புதன், 27 மே, 2015

அம்மா என்றழைக்காத உயிரில்லையே...

                                    Image result for ராமர் பட்டாபிஷேகம்
ராம ராஜ்யம் தொடங்கிவிட்டது. பாலும் தேனும் ரோட்டில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடப்போகிறது. மாதம் மும்மாரி பெய்யும். ஆடும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தும். எல்லோருக்கும் மலிவு விலையில் உணவு கிடைக்கும். யாரும் இனி கஸ்டப்பட வேண்டியதில்லை.

அம்மா, அம்மா, அம்மா என்றே ஜபம் செய்து கொண்டு டாஸ்மாக்கில் கிடந்தால் போதும். அனைத்தும் வந்து சேரும்.

இந்தப் பாட்டை மட்டும் கேட்கத்தவறாதீர்கள்.





இந்தப் பதிவை குதர்க்கமாகப் பார்ப்பவர்கள் அம்மாவின் சாபத்திற்கு ஆளாவார்கள்  என்று எச்சரிக்கிறேன்.

திங்கள், 25 மே, 2015

ஆனந்தம் என்றால் என்ன?

                                        Image result for குண்டலினி சக்தி
இவ்வுலகில் இன்பத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அதே போல் துன்பத்தை வெறுக்காதவர்களும் யாரும் இல்லை. வாழ்க்கையின் குறிக்கோள் இந்த இரண்டு மட்டுமே என்று ஆகிப்போனது. சம்ஸ்கிருதத்தில் இதையே "சுகப்பிராப்தி, துக்க நாஸ்தி" என்று சுருக்கமாகச்
சொல்லுகிறார்கள்.

படிப்பதற்கும் கேட்பதற்கும் இது எவ்வளவு எளிமையாகத் தோன்றுகிறது. ஆனால் நடைமுறையில் எல்லோராலும் இந்த நோக்கத்தை அடைய முடிகிறதா? இல்லையே? ஏன்?

இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடித்தான் எல்லோரும் அலைகிறோம். எனக்கு மட்டும் இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருந்தால் நான் இன்று உலகத்திற்கே ராஜாவாக இருப்பேன். ஆனால் என்னுடைய நல்ல காலமோ கெட்ட காலமோ, அந்த விடை தெரியவில்லை. வீட்டிற்கு ராஜாவாகவே முடியவில்லை. உலகத்திற்கு ராஜாவாகிறாராம் என்று வீட்டுக்காரி வேறு முனகுகிறாள்.

இருக்கட்டும். விடை எங்கே கிடைக்கும் என்றாவது யோசிப்போம்.

ஆன்மீகவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் "நீ உன்னை அறிந்தால் சுக-துக்கம் இரண்டையும் ஒன்றாக உணர்வாய்" என்கிறார்கள். அதாவது நீ என்பது ஆத்மா. ஆத்மா வேறு. அநாத்மா (அதாவது உன் உடல்) வேறு, அதனால் உன் உடலுக்கு ஏற்படும் சுக துக்கங்களுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை,

இதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு ஜன்மம் போறாது. முதலில் ஆத்மா என்றால் என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும். பிறகு ஆத்மா வேறு அநாத்மா வேறு என்பதை உணரவேண்டும். பிறகு சுகதுக்கங்கள் நம்முடையவை (அதாவது ஆத்மாவினுடையவை) அல்ல. அவை அநாத்மாவினுடையவை என்று புரியவேண்டும்.

தலைவலி வந்து விட்டால் அது யாருக்கோ வந்திருக்கிறது, நமக்கென்ன என்று இருக்கவேண்டும். ஆத்மாவை உன் உடலிலிருந்து ஐந்தடி உயரத்தில் இருப்பதாக பாவனை செய்துகொள். அப்போது நீ உன் உடலை தனியாக ஒரு இடத்தில் இருந்து பார்க்கிறாய். அப்போது உன் உடலுக்கு ஏற்படும் எந்த உணர்வும் உன்னைப் பாதிக்காது அல்லவா?

