திங்கள், 3 மே, 2010

காய்ச்சலும் அப்பாவின் வரவும்





டாக்டரைப்பார்த்துவிட்டு வந்து ரூமில் படுத்துக்கொண்டேன். படுக்கும்போது சுமார் 10 மணி இருக்கும். தூங்கி விட்டேன். 12 மணி சமயத்தில் ஆபீஸ் பியூன் வந்து, சார், சார் என்று என்னை எழுப்பினான். விழித்துப்பார்த்தால் எதிரில் என்னுடைய அப்பா. கூடவே என்னுடைய அத்தை மாமாவும். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்பா சொன்னார், அவருக்கு என்னமோ ராத்திரி திடீரென்று மகனைப்பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அவருக்கு லீவு. காலையில் எழுந்து பொள்ளாச்சி வந்து என் அத்தை மாமாவையும் கூட்டிக்கொண்டு ஆனைமலை வந்து நான் தங்கியிருக்கும் இடத்தை விசாரித்து வந்து விட்டார்கள். நானோ இப்படி படுத்திருப்பதைப் பார்த்தவுடன் அவர்களுக்கும் அதிர்ச்சி. பரஸ்பரம் விசாரிப்புகளுக்குப் பின் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்தோம்.

என்னுடைய ஆபீசரும் லீவில் இருப்பதால் நான் உடனே கிளம்ப முடியாது. கோயமுத்தூரில்தான் அவருக்கும் பெரிய ஆபீசர் இருக்கிறார். அவருக்கு ஆள் அனுப்பி லீவு சேங்க்ஷன் ஆன பிறகுதான் நான் ஊரைவிட்டு கிளம்ப முடியும். அதற்கு எப்படியும் இரண்டு நாள் ஆகிவிடும். இந்த விவரங்களை நான் சொன்னவுடன் அப்பா ஒரு முடிவு செய்தார். அதாவது அவர் ஆருக்குத்திரும்பிப்போய் என்னுடைய பாட்டியை எனக்குத்துணைக்காக அனுப்புவதாகவும், நான் லீவு கிடைத்தவுடன் பாட்டியுடன் கோயமுத்தூர் வருவதாகவும் முடிவு செய்தோம்.

அப்படியே என் அப்பா திரும்பிப்போய் மறுநாள் என் பாட்டியை என் சித்தப்பா கூட்டுக்கொண்டு வந்தார். பாட்டி கெட்டிக்காரி. எப்படியோ அங்கும் இங்கும் அலைந்து எனக்கு கஞ்சி வைக்கவேண்டிய சாதனங்களை தேடி எனக்கு கஞ்சி வைத்துக்கொடுத்தார்கள். தனக்கும் சாப்பாடு செய்து கொண்டார்கள். நான் ஆபீஸ் பியூனை கோயமுத்தூருக்கு அனுப்பி, லீவு கிடைக்க ஏற்பாடு செய்தேன். அவர் ஒரு நாளில் லீவு சேங்க்ஷன் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். மறுநாள் ஆபீஸ் பொறுப்புகளையெல்லாம் அந்த ஊர் விவசாய டெமான்ஸ்ரேட்டரிடம் கொடுத்துவிட்டு ஊருக்குப்புறப்பட்டேன்.

இந்த இரண்டு மூன்று நாளில் என்னுடைய உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டது. என்னுடைய சித்தப்பா பொள்ளாச்சி சென்று ஒரு டாக்சி பிடித்துவந்தார். டாக்சியில் புறப்பட்டு கோயமுத்தூர் வந்து சேர்ந்தேன்.

எங்களுக்கு என்று ஒரு குடும்ப டாக்டர் அப்போது உண்டு. அவரிடம்தான் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் வைத்தியம் செய்து கொள்வோம். அவர் வீட்டில் கன்சல்டிங்க் ரூமில் ஆளுயர அலமாரிகள் இரண்டு இருக்கும். அவைகளில் நூற்றுக்கணக்கான பாட்டில்களில் விதவிதமான கலர்களில் பல மருந்துகள் இருக்கும். நாங்கள் வைத்தியத்திற்கு போனால், கையைப்பிடித்து பார்த்துவிட்டு அலமாரியில் இருக்கும் நாலைந்து பாட்டில்களில் இருந்து கொஞ்சகொஞ்சம் மருந்துகளை ஒரு அளவுகுப்பியில் ஊற்றி கலக்கி, நாங்கள் கொண்டு போயிருக்கும் பாட்டிலில் ஊற்றுவார். பிறகு விரல் அகல காகிதம் ஒன்றை எடுத்து நீளவாக்கில் மடித்து கத்தரிக்கோலால் அளவுகள் வெட்டுவார். அதை பாட்டிலின் மேல் ஒட்டி இந்த மருந்தை இந்த ஆளவு பிரகாரம் இரண்டு நாள் சப்பிட்டுவிட்டு வருமாறு கூறுவார். அந்த மருந்து ஆறு வேளைக்கு வரும். எந்த நோயாக இருந்தாலும் அந்த ஆறு வேளை மருந்திலேயே சரியாகிவிடும்.

