வியாழன், 29 ஏப்ரல், 2010
திங்கள், 26 ஏப்ரல், 2010
ஆனைமலைக்காரர்களின் பொழுதுபோக்கு என்ன?
எல்லோருக்கும் பெரும்பான்மையாக விவசாயம்தான் தொழில். வயலில் நாற்று நட்டு முடிந்துவிட்டால் அப்புறம் நீர் மணியகாரன் பாடு. அவன் பாட்டுக்கு வயலுக்கு தண்ணீர் கட்டிக்கொண்டு இருப்பான். கடலைக்காய் விவசாயத்திலும் கடலையை சித்திரையில் விதைத்து அது முளைத்து ஒரு மாதத்தில் ஒரு களை எடுத்துவிட்டால் பிறகு ஒன்றும் வேலையில்லை. மேலும் ஆனி மாதம் பிறந்துவிட்டால் அடை மழைக்காலம். வீட்டைவிட்டு எங்கும் வெளியில் போகமுடியாது.
அப்புறம் வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு எவ்வளவு நேரம் கூரையையே பார்த்துக்கொண்டு இருப்பது. இதற்கு ஆனைமலைக்காரர்கள் ஒரு நல்ல தீர்வு கண்டுபிடித்தார்கள். நல்ல ஜமாவாகச் சேர்ந்து கொண்டு ரம்மி ஆடுவதுதான் அந்த தீர்வு. மழை காலம் முடியும் வரைக்கும் இதுதான் அவர்களுடைய முக்கிய வேலை. சௌகரியமான ஒரு வீட்டில் கச்சேரி நடக்கும். பத்து பதினைந்து பேர் சேர்ந்து கொள்வார்கள். அவரவர்கள் இருக்கும் இடத்திற்கே டிபன், காப்பி, சாப்பாடு வகையறாக்கள் வந்துவிடும். இதற்கென்று ஒரு கடையை முதலிலேயே ஏற்பாடு செய்துகொள்வார்கள்.
மழைகாலம் ஏறக்குறைய இரண்டு மாதம் நீடிக்கும். இந்த இரண்டு மாதமும் இந்த ஜமா இரவு பகலாக, கலையாமல் ஆடிக்கொண்டே இருக்கும். வேலையிருப்பவர்கள் எழுந்து போவார்கள். அந்தக்காலி இடத்தில் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் உட்கார்ந்துகொள்வார். இப்படி ஒருவர் இருவர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள்.ஆனால் ஜமா நடந்துகொண்டே இருக்கும்.
மழையெல்லாம் ஓய்ந்து கடலை வெட்டு ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில்தான் ஜமாவைக் கலைப்பார்கள். ஒரு தடவை இப்படி ஜமா, இரண்டு மாதம் நடந்து முடிந்தபின் எல்லோருமாக ஒரு கணக்குப் பார்த்திருக்கிறார்கள். யாருக்கு எவ்வளவு லாபம், எவ்வளவு நஷ்டம் என்று கணக்குப்பார்த்தார்கள். அப்படிப்பார்த்ததில், எல்லோரும் எனக்கு இவ்வளவு நஷ்டம், எனக்கு இவ்வளவு நஷ்டம், என்றுதான் சொல்லுகிறார்களே தவிர ஒருத்தராவது, எனக்கு இவ்வளவு லாபம் என்று சொல்வாரில்லை. ஏறக்குறைய மொத்தமாக மூவாயிரம் ரூபாய் எல்லோருக்குமாக நஷடம். அன்றைய மூவாயிரம் ரூபாய் இன்றைக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கு சமம்.
இது எப்படி ஆயிற்று என்று எல்லோரும் கூடி பேசினதில் அவர்கள் கண்டுபிடித்தது, இந்தப்பணம் பூராவும் அவர்கள் இரண்டு மாதமாகச் சாப்பிட்ட காப்பி, டிபன் வகையறாக்களின் செலவு. இது எப்படி இருக்கிறது பாருங்கள்?