இப்படி யாரும் இதுவரை செய்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் இதைக் காலம் காலமாய் நிஜ சாமியார்களும் போலி சாமியார்களும் சொல்லிச் சொல்லியே காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்யக்கூடிய சக்தி உங்களில் யாருக்காவது இருந்து நீங்கள் (அதாவது உங்கள் ஆத்மா) உடலிலிருந்து ஐந்தடி மேலே போனால் அவ்வளவுதான், மின் மயானத்திற்கு உங்கள் அநாத்மாவைக் கொண்டு போய் தகனம் செய்து விடுவார்கள்.

ஆகவே இந்த உபாயம் நமக்கு உதவாது. வேறு ஏதாவது உபாயங்க்ள இருந்தால் இதைப் படிக்கும் அன்பர்கள் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அதுவரை சுகம் வரும்போது ஆனந்தத்தையும் துன்பம் வரும்போது துக்கத்தையும் அனுஷ்டிக்கவும்.

சனி, 23 மே, 2015

உடல், மனசு, அறிவு

நான் யார், நீ யார், இப்படி மக்கள் திலகம் ஒரு படத்தில் பாடினார்.



நம் ஆன்மீக வாதிகளும் இதை வைத்தே பிழைப்பை ஓட்டுகிறார்கள்.



உடல் வேறு, மனசு வேறு, புத்தி வேறு என்று யாராவது சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள். உடல் இருந்தால்தான் மனசு இருக்கும். மனசில்தான் புத்தி இருக்கிறது. மூன்றும் ஒன்றேதான். வீணாகக் குழப்பிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்.

வியாழன், 21 மே, 2015

ஐயோ பணம் போச்சே?

                                       Image result for atm machine

நமது பேங்குகள் நமக்குச் செய்து தந்திருக்கிற பல வசதிகளுக்கு நாம் அவர்களுக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறோம். நாம் போடும் பணத்தை பத்திரமாக வைத்திருந்து நாம் கேட்கும்போது வட்டி சேர்த்துக்கொடுப்பது சாதாரண சேவையா என்ன?

ஆனால் இதைவிட சூப்பர் சேவை ஒன்று அவர்கள் செய்து வருவது பல பேருக்குத் தெரியாமலிருப்பது பெரிய துரதிர்ஷ்டம். பத்து வருடத்திற்கு முன்பு இந்த சேவை எனக்குத் தெரிந்திருந்தால் நான் இப்போது ஸ்விஸ் பேங்கில் கணக்கு துவங்கி இருப்பேன். எனக்கு அதிர்ஷ்டமில்லை.

ஏடிஎம் மிஷின்களைப் பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். அதில் நமது ஏடிஎம் அட்டையை சொருகினால் அந்த மிஷின் நம்முடைய பேங்கிற்குப் போய் (அந்த பேங்க் டிம்பக்டூவில் இருந்தாலும் சரி) நம் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்து நாம் கேட்கும் தொகை இருந்தால் அந்தப் பணத்தை நமக்குக் கொடுக்கிறது. இது எப்பேர்ப்பட்ட குறளி வித்தை என்று நமக்குத் தோன்றுகிறது.

அப்போ, பேங்கில் இருக்கும் அதிகாரிகளுக்கு அந்த ஏடிஎம் மிஷினில் ஒரு சமயத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று சுலபமாகக் கண்டுபிடிக்கலாம் அல்லவா? அப்படியானால் மாதத்திற்கு ஒரு முறை அந்த மிஷினில் எவ்வளவு பணம் வைத்தார்கள், எவ்வளவு பணம் வாடிக்கையாளர்களால் எடுக்கப்பட்டது, இப்போது மீதி எவ்வளவு பணம் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஒரு விரல் சுட்டில் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

அப்படி இருக்கும்போது இன்றைய செய்தித் தாட்களில் ஏடிஎம் மிஷினில் வைத்த பணம் காணாமல் போயிற்று என்று ஒரு செய்தி பிரசுரமாயிற்று. இந்த மிஷின்களில் பணம் வைக்க ஒரு தனியார் நிறுவனத்தை இந்த பேங்குகள் நியமித்திருக்கின்றன. அதில் மேற்பார்வையாளராக வேலை செய்யும் ஒருவரே அதிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை எடுத்திருக்கிறார். இது நான்கு வருடங்களாக நடந்து வருகிறதென்று செய்தித்தாள்களில் போட்டிருக்கிறது.

