ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

ஆனைமலையில் ஆனை பிடிக்கும் கதை

 
ஆனைமலை ஒரு அமைதியான ஊர். நகரமுமில்லாமல் கிராமமுமில்லாமல் ஒரு நடுத்தர ஊர். நல்ல செழிப்பான பூமி. தெற்கே பத்து கி.மீ. தூரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை. அங்கிருந்து உற்பத்தியாகும் ஆளியாறு ஆனைமலையை ஒட்டி ஓடுகிறது. ஆற்றிலிருந்து நீர் எடுத்து நெல் பாசனம் நடக்கும். பச்சைப்பசேல் என்று பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் நெல் வயல்கள். ஆற்று மட்டத்திற்கு மேல் உள்ள நிலங்களில் நிலக்கடலை விவசாயம். மேற்குத்தொடர்ச்சி மலைகள் பக்கத்தில் இருந்ததால் நல்ல மழை பெய்யும். மானாவாரியாகவே நிலக்கடலை மிக நன்றாக விளையும். ஆனி, ஆடி மாதங்களில் அங்கு போனால் இயற்கைக்காட்சிகள் கண் கொள்ளாமல் இருக்கும். ஒவ்வொருவருக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பூமி சொந்தம். விவசாயம் அபரிமிதமாக விளைந்ததால் ஊரில் எங்கு பார்த்தாலும் லக்ஷிமி கடாட்சமாய் இருக்கும்.ஆனைமலைக்குத் தெற்கே ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது வேட்டைக்காரன்புதூர் கிராமம். வேட்டைக்காரன்புதூரில் பெரும்பாலும் கவுண்டர்கள். ஆனைமலையில் முதலியார்களும் முஸ்லிம்களும் அதிகம். இரண்டு ஊர்க்காரர்களும் பெரும் நிலச்சுவான்தாரர்கள். இரண்டு ஊர்களுக்குள்ளும் யார் பெரியவர்கள் என்பதில் போட்டி. ஒரு கி.மீ. தூரத்தில் இரண்டு கவர்மெண்ட் உயர்நிலைப்பள்ளிகள்.
இரண்டு ஊர்க்காரர்களுக்கும் இரண்டு பொழுதுபோக்குகள் உண்டு. வேட்டைக்காரன்புதூர்க்காரர்கள் யானை வேட்டையாடுவார்கள். துப்பாக்கி எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போய் ஆடும் வேட்டையல்ல. தங்கள் தங்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு ஆடும் வேட்டை. வேட்டைக்காரன்புதூரில் ஒவ்வொரு கவுண்டர் வீட்டிலும் அப்படி வேட்டையாடிய யானைகளின் தந்தங்களை ஒரு ஆளுயர மர ஸ்டேண்ட் செய்து அதில் பொருத்தி வைத்திருப்பார்கள்.
மலை ஓரமாக உள்ள பகுதிகளில் அந்த வருட விவசாயம் முடிந்த பிறகு நிலங்கள் தரிசாக கிடக்கும். பக்கத்திலுள்ள மலைகளில் யானைகள் நிறைய உண்டு. வெயில் காலங்களில் மலைகளிலிருந்து யானைகள் சமவெளி நிலங்களுக்கு மேய்ச்சலுக்கு வருவதுண்டு. யானைகளின் இந்த குணத்தைப்பயன்படுத்தி அவைகளை வேட்டையாடுவார்கள் (அதாவது பிடிப்பார்கள்).
யானை வழக்கமாக வரும் வழியில் 15 ஆடி ஆழத்தில் ஒரு பள்ளம் தோண்டுவார்கள். இந்தப்பள்ளம் கீழே போகப்போக குறுகலாக, அதாவது கூம்பு வடிவத்தில் இருக்கும். அதன்மேல் குறுக்கும் நெடுக்குமாக மூங்கில் தப்பைகளைப் போட்டு அதன்மேல் தென்னை ஓலைகளை பரப்பி விட்டு, அதன் மேல் லேசாக மண் போடுவார்கள். சிறுவர்கள் அதன் மேல் நடக்கலாம், பெரியவர்கள் நடக்கமுடியாது. இந்த மண்ணில் சோள விதைகளை அடர்த்தியாகத்தூவி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து விடுவார்கள். ஒரு மாதத்தில் சோளம் நெருக்கமாக முளைத்து  ஒரு இரண்டடி வளர்ந்திருக்கும். இதுதான் யானை பிடிக்கும் குழி.