நான் வேலை பார்த்த ஆபீஸ் ஆனைமலையிலும் பண்ணை வேட்டைகாரன்புதூரிலும் இருந்தன. நான் ஆனைமலையில் ரூமில் குடியிருந்தேன். தினமும் சைக்கிளில் பண்ணைக்குப்போய் மதியம் வரை இருந்துவிட்டு, மதியத்திற்கு மேல் ஆபீஸுக்கு வருவேன். என்கூட வேலை பார்த்தவனும், என் ஆபீசரும் லீவில் போய்விட்டபடியால், எல்லா வேலைகளையும் நான் ஒருவனாகப்பார்க்க வேண்டியதாயிற்று. பண்ணையில் அப்பொழுது நிலக்கடலை அறுவடை சமயம். மொத்தம் அறுபது ஏக்கர். அந்த வருடம் கடலை நல்ல மகசூல். ஏறக்குறைய 70-80 பேர் ஆட்கள் வேலை செய்கிறார்கள். கோயமுத்தூரிலிருந்து கடலை பிடுங்குவதற்காக டிராக்டரில் மாட்டப்பட்ட ஒரு கருவி வந்திருந்தது. அதன் உதவியுடன் ஏறக்குறைய முக்கால் பங்கு அறுவடை முடிந்திலுந்தது.
கடலையை அறுவடை செய்தவுடன் நன்றாக காயவைத்து, மூட்டைபோட்டு, குடோனில் அடுக்கி வைக்கவேண்டும். கடைசியாக அறுவடை செய்யும் சமயத்தில் மழை பிடித்துக்கொண்டது. கடலைக்காயை காயவைக்கமுடியவில்லை. அப்படியே அள்ளி ஒரு தாழ்வாரத்தில் போட்டோம். அந்த கடலைகளெல்லாம் அப்படியே முளைகட்டி, விதைக்கு உதவாமல் போயிற்று. இந்த வேலைகளையெல்லாம் நேரம் காலம் பார்க்காமல் மேற்பார்வை பார்த்ததில் என் உடல்நலம் கெட்டுப்போயிற்று.
எல்லா அறுவடையும் முடிந்து விட்டது. ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலையில் குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு பண்ணைக்கு போகலாம் என்று சைக்கிளை எடுத்தால், உடம்பு பூராவும் அப்படி ஒரு வலி. என்னடா, உடம்பு இப்படி இருக்கிறதே, எதற்கும் டாக்டரைப் பார்க்கலாம் என்று அந்த ஊரில் இருந்த ஒரே டாக்டரைப் பார்க்கப்போனேன். அவர் தெர்மாமீட்டரை வைத்துப்பார்த்துவிட்டு 102 டிகிரி காய்ச்சல் இருக்கிறது என்றார். காய்ச்சல் இருப்பது கூட தெரியாமல் நான் வேலை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன். அவர் ஒரு ஊசி போட்டுவிட்டு, மருந்துகள் எழுதிக்கொடுத்துவிட்டு, பேசாமல் ரெஸ்ட் எடுக்கச்சொல்லிவிட்டார். ரூமுக்கு வந்து படுத்துக்கொண்டேன். அப்போதுதான் நான் எதிர்பாராத ஒன்று நடந்தது!
தொடரும்…
பத்ரிநாத், கேதார்நாத் பயணம்
இந்தப்படம் நிறையப் பேருக்கு அறிமுகம் ஆன படம். ரிஷிகேஷ் லக்ஷ்மண் ஜூலா எனப்படும் தொங்குபாலம். நான் குடும்பத்துடன் ஜூலை மாதம் போகலாமென்று இருக்கிறேன். போய் வந்த பிறகு உங்களை அறுப்பதற்கு நிறைய விஷயங்கள் கொண்டு வரலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அந்த அறுவைகளைத் தாங்கக் கூடியவர்களெல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்க்கலாம்.
சத்தமே கேக்கலயே, இன்னும் கொஞ்சம் பலமா. ம்ம்ம், இப்ப கேக்குது. ரெடியா இருங்க J
ஞாயிறு, 25 ஏப்ரல், 2010
ஆனைமலையில் ஆனை பிடிக்கும் கதை
ஆனைமலைக்குத் தெற்கே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வேட்டைக்காரன்புதூர் கிராமம். வேட்டைக்காரன்புதூரில் பெரும்பாலும் கவுண்டர்கள். ஆனைமலையில் முதலியார்களும் முஸ்லிம்களும் அதிகம். இரண்டு ஊர்க்காரர்களும் பெரும் நிலச்சுவான்தாரர்கள். இரண்டு ஊர்களுக்குள்ளும் யார் பெரியவர்கள் என்பதில் போட்டி. ஒரு கி.மீ. தூரத்தில் இரண்டு கவர்மெண்ட் உயர்நிலைப்பள்ளிகள்.