ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பத்ரிநாத்தில் இரண்டாவது நாள்.


மறுநாள் விடிந்தது. ஆனால் ரஜாயை விட்டு வெளியே வர ஒருவருக்கும் மனதில்லை. எப்படியோ ஒரு மாதிரி மனதைத் திடப்படுத்திக்கொண்டு எழுந்து, ஒரு காப்பி போட்டுக் குடித்தோம். அப்பறம்தான் உடம்பு சரியாக வேலை செய்ய ஆரம்பித்தது. எவ்வளவு சீக்கிரம் இந்த ஊரை விட்டுப் போக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு விடலாம் என்று எல்லோருமாக ஏகோபித்த முடிவு எடுத்தோம். டிரைவர் ஒரு இடத்தில் மரவட்டை மாதிரி சுருண்டு படுத்துக்கொண்டிருந்தார். அவரை எழுப்பி விவரம் சொன்னேன். அவருக்கும் அது சௌகரியமாகவே இருந்தது. ஏனெனில் பத்ரிநாத்திலிருந்து ஒரே நாளில் ஹரித்துவார் போக முடியாது. நடுவில் எங்காவது தங்கித்தான் போக வேண்டும். அதனால் சீக்கிரம் புறப்பட்டால் தங்கவேண்டிய இடத்திற்கு சீக்கிரம் போய் சேர்ந்து ரெஸ்ட் எடுக்கலாம். ஆகவே அவர் சந்தோஷமாக இந்த மாறுதலுக்கு ஒத்துக்கொண்டார்.

லாட்ஜ் நிர்வாகம் ஆளுக்கு ஒரு பக்கெட் வெந்நீர் கொடுத்தார்கள். எல்லோரும் குளித்து விட்டு, எதிரில் இருந்த ஒரு ஹோட்டலில் அபூர்வமாகக் கிடைத்த இட்லியையும் தோசையையும் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பினோம். ரொம்ப வயசான, நடக்க முடியாதவர்களை ஒரு கூடையில் உக்கார வைத்து ஒரே ஆள் முதுகில் சுமந்து கொண்டுபோய் கோவிலில் இறக்குகிறான். இதற்கு போகவர முந்நூறு ரூபாய் சார்ஜ். படத்தைப்பார்க்க.


நாங்கள் நடந்தே சென்றோம். கோவிலில் காலை நேரம் என்பதால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது. கோவிலுக்கு வெளியில் பூஜைக்காகத் தட்டு விற்கிறார்கள். கொஞ்சம் பூ, பட்டாணிக்கடலை, வெள்ளை கற்கண்டு மிட்டாய், இவ்வளவுதான் பூஜை சாமான்கள். இதை தலை மேல் வைத்துக்கொண்டு சாமிக்கு முன்னால் போய் பூஜாரியிடம் கொடுத்தால், பூஜாரி அதை வாங்கி சாமியின் மேல் வீசுகிறார். பிறகு அந்தத் தட்டில் அவர் முன்னால் இருக்கும் தட்டிலிருந்து கொஞ்சம் மிட்டாயும் கடலையையும் நம் தட்டில் போட்டுத் திருப்புத் தருகிறார். அதுதான் பத்ரிநாதரின் பிரசாதம்.

தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது என் சகோதரிக்கு முன் தினம் போலவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. டாக்சி டிரைவருக்கு போன் போட்டு காரை வரவழைத்து காரில் ரூம் திரும்பினோம்.

{ஒரு முக்கிய குறிப்பு: இப்போது பரவலாக செல்போன் உபயோகிப்பவர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக டாக்சி டிரைவர்கள் அனைவரும் செல்போன் வைத்திருப்பார்கள். நீங்கள் எங்காவது டாக்சியில் சென்றால் முதல் வேலையாக டாக்சி டிரைவரின் செல்போன் நெம்பரை வாங்கி உங்கள் செல்போனில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் உபயோகமாக இருக்கும். }

ரூமைக்காலி செய்துவிட்டு பத்ரிநாத்துக்கு குட்பை சொல்லிவிட்டுக் கிளம்பினோம். ஆனால் கொஞ்சதூரம் வந்ததும் எல்லா வண்டிகளும் நின்றுகொண்டிருந்தன. என்னவென்றால்கேட்திறக்கவில்லை என்றார்கள். இந்த கேட் முறை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். பத்ரிநாத்திலிருந்து ஜோஷிமட் வரை ஒரு வழிப்பாதைதான். மாற்றி மாற்றிதான் வண்டிகளை விடுவார்கள். நாங்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