இவருக்கு பீஸ் உடனடியாகக் கொடுப்பதில்லை. ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து பில் அனுப்புவார். பில் எவ்வளவு இருக்கும் தெரியுமா, ஐந்து ரூபாய் அல்லது ஆறு ரூபாய் என்றிருக்கும். இதை உடனடியாக கொடுக்க வீட்டில் முடியாமலிருக்கும். எங்கள் வீட்டில் நாலைந்து தென்னை மரங்கள் உண்டு. அவை நன்றாக காய்த்துக்கொண்டிருந்தன. ஒரு மாதம் கழித்து டாக்டர் வீட்டிலிருந்து வேலையாள் வருவான். அம்மா தேங்காய் இருந்தால் வாங்கிக்கொண்டு வரச்சொன்னார்கள் என்பான். எங்க அம்மாவும் பத்து தேங்காய்களை சாக்கில் போட்டுக்கட்டி அவனிடம் கொடுத்தனுப்புவார்கள். அதுதான் நாங்கள் டாக்டருக்கு பில் செட்டில் செய்யும் முறை.

இந்த டாக்டர் எங்கள் வீட்டில் யாருக்காவது ரொம்பவும் முடியாமலிருந்தால் வீட்டுக்கே வருவார். வந்து பார்த்துவிட்டு போகும்போது நாராவது கூடவே டாக்டர் வீட்டுக்குப்போய் மருந்து வாங்கிக்கொண்டு வரவேண்டும். அப்போதெல்லாம் கோயமுத்தூரில் மருந்துக்கடைகளே அபூர்வம். மொத்தமாகவே மூன்று நான்கு மருந்துக்கடைகள்தான் உண்டு. டாக்டர்களும் மொத்தமாகவே ஒரு பத்து பேர்களுக்குள்தான் இருந்தார்கள். ஏதாவது பெரிய நோய் என்றால் பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் (கவர்மெண்ட் ஆஸ்பத்திரி) கொண்டு போகவேண்டும். ஒருவரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்கள் என்று சொன்னால் ஏறக்குறைய அவர் கதை முடிந்துவிட்டது என்று எல்லாரும் பேசிக்கொள்வார்கள். அங்கு போய் நோய் தீர்ந்து வீடு திரும்பினால் பெரிய அதிர்ஷ்டசாலி என்று பொருள்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் எங்கள் குடும்ப டாக்டர் என்னை வந்து பார்த்துவிட்டு இது டைபாய்டு ஜுரம், கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்லி வைத்தியம் செய்தார். எப்படியோ என்னுடைய ஆயுள் கெட்டியாக இருந்தது. நான் பிழைத்து எழுவதற்கு இரண்டு மாதம் ஆகியது. அதற்குப்பிறகுதான் நான் வேலைக்கு சென்றேன்.

இந்த இரண்டு மாத இடைவெளியில் விக்கிரமாதித்தனை கிளியிலிருந்து ராஜாவாக மாற்றுவோமா?

18 கருத்துகள்:

  1. நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவோமங்க..

    பதிலளிநீக்கு
  2. டாக்டர் பீஸ் செட்டில் செய்யும் பாணி ஜூப்பர்.
    விக்கிரமாதித்தனை சீக்கிரம் மனித உருவத்தில் கொண்டு வாங்க.

    பதிலளிநீக்கு
  3. டைபாய்டு இந்த காலத்தில் வந்தாலே ரொம்ப கஷ்டமாயிருக்கு. 40 வருஷத்திற்கு முன்பு என்றால்... நினைக்கவே கஷ்டமாயிருக்குங்க.

    பதிலளிநீக்கு
  4. தாராபுரத்தான் சொன்னது:

    //நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவோமங்க..//

    தைரியமா வாங்க, உங்களை பத்திரமா பாத்துக்குவமுங்க.

    பதிலளிநீக்கு
  5. சைவகொத்துப்பரோட்டா சொன்னது:

    //டாக்டர் பீஸ் செட்டில் செய்யும் பாணி ஜூப்பர்.
    விக்கிரமாதித்தனை சீக்கிரம் மனித உருவத்தில் கொண்டு வாங்க//

    ரெண்டு நாள் பொறுத்துக்குங்க.

    பதிலளிநீக்கு
  6. இராகவன் நைஜீரியா சொன்னது:

    //டைபாய்டு இந்த காலத்தில் வந்தாலே ரொம்ப கஷ்டமாயிருக்கு. 40 வருஷத்திற்கு முன்பு என்றால்... நினைக்கவே கஷ்டமாயிருக்குங்க.//

    ரொம்பக்கஷ்டப்பட்டேனுங்க. பிழைத்தது மறு ஜன்மம்தானுங்க.

    பதிலளிநீக்கு
  7. '''பாட்டி கெட்டிக்காரி. எப்படியோ அங்கும் இங்கும் அலைந்து எனக்கு கஞ்சி வைக்கவேண்டிய சாதனங்களை தேடி எனக்கு கஞ்சி வைத்துக்கொடுத்தார்கள்.'''
    பெண்கள் கெட்டிக்காரர்கள் தான் ஆண்கள் வரவிடாமல் தடுகிறார்கள்...அதயும் மீறி வந்தவர்கள் கொஞ்சம்....

