செவ்வாய், 24 மே, 2011

மனித வாழ்வில் வக்கிரங்கள்



நடைமுறை வாழ்வில் பலதரப்பட்ட மனித இயல்புகளைப் பார்க்கிறோம். பெரும்பாலானவை நடைமுறை பண்புகளுக்கும் நாகரீகத்திற்கும் ஒத்துப் போகின்றன. சில சமயங்களில் மனித மனங்களின் வக்கிரங்களும் வெளிப்படுகின்றன. ஆனால் அதை நாம் வெளிச்சம் போட்டு விளம்பரம் செய்வதில்லை.

உண்மைதான் என்றாலும், எல்லா உண்மைகளையும், எல்லா இடங்களிலும் சொல்ல முடியாது. சொல்லத் தேவையுமில்லை. உண்மைகளையும் மறைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. இது ஒரு வகை நாகரிகம் அல்லது ஒரு வகை பண்பு என்று கூறலாம்.

பத்திரிக்கைகளில் பல செய்திகள் போடுகிறார்கள். சில செய்திகளைப் பார்த்துவிட்டு அடுத்த செய்திக்குப் போய்விடவேண்டும். அந்த செய்திகளைப் பற்றி விளம்பரப்படுத்த வேண்டியதில்லை. அதுவும் பதிவுலகம் மூலமாக இதைச் செய்ய வேண்டியதில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 


சனி, 21 மே, 2011

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பத்துக் கட்டளைகள்.


1.கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.  
 
எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

2.        ஒரு நேரம் ஒரு வேலையை மட்டுமே செய்யுங்கள்.

எட்டு வேலைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்துகொண்டிருந்தால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். என்ன செய்யவேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். மிக முக்கியமான விஷயங்களை முதலில் செய்யுங்கள். எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமென்ற கட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.

3.      உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள்.

இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள்………. இத்தியாதி….. இத்தியாதி என இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

4.       உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆரோக்யமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடலில் ரத்த ஓட்டமும், ஆக்சிஜன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங், ஜாகிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.

5.      தீய பழக்கங்களை கை கழுவி விடுங்கள்.

புகை, மது, போதை போன்றவைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் காரணிகள்.

6.   எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

திருப்தியடையும் மனநிலை இருந்தால் வாழ்க்கை அழகாகும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவதில்லை. காரணம் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை.

7.   ஒரு நல்ல பொழுதுபோக்கை கைவசம் வைத்திருங்கள்.

உங்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயமாய் அது இருக்கட்டும். உங்களுடைய மனதை உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்க அது உதவும். குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது, செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என தினமும் கொஞ்ச நேரம் செலவிடுங்கள்.

8.   பாசிடிவ் சிந்தனைகளை மனதில் கொண்டிருங்கள்.

நடந்து முடிந்த நிகழ்வுகளின் மோசமான பக்கங்களை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

9.   சின்னச்சின்ன வெற்றிகளைக்கூட கொண்டாடுங்கள்.

சின்னச் சின்ன வெற்றிகளின் கூட்டுத்தொகையே பெரிய வெற்றி என்பதை மனதில் எழுதுங்கள்.

10. பிறருடன் நம்மை ஒப்பிடாதீர்கள்.

பிறருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையற்ற மன அழுத்தத்தை கொண்டு வந்து சேர்க்கும். அவர்களுடைய வெற்றி, தோற்றம், அந்தஸ்து, பணம் என எதை ஒப்பிட்டாலும் அது உங்களுக்கு மன அழுத்தத்தையே தரும்.

நன்றி; தினத்தந்தி – இளைஞர் மலர், 21-5-2011.

ஞாயிறு, 15 மே, 2011

முட்டாள்கள் பலவிதம் – அதில் நான் ஒருவிதம்


முட்டாள்களில் பலவிதங்களைப் பார்த்திருப்பீர்கள். 
 
சிலரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லி எல்லா விவரங்களையும் சொல்லியிருப்பீர்கள். அந்தக்காரியத்தை எந்தெந்த விதங்களில் சொதப்புவார்கள் என்று யூகித்து அதற்கெல்லாம் முன்னேற்பாடாக ஜாக்கிரதையெல்லாம் சொல்லியிருப்பீர்கள். அந்த ஆள் நம் ஜாதியாயிருக்கும் (முட்டாள் ஜாதி) பட்சத்தில் நீங்கள் முழுவதும் எதிர்பாராத ஒரு சொதப்பல் செய்து அந்தக் காரியத்தை உருப்படியில்லாமல் செய்வார். 