அப்படியானால் நான்கு வருடங்களாக இந்த ஏடிஎம் மிஷின்களின் கணக்கு வழக்குகளை பேங்கில் இருந்து யாரும் சரி பார்க்கவில்லை என்று தெரிகிறது. இந்த விஷயம் தெரியாமல் போய்விட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தெரிந்திருந்தால் நானும் இந்த பணம் வைக்கும் தனியார் கம்பெனியில் சேர்ந்து, எப்படியாவது சூபர்வைசராகி, ஏடிஎம் மிஷின்களிலிருந்து பணம் எடுத்து ஸ்விஸ் பேங்க்கில் கணக்கு ஆரம்பித்திருப்பேன்.

எனக்கு அதிர்ஷ்டமில்லை. 

ஞாயிறு, 17 மே, 2015

ஏழைகளின் ஊட்டி

           
                      Image result for ஊட்டி சுற்றுலா இடங்கள்

அந்தக் காலத்தில் நம்மை ஆண்ட வெள்ளைக்காரன் சொன்னது: "கோயமுத்தூர் ஏழைகளின் உதகமண்டலம்". இது அன்று உண்மையாக இருந்தது. நான் ஹைஸ்கூலில் படித்த காலத்தில் கோடை விடுமுறையின் போது பகல் முழுவதும் நண்பர்களுடன் வெளியில்தான் சுற்றிக்கொண்டு இருப்போம்.

அப்போதெல்லாம் வானம் மேகமூட்டமாகவே இருக்கும். வெயிலின் தாக்கமே தெரியாது. அவ்வப்போது கோடை மழை பெய்யும். காடை மழை என்றால் அன்று பகல் முழுவதும் கொஞ்சம் வெயில் கடுமையாக இருக்கும். மாலை நான்கு அல்லது நான்கரை மணி வாக்கில் வானத்தில் மேகங்கள் கருகும்மென்று சேர்ந்து விடும். சடசடவென்று பலத்த மழை வரும். ஒரு அரை மணி நேரம் பெய்யும். பிறகு சடாரென்று நின்று விடும். வானம் வெளுத்து நிர்மலமாகி விடும்.

ஒவ்வொரு சமயம் ஆலங்கட்டி மழையும் பெய்யும். சமீப காலத்தில் ஆலங்கட்டி மழையையே நான் பார்க்கவில்லை. என் பேரன்களுக்கெல்லாம் ஆலங்கட்டி மழை என்றால் எப்படியிருக்கும் என்றே தெரியாது.

அப்போது ஒரு தென்றல் வீசும் பாருங்கள். குளுகுளுவென்று, அப்படியே சொர்க்க லோகம் போல் இருக்கும். வீதிகளில் மழைத் தண்ணீர் ஆறு போல ஓடும். அதில் காகிதக் கப்பல்கள் விடுவோம். கொஞ்ச நேரத்தில் தண்ணீர் எல்லாம் சுத்தமாக வடிந்து விடும். மழை நீர்க்கால்வாய்கள் அப்படிப் பராமரிக்கப்பட்டு இருந்தன.

எப்போது கோயமுத்தூர் கோவை என்றாகி, உதகமண்டலம் உதகை என்றாகியதோ அப்போதிலிருந்து கோடை மழை பெய்வது நின்று விட்டது. கோடை காலத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக ஆரம்பித்தது. மழை குறைந்து விட்டது.

ஆனால் இந்த வருடம் அதிசயமாக கோவையில் கடந்த 20 நாட்களாக தினமும் மழை வருகிறது. அந்தக்காலத்துக் கோடை மழை மாதிரி இல்லை. மான்சூன் மழை மாதிரி சிணுங்கிக்கொண்டே இருக்கிறது. சில சமயம் பலமாகப் பெய்கிறது. ஆனால் பெரும்பாலும் தூறல்தான். எப்படியோ கோவை இப்போது குளுகுளுவென்று ஊட்டி மாதிரி இருக்கிறது. வெள்ளைக்கார்ன் வார்த்தை பலிக்கிறது.

