திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தமிழ் விக்கிபீடியா

                                             Image result for தமிழ் விக்கிபீடியா

விக்கிபீடியா என்ற சொல்லை அன்பர்கள் கேளவிப் பட்டிருக்கலாம். இது ஒரு கலைக் களஞ்சியம். இது பல வருடங்களாக ஆங்கிலத்தில் இருக்கிறது. இதில் கிடைக்காத விவரங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு விளக்கமான கட்டுரைகள் இருக்கின்றன. சமீப வருடங்களில் தமிழிலும் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது நாள் வரை நான் இதை எப்போதாவது உபயோகித்து வந்திருக்கிறேனே தவிர இதில் கட்டுரை எல்லாம் எழுதியதில்லை. பதிவர் முனைவர் ஜம்புலிங்கம் இதைப் பற்றி இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். விக்கிபீடியாவில் பயனராகி அதில் கட்டுரைகள் எழுதிவது எப்படி என்று விளக்கங்கள் அளித்திருக்கிறார்.

பல பதிவர்கள் அதில் தாங்களும் சேர்வதாகப் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். நான் இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த தமிழ் விக்கிபீடியாவில் பயனராக இணைந்து ஒரு கட்டுரையையும் அதில் பதிந்து விட்டேன். (இந்த மாதிரி அவசரங்களுக்குத் தேவைப் படும் என்று சில கட்டுரைகளை கைவசம் வைத்திருப்பேன்)

இதன் தொடர்பு: https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D&redirect=no

முடிந்தவர்கள் சென்று பார்க்கவும்.

 பதிவர் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் கடிதத்தைப் பாருங்கள்.

அன்புடையீர், 
வணக்கம்.
தமிழ் விக்கிபீடியாவில் அண்மையில் 200ஆவது பதிவினை (article) நிறைவு செய்ததை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது, வலைப்பூ நண்பர்கள் தமிழ் விக்கிபீடியாவில் எழுதும் முறையைப் பற்றி ஒரு பதிவினைப் பதியும்படிக் கேட்டிருந்தனர். எனது அனுபவத்தில் நான் கற்றவற்றைப் பகிர்கிறேன். இன்னும் பல நான் கற்கும் நிலையில் உள்ளேன். இப்பதிவில் விக்கிபீடியாவில் பயனராவதைப் (User) பற்றி அறிவோம். பயனராவோம். வாருங்கள்.
அன்புடன்,ஜம்புலிங்கம்
இணைப்பு : 


பதிவுகள் எழுதினால் அதற்கு உடனேயே கருத்துகள்  வந்து விடும். அப்படியேதான் முகநூல், ட்விட்டர் போன்றவைகளும். ஆனால் விக்கிபீடியாவில் எழுதினால் அதை யாராவது படித்தார்களா இல்லையா என்கிற விவரங்கள் நமக்கு உடனடியாகத் தெரியாது. அது ஒன்றே இதில் உள்ள குறைபாடு. 

நாம் விக்கிபீடியாவில் எழுதுகிறோமோ இல்லையோ, அதை பல விவரங்கள் சேகரிப்பதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். என் மாதிரி பதிவர்கள் பதிவுகளுக்கு விசயம் இல்லையென்றால் உடனே இங்கு சென்று ஏதாவது ஒரு கட்டுரையை காப்பி பேஸ்ட் செய்து ஒரு பதிவை உடனடியாகத் தேத்திக்கொள்ளலாம். பதிவுலகில் சிலர், ஐயோ, என் பதிவைக் காப்பி அடிச்சிட்டான் என்கிற மாதிரி இந்த விக்கிபீடியாவில் யாரும் புலம்ப மாட்டார்கள். அது ஒரு பெரிய சௌகரியமல்லவா?

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

பசித்தவன் பழங்கணக்கு பார்த்தானாம்

                                            

சில நாட்கள் முன்பு பிரபல பதிவர் திரு. வை கோபாலகிருஷணன் ஒரு சிறுகதை விமரிசனப்போட்டி வைத்தது எல்லோரும் அறிந்ததே. சிறுகதைகளுக்கு விமரிசனம் எழுதுவது என்பது சிறுகதை எழுதுவதை விடக் கடினமானது என்பதை இந்தப் போட்டியில் பங்கு பெற்றபோதுதான் அறிந்தேன்.