ஒரு ஜோக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவர் மற்றொருவருடன் சொல்லுகிறார். நான் எந்தத் தப்பையும் ஒரு தடவைக்கு மேல் செய்ய மாட்டேன் என்றார். அப்போது அங்கு வந்த அவர் நணபர் சொன்னார். அவர் சொல்வது சரிதான். ஆனால் அவர் செய்யாத தப்பே கிடையாது என்றார்.

நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன், அதாவது எந்த தப்பையும் ஒரு தடவைக்கு மேல் செய்ய மாட்டேன். ஏறக்குறைய எல்லாத் தப்பையும் செய்து முடித்துவிட்டேன் என்ற திருப்தியில் இருந்தவனுக்கு ஒரு மரண அடி. என்ன நடந்தது என்று கேளுங்கள்.

என் தங்கை மகனுக்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தை. அவன் சம்சாரம் அவனுடன் ஏதோ கோபித்துக் கொண்டு அவளுடைய அம்மா வீட்டிற்குப் போய்விட்டாள். இதைக் கேள்விப்பட்டவுடன் நானும் எதார்த்தமாக நாலு நாள் போனால் அவள் அம்மா வீட்டிலிருந்து யாராவது கொண்டு வந்து விடுவார்கள் என்று எண்ணி, ஒரு டூர் போய்விட்டேன். ஒரு மாதம் கழித்து திரும்பி வந்தவுடன் கேட்டால், அந்தப் பெண் இன்னும் அம்மா வீட்டில்தான் இருக்கிறது என்று சொன்னார்கள்.

குடும்பத்தில் பெரியவன் நான். எப்படி சும்மா இருக்க முடியும். அங்கேயும் இங்கேயும் இரண்டு மூன்று தடவை நடந்து (காரில்தான்) என்னென்னவோ சமாதானங்கள் செய்து, அந்தப் பெண்ணைக் கூட்டி வந்து புருஷன் வீட்டில் விட்டு விட்டு, எனக்குத்தெரிந்த புத்திமதிகள் எல்லாம் எல்லோருக்கும் சொல்லி விட்டு வந்தேன். 

நான் செய்த இந்தக் காரியத்தில் ஏதாவது தவறு இருக்கிறதா, சொல்லுங்கள். சில நாட்கள் கழித்து ஒரு இடத்தில் அந்தப் பெண்ணின் அம்மாவைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டார்கள். என் தங்கை பையன் என்னிடம் சொல்லாமல் தனிக்குடித்தனம் போய் விட்டான். அவன் மாமனார் வீட்டில் இரண்டு நல்ல காரியங்கள் நடந்தன. எனக்கு அழைப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் என் தங்கை பையன், அவன் பெண்டாட்டி, அவன் மாமனார் வீட்டு ஆட்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

நான் செய்த காரியம் பிரிந்திருந்த புருஷன் மனைவியைச் சேர்த்து வைத்ததுதான். இது தவறா? ஆனால் நடக்கும் காரியங்களைக் கவனிக்கும் போது நான் செய்தது முட்டாள்தனம் என்றுதான் தோன்றுகிறது. 

ஞாயிறு, 8 மே, 2011

முதிர் காளைகள்


பல குடும்பங்களில் முதிர் கன்னிகள் இருப்பதைக்கண்டு மனம் வருந்துகிறோம். அதே மாதிரி பல குடும்பங்களில் முதிர் காளைகள் இருப்பதைப்பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலைக்கு பெரும்பாலும் ஜோதிடர்களே காரணம் என்றாலும், சில குடும்பங்களில் வேறு சில சுயநல எண்ணங்களும் காரணமாக அமைகின்றன.
 
