வியாழன், 22 ஏப்ரல், 2010

நான் வேலைக்குப் போன கதை-பாகம் ௩ மறு பதிவுநான் வேலைக்குப்போன கதையில் பெட்டி வாங்கப்போய், அங்கிருந்து ஆளவந்தார் கதைக்குப்போய், பிறகு விக்கிரமாதித்தன் கதையில் கொஞ்சம் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். அரும்பாவூர் அவர்கள் நான் முதல் மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று அறிய ஆவலாய்க் காத்துக்கொண்டு இருக்கிறார். அவரை மேலும் காக்க வைப்பதில் நியாயமில்லை. ஆகவே இந்தக்கதையை தொடருகிறேன். விக்கிரமாதித்தன் கதை என்ன ஆயிற்று என்று உங்களில் சிலர் கேட்பது காதில் விழுகிறது. அதையும் அவ்வப்போது நடுநடுவில் எழுதுகிறேன். ஒரு மாற்றம் இருந்தால்தானே சுவை இருக்கும்.
ஒரு சுபயோக சுபதினத்தில், அதாவது 1956 ம் வருடம் சுதந்திர தினத்தன்று வேலைக்குச் சேருவதற்காகப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்டிற்கு சென்றேன். என் அத்தை-மாமா, கோவை-பொள்ளாச்சி ரூட்டில் டிரைவராக இருக்கிறார் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அவர் கோவையில் ட்ரிப் எடுக்கும் நேரத்தை முதலிலேயே கேட்டு வைத்திருந்தேன். சரியாக அரை மணி நேரம் முன்பாக பஸ் ஸ்டேண்ட் சென்றுவிட்டேன். மாமா பஸ் நின்றுகொண்டிருந்தது. ஒரு ஆளைப்பிடித்து பெட்டியை முன் சீட்டுக்குப்பக்கத்தில் வைத்தேன். சாதாரணமாக அவ்வளவு பெரிய பெட்டியை பஸ் டாப்பில்தான் ஏற்றவேண்டும். ஆனால் நான் டிரைவரின் மருமானல்லவா, அதனால் இந்த சலுகை. மாமா காபி குடித்துவிட்டு வந்தார். டைம் ஆனவுடன் பஸ் புறப்பட்டது.

சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து பொள்ளாச்சி போய் சேர்ந்தோம். அங்கிருந்து வேறு பஸ்ஸில் ஏறி ஆனைமலை போகவேண்டும். நான் இதற்கு முன் ஆனைமலை போனதில்லை. மாமா ஆனைலை போகும் பஸ்ஸின் டிரைவரைப் பிடித்து விவரம் சொல்லி என்னை அவர் பஸ்ஸில் ஏற்றிவிட்டார். என்ன விவரம் என்றால், பையன் ஆனைமலையில் வேலைக்கு சேரப்போகிறான். அவன் ஊருக்குப்புதிது. அங்கு யாரையாவது பிடித்து அவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறு ஏற்பாடு பண்ணுங்கள், என்கிற விவரம்தான்.
ஆனைமலை பஸ் புறப்பட்டது. போகும் வழியில் பெரும் மழை. எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை. எப்படியோ ஆனைமலை வந்து சேர்ந்தோம். மழை விட்டுவிட்டது. பஸ் டிரைவர் ஒரு ஆளைக்கூப்பிட்டு என்னைக்காண்பித்து இவரை அந்த ஆபீசுக்கு கூட்டிக்கொண்டு போய்க் காண்பி என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

அன்று சுதந்திர நாளானதால் ஆபீஸ் லீவு. இருந்தாலும் ஆபீசர் வீடும் ஆபீசும் ஒன்றாக இருந்ததால் அவரைப்பார்த்தேன். அவர், சரி, நாளைக்கு டூட்டியில் சேர்ந்து கொள்ளலாம், இன்று நீ தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனி என்று சொல்லி ஒரு பியூனைக் கூட அனுப்பினார். அந்த ஊரில் ஒரு விவசாய டெமான்ஸ்ரேட்டர் உண்டு. அவர் ஒரு வீட்டின் முன்புற அறையில் தங்கி இருந்தார். அந்த வீட்டிலேயே இன்னொரு அறையும் இருந்தது. பியூன் அதை எனக்குப்பேசி என்னைக்குடி வைத்தான்.
மறுநாள் பிற்பகலில் வேலையில் சேர்ந்தேன். என்னுடன் படித்த இன்னொருவனுக்கும் அதே ஆபீஸில் வேலைக்குச்சேர உத்திரவு வந்திருந்த து. அவனும் நானும் ஒன்றாகத்தான் வேலைக்கு சேர்ந்தோம். ஆபீசர் எங்களுக்கு வேலைகளைப்பற்றி சொல்லிவிட்டு, பண்ணையைச்சுற்றிக்காட்ட கூட்டிக்கொண்டு போனார். சொல்ல மறந்துவிட்டேன், என்னிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. அதையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தேன். பண்ணை ஒரு கி.மீ. தூரத்தில் இருந்தது. மூன்று பேரும் சைக்கிளில் போனோம். பண்ணையை சுற்றிப்பார்த்தோம். செய்ய வேண்டிய வேலைகளைப்பற்றி பொதுவாக சொன்னார்.

