சனி, 17 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? (பாகம்-1)

எல்லோரும் தாங்கள் பிரபல பதிவராக ஆகவேண்டுமென்றுதான் விரும்புவார்கள். உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் (இருந்தால் மட்டுமே) மேலே படிக்கவும். அந்த ஆசை இல்லையென்றால் உடனே இந்த தளத்தை மூடிவிட்டு வேறு உபயோகமான வேலையைப்பார்க்கவும்.
ஆனால் இவை அனைத்தும் என் சொந்தக்கருத்துக்களே. யாருடைய மனதையும் எள்ளளவும் புண்படுத்துவதற்காக இந்த பதிவை எழுதவில்லை. அப்படி யாராவது தங்கள் மனது மிகவும் புண்பட்டு விட்டதாக எண்ணினால் அவர்களுக்கு என் அட்வான்ஸ் அபாலஜூஸ் (apologies). (சரியான தமிழ் வார்த்தைகளை யோசிக்க சோம்பல்). புதிதாக பதிவு எழுதப்போகும் உங்களுக்காக மிகவும் எளிய முறையில் படிப்படியாக கொடுத்திருக்கிறேன்.
முதல் படி :-
நீங்கள் முதலில் ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டும். இந்த பதிவைத்தான் நீங்கள் பிரபலப்படுத்தப போகிறீர்கள். பதிவு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாதா? அப்படியென்றால் நீங்கள் இந்த விளையாட்டிற்கு லாயக்கில்லை. பேசாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருங்கள்.
இரண்டாவது படி:-
இந்தப்பதிவிற்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் அல்லவா? இது ரொம்ப, ரொம்ப முக்கியம்! சுடுகாடு’’, பாழுங்கிணறு’’, ‘பன்னிக்குட்டி’’, ‘எங்க வீட்டு பொடக்காழி’’ இந்த மாதிரி ஒரு நல்ல பெயராக யோசித்து ஒரு பெயர் வைக்கவும். அடுத்த்தாக உங்களுக்கு (பதிவர்) ஒரு பெயரை தேர்ந்தெடுக்கவும். காட்டான், மொல்லமாரி, முடிச்சவிழ்க்கி, கொலைகாரன், இந்த மாதிரியான ஒரு பெயரை உங்களுக்கு சூட்டிக்கொள்ளவும்.
என்னய்யா இது அக்கிரமமாக இருக்கிறதே! படித்தவர்கள் எழுதும் வலைத்தளங்களை இப்படி கொச்சைப்படுத்தலாமா என்று நினைக்கிறீர்களா? இதற்கே இப்படி தயங்கினால் நீங்கள் வலையுலகத்தில் ஓரங்கட்டப்படுவீர்கள். தயக்கப்படாதீர்கள். இனி வருபவை இதைத்தூக்கி சாப்பிடும்படியாக இருக்கும். முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள். தைரியமாக மேலே படியுங்கள்.
மூன்றாவது படி:-
ஆகக்கூடி உங்கள் முதல் பதிவை ஆரம்பித்து விட்டீர்களா! வாழ்த்துக்கள். இதே மாதிரி மேலும் ஒன்பது பதிவுகள் வெவ்வேறு பெயர்களில் ஆரம்பியுங்கள். எதற்காக இன்னும் ஒன்பது பதிவுகள்? எனக்கு ஒரு பதிவை பிரபலமாக்கினால் போதுமே, எதற்காக இந்த வீண் வேலை என்று நினைக்கிறீர்களா? பதிவுலக நுணுக்கங்கள் புரியும் வரை குரு சொல்வதை ஒழுங்காகக்கேட்டுப்பழகுங்கள். எல்லாம் உங்கள் நன்மைக்கே!!!
நான்காவது படி;-
உங்கள் நண்பர்களில் கணினி வைத்திருப்பவர்கள் பத்து பேரைப்பிடியுங்கள். அவர்களைத் தாஜா செய்து, அவர்களை நன்றாக கவனித்து – அது எப்படி என்பது போகப்போக விளங்கும் – அவர்கள் ஒவ்வொருவரும் தலா பத்து பத்து வலைத்தளங்களை ஆரம்பிக்கச்சொல்லுங்கள். இது எதற்கு என்று பின்னால் விளக்குகிறேன்.
ஆச்சா! இப்போது நீங்கள் உங்கள் பதிவை பிரபலமாக்குவதற்கு வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகளும் செய்தாகிவிட்டது. இனி பதிவு எழுதவேண்டியதுதான் பாக்கி.
இதுவரை எழுதியவற்றையெல்லாம் பலமுறை படித்து மனதில் பதிநவைத்துக்கொள்ளுங்கள். மீதி அடுத்த பாகத்தில்....
பாகம் 2 – தொடரும்...


2 கருத்துகள்:

  1. கலக்குங்க! கிண்டல் நன்றாக உள்ளது.பாரிசின் முக்கிய இடங்களின் படங்களும், மீரா ஜஸ்லின் - எனக்கு அவர் சிரித்தமுகம்- பிடிக்கும்

    பதிலளிநீக்கு