மழை பலமாகப் பெய்தால் கோவையில் பல ரோடுகளில் ஆறுகள் ஓடுகின்றன. மழை நீர்க்கால்வாய்கள் அவ்வளவு நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. என்ன செய்வது?

பகலிலேயே குளிருகிறது. சட்டை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இரவில் போர்வை போர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது கத்திரி வெயில் காலம். மற்ற ஊர்களில் வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால் கோவையில் நாங்கள் ஊட்டியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உட்டியில் இப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. ரோடுகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு பாதைகள் பல மணி நேரம் அடைக்கப்படுகின்றன.

ஊட்டியில் மழை பெய்தால் மனிதன் அங்கே இருக்கமுடியாது. அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லாம் யார் என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் எல்லாம் காட்டு வாசிகள். அவர்களுக்கு வெயிலும் ஒன்றுதான் மழையும் ஒன்றுதான். அவர்கள் ஒரு போர்வையை மடித்து தலைக்குப் போட்டுக்கொண்டு அவர்களின் வழக்கமான வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பாரகள். நாம் போனால் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு ரூமிலேயே அடைந்து கிடக்கவேண்டியதுதான்.

ஆகவே இந்த வருடம் ஊட்டிக்கு புரொக்ராம் போட்டிருந்தவர்கள் எல்லோரும் கோவைக்கு வந்து விடவும். உங்கள் சௌகரியத்திற்காக ஊட்டியையே கோவைக்கு வரவழைத்திருக்கிறோம். 

வெள்ளி, 15 மே, 2015

கட்டுப்பாட்டை இழந்து...

                                   Image result for road accidents in india
"ஒரு நான்கு சக்கர வாகனம் சாலை ஓரத்தில் இருக்கும் புளிய மரத்தில் மோதி அந்த வாகனத்தில் பயணம் செய்த அனைவரும் மரணமடைந்தார்கள்" என்று வைத்துக்கொள்வோம். எனக்கு இப்படி வைத்துக்கொள்வதில் விருப்பமில்லைதான். ஆனாலும் செய்தித்தாள்களில் இந்த மாதிரி செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதைப் படிக்காமலும் இருக்க முடியவில்லை. அந்த வாகனத்தில் நான் பயணிக்காததால் எனக்கு ஒன்றும் நஷ்டமுமில்லை.

ஆனாலும் நானும் ஒரு நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பதால் இந்த செய்தியைப் பற்றிய கற்பனை என் மனதில் ஓடத்தான் செய்கிறது. இந்த செய்தியைப் பிரசுரிக்கும் செய்தித்தாள்கள் வழக்கமாக உபயோகிக்கும் சொற்றொடர் என்னவென்றால் "அந்த வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து etc.etc." என்பதாகும்.

உடனே என் மனது நினைப்பது என்னவென்றால், சில வீடுகளில் வயதுப் பையன்கள் பெற்றவர்கள் பேச்சைக் கேட்காமல் கட்டுப்பாட்டை இழந்து கெட்டுப்போகும் நிகழ்ச்சிகள்தான். இந்த மாதிரி பையன்கள் ஆறறிவு கொண்டவர்கள். உலகில் நல்லது கெட்டது எது என்பதைப் பகுத்தறியக்கூடியவர்கள். சகவாச தோஷத்தினாலோ அல்லது அவர்களின் மூளையில் எங்காவது ஒரு ஸ்குரூ கழண்டு போனதாலோ இவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வராமல் தறி கெட்டுப்போகிறார்கள் என்று நினைப்பேன்.

செய்தித்தாள்களில் இவ்வாறு "வாகனங்கள் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" என்ற செய்தி வரும்போதெல்லாம் எனக்கு இந்தப் பையன்களின் நினைவுதான் வரும். ஓஹோ, அந்த வாகனத்திற்கு மனது ஒன்று இருந்திருக்கிறது போலும், அது திடீரென்று இனிமேல் ஓட்டுனர் சொல்கிறதைக் கேட்கக்கூடாது என்று முடிவு செய்து ஓடிப்போய் புளிய
மரத்தில் மோதியது போலும் என்று என் கற்பனை ஓடும்.  

