வெள்ளி, 9 ஜனவரி, 2015

இரட்டை வாழ்க்கை

                            
என் "மூடத்தனமான பதிவுகள்" என்ற பதிவிற்கு வருண்
அவர்களின் பின்னூட்டத்தில் இருந்து ஒரு பகுதி.

வருண்வெள்ளி, 9 ஜனவரி, 2015 ’அன்று’ 3:26:00 முற்பகல் IST

Please dont get mad at me too! It is very hard to understand your separate "scientific" and "cultural" views for anyone like me! It may be my ignorance but I have to tell you my ignorance here so that you can understand lots of "ignorant people" around here. Not just Karthik ammA or, dharumi sir.. There are many more..

இந்தக் குறிப்பிற்கு பின்னூட்டத்திலேயே பதில் எழுதினால் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால் ஒரு தனிப்பதிவாகப் போடுகிறேன்.

நாம் ஒவ்வொருவரும் இரட்டை வாழ்க்கை வாழ்கிறோம் என்பது என் கருத்து. அப்படியில்லாமல் உள்ளும் புறமும் ஒரே மாதிரியாக இருப்பது என்பது ஞானிகளுக்கே முடியக்கூடியது.

சில உதாரணங்களுடன் சொல்கிறேன்.

நாம் பலருடன் பழகுகிறோம். சிலரைப் பிடிக்கிறது. சிலரைப் பிடிக்கவில்லை. பிடிக்காதவர்களுடனும் பழகும்போது நமக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்பதைக் காட்டிக்கொள்ளாமல்தான் பழகுகிறோம். 

நம் உறவினர்கள் ஏதாவது ஒரு பிரச்சினையில் நம் யோசனையைக் கேட்கும்போது அவர்கள் மனதிற்குப் பிடித்ததைத்தான் சொல்கிறோமே தவிர நம் உண்மையான கருத்தைச் சொல்வதில்லை.

நம் முன்னோர்கள் திவசத்தன்று நாம் கொடுக்கும் உணவை காகமாக வந்து ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனாலும் நான் தவறாது திவசம் கொடுத்துக்கொண்டு வருகிறேன். முன்னோர்களை நினைக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று எடுத்துக்கொள்கிறேன்.

இது தவிர நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் குடும்பத்தினருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் என் செயல்களினால் மனவருத்தம் அடைந்தால் பிறகு நான் ஒரு நல்ல குடும்பத்தலைவன் அல்ல. குடும்பத்தை விட்டு துறவறம் கொள்ளவேண்டும். அங்கு போனாலும் என் மனதிற்குத் தொன்றியவாறு இருக்க முடியாது. துறவிகளுக்கு என்று இருக்கும் கோட்பாடுகளைத் தழுவியே நான் வாழவேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் நாம் இரட்டை வாழ்க்கைதான் வாழ்கிறோம். இதைத்தான் நான் என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

Scientific view என்று நான் குறிப்பிடுவது, எனது படிப்பு, அதன் விளைவான சிந்தனைகள், அதனால் உருவான என் மனதில் இருக்கும் சில கருத்துகள் இவைகள்தான். பதிவுலகில்தான் நான் ஒரு Ph.D.  என்பதைத் தெரிவித்திருக்கிறேன். என் உறவினர்களுக்கு இந்தப் படிப்பைப் பற்றி இருபது முப்பது வருடங்களுக்கு முன் எதுவும் தெரியாது. நானும் என் படிப்பைப் பற்றியோ உத்தியோகத்தைப் பற்றியோ யாரிடமும் பேசியதில்லை. 

என் உறவினர்களின் நிலைக்குத் தகுந்த மாதிரிதான் நடந்து கொண்டுள்ளேன்.
தடைமுறை வாழ்க்கையில் இந்த வழி அவசியமானது.

Cultural view என்று நான் சொல்ல விழைவது. எனக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் நம்பிக்கை இல்லை. ஆனால் என் மனைவி தினமும் ஒரு மணி நேரம் சாமி கும்பிடுகிறாள். அவளுடைய திருப்திக்காக நானும் சாமி கும்பிடுகிறேன். இது ஒரு குடும்ப பாரம்பரியத்தைக் காக்கும் ஒரு செயல்.