நான் சிறுகதைகளை ஆவலுடன் படிப்பேன். சில சமயம் இந்த எழுத்தாளர்கள் எப்படி துளியூண்டு கருவை வைத்துக்கொண்டு இம்மாம் பெரிய கதைகளை எழுதுகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுக் கொள்வேன்.

திரு வைகோ அவர்கள் வைத்த 40 சிறுகதை விமரிசனப் போட்டியில் எல்லாவற்றிலும் கலந்து கொண்டேன். ஒரே ஒரு மூன்றாம் பரிசும் ஒரு ஆறுதல் பரிசும் மட்டுமே கிடைத்தன. இருந்தாலும் போட்டியில் கலந்து கொண்டேன் என்ற மனத்திருப்தி கிடைத்தது. நான் எழுதின விமரிசனங்கள் சிலவற்றை சில காலம் முன்பு இந்தத் தளத்தில் வெளியிட்டேன். பிறகு ஏனோ பல காரணங்களால் நின்று விட்டது.

இப்போது தொடர்ந்து அந்த விமரிசனங்களை வெளியிடப்போகிறேன். அதற்கு என்ன திடீர் என்று ஞானோதயம் வந்து விட்டது என்று கேட்பவர்களுக்காக இந்த பதில். ஞானோதயம் ஒன்றும் வரவில்லை. பதிவு எழுத விஷயம் இல்லை. அதனால் பழைய சோற்றை சூடாக்கிக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்.

இந்த விமரிசனத்திற்கு உண்டான கதை வைகோவின் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

VGK 17 - சூ ழ் நி லை

விமர்சனம்.

மனிதர்கள் அனைவரும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களே. அதுவும் போனில் பேசம்போது எதிர்பக்கத்திலிருந்து வரும் செய்திக்கேற்ப உணர்ச்சிகளை காட்டாமலிருப்பவர்கள் அபூர்வம்.

அப்படிப்பட்ட ஒரு மனிதரை நமக்கு படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் திரு. வைகோ அவர்கள். அலங்காரத்திற்காக இரண்டு உப-பாத்திரங்கள். மனவியும் மகளும். ஆனால் அவர்கள் இந்த மனிதருடன் பல காலம் பழகியும் இவருடைய அந்தரங்கத்தை படிக்கவில்லையே என்பது கதையின் ஒரு குறை.

கடைசியில் சிக்கல்கள் தீர்ந்து கதை சுபமாய் முடிவது மனதிற்கு சந்தோஷத்தைத் தருகிறது. மணப்பெண் ஜெயா சகல சௌபாக்கியங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதிற்குள் வாழ்த்துகிறோம்.


சனி, 8 ஆகஸ்ட், 2015

ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு



இந்த வசனத்தை கிராமங்களில் உள்ள வயசானவர்கள் அடிக்கடி சொல்வார்கள். ஏனென்றால் இந்த வயசில் உள்ளவர்கள் எந்த விளைவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் காரியங்கள் செய்வார்கள்.

அது என்ன வயசு என்று கேட்கிறீர்களா? 16 முதல் 22 வரையிலான வயசுதான் ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயசு.

செய்தித் தாள்களில் இப்போது இருவகையான விபத்துகள் அடிக்கடி வருகின்றன. ஒன்று இருசக்கர வாகனங்களின் விபத்து. இன்னொன்று தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களைப் பற்றிய செய்தி.

இந்த இருவகை விபத்துகளிலும் உயிரிழப்பவர்களின் வயதைப் பார்த்தால் இந்த ஒடுகிற பாம்பை மிதிக்கும் வயசாகத்தான் இருக்கிறது. விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் இவ்வாறு விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் இந்த இளைஞர்களுடைய பெற்றோரின் நிலை எப்படியிருக்கும்?