இப்படி ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் மனது இருந்து அவைகள் எல்லாம் தங்கள் தங்கள் மனது போல் ஓட ஆரம்பித்தால் எப்படியிருக்கும் என்றும் என் கற்பனை விரிவதுண்டு.

பிறகு ஆழமாக யோசித்த பிறகு என்ன நடந்திருக்கும் என்று ஒருவாறு யூகிக்க முடியும். இப்போது சந்தைக்கு வரும் வாகனங்களில் பல SUV என்று சொல்லப்படும் வாகனங்களாகும்.   An SUV, or sport utility vehicle, is an automotive that is defined by its capabilities. It is rugged; it combines passenger-carrying with cargo-hauling capability in a two-box design with an enclosed cargo/passenger compartment, as opposed to an open cargo compartment like a pickup truck.

இவை அதிக சக்தி கொண்ட இன்ஜின்களுடன் நூதன கட்டுப்பாட்டு சாதனங்களுடன் வருகின்றன. இவைகள் நன்றாகப் போடப்பட்டிருக்கும் ரோடுகளில் 150-160 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. இந்த வேகத்தில் ஒரு வாகனத்தை ஓட்டுபவர் மிக மிகத் திறமைசாலியாக இருக்கவேண்டும். ரோட்டிலும் வாகனப் போக்குவரத்தோ வேறு குறுக்கீடுகளோ இருக்கக்கூடாது.

ஆனால் நம் ஊரில் நேராகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி எந்த விதமான சைகைகளும் செய்யாமல் வலது பக்கம் திரும்புவான். ஆடு மாடுகள், நாய், பூனை ஆகிய நான்கு கால் பிராணிகளும் மற்றும் இரண்டு கால் பிராணிகளும் ரோடின் குறுக்கே திடீரென்று பாய்வார்கள். இப்படிப்பட்ட ரோடுகளில் 150 கிமீ வேகத்தில் செல்லாம் வாகனத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நல்ல அனுபவமுள்ள ஓட்டுனர்கள் ரோடில் எதிர்பாரமல் குறுக்கீடுகள் வரலாம், அப்படி வந்தால் என்ன செய்யவேண்டும், நாம் ஓட்டும் வாகனத்தை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்  என்று எப்பொழுதும் ஒரு ஜாக்கிரதை உணர்வுடன் வாகனம் ஓட்டுவார்கள். அப்படி அனுபவம் இல்லாத ஓட்டுனர்கள் இந்த மாதிரி சக்தி வாய்ந்த வாகனங்களை ஓட்டும்போது அவர்கள் தன்னிலை மறந்து விடுகிறார்கள்.

ஓட்டுனர்கள் ஒரு வாகனத்தில் அமர்ந்து ஓட்டும்போது அந்த வாகனத்தின் சக்தியில் ஒரு பங்கு அவர்களுக்குள் பாய்ந்து விடுகிறது. சாதாரண ஆற் கூட தன்னை ஒரு சூப்பர்மேன் ஆக உணறுகிறான். ஆக்சிலரேட்டரை அழுத்தினால் அந்த வாகனம் சீறிப்பாயும்போது அவனுக்குள் ஒரு போதை ஏற்படுகிறது. இன்னும் கொஞ்சம் வேகமாகப் போகலாமே என்று தன்னை அறியாமல் ஒரு உத்வேகம் ஏற்படுகிறது. 

இந்த  SUV வாகனங்கள் அதிக சக்தி கொண்டவைகளாதலால் இவனுடைய உத்வேகத்திற்கு அது ஈடு கொடுக்கிறது. ஒரு கட்டத்தில் அது போகும் வேகத்தில் அந்த வாகனத்தைக் கட்டுப்படுத்த இவனால் முடிவதில்லை. வாகனம் புறிய மரத்தில் மோதுகிறது. அல்லது முன்னே மெதுவாகச் சென்றுகொண்டிருக்கும் வாகனத்தின் மேல் மோதுகிறது, அல்லது ரோட்டின் நடுவில் இருக்கும் தடுப்புச்சுவற்றைத் தாண்டிக்குதித்து அந்தப் பக்கம் எதிரே வரும் வாகனங்களுடன் மோதுகிறது.