அவர்கள் தங்களுடைய சுயநலத்தை மறைப்பதற்காக ஜோசியர்கள் மேல் பழியைப் போடுவார்கள். ஆனால் காரணம் தங்கள் சுயநலமே. கீழ்க்கண்ட காரணங்கள்தான் உண்மையானவை.
1.   பையன் தங்கள் பிடியிலிருந்து நழுவி, மாமியார் வீட்டுக்கோ அல்லது தனிக்குடித்தனமோ போய்விட்டால் தங்களுக்கு ஆதரவு இல்லாமல் போய்விடுமே என்கிற பயம்.
2.   பையனுக்கு குடும்பம், குழந்தைகள் என்று ஆகிவிட்டால், தாய் தந்தையரின் பேரில் உள்ள பாசம் குறைந்து தங்களை ஒதுக்கி விடுவானோ என்ற பயம்.
3.   தான் பெற்று வளர்த்து ஆளாக்கிய தன் மகன் இன்று நல்ல சம்பாத்தியம் பெறுவதை எங்கிருந்தோ வந்த ஒருத்தி அனுபவிப்பதா என்ற பொறாமை.
4.   தன் பையனை ஒருத்தி தன் முந்தானைக்குள் போட்டுக்கொள்வதை பொறுக்க மாட்டாமை.
இதற்கு ஒரே தீர்வு அந்தப் பையன் தனியாக தன் திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பதுதான்.  

வெள்ளி, 6 மே, 2011

பேசும் முறை

பல சமயங்களில் நாம் ஒரு விஷயத்தை அடுத்தவர்களிடம் சொல்லும்போது, நேரடியாக விஷயத்தை சொல்லாமல் சுற்று வளைத்து சொல்லுகிறோம். அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களை இவ்வாறு கூறுவதில் தவறில்லை. ஆனால் சாதாரண சமாச்சாரங்களைக் கூட இவ்வாறு கூறுபவர்கள் இருக்கிறார்கள்.

இது கேட்பவர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவது ஒரு அறியாமை. சுருக்கமாகவும், பொருள் திரிபு ஏற்படாமலும் பேசுவது ஒரு கலை. இதை நன்கு கற்றுக்கொண்டால் உங்களை எல்லோரும் விரும்புவார்கள்.

அதேபோல் அடுத்தவர்கள் பேசும்போது அதைக் கவனமாகக் கேட்பதுவும் ஒரு கலையே. அவர்கள் பேசி முடிப்பதற்குள் பதில் சொல்வது மிகவும் அநாகரிகம். நம் நாட்டில் இது சாதாரணமாக நடப்பது உண்டு. ஆனால் இதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 1 மே, 2011

காலமும் கவலையும்

காலம் ஒன்றுதான் நித்தியமானது. அது மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. யாருக்காகவும் அது நிற்பதில்லை. அது முடிவற்றது. மனித வாழ்வில் நிகழும் அனைத்துக் காரியங்களும் காலத்தின் நியதியால்தான் நடக்கிறது. அவனுடைய முடிவும் காலத்தினாலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலத்தை வென்றவர் ஒருவருமிலர்.  அந்தந்த காலங்கள் வரும்போது அந்தந்த விளைவுகளும் வந்து சேரும். இதை யாராலும் தடுக்க முடியாது.

புத்திசாலிக்கு கவலை இல்லை. அவன் துன்பத்தைக் கண்டு கவலைப்படமாட்டான். வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்ததேயாகும். இன்பம் வரும்போது அதிக சந்தோஷமும் துன்பம் வரும்போது அதிக துக்கமும் அடைவது அறிவாளியின் குணம் அல்ல. அவன் இரண்டையும் சமமாகவே ஏற்றுக்கொள்வான்.

திங்கள், 25 ஏப்ரல், 2011

செயல்களும் விளைவுகளும்



கடமைகள், தேவைகள், ஆசைகள் இவற்றை நிறைவேற்றுவதற்கான எண்ணங்கள் மனதில் தோன்றி செயல்களாக வெளிப்படுகின்றன. இச்செயல்களின் விளைவுகளே மனிதனுக்கு இன்பத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றன.
 
நாம் செய்யும் செயல்களுக்கு நாம் எதிர்பார்க்கும் விளைவுகளே எப்போதும் ஏற்படுவதில்லை. விளைவுகள் நாம் எதிர்பார்த்தபடி இருந்தால் இன்பமும் எதிர்மறையாக இருந்தால் துன்பமும் அடைகிறோம். இதைத் தவிர்க்கவே பகவான் கீதையில் சொன்னார்: “உன் கடமையைச் செய். விளைவுகளை என்னிடம் விட்டுவிடு” ஆனால் அவ்வாறு விளைவுகளை விருப்பு வெறுப்பில்லாமல், பகவத்பிரசாதம் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் சாதாரண மக்களுக்கு இல்லை.