நானும் என் மனைவியும் எப்படி வாழ்கிறோம் என்பதை என் வாரிசுகள் கவனிக்கிறார்கள். அதிலுள்ள நன்மை தீமைகளை அவர்கள் சிந்திக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு நான் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறேன். தவறான பழக்க வழக்கங்களை நான் கடைப்பிடித்தால் அவர்களின் வாழ்வும் சிதறிப்போக வாய்ப்பு இருக்கிறது. அதனால் நான் குடும்பக் கலாச்சாரத்தை அனுசரித்துப் போகவேண்டிய கடமை இருக்கிறது.

என் குடும்பத்தினரின் வாழ்க்கை வேறு, என் வாழ்க்கை வேறு, நான் என் மனது சொல்கிற மாதிரிதான் வாழ்வேன் என்று நடைமுறை வாழ்க்கையில் சொல்ல முடியாது.

பதிவுலகம் ஒரு மாயா உலகம். இதில் நடப்பவை எதுவும் என் உலக வாழ்க்கையைப் பாதிக்கப்போவதில்லை. இங்கு நான் என் மனம்போல் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் இருக்க முடிகிறதா? இல்லையே.

வியாழன், 8 ஜனவரி, 2015

மூடத்தனமான பதிவுகள்

சமீபத்தில் நான்  "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்பதைப் பற்றி ஒரு பதிவு எழுதியது பதிவுலக நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.

பதிவுலகில் சில எழுதாத கோட்பாடுகள் உண்டு. இது அந்தந்தப் பதிவர்கள் தாங்களாகவே கடைப்பிடிக்கவேண்டியவை. நான் கடைப்பிடிக்கும் சில கோட்பாடுகள்.

1. பதிவில் எழுதும் கருத்துகள் அந்தந்தப் பதிவரின் சொந்தக் கருத்தானாலும், இரவல் கருத்தானாலும், அந்தக் கருத்துகளுக்கு அவர் பொறுப்பாளி ஆகிறார். அதற்கு எதிராக யாராவது பின்னூட்டம் போட்டால் அதற்கு பதிலளிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு அவருக்கு உண்டு.

2. பதிவில் எழுதப்பட்ட அனைத்தும் பொதுச் சொத்தாகிறது. ஏனென்றால் இது ஒரு பொது வெளி. ஒருவர் தனக்குத் தோன்றியதை எல்லாம் எழுதிவிட்டு, இது என் சொந்தக் கருத்துகள். இதைப் பற்றி விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்லக்கூடாது.

2. அது மாதிரியே அந்தப் பதிவில் பின்னூட்டம் எழுதுபவர்களும் அவர்கள் கூறும் கருத்துகளுக்குப் பொறுப்பாளி ஆகிறார்கள். 

நான் எழுதிய "குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை" என்ற பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்.

எவ்வளவு மூடத்தனமான குறிப்புகள். வாசல் எங்கே இருக்கிறது , சாணம் தெளிக்க? பொட்டில்லாமல் இருக்கக் கூடாது சரி, அப்படியானால் கணவனை இழந்தோர்? தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.
--
இந்தப் பின்னூட்டம் எனக்கு கோபத்தை வரவழைத்தது. (கோபம் வருவது குற்றம் அல்ல என்று நான் நினைக்கிறேன்.) அதனால் அந்தப் பின்னூட்டத்திற்கு நான் கொடுத்த பதில்.

  1. //தயவு செய்து அறிவியல் ரீதியான விஷயங்களை தாருங்கள்.//

    அது தெரியாத மூடனாக இருப்பதால்தானே இப்படிப்பட்ட பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