இந்த சூழ்நிலைகளில் எல்லாம் தவறு வாகன ஓட்டியிடம்தான். ஆனால் செய்தித்தாள்கள் சொல்வது "வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து" என்றுதான். கல் தடுக்கு விட்டது என்று சொல்வது போல்தான். கல்லா உன் காலைத்தேடிவந்து தடுக்கியது? நீ கல்லைக் கவனிக்காமல் போய் அதன் மேல் இடித்து விட்டு கல்லைக் குறை சொல்வது போல்தான்.

ஆனால் உலக வழக்கம் இதுதான். தன் தப்பை மறைக்க அடுத்தவன் பேரில் பழியைப் போடுவது காலம் காலமாத நடந்து வருவதுதான். ஆனால் விபத்து நடந்து முடிந்து உயிர் போன பிறகு யார் பேரில் பழியைப்போட்டு ஆகப்போவதென்ன? போன உயிர் போனதுதானே?

புதன், 13 மே, 2015

கடவுளைக் கண்டேன்.

                              Image result for ரூபாய் நோட்டுகள்

என்னால் எந்த விஷயத்தையும் விரிவாக எழுத முடிவதில்லை. இளம் வயதிலிருந்தே அப்படி பழகிவிட்டது. இப்போது, இந்த வயதுக்கு மேல் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

கடவுள் இல்லை என்று மறுப்போரும் கடவுளை இது வரையில் நான் கண்டதேயில்லை என்போருக்கும் ஒரு நற்செய்தியாக இரண்டு நாள் முன்பாக கடவுள் காட்சியளித்தார்.அதைக் கண்டவர்கள் புண்ணியாத்மாக்கள். காணாதவர்கள் பாபிகள்.

நான் கண்டேன். தத்ரூபமாகக் கண்டேன். எனக்கு கடவுள் பணரூபத்தில் காட்சி அருளினார். இனி என் பூஜை அலமாரியில் ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைத்துக் கும்பிடப்போகிறேன்.

திங்கள், 11 மே, 2015

கம்ப்யூட்டர் காப்பி

                                       Image result for டவரா காப்பி
நான் காலையில் தினமும் சுமார் மூன்று மணி வாக்கில் எழுந்து விடுவேன். காலை எழுந்தவுடன் படிப்பு என்ற முது மொழிக்கேற்ப கம்பஃயூட்டர் படிப்பில் உட்கார்ந்து விடுவேன். அப்போது சொஞ்ச நஞ்சம் இருக்கும் தூக்கக் கலக்கம் போக நானே ஒரு காப்பி போட்டுக்குடிப்பேன். அதுதான் கம்ப்யூட்டர் காப்பி.

தேவைப்படும் பொருட்கள்.

1. இரண்டு ஸ்பூன் நெஸ்லெ பால் பவுடர்

2. ஒரு ஸ்பூன் புரூ இன்ஸ்டன்ட் காப்பித்தூள்.

3. அரை ஸ்பூன் சர்க்கரை.

4. ஒரு டம்ளர் தண்ணீர்.


தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சர்க்கரையைப் போட்டு பொருத்தின கேஸ் அடுப்பின் மீது வைக்கவும். தண்ணீர் சிறிது சூடானதும் இரண்டு ஸ்பூன் பால் பவுடரை அதில் பரவலாகப் போடவும்.

ஒரு ஸ்பூன் புரூ காப்பி பவுடரை டம்ளரில் போடவும். இப்போது பால் பவுடர் நன்கு கரைந்து பால் கொதிக்க ஆரம்பிக்கும். அதை எடுத்து காப்பித்தூள் போட்டிருக்கும் டம்ளரில் ஊற்றி இரண்டு தடவை ஆற்றவும்.