ஏன் இளைஞர்கள் இவ்வாறு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள்? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

கொஞ்சம் வரலாறு

                                            Image result for drinking picture cartoon
தமிழ்நாட்டில் 1960 களில் காங்கிரஸ் கோலோச்சிக்கொண்டு இருந்தது. திமுக அப்போது அண்ணாத்துரை தலைமையில் பெரியாரின் பிடியிலிருந்து வெளி வந்த காலம். அது வரை அந்தக்கட்சியின் குறிக்கோள் சமுதாய சீர்திருத்தம் மட்டுமே. கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு, கலப்புத் திருமணங்கள் ஆகியவையே கட்சியின் பிரதானக் கொள்கைகளாக இருந்தன. அண்ணாத்துரையும் மற்ற கழகக் கண்மணிகளும் யோசித்தார்கள். நாம் இப்படியே இருந்தால் கட்சியும் வளராது, நாமும் வளரமாட்டோம் என்பதை உணர்ந்தார்கள். அரசியலில் இறங்கினால் ஒழிய கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று முடிவு செய்தார்கள்.

அரசியல் என்றால் என்ன? போராட்டம், மறியல், கடையடைப்பு, இத்தியாதிகள்தான். அண்ணாத்துரைக்கு எப்போதும் மாணவர்களின் ஆதரவு உண்டு. அவருடைய பேச்சு வன்மையில் அவர்கள் மயங்கிக்கிடந்தார்கள்.மாணவர்களை அவரால் எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடியும். இதுதான் கட்சியின் ஒரே பலம். அது வரை காங்கிரஸ் கட்சி மாணவர்களுக்கு எந்த விதமான அரசியல் அங்கீகாரமும் தந்ததில்லை. மாணவர்களின் வேலை படிப்பதுதான். அவர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்ற கொள்கையில் இருந்தார்கள். அப்போது மத்திய அரசு இந்திக்கொள்கையப் பரப்பிக்கொண்டு இருந்தார்கள்.

திமுக பல காலமாக இந்தி எதிர்ப்புக்கொள்கையை கடைப்பிடித்து வந்தது. இந்த இரண்டு நிலைகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த திமுக தலைவர்கள் முடிவு செய்தார்கள். இதில் உள்ள மற்றொரு சௌகரியம் என்னவென்றால் மாணவர்கள் என்ன ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவர்களை அரசும் போலீசும் ஒரு கருணை மனோபாவத்துடன்தான் நடத்துவார்கள். இதை நன்கு உணர்ந்திருந்த திமுக தலைமை அனைத்து கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் திமுக மாணவர் அமைப்பை ரகசியமாக ஆரம்பித்தார்கள். திமுக வரப்போகும் பொதுத்தேர்தலில் பங்கேற்கும் என்று விளம்பரம் செய்து தங்கள் கட்சியை அரசியல் கட்சியாகப் பிரகடனம் செய்தார்கள்.

திரு. பக்தவத்சலம் அப்போது தமிழ்நாட்டின் முதல் மந்திரி. அரிசிக்கு மிகவும் தட்டுப்பாடு. இதனால் மக்கள் அப்போதைய அரசின் மீது மிகவும் அதிருப்தியுடன் இருந்தார்கள். இந்த சூழ்நிலையை திமுக பயன்படுத்திக்கொண்டது. மாநிலம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பித்தன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் மாணவர் அமைப்புகளே நடத்தின. ஆனால் பின்புலத்தில் திமுக வின் மூளை வேலை செய்தது.

போராட்டங்கள் வலுவடைந்தன. மாணவர் தலைவர்கள் முதல் மந்திரியைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கச் சென்றார்கள். இங்குதான் பக்தவத்சலம் ஒரு மாபெரும் தவறைச் செய்தார். சூதை சூதினால்தான் வெல்லவேண்டும். இந்த ராஜதந்திரம் அவருக்குத் தெரியவில்லை. மாணவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார். இந்த நிகழ்வு மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. திமுக இந்த மனநிலைக்கு நன்றாக எண்ணை ஊற்றி எரிய வைத்தார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. ஊரிலுள்ள அனைத்து போக்கிரிகளும் சந்தடி சாக்கில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது. 150 பேருக்கு மேல் இறந்தார்கள். இறந்தவர்களில் மாணவர்கள் யாரும் இல்லை. எல்லாம் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்த போக்கிரிகள்தான். கடைசியில் பக்தவத்சலம் வழிக்கு வந்து ஒருமாதிரியாகப் போராட்டங்கள் ஓய்ந்தன. ஆனால் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனப்பான்மை வளர்ந்து விட்டது.