    பதிலளிநீக்கு
  8. ஆமாங்க மலர், பெண்கள் உண்மையிலேயே கெட்டிக்காரர்கள்தான். அவர்களின் சாமர்த்தியத்தினால்தான் எத்தனையோ குடும்பங்கள் மேலுக்கு வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  9. /இவருக்கு பீஸ் உடனடியாகக் கொடுப்பதில்லை. ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து பில் அனுப்புவார். பில் எவ்வளவு இருக்கும் தெரியுமா, ஐந்து ரூபாய் அல்லது ஆறு ரூபாய் என்றிருக்கும்/

    ஆகா இதுபோல் இப்போதும் இருக்காங்களா டாக்டர். டாக்டர்கள் ஆச்சர்யமாக இருக்கே.

    இத்தளத்திற்க்கு தொடர்ந்துவரனுமென்று நினைக்கிறேன் வரமுடியாமல் போகிறது இனி வரமுயர்ச்சிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. இன்று தான் உங்கள் பதிவுகளை பார்த்தேன் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //ஏதாவது பெரிய நோய் என்றால் பெரிய ஆஸ்பத்திரிக்குத்தான் (கவர்மெண்ட் ஆஸ்பத்திரி) கொண்டு போகவேண்டும். ஒருவரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்கிறார்கள் என்று சொன்னால் ஏறக்குறைய அவர் கதை முடிந்துவிட்டது என்று எல்லாரும் பேசிக்கொள்வார்கள்.//


    அப்போதும் இப்படித்தானா?
    எப்போதான் இந்த நிலை மாறுமோ?
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  12. அன்புடன் மலிக்கா சொன்னது:

    ///இவருக்கு பீஸ் உடனடியாகக் கொடுப்பதில்லை. ஒரு மாதம் இரண்டு மாதம் கழித்து பில் அனுப்புவார். பில் எவ்வளவு இருக்கும் தெரியுமா, ஐந்து ரூபாய் அல்லது ஆறு ரூபாய் என்றிருக்கும்/

    ஆகா இதுபோல் இப்போதும் இருக்காங்களா டாக்டர். டாக்டர்கள் ஆச்சர்யமாக இருக்கே.

    இத்தளத்திற்க்கு தொடர்ந்துவரனுமென்று நினைக்கிறேன் வரமுடியாமல் போகிறது இனி வரமுயர்ச்சிக்கிறேன்..//

    காலம் ரொம்ப மாறிப்போச்சுங்க.
    எப்போது முடிகிறதோ அப்போ வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. Rajesh Subbu said:

    //இன்று தான் உங்கள் பதிவுகளை பார்த்தேன் நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் நன்றி//

    வாங்க, என்னமோ எனக்குப்படறத எழுதுகிறேன். பிடித்திருப்பதாக சொன்னதிற்கு மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.

    பதிலளிநீக்கு
  14. அமைதி அப்பா சொன்னது:

    //அப்போதும் இப்படித்தானா?
    எப்போதான் இந்த நிலை மாறுமோ?//

    நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. ஏனுங்கையா,

    அப்பல்லாம் செங்காளியப்பன் ஆஸ்பத்திரி இல்லீங்களா?

    பதிலளிநீக்கு
  16. உங்க அனுபவங்கள் சுவாரசியமா இருக்கு.

    ஒரு தகவல் தர முடியுமா?

    நகர வீதி ஓரங்களில் நடும் வண்ணம் உள்ள மர வகைகளை பரிந்துரைக்க முடியுமா?

    அதாவது tap root உடன் வீட்டு அஸ்திவாரத்தைத் துளைக்காத, உயர வளர்ந்து, அடர்த்தியாக கிளைகள் உடைய மரம் பற்றிக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. Anonymous said:

    //ஏனுங்கையா,

    அப்பல்லாம் செங்காளியப்பன் ஆஸ்பத்திரி இல்லீங்களா?//

    இருந்ததுங்க, ஆனா ஆஸ்பத்திரிக்குப் போய் அட்மிட் ஆகி வைத்தியம் பாக்கறது வசதியானவங்க செய்யறது. நாங்க தேங்காய்க்கு வைத்தியம் பாக்கறவங்களாச்சே?

    பதிலளிநீக்கு
  18. Vetrivel said:

    //உங்க அனுபவங்கள் சுவாரசியமா இருக்கு.

    ஒரு தகவல் தர முடியுமா?

    நகர வீதி ஓரங்களில் நடும் வண்ணம் உள்ள மர வகைகளை பரிந்துரைக்க முடியுமா?//

    Please contact: Dean, Forest Cllege and Research Institute, Kothagiri Road, Mettupalayam who will give suitable names.

    நான் ரிடைர்டு ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டனழ மேலும் நான் இந்த பாட்டனி சப்ஜெக்டில் பூஜ்யம்.

    அதாவது tap root உடன் வீட்டு அஸ்திவாரத்தைத் துளைக்காத, உயர வளர்ந்து, அடர்த்தியாக கிளைகள் உடைய மரம் பற்றிக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு