே உங்கள் கம்ப்ளெய்ன்டை இத்துடன் மூடுகிறோம். அவ்வளவே. நான் என்ன செய்வது? திரும்பவும் அந்த சர்வீஸ் டிபார்ட்மென்டைக் கூப்பிட்டேன். அவர்கள் சொன்னது என்னவென்றால், சார் நீங்கள் பிரிட்ஜ் வாங்கி ஐந்து வருடங்களாகி விட்டன, அந்த மாடல் இப்போது மார்க்கெட்டில் இல்லை, அதனால் அதற்கு ஸ்பேர் பார்ட் கிடைக்காது. இப்படி சொன்னால் நான் என்ன செய்வது என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் சொன்ன பதில்தான் இன்றைய நாணயத்தின் உச்ச கட்ட பிரதிபலிப்பு. சார் அந்த பிரிட்ஜை உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் டீலரிட்ம் கொண்டு போனால் அதை வாங்கிக்கொண்டு உங்களுக்குப் புதிதாய் பிரிட்ஜ் கொடுப்பார்கள் என்றார்கள்.

நான் ஒரு மடையன். இதைக் கேட்டுக் கொண்டு பக்கத்திலிருக்கும் டீலரிடம் போனேன். ஆஹா, அதற்கென்ன, தாராளமாய் எடுத்துக்கொள்கிறோம் என்றார்கள். மாடல் நெம்பர், வாங்கின வருடம் எல்லாம் கேட்டு விட்டு, உங்கள் பிரிட்ஜ் 500 ரூபாய்தான் பெறும், ஆனால் நீங்கள் எங்களுடைய நீண்ட நாள் கஸ்டமர் என்பதால் ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக்கொள்கிறோம். புது பிரிட்ஜ் 25000 ரூபாயிலிருந்து கிடைக்கும், உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளலாம் என்றார்கள்.

ஆகவே நண்பர்களே, நீங்கள் இப்போது அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரே வித்தியாசம். அங்கு பழைய சாமான்களை யாரும் வாங்க மாட்டார்கள் இங்கு அதற்கு அடிமாட்டு விலை கொடுப்பார்கள்.

சனி, 2 ஆகஸ்ட், 2014

தமிழனென்று ஓர் இனம்


கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு இப்பூவுலகில் வாழ்ந்து வரும் இனம் தமிழினம். பிற்காலத்தில் இவ்வினத்தில் சில புல்லுருவிகளின் சதியால் இனக் கலப்பு ஏற்பட்டது என்னமோ உண்மைதான். இருந்தாலும் தமிழினம் தன் தனித்தன்மையை இது வரையிலும் காத்தே வந்திருக்கிறது. இனியும் காப்போம் என்று மார் தட்டும் தனித்தமிழர்கள் இருக்கிறார்கள்.

தமிழினத்திற்கு எந்த அவமானம் ஏற்பட்டாலும் அவர்கள் தீக்குளிப்பார்கள் என்பது உறுதி. இந்த சூழ்நிலையில்தான் பார்பனர்களின் ஆதரவோடு செயல்படும் மோடி அரசு சம்ஸ்கிருத மொழித்திணிப்பை பின் வாசல் வழியாக கொண்டு வருகிறது. இதை தமிழினத்தின் காவலர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

சாமானிய மனிதர்களான நாம் என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு வழி  புலனாகியது. அதாவது தமிழ் மொழியில் வடமொழிக்கலப்பு உள்ளதா என்ற ஒரு சுய பரிசோதனை செய்யலாம் என்று தோன்றியது. அப்படிக் கலந்திருந்தால் அந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்களைக் கொடுத்திருக்கிறேன். அவைகளில் தமிழ் அல்லாத சொற்கள் எவை என்று பகுத்தறிந்து கூறுங்கள்.

ஆகாசம்
உபாயம்
நகம்
வீரன்
ஆனந்தம்
தோரணம்
பாடம்
சபை
மாயை
வீணை
ஆயுதம்
கீதம்
புஸ்தகம்
பயம்
பழம்
சுகம்
வாகனம்
விஷம்
தர்மம்
நரகம்
மேகம்
பக்தன்

இப்போதைக்கு இது போதும். அடுத்த பதிவில் என்னுடைய விடையைக் கூறுகிறேன்.

பின் குறிப்பு: இந்தப் பதிவில் ஆரம்பத்தில் போட்டிருக்கும் படத்திலுள்ள பெண்மணி 100 சதம் தமிழ்ப் பெண்மணிதான் என்று தமிழினத்தின் பேரில் உறுதி கூறுகிறேன்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் சிறை பிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்.



இத்தகைய செய்திகளை பல வருடங்களாக, ஏறக்குறைய நான்கு நாட்களுக்கு ஒரு முறை செய்தித்தாள்களில் படிக்கிறோம். அடுத்த நிமிடம் மறந்து போகிறோம். இது ஏன் இப்படி நடக்கிறது?

ஒரு ஈழத்தமிழ் பதிவர் தன் பதிவில் எழுதியிருந்தார் - கச்சத்தீவு பல நூற்றாண்டு காலமாக இலங்கைக்கு சொந்தமான பகுதி. அதில் இந்திய நாட்டுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஏன் இதை வலியுறுத்துவதில்லை என்றால், ஈழப்போராட்டத்தில் இந்தியத் தமிழர்களின் அனுதாபமும் ஆதரவும் இப்போது எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் இதைப்பற்றி வாய் திறப்பதில்லை.

இதன் உண்மையை வரலாற்று ஆசிரியர்கள்தான் சொல்ல முடியும். சாதாரண இந்தியத் தமிழனான எனக்குத் தெரிந்ததெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் இந்திய-இலங்கை அரசுகள் ஒரு ஒப்பந்தம் போட்டு, கச்சத்தீவில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒத்துக்கொண்டார்கள் என்பதே.

சமீபத்தில் சென்னை நீதி மன்றம் ஒன்றில் கூட மத்திய அரசு இந்த நிலையை திட்டவட்டமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது என்று செய்தித்தாள்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. இருந்தும் தமிழக மீனவர்கள் ஏன் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்றால் அங்கு மீன் அதிகமாகக் கிடைப்பதேயாகும். இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்.

இருந்தாலும் இந்த சிறை பிடிப்பு, கடிதங்கள், மீனவர் விடுதலை என்கிற நாடகம் ஏன் தொடர்ந்து நடக்கிறது என்றால், வெறும் வாயையே எத்தனை நாளைக்குத்தான் மெல்லுவது? கொஞ்சம் அவல் இருந்தால் நல்லதுதானே என்கிற நடைமுறைத் தத்துவம்தான்.

வியாழன், 31 ஜூலை, 2014

புரதங்களும் மனித உணவும்


மாவுச்சத்துக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு வேண்டியது புரதச்சத்தாகும். அடுத்தபடியாக என்று வரிசைக் கிரமத்திற்காக சொன்னேனே தவிர, முக்கியத்துவத்தில் புரதம்தான் முதலாவதாக இருக்கின்றது.

புரதம் என்பது மாவுச்சத்து கூட நைட்ரஜன் என்ற தனிமமும் சேர்ந்த ஒரு கூட்டுப் பொருளாகும். புரிந்து கொள்ள எளிமைக்காக இப்படி சொன்னேனே தவிர புரதம் என்பது ஒரு தனித்தன்மை கொண்ட அங்ககப் பொருளாகும்.

ஆகாயத்திலுள்ள காற்றில் ஏறக்குறைய 80 சதம் நைட்ரஜன் வாயுதான். ஏன் இதை நாம் அப்படியே நம் உடல் தேவைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்கலாம். நல்ல கேள்விதான். ஆனால் இயற்கையின் மர்மங்களை யார் அறிவார்?

புரதம் என்பது 26 வகையான அமினோஅமிலங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் 10 அமினோ அமிலங்கள் அவசியமானவை என்று வகைப் படுத்தியுள்ளார்கள். காரணம், இவைகளை மனித உடம்பில் தயாரிக்க முடியாது. மற்றவைகளை சமாளித்துக் கொள்ளலாம்.

மனித உடம்பில் உள்ள அனைத்து திசுக்களும் புரதத்தையே ஆதாரமாகக் கொண்டவை. தவிர அனைத்து ஹார்மோன்களும், என்சைம்களும் வைட்டமின்களும் புரதத்தையே ஆதாரமாகக் கொண்டவை. இன்னொரு முக்கியமான விஷயம். பலர் அறிந்திருந்தாலும் நினைவில் வைத்துக்கொள்ளாத ஒரு சமாச்சாரம் என்னவென்றால், நம் உடம்பில் உள்ள பெரும்பாலான திசுக்களின் ஆயுட்காலம் சராசரியாக15 நாட்கள்தான். அதன் பிறகு அந்த திசுக்களை அழித்து விட்டு அவைகளின் இடத்தில் புது திசுக்களை நம் உடம்பு உண்டுபண்ணிக்கொள்கிறது.