காலேஜில் படித்ததிற்கும் பண்ணை வேலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆட்களை வேலை வங்குவது, பண்ணை வேலைகளை மேற்பார்வையிடுவது, பயிர் பரிசோதனை விவரங்கள் சேகரித்தல், ரிக்கார்டுகள் பராமரித்தல், ஸ்டாக் கணக்குகள் பராமரித்தல், ஆபீஸ் கடிதங்கள், ஆபீஸ் கணக்கு வழக்குகள் என்று பல வேலைகளில் மூழ்கிப்போய், நாள் கிழமை கூட மறந்து போய் விட்டன. இந்த நடைமுறைகளை எல்லாம் பொறுமையாக கத்துக்கொடுக்கவும் யாரும் இல்லை. ஆபீசர் இதைச்செய்யவேண்டும் என்றுதான் சொல்வாரேயொழிய, எப்படிச்செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க மாட்டார். அந்த வேலையை செய்து முடிக்காவிட்டால் டோஸ் விடுவார். அவ்வளவுதான்.


இப்படியாக வேலையிலேயே முழுகிப்போய் இருந்தபோது ஒன்றாம் தேதி வந்தது. சம்பள பட்டியல் போட்டு டிரெஷரிக்கு அனுப்பி பாஸ்பண்ணி, டோகன் வாங்கி, பிறகு அங்கிருந்து ஸ்டேட் பாங்க் போய் பணம் வாங்கவேண்டும். எனக்கும் சம்பளம் போட்டார்கள். என்னவோ பெரிய ஆபீஸ், பத்து பேர் அக்கவுண்ட்ஸ் பார்க்கிறர்கள் என்று கற்பனை செய்யாதீர்கள். ஒரே ஒரு கிளார்க் கம் டைப்பிஸ்ட் மட்டும்தான். நாங்கள் இரண்டு பேர் டெக்னிகல் ஸ்டாஃப். நாங்களும் கிளார்க்கும் சேர்ந்து சம்பள பட்டியல் தயார் செய்தோம்.
சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு சம்பளம் நூறு ரூபாய், பஞ்சப்படி இருபத்தி நான்கு ரூபாய், ஆக மொத்தம் நூற்றி இருபத்திநான்கு ரூபாய். முதல் மாதம் இதில் 15 / 31 பங்கு அதாவது 60 ரூபாய் சம்பளம். ஆஹா, நானும் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் வேலையோ நெட்டி முறிக்கின்றது.
இந்த நிலமையில் என்கூட சேர்ந்த என் வகுப்புத்தோழனுக்கும் ஆபீசருக்கும் ஒத்து வரவில்லை. அவனுக்கு ஒருநாள் திடீர் தந்தி. “பாட்டிக்கு உடம்பு சரியில்லை. உடனே வரவும்.” இந்த தந்தியைக் காண்பித்து இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு போய்விட்டான். போனவன் போனவனே. லீவை ஒரு மாத த்திற்கு நீட்டித்துவிட்டான். எல்லா வேலையையும் நானே பார்க்க வேண்டியதாயிற்று. இதன் இடையில் என் ஆபீசரும் தன்னுடைய தங்கைக்கு கல்யாணம் என்று 15 நாள் லீவு போட்டுவிட்டுப் போய்விட்டார்.
அவ்வளவுதான். கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போலத்தான். எப்படி சமாளித்தேன், என்ன ஆயிற்று ?
அடுத்த பதிவில் பார்ப்போம்….