அடுத்த வருடம் தேர்தலில் திமுக அமோக வெற்றி அடைந்தது. அண்ணாத்துரை முதல் மந்திரியானார். பக்தவத்சலம் காணாமல் போனார். பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்.

திமுக வின் இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம் மாணவர்களின் பங்களிப்பே. இந்த உண்மையை திமுக மறக்கவில்லை. இப்போது அதன் அரசியல் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அடுத்த வருடம் தேர்தல் வருகிறது. என்ன செய்யலாம் என்று பார்த்தார்கள். மக்ளுக்கு மதுவிலக்கின் பேரில் திடீரென்று ஒரு வித அபிமானம் தோன்றி விட்டது. இதுதான் நல்ல சாக்கு என்று திமுக களத்தில் இறங்கி மாணவர்களைத் தூண்டி விட்டு போராட்டங்களை ஆரம்பித்து நடத்துகிறது.

ஆளும் கட்சி இலவசங்களை மானாவாரியாக ஆரம்பித்து விட்டு நிதி நிலைமை மிகப் பற்றாக்குறையில் இருக்கிறது. மதுவிலக்கைக் கொண்டு வர முடியாது. ஆகவே மதுவிலக்குப் போராட்டங்களை ஒடுக்கியே ஆக வேண்டும். மக்ளின் நலன்களில் ஒரு கட்சிக்கும் ஆசை இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் தங்களை கல்லாவை நிரப்பிக்கொள்ளவேண்டும். இதுதான் இந்த இரண்டு கட்சிக்காரர்களின் நோக்கம். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

கோபியில் ஒரு விபத்து.

கார் மீது மரம் விழுந்து 4 பேர் நசுங்கி சாவு. 5 பேர் படுகாயம்.

இந்தச் செய்தி தினத்தந்தி, கோவை பதிப்பில் 4-8-2015 அன்று வெளியாகி இருந்தது. காரை ஓட்டியவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்துவிட்டார்கள். அதில் காரை ஓட்டியவரின் மனைவியும் ஒருவர்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது கோபி அருகில் பலத்த மழை பெய்து கொண்டிருந்திருக்கிறது. அப்போது ரோடில் இருந்த ஒரு மரம் காரின் மீது விழுந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இது ஒரு மிக துர்ப்பாக்கியமான செய்தி.

இந்த துக்கத்திற்கு அப்பால் நாம் யோசித்தால் இந்த விபத்திற்கு என்ன காரணம் என்று கூறுவதற்கு வழி ஏதுமில்லை. ஆனால் காரை ஓட்டியவர் ஒரு ஜோதிடர். இந்த மாதிரி ஒரு விபத்து நேரிடக்கூடும் என்பதை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய பரிதாபம்.

இதிலிருந்து நான் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஜோதிடத்தின் மூலம் நடக்கப் போவதைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை என்பதே. அப்படியிருக்க ஏன் பலர் இந்த ஜோதிடத்தை நம்பி தங்கள் குழந்தைகளின் கல்யாண காரியங்களை தள்ளிப் போடுகிறார்கள் என்பதுதான் இந்த 21ம் நூற்றாண்டின் அதிசயம்.






திங்கள், 3 ஆகஸ்ட், 2015

வெற்றி, வெற்றி, வெற்றி

                              Image result for விண்டோஸ் 10
வெற்றி நமதே. ஒருவாறாக விண்டோஸ் 10 ஐ எனது கணினியில் நிறுவி விட்டேன். இதற்காக ஐந்து நாட்கள் ஆராய்ச்சி செய்து மூன்று இரவுகள் தூக்கம் விழித்து பாடுபட்டேன். 

இந்த விண்டோஸ் 10 பதிப்பை வெளியிடுவதற்கு பல நாட்கள் முன்பாகவே உங்களுக்கு இந்த பதிப்பு வேண்டுமா? வேண்டும் என்றால் முன்பதிவு செய்து கொள்ளவும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். நானும் ஆவலுடன் முன்பதிவு செய்து கொண்டேன். ஜூலை மாதம் 29ந் தேதி இந்தப் பதிப்பு உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. வெளியிட்டவுடன் முன்பதிவு செய்தவர்களுக்கெல்லாம் இந்த பதிப்பை நாங்களாகவே உங்கள் கணினிக்கு அனுப்பி விடுவோம். இந்தப் பதிப்பின் கோப்புகள் எல்லாம் வந்து சேர்ந்தவுடன் உங்களுக்கு ஒரு அறிவிப்பு வரும். அந்த அறிவிப்பு வந்தவுடன் நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் மவுஸினால் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் என்றெல்லாம், ஈமு கோழிக்காரன் சொன்னது போல் ஆசை வார்த்தைகள் சொன்னார்கள். 

