புதன், 7 ஜனவரி, 2015

VGK 14. நீ ..... முன்னாலே போனா .....நா ..... பின்னாலே வாரேன் !


                                       

வைகோ அவர்களின் கதைக்கு நான் எழுதிய விமர்சனம்.

VGK 14. நீ ..... முன்னாலே போனா .....நா ..... பின்னாலே வாரேன் !
(இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.)

அருமையான கதை. இது மட்டுமே இந்தக் கதைக்குப் போதுமான விமர்சனம். ஆனால் நடுவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்பதற்காக கொஞ்சம் விரிவான விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன்.

மனிதனின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்பவர்கள் அரிது. நாம் ஒன்றை நினைத்து செய்தால் மற்றவர்களுக்கு அது பிடிக்காது. அதுவும் மனமொத்த தம்பதியினருக்குள் பலவித புரிதல்கள் இருக்கும். அது மற்றவர்களுக்கு புரியாது.

இந்தக் கதை அப்படிப்பட்ட உணர்ச்சிப் போராட்டத்தின் சரித்திரம். தன் மனைவியை மிகவும் நேசித்த ஒருவர் அந்த மனிவியின் இறுதிக்காலத்தில் அவளுடைய ஆசைகளை நிறைவேற்றுகிறார். அவளுக்கு மிகவும் விருப்பமான இனிப்புப் பண்டங்களை வாங்கிக் கொடுக்கிறார். ஏன் என்றால் அவளுடைய வாழ்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதை அவர் உணர்கிறார்.

ஆனால் மற்றவர்களின் பார்வையில் இது ஒரு கொலை போலத்தான் படும். இந்த உணர்ச்சிப் போராட்டத்தை நுணுக்கமாக கதாசிரியர் விளக்கியிருக்கிறார். இந்த நுணுக்கத்தை அனுபவிக்கவே வாசருக்கு ஒரு தனி மனோபாவம் வேண்டும். அப்படிப்பட்ட மனோபாவம் இல்லாதவர்கள் இந்தக் கதையில் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியாது.

மனைவி இழந்த சோகம் கணவனையும் இறுதி யாத்திரைக்கு அழைத்துச் சென்று விடுகிறது. பாகவத சப்தாகம் கேட்டு முடித்தவுடன் இந்த முடிவு ஏற்படுவதாக காண்பித்திருப்பது கதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

அரட்டை ராமசாமி கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கிறார். ஏறக்குறைய அவர்தான் கதையை நகர்த்திச் செல்கிறார் என்றே கூறலாம். ஆசிரியர் இந்தக் கதையை பின்னியிருக்கும் விதம் ஆழ் மனதைத் தொடுகிறது.

திங்கள், 5 ஜனவரி, 2015

ஆண்களுக்கான சில அறிவுரைகள்.

                                             

பொதுவாக ஆண்கள் யாரும் அடுத்தவர்கள் அறிவுரையைக் கேட்கமாட்டார்கள். இருந்தாலும் ஏன் இந்தப் பதிவை எழுதுகிறேன் என்றால் பெண்களுக்கான அறிவுரைகள் சொன்னீர்களே, எங்களுக்கென்று ஒன்றும் இல்லையா என்று சில ஆண்கள் கேட்டதால்தான். இந்தப் பதிவைப் பெண்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.

1. ஆண்கள் என்றால் ஏதாவது ஒரு உத்தியோகம் செய்து வருமானம் ஈட்டவேண்டும். அது மாதச் சம்பளமாகவோ அல்லது வியாபாரமாகவோ அல்லது தொழிலாகவோ இருக்கலாம்.

2. வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் "ஒன் ஸ்டெப் பேக்". உங்களுக்கான அறிவுரை கடைசியில் இருக்கிறது.

3. சம்பளக்காரர்கள் சம்பளம் வாங்கியவுடன் அப்படியே முழுவதையும் மனைவி கையில் கொடுத்து விட்டு அவ்வப்போது தேவைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.

4. வீட்டில் அனைத்து முடிவுகளையும் ஆண்கள்தான் எடுக்கவேண்டும். ஆனால் முதலில் இல்லாளிடம் அனுமதி வாங்கிக்கொள்ளவேண்டும்.