இந்த ரிப்பேர் வேலை நம் ஆயுட்காலம் முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. எலும்புகளும் மூளையும் இதற்கு விதிவிலக்கு. எலும்பு திசுக்களின் ஆயுட்காலம் 25-30 வருடங்கள். மூளை திசுக்கள் எப்போதும் அழிவதில்லை. (அவ்வப்போது மூளையும் தன்னைப் புதிப்பித்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நான் எப்போது உன்னிடம் கடன் வாங்கினேன் என்று கூசாமல் சொல்லலாம்).

இந்த திசுக்களை புதிப்பிக்கும் வேலைக்கு புரதம் கண்டிப்பாகத் தேவை. புரதம் பற்றாக்குறை இருந்தால் இந்த வேலை நடக்காது. அப்போது மனிதனின் அவயவங்கள் தங்கள் வேலைகளைச் செய்வது நின்று போய்விடும். அப்புறம் என்ன நடக்கும் என்பது நீங்கள் அறிந்ததுதான்.

உங்கள் மனதில் தோன்றும் ஒரு கேள்விக்கு இங்கேயே பதில் கூறி விடுகிறேன். பழைய திசுக்களை அழிக்கும்போது அதில் இருக்கும் புரதத்தை வைத்து ஏன் மறு சுழற்சி முறையில் புது திசுக்களை உண்டு பண்ணக்கூடாது? நல்ல கேள்விதான். ஆனால் சாதாரண மனிதர்களால் அப்படி மறுசுழற்சி செய்ய முடியாது. பழங்கால சித்தர்கள் இந்த வித்தையைக் கற்றிருக்கலாம். அதனால்தான் அவர்கள் காற்றையே உட்கொண்டு ஜீவித்திருந்தார்கள் என்று புத்தகங்களில் படிக்கிறோம்.

பழைய திசுக்களை அழிக்கும்போது புரதச்சத்து பெரும்பாலும் அழிக்கப்பட்டு, அதிலுள்ள நைட்ரஜன் தனிமம் யூரியாவாக மாறுகின்றது. இந்த யூரியாதான் சிறுநீரகங்கள் மூலமாகப் பிரிக்கப்பட்டு சிறுநீராக மாறி வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு யூரியா வெளியேற்றப்பட-வில்லையானால் இரத்தத்தில் யூரியா அதிகம் சேர்ந்து பல வியாதிகளைத் தோற்றுவிக்கும்.

நமக்கு புரதம் பல வகைகளில் கிடைக்கிறது. நாம் உணவில் பயன்படுத்தும் பருப்பு வகைகள்தாம் முக்கியமாக நமக்கு புரதத்தைத் தருகின்றன. அரிசி. கோதுமை போன்ற தானியங்களிலும் புரதம் இருந்தாலும் அவை மிகக் குறைவாக இருப்பதால் நம் உடலின் தேவைக்குப் போதாது. ஆகவேதான் புரதம் அதிகமுள்ள பருப்பு வகைகளை உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

பருப்புகளை மட்டும் நம்பியிருக்கும் சாகபட்சிணிக்காரர்களுக்கு ஒரு சங்கடம் இருக்கிறது. நமக்கு வேண்டிய அனைத்து அமினோ அமிலங்களும் கொண்ட பருப்பு வகைகள் இல்லை. ஆகையால் பல வகையான பருப்புகளை நம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இக்குறையை ஓரளவு சரிக்கட்டலாம். ஆனாலும் அந்த முறை முழுமையாக நம் புரதத் தேவையை ஈடு கட்டாது.

மனிதனுக்கு வேண்டிய அனைத்து அமினோ அமிலங்களும் கொண்ட புரதம் மாமிச உணவில்தான் இருக்கிறது. பால், முட்டை, மீன், கோழி, ஆடு, மாடு, இன்ன பிற. நான் சாக பட்சிணி என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் பாலை மாமிச உணவு என்று கருதுவதில்லை. அதனால்தான் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் முட்டையை வெஜிடபிள் கணக்கில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் வெஜிடபிள் முட்டை என்று இப்பொழுது குஞ்சு பொரிக்காத முட்டைகள் அதிகம் உற்பத்தியாகின்றன. மங்களூரிலும் வங்காளத்திலும் பிராமணர்கள் கூட மீன் சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விவகாரம் அவரவர்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்டது.

ஆனால் மனிதன் தான் சாப்பிடும் உணவில் போதுமான புரதச்சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.