    அறிவியல் ரீதியான விஷயங்களைத் தருவதற்குத்தான் உங்களைப் போன்றவர்கள் இருக்கிறார்களே?
    நீக்கு
  2. இந்தப் பதிலில் நான் யாரையும் குறை கூறவில்லை. இதைப் பார்த்து விட்டு திரு. தருமி அவர்கள் எழுதிய பின்னூட்டமும் அதற்கு நான் எழுதிய பதிலும்.
  3. மன்னிக்கவும் திரு கந்தசாமி. எனக்கும் மேலே பொன்னியின் செல்வன் கருத்து தான் இப்பதிவைப் படித்ததும் ஏற்பட்டது. அதனால் தான் உ’உள்குத்தோடு’ ஒரு பின்னூட்டம் முதலில் இட்டேன்.
    இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால், பின்னூட்டம் இட்ட பலரும் இப்பதிவில் உள்ளவைகளைப் பொன்வாசகங்களாக ஏற்றுக் கொண்டு விட்டார்களே என்பது தான்!
    உங்களுக்கும் இதைப் பற்றிக் கூறியதும் கோபம் வந்து விட்டது. உங்கள் படிப்பு, அறிவு, வயது வைத்துப் பார்க்கும் போது நீங்கள் எப்படிங்க அறிவியல் தெரியாத ....க இருக்க முடியும்!!??
    நீக்கு
  4. நண்பரே, அறிவியல் என்பதுவும் ஒரு மக்கள் இனத்தின் கலாச்சாரமும் வேறு வேறு என்று நான் கருதுகிறேன். ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் என்பதில் நமக்குள் வேறுபாடுகள் இல்லை என்று நான் நம்புகிறேன். கலாச்சாரம் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் அந்தந்த இனங்களின் பழக்க வழக்கங்கள்தான். அவை அறிவியலுடன் ஒத்துப்போகவேண்டும் என்று எதிர் பார்ப்பதுதான் மூடத்தனம். அந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும். இதுதான் நான் உலக வரலாற்றிலிருந்து அறிந்து கொண்ட பாடம்.

    நான் அறிவியல் பூர்வமாக கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை உணர்கிறேன். ஆனாலும் தினமும் குளித்தவுடன் கடவுள் படத்திற்கு முன் நின்று விபூதி பூசிக்கொள்கிறேன். இது இரட்டை வாழ்வு அல்லது ஆஷாடபூதித்தனம் என்று பலர் நினைக்கலாம். ஆனால் வாழ்க்கையை இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு, வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அறிவியல் விளக்கம் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். மனித மூளைக்கு அப்பாலும் ஏதோ ஒன்று இருக்கிறது, அது நம் வாழ்வோடு பிணைந்து இருக்கிறது என்றும் நம்புகிறேன்.

    கணவனை இழந்தவர்கள் தாங்கள் விதவைகள் என்று காட்டிக்கொள்ள விரும்பினால் காட்டிக்கொள்ளலாம். அது அவரவர்கள் விருப்பம்.

    தங்கள் கருத்தோடு ஒத்துப்போகாதவர்களை அறிவு இல்லாதவர்க்ள என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? என் கருத்துக்களை ஒத்துக் கொள்பவர்களுக்கு அறிவு இல்லை என்று அர்த்தமல்ல. அவர்களும் இனக் கலாச்சாரத்தைப் பேணுவதில் ஆர்வமுள்ளவர்கள் என்றுதான் அர்த்தம்.

    "...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? அல்லது அதற்கு வேறு ஏதாவது பொருளுடன் கிறிப்பிட்டீர்களா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒருவனை இன்னொருவன் அறிவில்லாதவன் என்று கூற அவனுக்கு உரிமை இல்லை. அப்படிக் கூறினால் கூறப்பட்டவனுக்கு கோபம் கொள்ள அதிகாரம் உள்ளது.
    நீக்கு
  5. திருத்தம் "கிறிப்பிட்டீர்களா" இதை "குறிப்பிட்டீர்களா" என்று திருத்தி வாசிக்கவும்.
    நீக்கு
  6. //"...க" என்பதை மசக்கவுண்டன் என்று பொருள் கொள்ளவா? //

    நீங்களே சொன்னீர்களே .. தெரியாத மூடனாக இருப்பதால்தானே .. அதைத் தான் நான் சொன்னேன். ஆனால் நீங்கள் //.."...க" என்பதை மசக்கவுண்டன் ..// என்றீர்களே... அது என்னங்க? ஏதோ சாதிப் பெயர் சொல்லி திட்ற மாதிரி இருக்கே... அப்படி எதுவும் மோசமாவா சொல்லியிருக்கப் போறீங்க..? இருக்காது .. இல்ல?
    நீக்கு
  7. //ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் //

    ஆஹா! இது ரொம்ப நல்லா இருக்கே... பால்ய விதவைக்குத் தலை மழித்து மூலையில் உட்காரவைக்க வேண்டும். ஆம்பள பயலுக அப்படி ஆனா அடுத்ததைக் கட்டிக்கலாம். இதுவும் நம்ப கலாச்சாரம். பொம்பிளை விரதம் இருக்கணும்னா புருஷங்கிட்ட அனுமதி வாங்கணும். ஆம்பள தண்ணியடிக்க அதெல்லாம் தேவையில்லை. இதுவும் நமது கலாச்சாரம்...இப்படியே ‘நம்ப’ கலாச்சாரத்திற்குப்பெரிய பட்டியலே சொல்லலாம். ஆனா நீங்க சொல்றீங்க ...//இந்தப் பழக்க வழக்கங்கள் அழிந்து விட்டால் அந்த இனம் அழிந்து போகும்// அப்டின்றீங்க.... இது சரியான்னு கேட்டா கோபம் வரக்கூடாது; பதில் தான் தரணும்மய்யா.

    நீங்க ஏறக்குறைய காந்தி மாதிரியே பேசுறீங்க. அவர் சொன்னது இந்த மேற்கோள் :”சாதிகளை ஒழித்து, மேற்கத்திய சமுதாயக் கருத்துகளை நாம் மேற்கொண்டால் பிறப்பின் அடிப்படையினால் ஒவ்வொரு சாதியினரும் பரம்பரையாகத் தொடரும் வேலை அமைப்பினை விட்டொழிக்க வேண்டும். ஆனால் இதுவே சாதிகளின் அடிப்படை. பரம்பரையாக வரும் இவ்வழக்கம் அழிக்க முடியாத நிலையான ஒன்றாகும். இதனை மாற்றுவதால் எல்லாமே முரண்பட்டுப் போகும்”.
    நீக்கு

  8. திரு.தருமி ஒரு மூத்த பதிவர். எனக்கு நன்கு அறிமுகமானவர். 
  9. அவர் எழுதிய 
  10. நீங்கள் எப்படிங்க அறிவியல் தெரியாத ....க இருக்க முடியும்!!?? 
  11. என்கிற வாக்கியத்திற்கு எனக்கு இன்னும் பொருள் தெரியவில்லை.

  12. இரண்டாவதாக அவர் செய்யும் வாதத்தில் குறிப்பிட்டவை. நான் எழுதாதவற்றை எல்லாம் சொல்லி என்னை கொம்பு சீவி விடுகிறார்.

  13. உதாரணம்.
  14. 1. பால்ய விதவைக்குத் தலை மழித்து மூலையில் உட்காரவைக்க வேண்டும். ஆம்பள பயலுக அப்படி ஆனா அடுத்ததைக் கட்டிக்கலாம்
  15. 2. ஆம்பள தண்ணியடிக்க அதெல்லாம் தேவையில்லை.
  16. இந்த வார்த்தைகளை நான் என் பதிவில் எங்கும் சொல்லவில்லை. இப்படி சொல்லாத வார்த்தைகளை ஒருவர் வாயில் போட்டு பிடுங்குவதுதான் கொம்பு சீவும் உத்தி.
  17. இந்த கொம்பு சீவும் உத்தி காலம் காலமாக வருவதுதான். அந்த வலையில் பலரும் விழுந்து தங்கள் நடுநிலையை இழந்து வேண்டாத வார்த்தைகளை சொல்லிவிடுவார்கள். கொம்பு சீவுபவர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்.
  18. அதன் பிறகு விவாதம் திசை மாறி, முதலில் எதற்காக விவாதம் ஆரம்பிக்கப்பட்டதோ அதை விட்டு வெகு தூரம் போய்விடும்.
  19. முக்கிய குறிப்பு:
  20. இந்த வாதங்களை நான் ஒரு தனிப்பதிவாகப் போடுவதன் காரணம், இந்தப் பதிவுலகில் உள்ள ஒரு குறைபாடுதான். பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அதை எழுதியவர்கள், எழுதிய பிறகு அழித்து விடமுடியும். நான் அப்படி எழுதவேயில்லை என்று பின்னாளில் சொல்லவும் முடியும். அதனால் இந்த வாதங்களை யாரும் அழிக்காமல் என் நினைவில் வைத்துக் கொள்வதற்காகவும், மற்ற பதிவர்கள் பதுவுலகில் என்னென்ன நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளவும்தான்.