5. எந்தக் காரியமும் வெற்றியடைந்தால் புகழை மனைவிக்குச் சமர்ப்பணம் செய்யவேண்டும். தோல்வியடைந்தால் பழியை ஆண்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

6. ஆண்களுக்குப் பொருத்தமான உடைகளைத் தேர்வு செய்ய பெண்களே பொருத்தமானவர்கள். ஆகவே உங்கள் உடைகளை அவர்கள் வாங்குவார்கள். அதைக் குறை சொல்லாமல் போட்டுக்கொள்வது உங்கள் கடமை.

7. வெளியில் செல்லும்போது நீங்கள்தான் குடும்பத்தலைவர் என்று காட்டிக்கொள்ளவேண்டும். ஆனால் எந்த முடிவுகளையும் நீங்களாக எடுக்கக் கூடாது.

8. நண்பர்கள் வந்தால் காப்பி கொண்டு வரச் சொல்லக்கூடாது. அப்படி அவருக்குக் காப்பி கொடுக்கவேண்டுமானால் வெளியில் கூட்டிக்கொண்டு போய் நல்ல காப்பிக்கடையில் காப்பி வாங்கிக் கொடுக்கவும். அப்படியே நீங்களும் ஒரு நல்ல காப்பி குடித்துக் கொள்ளலாம்  இதற்காக அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

9. மனைவி சமைக்கும் சாப்பாட்டில் எந்தக் குறையும் சொல்லக்கூடாது. உப்பு இல்லாவிட்டால் அப்படியே சாப்பிட வேண்டுமே ஒழிய உப்பு இல்லை என்று சொல்லக் கூடாது..

10. கடைசியாக வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் உண்டான ஆலோசனை. உங்கள் வியாபாரம் அல்லது தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கிறதா? அப்படியானால் மேற்கண்ட எந்த யோசனைகளையும் கடைப்பிடிக்காதீர்கள்.

11. தொழிலோ அல்லது வியாபாரமோ சரியாக இல்லையா? மனைவியிடம் யோசனை கேட்டு அதன்படியே செய்யுங்கள். ஆறு மாதத்தில் தொழில் அல்லது வியாபாரம் முடிவுக்கு வந்து விடும். பிறகு மாதச்சம்பளத்தில் சேர்ந்து இங்கு சொன்ன அனைத்து அறிவுரைகளையும் கடைப்பிடிக்கவும்.

இன்னும் நிறைய யோசனைகள் கைவசம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இவ்வளவுக்குத்தான் பர்மிஷன் கிடைத்தது.

                                       

சனி, 3 ஜனவரி, 2015

குடும்பப் பெண்கள் கடைப்பிடிக்கவேண்டியவை

                                              

இப்பதிவில் கூறும் குறிப்புகளை ஏற்கெனவே எல்லோரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால் நல்ல விஷயங்களைத் திரும்பவும் கேட்பதில் தவறில்லை. இந்தக் குறிப்புகள் ஒரு கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட கையேட்டில் இருந்து தொகுக்கப்பட்டது.

1. நெற்றியில் பொட்டில்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது.

2. இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக்கூடாது.

3. பெண்கள் முழுப் பூசணிக்காயை உடைக்கக் கூடாது. அரிவாளாலோ, மணையினாலோ, கத்தியினாலோ முழுப் பூசணிக்காயை வெட்டலாகாது.

4. கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கலாகாது. தேங்காய் உடைக்கும்போது ஏற்படும் நுண்ணலை அதிர்வுகள் கர்ப்பதைதப் பாதிக்கும்.

5. தம்பதியரைச் சேரவிடாமல் கலைப்பது மஹாபாவம். (அப்படிப்பட்ட டிவி சீரியல்களைப் பார்ப்பது அதனினும் மஹாபாவம்.) அப்படி கலைத்துப் பிரித்து வைத்தால் 21 தலைமுறை பாலவிதவைகள் ஆவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. (சீரியல் பார்ப்பவர்களுக்கு தண்டனையில் கொஞ்சம் தள்ளுபடி உண்டு என்று அதே சாஸ்திரங்க்ள சொல்லுகின்றன).