மேலும் இந்தக் காரண-காரிய-விளைவுத் தொடர்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இந்த வேறுபாடுகளுக்கு யார் காரணம்? இந்தக்கேள்விக்கு விடை தெரிந்தவனே ஞானி.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

விவாதமும் வாக்கு வாதமும்


விவாதம் வரவேற்பிற்குரியது. ஏனெனில் இதன் மூலம் ஒரு சிந்தனைத்தெளிவு ஏற்படும். அவ்வாறு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டுமானால், பல கருத்துக்களை விவாதித்து அவைகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்து, பிறகுதான் ஒரு சிந்தனைத் தெளிவு ஏற்படவேண்டும். 

ஆனால் பெரும்பாலான சமயங்களில் விவாதம் வாக்குவாதமாக மாறிவிடுகிறது. ஏன் இப்படி என்றால், ஒரு கருத்தை பட்சபாதமில்லாமல் விவாதிப்பதை விட்டுவிட்டு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வாதத்தில் வெளிப்படுத்துவதுதான். 

எந்தக் கருத்தைப்பற்றி விவாதிப்பதானாலும் அந்தக் கருத்து என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்ளவேண்டும். நிறைய சர்ந்தப்பங்களில் நாம் எதைப்பற்றிப் பேசுகிறோம் என்ற தெளிவு இல்லாமலேயே பலர் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

விவாதத்தில் பங்கு கொள்பவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை அல்லது அடுத்தவர்கள் பேரில் இருக்கும் கோபதாபங்களை வெளிக்காட்டும் சந்தர்ப்பமாக இதை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. 
எப்போது விவாதம் வாக்குவாதமாக, தனிப்பட்டவர்களை பாதிக்கும் எல்லையைத் தொடுகிறதோ அப்பொழுது அந்த விவாதத்தை நிறுத்தி விட வேண்டும். இதை அந்தக் குழுவின் மூத்த அங்கத்தினர் செய்யவேண்டும்.

திங்கள், 18 ஏப்ரல், 2011

அடுத்தவர் செயல்களை விமரிசித்தல்



அடுத்தவனை, அவன் செய்யும் காரியங்களை குறை கூறுவதென்றால், பலருக்கு வெல்லம் சாப்பிடுவது மாதிரி. அதே மாதிரி நாம் செய்யும் காரியங்கள் நமக்கு சரியாய் பட்டாலும் அடுத்தவர்களுக்கு சரியாகத் தோன்றாமல் போகலாம். இது அவரவர்கள் குணாதிசயங்களைப் பொருத்தது. எல்லோரும், எல்லோருக்கும் பிடித்த மாதிரி காரியங்களைச் செய்வது முடியாத காரியமாகும். வாழ்க்கையில் இவ்வாறான முரண்பாடுகள் இருந்துமொண்டுதான் இருக்கும். அதனாலேயே மற்றவர்கள் செய்யும் காரியங்களை விமரிசிக்க நமக்கு உரிமை இல்லை.
மற்றவர்கள் செய்யும் செயல்களும் வாழ்க்கை நெறிகளும் நமக்கு சரியில்லாதவை போன்று தோற்றமளித்தால் நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். அவர்கள் செய்யும் செயல்களும் வாழும் முறையும் அவர்களுடைய விதிப்பயனால் ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டதாகும். மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர்களே அந்தக் காரியங்களைச் செய்வது போல் தோன்றினாலும் உண்மையில் ஆண்டவனுடைய இச்சைப்பிரகாரம்தான் அவர்கள் அந்தச் செயல்களைச் செய்கிறார்கள். அச்செயல்களின் பயனை அனுபவிக்கிறார்கள். ஆகவே ஒருவன் அந்தச் செயல்களை விமரிசிப்பது அர்த்தமற்ற மூடச்செயலாகும்.