இந்தக்குழிக்குத் தூரமாக 10-15 ஆட்கள் இரவும் பகலும் விழிப்பாக இருப்பார்கள். அவர்கள் தாரை, தப்பட்டை, குத்தீட்டி, கள்ளிப்பால், தண்ணீர் எல்லாம் வைத்திருப்பார்கள். அவையெல்லாம் பிற்பாடு தேவைப்படும். யானைகள் இரவில் கூட்டமாக மேய வரும்போது ஏதாவது ஒரு யானை இந்த சோளப்பயிரின் வாசத்தை மோப்பம் பிடித்து அதை மேய வரும். அந்தப் பயிரின் நடுப்பாகத்திற்குப் போகும்போது அந்த மூங்கில் தப்பைகள் ஒடிந்து யானை குழிக்குள் விழுந்து விடும். விழுந்த யானை ஆக்ரோஷத்துடன் குழியிலிருந்து வெளியில் வர முயற்சி செய்யும். அதை அப்படியே விட்டு விட்டால் அது குழியைச் சிறுகச்சிறுகத் தூர்த்து மேலே வந்துவிடும். கூட வந்த யானைகளும் விழுந்த யானையின் உதவிக்கு வரும்.  
ஆனால் தூரத்தில் காவலாக இருந்த ஆட்கள் யானை குழியில் விழுந்த சத்தம் கேட்டவுடனே தாரை தப்பட்டைகளை முழக்கிக்கொண்டு குழியை நோக்கி ஓடிவருவார்கள். இந்த சத்தத்தைக் கேட்ட மற்ற யானைகள் காட்டுக்குள் போய்விடும். குழிக்குள் விழுந்த யானை மிகவும் கோபமாக இருக்கும். முதலில் அந்தக்குழிக்குள் நிறைய தண்ணீரை ஊற்றுவார்கள். யானை குழிக்குள் இருந்து மேலே வர முயற்சிக்கும்போது குழிக்குள் இருக்கும் மண்ணும் தண்ணீரும் சேர்ந்து சகதியாகி யானையின் கால்கள் சகதிக்குள் சிக்கிக்கொண்டுவிடும். அப்போது யானை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அதைத்தணிக்க அதன் மேல் கள்ளிப்பாலை ஊற்றுவார்கள். கள்ளிப்பால் யானைத்தோலின்மேல் பட்டு புண்ணாகி யானைக்கு மிகுந்த வேதனை தரும். இந்த களேபரம் நடக்கும் சத்தத்தைக்கேட்டு அக்கம் பக்கத்திலிருந்து பெரும் கூட்டம் சேர்ந்துவிடும். எல்லோருமாகச் சேர்ந்து அந்த யானையை குத்தீட்டியால் குத்தியும், கற்களால் அடித்தும் சித்திரவதை செய்வார்கள்.
இதையெல்லாம் வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கில் ஜனங்கள் கூடிவிடுவார்கள். அவர்களுக்கும் மற்ற வேலையாட்களுக்குமாக ஓயாமல் சாப்பாடு தயாராகிக்கொண்டு இருக்கும். ஒரே கல்யாணக் கூட்டமாக இருக்கும்.
இப்படி அந்த யானையை துன்பறுத்துவதால் கொஞ்ச நேரத்தில் யானை மிகவும் சோர்ந்துவிடும். பிறகு அதை மேலே கொண்டு வருவதற்கு பழக்கப்பட்ட யானையையும் ஆட்களையும் கேரளாவில் இருந்து வரவழைப்பார்கள். அவர்கள் வந்து அந்த யானையை கயிறுகள் கட்டி மெதுவாக வெளியில் கொண்டு வருவார்கள். வெளியில் அந்த யானையை அடைத்து வைக்க தனி கொட்டகை தயாரிப்பார்கள். அது ஏறக்குறைய ஒரு ஜெயில் மாதிரி இருக்கும். அங்கு வைத்து அதைப்பழக்குவார்கள். நன்றாகப்பழக்கின யானையை நல்ல விலைக்கு விற்க முடியும்.   
நான் ஆனைமலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த மாதிரி ஒரு யானை குழியில் விழுந்துவிட்டது. ஏகப்பட்ட பேர் வேடிக்கை பார்க்கப்போனார்கள். நான் போகவில்லை. நான் எழுதியதெல்லாம் கேள்வி ஞானம்தானே தவிர அனுபவஞானம் இல்லை. அந்த யானையை வெளியில் கொண்டு வந்தவுடனே உடல் உபாதை தாங்காமல் கீழேவிழுந்து இறந்து போனது என்று கேள்விப்பட்டேன்.
ஆனைமலைக்காரர்களின் பொழுதுபோக்கு என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமா?