6. இரவில் வீட்டைப் பெருக்கலாகாது.அப்படிப் பெருக்கினாலும் குப்பையைத் தெருவில் கொட்டக்கூடாது. பகலில் குப்பையை வீட்டில் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி குப்பையை வீட்டில் மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாட்களில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.

7. அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலுக்கு சாணம் அல்லது தண்ணீர்  தெளித்து கோலம் போடவேண்டும். இதை வீட்டு எஜமானியே செய்தால் மகாலட்சுமி மிக மகிழ்ச்சியுடன் நம் வீட்டிற்கு வருவாள்.

8. உணவிற்கு இலை போடுமுன் இலைக்கு கீழே பசும்சாணம் அல்லது வெறும் ஜலத்தால் நாலுமூலை சதுரமாக சுத்தம் செய்யவேண்டும்.

9. கையால் அன்னத்தையோ காய்களிகளையோ பரிமாறக்கூடாது. கரண்டியால் அமுதுகளைப் பரிமாறினால் தீமை வராது.

10. ஓர் இலைக்குப் பரிமாறிய மிச்சத்தை அடுத்த இலைக்குப் பரிமாறக்கூடாது.

11. தன் கணவன் அனுமதி பெற்றுத்தான் தானதர்மம், விரதம் ஆகியவைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.

12. எந்தப் பொருளையும் இல்லையென்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்று கூறவேண்டும்.

13. எந்தக் குறையையும் எண்ணிக் கண்ணீர் விடக்கூடாது. அழுத வீட்டில் செல்வம் நிலைக்காது.

14. துன்பம் நேரும்போது வாய் விட்டு அசுப வார்த்தைகளைச் சொல்லக்கூடாது.

15.நம் இல்லத்திற்கு சுமங்கலிகள் வந்தால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, உபசரித்து, வெற்றிலை, பாக்கு, பழம், பூ கொடுத்து உபசரிக்கவேண்டும்.

16. குடும்பப் பெண்கள் எப்பொழுதும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கக்  கூடாது.


இவையெல்லாம் ஆணாதிக்கவாதிகள் சொல்லிவைத்துப் போனவை என்று நினைக்கும் பெண்கள் இவைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

வியாழன், 1 ஜனவரி, 2015

புது வருட வாழ்த்துக்கள்.

                         


                            

அனைத்து பதிவுலக நண்பர்களும் (நண்பிகளுக்கும் சேர்த்துத்தான்) புது வருடத்தில் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.




புதன், 31 டிசம்பர், 2014

தொழில் நுட்பப் பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

                                                
புதிதாக சந்தைக்கு வரும் தொழில் நுட்பங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் தொழில் நுட்பப் பதிவர்களின் பங்கு பாராட்டிற்குரியது. ஆனால் அதே சமயம் அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம் என்பதை அவர்கள் உணரவேண்டும். பதிவு போடுவதற்காக ஏதோ ஒன்றைப் பதிவிட்டு விட்டு, மற்றதெல்லாம் அவரவர்கள் பாடு என்று போவது நல்ல வழியல்ல.

என்னுடைய "மீண்டும் கையைச் சுட்டுக்கொண்டேன்"  என்கிற பதிவிற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதில் பலரும் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னவென்றால், "எந்தத் தளத்தில் கூறிய எந்த புரொக்ராமை தரவிறக்கும்போது அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது, அதை எங்களுக்கும் சொன்னால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமே" என்பதாகும்.

நான் அதை வெளிப்படையாகச் சொல்லாததற்குக் காரணம் ஒரு பதிவர் தன்னையறியாமல் தவறு செய்திருக்கலாம். அதைச் சொல்லி அவருடைய மனதை புண்படுத்தக்கூடாது என்பதால்தான். ஆனால் பதிவுலக மக்கள் தொழில் நுட்ப விஷயங்களுக்கு தங்களுக்கு ஒரு வழி காட்டுதல் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆகவே தொழில் நுட்பம் பற்றி எழுதும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனி வரும் காலத்தில் நீங்கள் எழுதும் பதிவுகளில் கூறும் புரொக்ராம்களை நீங்களே சோதித்து அதில் உள்ள சாதக பாதகங்களையும் குறிப்பிட்டு எழுதினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