நானும் இதை முழுதாக நம்பினேன். ஜூலை 29ந் தேதி வந்தது. இணையத்தளங்களில் எல்லாம் சொர்க்கத்திற்கு ரோடு போட்டாயிற்று. அவரவர்கள் தங்கள் தங்கள் வாகனத்தில் சொர்க்கத்திற்குப் புறப்பட வேண்டியதுதான் என்று பயங்கரமாக விளம்பரங்கள் வந்தன. நானும் வாயை ஆவென்று திறந்து வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஒரு நாள் ஆயிற்று, இரண்டு நாள் ஆயிற்று. ரோட்டையும் காணோம், வாகனத்தையும் காணோம். 

என்ன ஆயிற்று என்று விசாரித்தால், மைக்ரோசப்ட் காரன் மெதுவாகச் சொல்கிறான். இந்த விண்டோஸ் 10 க்கு ஏகப்பட்ட கிராக்கி. லட்சக்கணக்கான் பேர் முன் பதிவு செய்திருக்கிறார்கள். நாங்கள் இந்தப் புரொக்ராமை கொஞ்சம் கொஞ்சமாக, அலை அலையாக எல்லோருக்கும் அனுப்புகிறோம். உங்களுக்கு வந்து சேர சில நாட்கள் அல்லது சில வாரங்கள் அல்லது சில மாதங்கள்  ஆகலாம். நீங்கள் பொறுமை காக்க வேண்டும் என்கிறான். எப்படி இருக்கு பாருங்க கதை. எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு.

எனக்குள் இருக்கும் ராட்சதனை மைக்ரோசாப்ட் காரன் உசுப்பி விட்டு விட்டான். அந்த ராட்சதன் சும்மா இருப்பானா? இரவு பகலாக சல்லடை போட்டுத் தேடி ஒரு குறுக்கு வழி இருப்பதைக் கண்டு பிடித்தான். பார்க்க- http://drpkandaswamyphd.blogspot.in/2015/08/windows-10-installation.html உடனே அந்த வழியில் போய் இந்த விண்டோஸ் 10 ஐ என் கணினிக்குக் கொண்டு வந்து நிறுவியாயிற்று. அனாலும் இந்தக் குறுக்கு வழியில் கல்லும் முள்ளும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாகவும் மெதுவாகவும்தான் நடக்க முடியும். எப்படியோ தீவிர முயற்சி செய்து லட்சியத்தை அடைந்து விட்டேன்.

இந்த Teething Trouble என்பார்களே, அந்த தொந்திரவு இருக்கிறது. அந்தப் பற்களையெல்லாம், எனக்குப் பல் பிடுங்கின மாதிரி பிடுங்கி எறிந்து விட்டால் புது வேலைக்காரி ஒழுங்காக வேலை செய்வாள் என்று எதிர்பார்க்கறேன். பாருங்கள், இப்போ இந்தப் பதிவில எழுத்துக்களை பழைய மாதிரி கொண்டு வர முடியவில்லை. ஆனாலும் விடமாட்டேன். எப்படியாவது, எதையாவது நோண்டி சரி செய்து விடுவேன். அது வரைக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

எப்படியோ இந்த ரகளையில் தமிழ் மணம் ரேங்க் 6 லிருந்து 8 ஆக உயர்ந்துள்ளது ஒன்றே ஆறுதலான விஷயம்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஒரு கணக்கு

                                     Image result for mental hospital patients

10 ஆட்கள் ஒரு சுவற்றை 20 நாளில் கட்டிமுடித்தார்கள்.

அப்படியானால் அந்த சுவற்றை 10 நாட்களில் கட்டி முடிக்க எத்தனை ஆட்கள் தேவைப்படும்?