11 கருத்துகள்:

 1. மிக கொடுமையாக அல்லவா இருக்கு,
  படிக்கவே மனம் கனக்கிறதே.

  பதிலளிநீக்கு
 2. கொடுமை, இப்போதும் இந்த யானை பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா?
  சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
  விபரங்கள் எங்களுக்கு வியப்பை அளிக்கின்ற. தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 3. என்ன கொடுமை இது. வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதா?
  படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு அய்யா.

  பதிலளிநீக்கு
 4. சைவகொத்துப்பரோட்டா சொன்னது:

  //மிக கொடுமையாக அல்லவா இருக்கு,
  படிக்கவே மனம் கனக்கிறதே.//

  ஆமாங்க, ரொம்பக்கொடுமைங்க. நல்ல காலம், இப்ப இந்தமாதிரி யானை பிடிப்பது கிடையாது.

  பதிலளிநீக்கு
 5. தன்னுடைய மகிழ்ச்சிக்காக வேட்டையாடும் ஒரே மிருகம் மனிதன் மட்டும் தான்

  பதிலளிநீக்கு
 6. கக்கு-மாணிக்கம் சொன்னது:

  //கொடுமை, இப்போதும் இந்த யானை பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா?
  சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க மாட்டார்களா?
  விபரங்கள் எங்களுக்கு வியப்பை அளிக்கின்ற. தொடரட்டும்.//

  அணுணாச்சி சொன்னது:

  //என்ன கொடுமை இது. வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதா?
  படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு அய்யா.//

  வனத்துறையில அப்ப சட்டங்கள் எப்படின்னு எனக்குத்தெரியல. ஆனா அப்போது வனத்துறையிலுமே யானையை இப்படித்தான் பிடித்தார்கள் என்று கேள்வி.

  இப்ப என்ன நிலைமை என்று தெரியவில்லை. லதானந்த் அவர்கள்தான் சொல்லமுடியும்.

  பதிலளிநீக்கு
 7. இராகவன் நைஜீரியா சொன்னது:

  //தன்னுடைய மகிழ்ச்சிக்காக வேட்டையாடும் ஒரே மிருகம் மனிதன் மட்டும் தான்//

  மனிதன் காட்டுமிராண்டியாக இருந்தது முதற்கோண்டே இந்த வேட்டையாடும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. அன்று அவன் உணவுத்தேவைக்காக வேட்டையாடினான். பிறகு தன்னுடைய சௌகரியத்திற்காக மிருகங்களைப் பழக்க வேட்டையாடினான். இன்றோ தன்னுடைய மகிழ்ச்சிக்காக வேட்டையாடுகிறான்.

  பதிலளிநீக்கு
 8. சார்.. நிசமா.. இது ஷாக் நியூஸ்.. நீங்கதான் மசக்கவுண்டனின் பக்கங்கள் எழுதுவதா?..

  ஏன்னா அந்த ப்ளாக், நான் ரெகுலராப்படிக்கிறேன்..

  வரும் ஆகஸ்டில், கோவைக்கு வருகிறேன்.. நேரில் சந்திக்கலாம் சார்...

  பதிலளிநீக்கு
 9. பட்டாபட்டி சொன்னது:

  //சார்.. நிசமா.. இது ஷாக் நியூஸ்.. நீங்கதான் மசக்கவுண்டனின் பக்கங்கள் எழுதுவதா?..

  ஏன்னா அந்த ப்ளாக், நான் ரெகுலராப்படிக்கிறேன்..

  வரும் ஆகஸ்டில், கோவைக்கு வருகிறேன்.. நேரில் சந்திக்கலாம் சார்...//

  வாழ்க்கைல அப்பப்ப ஷாக் அடிச்சாத்தான் சுறுசுறுப்பாக இருப்போம்.

  ஆகஸ்டில் வருகிறீர்களா, ரொம்ப சந்தோஷம். வாங்க, வாங்க

  பதிலளிநீக்கு
 10. அனைவரும் கூறியது போல
  ஆனை பிடித்தது :((

  பதிலளிநீக்கு