புதன், 7 ஜனவரி, 2015

VGK 14. நீ ..... முன்னாலே போனா .....நா ..... பின்னாலே வாரேன் !


                                       

வைகோ அவர்களின் கதைக்கு நான் எழுதிய விமர்சனம்.

VGK 14. நீ ..... முன்னாலே போனா .....நா ..... பின்னாலே வாரேன் !
(இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.)

அருமையான கதை. இது மட்டுமே இந்தக் கதைக்குப் போதுமான விமர்சனம். ஆனால் நடுவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்பதற்காக கொஞ்சம் விரிவான விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன்.

மனிதனின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் அரிது. நாம் ஒன்றை நினைத்து செய்தால் மற்றவர்களுக்கு அது பிடிக்காது. அதுவும் மனமொத்த தம்பதியினருக்குள் பலவித புரிதல்கள் இருக்கும். அது மற்றவர்களுக்கு புரியாது.

இந்தக் கதை அப்படிப்பட்ட உணர்ச்சிப் போராட்டத்தின் சரித்திரம். தன் மனைவியை மிகவும் நேசித்த ஒருவர் அந்த மனிவியின் இறுதிக்காலத்தில் அவளுடைய ஆசைகளை நிறைவேற்றுகிறார். அவளுக்கு மிகவும் விருப்பமான இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொடுக்கிறார். ஏன் என்றால் அவளுடைய வாழ்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதை அவர் உணர்கிறார்.

ஆனால் மற்றவர்களின் பார்வையில் இது ஒரு கொலை போலத்தான் படும். இந்த உணர்ச்சிப் போராட்டத்தை நுணுக்கமாக கதாசிரியர் விளக்கியிருக்கிறார். இந்த நுணுக்கத்தை அனுபவிக்கவே வாசருக்கு ஒரு தனி மனோபாவம் வேண்டும். அப்படிப்பட்ட மனோபாவம் இல்லாதவர்கள் இந்தக் கதையில் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியாது.

மனைவி இழந்த சோகம் கணவனையும் இறுதி யாத்திரைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. பாகவத சப்தாகம் கேட்டு முடித்தவுடன் இந்த முடிவு ஏற்படுவதாக காண்பித்திருப்பது கதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

அரட்டை ராமசாமி கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கிறார். ஏறக்குறைய அவர்தான் கதையை நகர்த்திச் செல்கிறார் என்றே கூறலாம். ஆசிரியர் இந்தக் கதையை பின்னியிருக்கும் விதம் ஆழ் மனதைத் தொடுகிறது.

திங்கள், 5 ஜனவரி, 2015

ஆண்களுக்கான சில அறிவுரைகள்.

                                             

பொதுவாக ஆண்கள் யாரும் அடுத்தவர்கள் அறிவுரையைக் கேட்கமாட்டார்கள். இருந்தாலும் ஏன் இந்தப் பதிவை எழுதுகிறேன் என்றால் பெண்களுக்கான அறிவுரைகள் சொன்னீர்களே, எங்களுக்கென்று ஒன்றும் இல்லையா என்று சில ஆண்கள் கேட்டதால்தான். இந்தப் பதிவைப் பெண்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.

1. ஆண்கள் என்றால் ஏதாவது ஒரு உத்தியோகம் செய்து வருமானம் ஈட்டவேண்டும். அது மாதச் சம்பளமாகவோ அல்லது வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ இருக்கலாம்.

2. வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் "ஒன் ஸ்டெப் பேக்". உங்களுக்கான அறிவுரை கடைசியில் இருக்கிறது.

3. சம்பளக்காரர்கள் சம்பளம் வாங்கியவுடன் அப்படியே முழுவதையும் மனைவி கையில் கொடுத்து விட்டு அவ்வப்போது தேவைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.

4. வீட்டில் அனைத்து முடிவுகளையும் ஆண்கள்தான் எடுக்கவேண்டும். ஆனால் முதலில் இல்லாளிடம் அனுமதி வாங்கிக்கொள்ளவேண்டும்.