24 கருத்துகள்:

 1. முதல் மாதம் சம்பளம் யாருக்கும் மறக்க முடியாத நினைவு

  தாத்தா உங்கள் பதிவு வர வர சூடு பிடிக்கிறது இப்படியே தொடரவும்

  உங்க ஆதரவை வேண்டி பேரன்
  ஹாய் அரும்பாவூர் முபாரக்

  பதிலளிநீக்கு
 2. அய்யா 1973 ல் நானும் ஆனைமலையில் தான் பணியில் சேர்ந்தேன்ங்க.

  பதிலளிநீக்கு
 3. பேராண்டி கேட்ட சம்பள விவரம் கொடுத்துவிட்டேன். இந்த சம்பளத்துக்கா வேலை பாத்தீங்கன்னு கேக்கப்படாது. அதே வேலைல இருந்து எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்து வந்ததினால்தான் இன்று ரிடையர்டு வாழ்க்கையில் சுகமாக வாழ்கிறேன்.

  மூத்தோர் சொல்லும் மது நெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும் என்பது என் வாழ்க்கையைப் பொருத்தவரையில் முற்றும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 4. தாராபுரத்தான் சொன்னது:

  //அய்யா 1973 ல் நானும் ஆனைமலையில் தான் பணியில் சேர்ந்தேன்ங்க.//
  கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமுங்க.
  அப்ப மாசானியம்மன் கோவில் பெரிசாயிடுச்சுங்களா?

  பதிலளிநீக்கு
 5. LK said

  //nan first jobla senthapa enaku 1000 rooba sambalam//

  ஓ, அது பெரிய சம்பளமாச்சே. ஆனா இண்ணக்கி வேலைக்கு சேரவங்களுக்கு அந்த சம்பளமெல்லாம் தூசு.

  பதிலளிநீக்கு
 6. amam 2001la athu enakku perisu. UG mudicha adutta masam naan padicha colleglaye senthen...

  பதிலளிநீக்கு
 7. ''வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்டிற்கு சென்றேன்.''

  அப்போ ஆட்டோ இருந்துதா?

  எங்கப்பா வேலையில் சேறும் போதும் 60 ருபாய் தான் சம்பளம் .
  எங்கப்பா வேலையில் சேர்ந்த கதையை பேர பிள்ளைகளிடம் சொல்லும்போது எங்கம்மா சொல்லுவா ‘’’’என்னை இந்த ஒன்றையனா வாதியாருக்கு தான் எங்கப்பா கட்டி கொடுத்தாறு என்று...

  பதிலளிநீக்கு
 8. "மூத்தோர் சொல்லும் மது நெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும் என்பது என் வாழ்க்கையைப் பொருத்தவரையில் முற்றும் பொருந்தும்"

  ரொம்ப சரியா சொன்னிங்க அய்யா

  1993இல் என்னோட முதல் சம்பளம் ரூ400
  இன்னைக்கு என் சம்பளம் ரூ40000.
  அன்று கஷ்டப்படலேன்னா இந்த அளவுக்கு முன்னேறியிருக்க முடியாது

  பதிலளிநீக்கு
 9. சுவாரச்யமாகாகதான் இருக்கு
  தொடருங்க ,பின் வருகிறோம்

  பதிலளிநீக்கு
 10. மலர் சொன்னது:

  //''வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்டிற்கு சென்றேன்.''

  அப்போ ஆட்டோ இருந்துதா?//

  வந்துருச்சுங்க. ஆனா ரேட்டைச்சொன்னா நம்ப மாட்டீங்க. அந்த காசை இப்ப பிச்சைக்காரனுக்குப் போட்டா அவன் திட்றதைக் கேக்கமுடியாது.

  ஆர்.எஸ். புரத்திலிருந்து பொள்ளாச்சி பஸ் ஸ்டேண்டிற்கு (உக்கடம்) எட்டணா, அதாவது 50 நயா பைசா. பேரமெல்லாம் கிடையாது. நிஜமா அது ஒரு பொற்காலம்தானுங்க.

  பதிலளிநீக்கு
 11. அண்ணாச்சி சொன்னது:

  //"மூத்தோர் சொல்லும் மது நெல்லிக்காயும் முன்னே கசக்கும், பின்னே இனிக்கும் என்பது என் வாழ்க்கையைப் பொருத்தவரையில் முற்றும் பொருந்தும்"

  ரொம்ப சரியா சொன்னிங்க அய்யா//

  இந்தக்காலத்துல ரொம்ப பேருக்கு அது புரியறதில்லீங்க. அதுதான் மிகப்பெரிய சோகம்.