இது ஒரு வேண்டுகோள் மட்டுமே. இவன் யார் எங்களுக்கு நாட்டாமை செய்ய என்று யாராவது நினைத்தால் இந்தப் பதிவை எழுதியதற்காக என்னை மன்னித்து விடவும். அப்படி மன்னிக்க முடியாவிட்டால் ஏதாவது நல்ல சாபம் கொடுக்கவும். "துபாய் சென்று தங்கக்காரைப் பார்த்து வயிற்றெரிச்சலில் வேகவும்" என்கிற மாதிரி சாபம் கொடுக்கவும்.

திங்கள், 29 டிசம்பர், 2014

நான் மீண்டும் கையைச் சுட்டுக் கொண்டேன்.

                                   

                                   

மீண்டும் மீண்டும் கையைச் சுட்டுக்கொளவதே என் வழக்கமாகப் போய் விட்டது. பலமுறை பதிவுலக நண்பர்களுக்கு நான் அறிவுரை வழங்கியுள்ளேன். சொல்வார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போகாதீர்கள் என்று எல்லாருக்கும் நான் சொல்வேன். ஆனால் "எல்லோருக்கும் கௌளி சொல்லுமாம் பல்லி, அது விழுந்ததாம் கழுநீர்ப் பானையில்" என்ற மாதிரி நானும் நேற்று கழுநீர்ப்பானையில் விழுந்தேன்.

பதிவுலகில் தொழில் நுட்பப் பதிவர்கள் என்று ஒரு ஜாதி இருக்கிறது. இவர்கள் செய்யும் வேலை என்னவென்றால் எங்காவது ஒரு புது கம்பெனி ஏதாவது ஒரு புரொக்ராமைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் அதை மோப்பம் பிடித்து தங்கள் பதிவில் போட்டு விடுவார்கள். அதன் சாதக பாதகத் தன்மைகளைப் பற்றி ஒன்றும் ஆராய மாட்டார்கள். அதை நம்பி அந்த புரொக்ராமை நிறுவும் பயனாளிகளான நாம்தான் இளிச்சவாயர்கள்.

எந்த கம்ப்யூட்டர் புரொக்ராம்காரனும் பொது சேவை செய்வதற்காக கம்பெனி ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவன் ஒரு புரொக்ராமை இலவசமாகக் கொடுக்கிறான் என்றால் அதில் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் மறைமுகமான லாபம் இருக்கும்.

சில பெரிய கம்பெனிகள் தங்களுக்கு வரும் விளம்பரங்களுக்காக இத்தகைய புரொக்ராம்களை இலவசமாகத் தருகின்றன. ஆனால் பெரும்பாலான அடையாளம் தெரியாத கம்பெனிகள் வைரஸ்களை இனாமாகத் தருகின்றன. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் நாம் ஏமாந்து விடுவோம்.

ஆகவே நம் தொழில் நுட்ப பதிவர்கள் பரிந்துரைக்கும் புரொக்ராம்கள் 100 சதம் பத்திரமானவை என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் அதை உடனடியாக விட்டொழியுங்கள். நான் நேற்று இப்படி ஒரு புரொக்ராமை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்த பிறகு பார்த்தால் கூடவே ஒரு மோசமான வைரஸும் இறக்குமதி ஆகி கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டது.

எப்படி முயன்றாலும் அன்இன்ஸ்டால் ஆகமாட்டேன் என்றது. வேறு வழியில்லாமல் சிஸ்டம் ரெஸ்டோர் போய்த்தான் சரி செய்ய வேண்டியதாய்ப் போயிற்று. என்னுடைய கம்ப்யூட்டரின் ஆபரேட்டிங்க் சிஸ்டம் ஒரிஜினலாய் இருந்ததால் அதிகம் பிரச்சினை இல்லாமல் போயிற்று. இல்லையென்றால் டாக்டரிடம் போகவேண்டியதாய் இருந்திருக்கும்.