5. எந்தக் காரியமும் வெற்றியடைந்தால் புகழை மனைவிக்குச் சமர்ப்பணம் செய்யவேண்டும். தோல்வியடைந்தால் பழியை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

6. ஆண்களுக்குப் பொருத்தமான உடைகளைத் தேர்வு செய்ய பெண்களே பொருத்தமானவர்கள். ஆகவே உங்கள் உடைகளை அவர்கள் வாங்குவார்கள். அதைக் குறை சொல்லாமல் போட்டுக்கொள்வது உங்கள் கடமை.

7. வெளியில் செல்லும்போது நீங்கள்தான் குடும்பத்தலைவர் என்று காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் எந்த முடிவுகளையும் நீங்களாக எடுக்கக் கூடாது.

8. நண்பர்கள் வந்தால் காப்பி கொண்டு வரச் சொல்லக்கூடாது. அப்படி அவருக்குக் காப்பி கொடுக்கவேண்டுமானால் வெளியில் கூட்டிக்கொண்டு போய் நல்ல காப்பிக்கடையில் காப்பி வாங்கிக் கொடுக்கவும். அப்படியே நீங்களும் ஒரு நல்ல காப்பி குடித்துக் கொள்ளலாம்  இதற்காக அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

9. மனைவி சமைக்கும் சாப்பாட்டில் எந்தக் குறையும் சொல்லக்கூடாது. உப்பு இல்லாவிட்டால் அப்படியே சாப்பிட வேண்டுமே ஒழிய உப்பு இல்லை என்று சொல்லக் கூடாது..

10. கடைசியாக வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உண்டான ஆலோசனை. உங்கள் வியாபாரம் அல்லது தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கிறதா? அப்படியானால் மேற்கண்ட எந்த யோசனைகளையும் கடைப்பிடிக்காதீர்கள்.

11. தொழிலோ அல்லது வியாபாரமோ சரியாக இல்லையா? மனைவியிடம் யோசனை கேட்டு அதன்படியே செய்யுங்கள். ஆறு மாதத்தில் தொழில் அல்லது வியாபாரம் முடிவுக்கு வந்து விடும். பிறகு மாதச்சம்பளத்தில் சேர்ந்து இங்கு சொன்ன அனைத்து அறிவுரைகளையும் கடைப்பிடிக்கவும்.

இன்னும் நிறைய யோசனைகள் கைவசம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இவ்வளவுக்குத்தான் பர்மிஷன் கிடைத்தது.

                                       

சனி, 3 ஜனவரி, 2015

குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை

                                              

இப்பதிவில் கூறும் குறிப்புகளை ஏற்கெனவே எல்லோரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால் நல்ல விஷயங்களைத் திரும்பவும் கேட்பதில் தவறில்லை. இந்தக் குறிப்புகள் ஒரு கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட கையேட்டில் இருந்து தொகுக்கப்பட்டது.

1. நெற்றியில் பொட்டில்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது.

2. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.

3. பெண்கள் முழுப் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, மணையினாலோ, கத்தியினாலோ முழுப் பூசணிக்காயை வெட்டலாகாது.

4. கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கலாகாது. தேங்காய் உடைக்கும்போது ஏற்படும் நுண்ணலை அதிர்வுகள் கர்ப்பதைதப் பாதிக்கும்.

5. தம்பதியரைச் சேரவிடாமல் கலைப்பது மஹாபாவம். (அப்படிப்பட்ட டிவி சீரியல்களைப் பார்ப்பது அதனினும் மஹாபாவம்.) அப்படி கலைத்துப் பிரித்து வைத்தால் 21 தலைமுறை பாலவிதவைகள் ஆவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. (சீரியல் பார்ப்பவர்களுக்கு தண்டனையில் கொஞ்சம் தள்ளுபடி உண்டு என்று அதே சாஸ்திரங்க்ள சொல்லுகின்றன).

6. இரவில் வீட்டைப் பெருக்கலாகாது.அப்படிப் பெருக்கினாலும் குப்பையைத் தெருவில் கொட்டக்கூடாது. பகலில் குப்பையை வீட்டில் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி குப்பையை வீட்டில் மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாட்களில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.

7. அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலுக்கு சாணம் அல்லது தண்ணீர்  தெளித்து கோலம் போடவேண்டும். இதை வீட்டு எஜமானியே செய்தால் மகாலட்சுமி மிக மகிழ்ச்சியுடன் நம் வீட்டிற்கு வருவாள்.

8. உணவிற்கு இலை போடுமுன் இலைக்கு கீழே பசும்சாணம் அல்லது வெறும் ஜலத்தால் நாலுமூலை சதுரமாக சுத்தம் செய்யவேண்டும்.

9. கையால் அன்னத்தையோ காய்களிகளையோ பரிமாறக்கூடாது. கரண்டியால் அமுதுகளைப் பரிமாறினால் தீமை வராது.

10. ஓர் இலைக்குப் பரிமாறிய மிச்சத்தை அடுத்த இலைக்குப் பரிமாறக்கூடாது.

11. தன் கணவன் அனுமதி பெற்றுத்தான் தானதர்மம், விரதம் ஆகியவைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

12. எந்தப் பொருளையும் இல்லையென்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்று கூறவேண்டும்.

13. எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது. அழுத வீட்டில் செல்வம் நிலைக்காது.

14. துன்பம் நேரும்போது வாய் விட்டு அசுப வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.

15.நம் இல்லத்திற்கு சுமங்கலிகள் வந்தால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, உபசரித்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூ கொடுத்து உபசரிக்கவேண்டும்.

16. குடும்பப் பெண்கள் எப்பொழுதும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கக்  கூடாது.


இவையெல்லாம் ஆணாதிக்கவாதிகள் சொல்லிவைத்துப் போனவை என்று நினைக்கும் பெண்கள் இவைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

வியாழன், 1 ஜனவரி, 2015

புது வருட வாழ்த்துக்கள்.

                         


                            

அனைத்து பதிவுலக நண்பர்களும் (நண்பிகளுக்கும் சேர்த்துத்தான்) புது வருடத்தில் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.




புதன், 31 டிசம்பர், 2014

தொழில் நுட்பப் பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

                                                
புதிதாக சந்தைக்கு வரும் தொழில் நுட்பங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் தொழில் நுட்பப் பதிவர்களின் பங்கு பாராட்டிற்குரியது. ஆனால் அதே சமயம் அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம் என்பதை அவர்கள் உணரவேண்டும். பதிவு போடுவதற்காக ஏதோ ஒன்றைப் பதிவிட்டு விட்டு, மற்றதெல்லாம் அவரவர்கள் பாடு என்று போவது நல்ல வழியல்ல.

என்னுடைய "மீண்டும் கையைச் சுட்டுக்கொண்டேன்"  என்கிற பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதில் பலரும் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னவென்றால், "எந்தத் தளத்தில் கூறிய எந்த புரொக்ராமை தரவிறக்கும்போது அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது, அதை எங்களுக்கும் சொன்னால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமே" என்பதாகும்.

நான் அதை வெளிப்படையாகச் சொல்லாததற்குக் காரணம் ஒரு பதிவர் தன்னையறியாமல் தவறு செய்திருக்கலாம். அதைச் சொல்லி அவருடைய மனதை புண்படுத்தக்கூடாது என்பதால்தான். ஆனால் பதிவுலக மக்கள் தொழில் நுட்ப விஷயங்களுக்கு தங்களுக்கு ஒரு வழி காட்டுதல் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆகவே தொழில் நுட்பம் பற்றி எழுதும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி வரும் காலத்தில் நீங்கள் எழுதும் பதிவுகளில் கூறும் புரொக்ராம்களை நீங்களே சோதித்து அதில் உள்ள சாதக பாதகங்களையும் குறிப்பிட்டு எழுதினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. இவன் யார் எங்களுக்கு நாட்டாமை செய்ய என்று யாராவது நினைத்தால் இந்தப் பதிவை எழுதியதற்காக என்னை மன்னித்து விடவும். அப்படி மன்னிக்க முடியாவிட்டால் ஏதாவது நல்ல சாபம் கொடுக்கவும். "துபாய் சென்று தங்கக்காரைப் பார்த்து வயிற்றெரிச்சலில் வேகவும்" என்கிற மாதிரி சாபம் கொடுக்கவும்.