  பதிலளிநீக்கு
 12. கக்கு-மாணிக்கம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 13. அய்யா அனுபவ தொடர் ஆரம்பம் ஆகிவிட்டது. பரவாயில்லீங்க அய்யா, நீங்க நூத்தி இருபத்தி நாலு ரூபாய், நான் முதல் சம்பளம் மெடிக்கல் ஸ்டேரில் வேலை பார்த்து வாங்கியது 100 ரூவாதாங்க. அப்படியே கொஞ்சம் அப்ப இருந்த ஆனைமலையின் அமைப்பு,இயற்கை வளம். மிருகங்களின் இடர்பாடு, பசுமை ஆகியவற்றையும் தொடரில் இணைத்துச் சொன்னால் அருமையாக இருக்கும். நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 14. // அப்ப மாசானியம்மன் கோவில் பெரிசாயிடுச்சுங்களா? //
  2002 ல் நான் மாசானியம்மன் கோவில் போயிருந்தேன். பெரிசாதான் இருந்தது. ஆடி மாதம் என்பதால் கூட்டமும் அதிகம். ஆனாலும் இன்னமும் ரோட்டில் தான் வண்டிகளை பார்க் செய்கின்றார்கள். மதிய உணவுக்கு நல்ல சைவக் கடை இல்லை.

  பதிலளிநீக்கு
 15. பித்தனின் வாக்கு சொன்னது:

  // அப்ப மாசானியம்மன் கோவில் பெரிசாயிடுச்சுங்களா? //
  2002 ல் நான் மாசானியம்மன் கோவில் போயிருந்தேன். பெரிசாதான் இருந்தது. ஆடி மாதம் என்பதால் கூட்டமும் அதிகம். ஆனாலும் இன்னமும் ரோட்டில் தான் வண்டிகளை பார்க் செய்கின்றார்கள். மதிய உணவுக்கு நல்ல சைவக் கடை இல்லை.//

  அதப்பத்தி விரிவா எழுதறனுங்க. அந்தக்கோவிலுக்கு போற வழியில் மொதோ வீட்டில்தான் ரூம் எடுத்து தங்கியிருந்தனுங்க. அந்த வீடு இன்னும் இருக்குதுங்க.

  பதிலளிநீக்கு
 16. என்னோட ஃபர்ஸ்ட் ஜாப்ல சம்பளமே தரல. என்ன பன்றது. அதான் உலகம்.

  anbudan
  ram
  www.hayyram.blogspot.com

  பதிலளிநீக்கு
 17. hayyram said:

  //என்னோட ஃபர்ஸ்ட் ஜாப்ல சம்பளமே தரல. என்ன பன்றது. அதான் உலகம்.//

  இல்லீங்க, அதான் எக்ஸ்பீரியன்ஸ்.

  பதிலளிநீக்கு
 18. மாதேவி சொன்னது:

  //நல்ல ரசனையான இடுகை.//
  நன்றிங்க

  பதிலளிநீக்கு
 19. என் முத சம்பளம் 1984 ஓசூரில் கோத்தாரி எலெக்ட்ரானிக்ஸ் & இன்டஸ்ட்ரீஸில் மாசம் 400 ரூபாய். புழு விழுந்த சாப்பாடுக்கு பிடித்துக்கொண்டது போக 200 சொச்சம் கையில் கொடுத்தார்கள்.
  இப்போ அந்த 400 சற்றேறக்குறைய 5 நிமிசத்து சம்பளம்.

  பதிலளிநீக்கு
 20. குலவுசனப்பிரியன் சொன்னது:

  //என் முத சம்பளம் 1984 ஓசூரில் கோத்தாரி எலெக்ட்ரானிக்ஸ் & இன்டஸ்ட்ரீஸில் மாசம் 400 ரூபாய். புழு விழுந்த சாப்பாடுக்கு பிடித்துக்கொண்டது போக 200 சொச்சம் கையில் கொடுத்தார்கள்.
  இப்போ அந்த 400 சற்றேறக்குறைய 5 நிமிசத்து சம்பளம். //

  வருகைக்கு நன்றி.
  காலம் மாறிவிட்டது. தொழில் வல்லுநர்களின் மதிப்பை நிறுவனங்கள் உண்ர்ந்து கொண்டன. மேலும் சுயதொழில் முனைவோருக்கு சந்தர்பங்கள் மிகவும் உதவுகின்றன. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. படிக்கையில், இனிமையாக இருக்கிறது, உங்களின் மலரும்
  நினைவுகள்.

  பதிலளிநீக்கு