இதை மனக்கணக்காகவே போட்டு முடிக்கலாம். ஆனால் கணக்கு வாத்தியார் ஒத்துக் கொள்ள மாட்டார்.

அவர் சொல்லிக்கொடுத்த வழியிலேயேதான் போடவேண்டும். அப்போதுதான் மார்க் போடுவார்.

விடை: 20 ஆட்கள்.

இதே மாதிரி இன்னோரு கணக்கு.

ஒரு தோசை சுட 5 நிமிடம் ஆகிறது. அப்படியானால் 10 தோசை சுட எவ்வளவு நேரம் ஆகும்?

விடை; 50 நிமிடம்.

இன்னொரு கணக்கு.

ஒரு வீட்டில் துணி துவைக்கிறார்கள். 10 சீலைகள் துவைத்திருக்கிறார்கள். ஒரு சீலை காய இரண்டு மணி நேரம் ஆகிறது. 10 சீலைகளும் காய எவ்வளவு நேரம் ஆகும்?

விடை;  20 மணி நேரம்

விண்டோஸ் 10 எப்ப வரும்?

விடை; சில மணி நேரத்தில், சில நாட்களில், சில வாரங்களில்.

எங்கேயோ கணக்கு தப்பாகி விட்ட மாதிரி தெரிகிறதே. எல்லாம் இந்த விண்டோஸ் 10 பண்ணுகிற வேலை. என்ன செய்கிறோம், எதுக்கு செய்கிறோம் என்றே புரியாமல் செய்து கொண்டு இருக்கிறேன்.

கொஞ்சம் இருங்க, என்னுடைய ஆஸ்தான மன நல டாக்டரைப் பார்த்திட்டு வந்துடறேன்.

வெள்ளி, 31 ஜூலை, 2015

கஞ்சி வரதப்பா ! எங்கே வருதப்பா?

                               Image result for விண்டோஸ் 10
கஞ்சி வரதப்பா என்று ஒருத்தன் சாமி கும்பிட்டானாம். பக்கத்தில் பசியால் வாடிக்கிடந்த ஒருவனுக்கு "கஞ்சி வருதப்பா" என்று கேட்டதாம். உடனே அவன் எங்கே வருதப்பா என்றானாம்.

அது மாதிரி ஆகிப்போச்சு என் கதை. விண்டோஸ் 10 வருது வருது என்று இரண்டு நாட்களாக இரவும் பகலும் காத்திருந்து தூக்கம் போனதுதான் மிச்சம். ஒன்றையும் காணோம். வேற வேலை எதுவும் ஓட மாட்டேங்கிறது.

இப்ப லேடஸ்ட் செய்தி என்னவென்றால் அது வருவதற்கு வாரக்கணக்குல் அல்லது மாதக் கணக்கில் ஆகலாம் என்கிறார்கள். இதை வீண்டோஸ் 10 புரொக்கராமை தேனாம்பேட்டை காங்கிரஸ் கிரவுண்டில் கொடுப்பதாக மைக்ரோசாப்ட் காரன் சொல்லியிருந்தால் அப்துல் கலாம் இறுதிச்சடங்குக்கு ஒருவரும் போயிருக்கமாட்டார்கள்.

போகட்டும். யாராச்சும் இந்த விண்டோஸ் 10 புரொக்ராமை இன்ஸ்டால் பண்ணிட்டீங்களா? சொன்னீங்கன்னா நான் வயித்தெரிச்சல் பட தோதாயிருக்கும்.

புதன், 29 ஜூலை, 2015

புலி வருது புலி வருது வந்துட்டே இருக்கிறது.

                               Image result for windows 10
விண்டோஸ் 10 ஜூலை மாதம் 29ந் தேதி வருகிறது என்று உலகம் பூராவும் மைக்ரோ சாப்ட்காரன் தண்டோரா போட்டான். இண்ணைக்கு 29 ந் தேதி வந்துட்டுது. விண்டோஸ் 10 ஐத்தான் காணோம். நெறயப் பேருக்கு கொடுக்கோணுமாம். அதனால மெதுவாத்தான் கொடுப்பானாம்.

நான் பல் போன வாயை அகலமாகத் தொறந்து வச்சுட்டுக் காத்திருக்கேன். ஓசியில கொடுக்கான்னா காத்துத்தானே ஆகணும்.