ஆகவே நண்பர்களே ஜாக்கிரதையாய் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

தமிழ்மணம் திரட்டி நிர்வாகத்திற்கு நன்றி

                                     
தமிழ்மணம் திரட்டி என்பது தமிழ் பதிவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த திரட்டி எவ்வாறு செயல்படுகிறது என்பது பலருக்குத் தெரியாத ஒரு ரகசியமாக இருக்கிறது. எனக்குத் தெரியலைன்னா அது பலருக்கும் பொருந்துமல்லவா?

இது ஏதோ அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ரிய்ய்ய்ய்ய கம்ப்யூட்டர் செய்யும் வேலை என்றுதான் நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அந்த எண்ணம் சரியில்லை, தமிழ்மணம் திரட்டி நம்மைப் போன்ற சதையும், எலும்பும், நல்ல மனச்சாட்சியும் கொண்ட உயிருள்ள மனிதர்களால் நிர்வகிக்கப்படுகிறது  என்ற முடிவுக்கு இப்போது வந்து விட்டேன்.

காரணங்கள் இரண்டு.

முதல் காரணம்: திரு.தருமி அவர்கள் சில வாரங்களுக்கு முன் தமிழ்மணம் திரட்டியில் பல ஆபாசப் பதிவுகள் இடம் பெறுவதைப் பற்றி தமிழ் மணத்திற்கு தெரியப்படுத்தினார். உடனடியாக அத்தகைய பதிவுகள் நீக்கப்பட்டன.

இரண்டாவது காரணம்: நான் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் திரட்டியில் உள்ள பல பதிவுகளில் விளம்பரங்கள் ஆக்கிரமித்துக்கொண்டு பதிவை படிக்க முடியாமல் செய்கின்றன என்று குறிப்பிட்டிருந்தேன். இரண்டு நாட்களிலேயே அத்தகைய பதிவுகள் நீக்கப்பட்டு, தமிழ்மணம் இப்போது தூய்மையாக்கப்பட்டு விளங்குகிறது.

இத்தகைய உடனடி நடவடிக்கைகளுக்காக தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். சக பதிவர்கள் அனைவரும் இதை ஆமோதிப்பார்க்ள என்று நம்புகிறேன்.

2015 ம் புத்தாண்டில் தமிழ்மணம் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

                                         


பதிவுலக நண்பர்கள், நண்பிகள், அனானிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.



வியாழன், 25 டிசம்பர், 2014

டாட்டா, பிர்லா மாதிரி பணக்காரராக ஆகவேண்டுமா?



டாட்டா பிர்லா மாதிரி நீங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அதிபராக ஆகவேண்டுமா? மேலே உள்ள மாதிரி பங்களாவில் வசிக்கவேண்டுமா? இதோ வெகு சுலபமான வழி.

ரிசர்வ் பேங்க் வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் என்னென்ன செக்யூரிடி அம்சங்கள் இருக்கின்றன என்று அவர்க்ள வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் வந்த படங்களை ஒரு காணொளியாகக் கொடுத்துள்ளேன். இந்த செக்யூரிடி அம்சங்கள் இல்லாததால்தான் கள்ள நோட்டுகளை இனம் காண்கிறார்கள்.

அவைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Security Features of Bank Notes:


                     

நன்றாகப் பார்த்துக்கொண்டீர்களா? வழி காட்டி விட்டேன். இனி உங்கள் சமர்த்து.

களி சாப்பிடும்போது என்னையும் நினைத்துக் கொள்ளவும்.

                                     

செவ்வாய், 23 டிசம்பர், 2014

தமிழர்கள் காதில் நன்றாகப் பூச்சுற்றுகிறார்கள்.



                               

இன்றைய பத்திரிகைச் செய்தி:

பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை சிறையில் இருக்கும் 66 தமிழக மீனவர்கள் விடுதலை.

இந்த மாதிரி செய்திகள் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பதும் இங்குள்ள அரசியல்வாதிகள் அதைப்பற்றி அறிக்கைகள் விடுவதும் சில நாட்கள் கழித்து அவர்கள் விடுதலையாவதும்  தொடர் கதையாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து நடப்பதைப் பார்த்தால் இவை எதேச்சையாக நடந்தவை போல் தெரியவில்லை.

ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகம் நடக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது. யார் இந்த நாடகத்திற்கு காட்சிகள் அமைத்து கதை வசனம் எழுதுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.