அவ்வளவுதான். கம்ப்யூட்டர் காப்பி தயார். மொத்தம் மூன்று நிமிடம் ஆகும். 

சனி, 9 மே, 2015

காப்பி குடிப்பது எப்படி?

ஆன்மா-ஆத்மா விசாரத்தைக் கொஞ்ச நாள் தள்ளி வைக்கலாம். இப்போது பூலோக சோமபானம் என்று சொல்லக்கூடிய காப்பியை எப்படி தயாரித்துக் குடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

காப்பி என்றால் பிராமணாள் ஆத்துக் காப்பிதான் காப்பி. மற்றதெல்லாம் கழுதண்ணிதான். அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நல்ல அரேபிகா காப்பிக்கொட்டைஒன்று அல்லது இரண்டு கிலோ வாங்கி ஆத்தில் ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும். காலையில் எழுந்ததும் குமுட்டி அடுப்பைப் பற்றவைத்து அதில் வாணலியை வைத்து அன்றைக்குத் தேவைப்படும் அளவிற்கு காப்பிக்கொட்டைகளை எடுத்து அதில் போட்டு வறுக்கவேண்டும். காப்பிக்கொட்டை நன்றாக வறுபட்டவுடன் ஒரு வாசனை வரும். அப்போது அதை இறக்கி வைத்து விட்டு அடுப்பில் வெந்நீர் வைக்கவேண்டும்.

                                Image result for hand grinder coffee
இந்த மாதிரி காப்பிக் கொட்டையைக் கையால் அரைக்கும் ஒரு இயந்திரம் அன்று எல்லா பிராமணாள் வீட்டிலும் தவறாது இருக்கும். நான் முன்பு சொன்ன மாதிரி வறுத்த காப்பிக்கொட்டையை இந்த இயந்திரத்தில் போட்டு அரைத்து வரும் காப்பிப்பொடியை அப்படியே காப்பி பில்ட்டரில் போடவேண்டும்.

      Image result for coffee filterImage result for coffee filter

காப்பித்தூளை பில்ட்டரில் போட்ட பிறகு ரெடியாக இருக்கும் வெந்நீரை அதில் ஊற்றி மூடி வைத்து விடவேண்டும். இப்போது காப்பி டிகாக்ஷன் இறங்க ஆரம்பிக்கும். அது சொட்டு சொட்டாக விழும் சப்தம் கேட்கும். அப்படிக் கேட்காவிட்டால் பில்ட்டரை கரண்டியால் இரண்டு தட்டுத் தட்டவும்.

இப்போது பால்காரன் பால் சப்ளை செய்திருப்பான். கேன் பால் அல்ல. பசு மாட்டை வீட்டிற்கு ஓட்டி வந்து நம் கண் முன்னால் பால் கறக்கும் பாத்திரத்தில் தண்ணீர் இல்லை என்று காட்டிப் பின்பு கறந்து கொடுக்கும் பால். இதை அடுப்பில் வைத்து காய்ச்சவேண்டும். பால் பொங்குவதற்கு சற்று முன்னால் அதை இறக்கி காப்பிப் பாத்திரத்தில் தேவையான அளவு ஊற்றி, அதில் இப்போது ரெடியாக இருக்கும் காப்பி டிகாக்ஷனை அளவாக ஊற்றி, அளவான சீனி சேர்த்து, இரண்டு தடவை ஆற்றிக் கலக்கி, டபரா செட்டில் ஊற்றிக் கொடுத்தால் வீடே காப்பி வாசனையில் கமகமக்கும்.

                                Image result for டபரா காப்பி

இந்தக் காப்பியைக் குடிப்பதே ஒரு கலை. டம்ளரை அலுங்காமல் வெளியில் எடுத்து அதில் இருக்கும் காப்பியை டபராவில் ஊற்றி, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் ஊற்றி சாப்பிடுவதே ஒரு பேரின்பம். சாப்பிடும்போது உஸ்ஸ்ஸென்று ஒரு சவுண்ட் கொடுக்கவேண்டும். இதுதான் காப்பி சாப்பிடும் முறை.