சனி, 16 ஏப்ரல், 2011

அன்னா ஹசாரே போராட்டம்

"அன்னா" அவர்களின் போராட்டத்தின் போது அதற்கென (அதாவது உண்ணா விரதத்திற்காக) ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உண்ணாவிரதப்பந்தல் கூடாரம் ஆகியவற்றுக்காக 10லடசம் செலவு. தொலைபேசிக்கட்டணம் 9 லட்சம். பயணச் செலவு 4.5 லட்சம். அச்சுக்கூலி 8 லட்சம். உணவு வகையில் ஒருலட்சம். இதற்காக ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.கிட்டத்தட்ட 85லட்சம் இதுவரை வசூலாகியுள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான அலுமினியக் கம்பெனி முதலாளி ஜிண்டால் 25லட்சம் கொடுத்துள்ளார். மற்றும் ஈச்சர் கம்பெனி, சுரெந்திரபால், அருன் துக்கல், எச்.டி.எஃப்.சி என்று நன்கொடை வந்த வண்ணமிருக்கிறது. அறக்கட்டளை முறையான ரசீதுகளை நன்கொடையளர்களுக்கு அளித்துள்ளதாக நிர்வாகம் கூறியுள்ளது. சரியான கணக்கு உள்ளது என்றும் செலவு போக சுமார் 50 லட்சம் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்தச் செய்தி காஷ்யபனின் http://kashyapan.blogspot.com/ என்ற பதிவில் இருந்து திரட்டப்பட்டது.

இவரை (அன்னா ஹஸாரேயை) எந்த ஊழல் சட்டத்தில் புக் செய்யலாம் என்று வாசகர்கள் யோசனை செய்யவும்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மனித வாழ்வில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?



முதலில் பிரச்சினை இருக்கிறதா, இருந்தால் அது என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க வேண்டும். கற்பனையில் துன்பங்களை உண்டு பண்ணிக்கொண்டு வருத்தப்படக்கூடாது. ஐயோ, நான் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கமுடியவில்லையே என்பதும் ஒரு பிரச்சினைதான். ஆனால் நம் நல்ல காலத்தினால் அந்தப் பிரச்சினை இப்போதைக்கு நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை. எதிர் காலத்தில் வரக்கூடும்.
பிறகு அந்தப் பிரச்சினையை நன்கு ஆராய வேண்டும். இந்தப் பிரச்சினை நம்மால் தீர்க்கக் கூடியதுதானா என்று கண்டுபிடிக்கவேண்டும். நம்மால் தீர்க்க முடியுமென்றால் அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து எந்த முறையில் சிக்கல்கள் குறைவாக இருக்குமோ அந்த முறையைத் தெரிவு செய்து அதை நிறைவேற்ற வேண்டும்.

பெரும்பாலான பிரச்சினைகள் நாமே நம்முடைய செயல்களினால் உருவாக்கிக் கொண்டதாக இருக்கும். அப்போது அதற்கான தீர்வு முறைகளை நாமே கண்டு பிடிப்பது இயலாததாக இருக்கும். இந்த மாதிரி பிரச்சினைகள்தான் உலகில் அதிகம். இந்த மாதிரிப் பிரச்சனைகளுக்கு இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படாதவர்கள்தான் வழி சொல்ல முடியும். மனித இயல்பு என்னவென்றால் அடுத்தவனிடத்தில் போய் நாம் யோசனை கேட்பதா என்ற ஆணவ மனப்பான்மைதான் அதிகம். இந்த ஆணவத்தினால் அழிந்தவர்கள் அநேகம்.

சாதாரணப் பிரச்சினை என்றால் ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நாம் அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விடலாம். அந்தப் பிரச்சினை தானாகவே சரியாய் விட வாய்ப்புகள் இருக்கும். ஆனால் எல்லாப் பிரச்சினைகளையும் இவ்வாறு விட முடியாது. இதற்கு வழி ஒன்றுதான். நமக்கு நம்பிக்கை உள்ள நண்பர்களோ அல்லது உறவினர்களிடமோ சென்று பேசுவதுதான் அந்த வழி. அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இந்தப் பிரச்சினையை அணுகுவார்கள். அப்போது நமக்குப் புலப்படாத தீர்வுகள் அவர்களுக்குத் தோன்ற வாய்ப்புகள் அதிகம்.

இந்த முறையை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் பெரும்பாலான துன்பங்களைத் தவிர்க்கலாம். ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு நல்ல தீர்வு அனுப்பப்படும். அல்லது என்னுடைய முந்தின பதிவில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு ஈமெயில் அனுப்பினால் அவர்கள் நல்ல நல்ல வழிகள் காட்டுவார்கள்.