சுமார் 11½ மணிக்கு கேட் திறந்தார்கள். நாங்கள் புறப்பட்டு ஜோஷிமட் வழியாக கர்ணப்பிரயாக் வந்து சேர்ந்தோம். வழியெங்கிலும் பாதையை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. பாதையோரத்தில் இருக்கும் பாறைகளை வெடிவைத்து உடைக்கிறார்கள். உடனேயே அந்த பாறை துகள்களை இயந்திரங்கள் மூலமாக அப்புறப்படுத்துகிறார்கள். இதற்கு ஓரிரண்டு மணி நேரம் பிடிக்கிறது. அது வரை எல்லா வண்டிகளும் நிற்க வேண்டியதுதான். அப்பொழுதும் வண்டிகள் ரோட்டின் ஓரமாகவே, அதாவது கீழே விழுந்தால் அதலபாதாளம் என்ற நிலையிலேயேதான் செல்ல வேண்டியிருக்கிறது.

கர்ணப்பிரயாக் - ருத்ரப்பிரயாக் ஹைவே பாகீரதி நதி ஓரமாகவே வருகிறது. இந்த ரோட்டிலும் பாதை அகலப்படுத்தும் வேலை நடைபெறுகிறது. அந்தப்பாதையில் வந்த ஒரு வழக்கமாக வரும் ரூட் பஸ் பாதை ஓரத்தில் வரும்போது ஸ்லிப் ஆகி நாற்பது பயணிகளுடன் ஆற்றில் விழுந்து விட்டது. அங்கெல்லாம் ஆற்றில் இருபது ஆடி தண்ணீர் சாதாரணமாக ஓடும். பஸ்ஸையும் காணவில்லை. பஸ்ஸில் இருந்தவர்களையும் காணவில்லை. நாங்கள் கர்ணப்பிரயாக் வரும்போது இந்த காரணத்தினால் பொது ஜனங்கள் ரோடு பந்த் செய்துகொண்டிருந்தார்கள். எங்கள் வண்டியை வேறொரு மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டார்கள். இந்தப்பாதை ஆற்றுக்கு மறு பக்கம் இருக்கிறது. சாதாரண ரோடு என்பதால் அகலம் குறைவு. எப்பொழுது வேண்டுமானாலும் பஸ்ஸைத் தொடர்ந்து நாங்களும் பாகீரதியின் மடிக்குப் போய்ச் சேரலாம் என்கிற பயம் ஹரித்துவார் வந்து சேருமட்டும் இருந்தது.

எப்படியோ ஒரு வழியாக ருத்ரப்பிரயாக் வந்து சேர்ந்தோம். ஊரிலிருந்து ஒருக்குப்புறமாக ஒரு நல்ல லாட்ஜ்ஜுக்கு டிரைவர் எங்களைக் கூட்டிக் கொண்டுபோய் தங்க வைத்தார். ரூம்கள் சுத்தமாக இருந்தன. சாப்பிட்டுவிட்டு படுத்தோம். தூக்கத்தில் நாங்கள் எல்லோரும் ஆற்றில் விழுவதாகவே கனவு வந்து கொண்டிருந்தது. மறுநாள் காலையில் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு (டிபன் என்ன, மாத்திரைகள்தான்) புறப்பட்டு மாலை ஐந்து மணி சுமாருக்கு ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். ஒரு லாட்ஜ் பிடித்து தங்கினோம்.

தொடரும்

24 கருத்துகள்:

 1. எதற்காக இரண்டு தமிழ்மண பட்டை. மேலே உள்ளது வேலை செய்யவில்லை போலும். அப்புறம்உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? வழிகாட்டி இருந்தாலும் எப்படி உங்கள் பார்வையில் வட நாட்டு மக்களின் கலாச்சாரம் தெரிகின்றது?

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு.

  இரண்டு வருடங்களுக்குமுன் போய் வந்து சாலைகள் சரியில்லை என்றேன். என் மனைவியின் தாத்தா முப்பது வருடங்களுக்கு முன் போய் வந்தார்.......

  பதிலளிநீக்கு
 3. உங்களுடனேயே கை பிடித்து அழைத்துச் சென்றது போல் ஒரு வர்ணனை.

  நன்றி! அடுத்த அத்தியாயங்களை எதிர்பார்க்கிறோம்!

  பதிலளிநீக்கு
 4. போதும் போதும் என்றுதான் தோன்றுகிறது இந்த யாத்திரை.

  பதிலளிநீக்கு
 5. பிரயாணம் பற்றி மிக அழகாக சொல்லுகின்றீர்கள் ஐயா.. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

  பதிலளிநீக்கு
 7. ஜோதிஜி said...

  //எதற்காக இரண்டு தமிழ்மண பட்டை. மேலே உள்ளது வேலை செய்யவில்லை போலும். அப்புறம் உங்களுக்கு ஹிந்தி தெரியுமா? வழிகாட்டி இருந்தாலும் எப்படி உங்கள் பார்வையில் வட நாட்டு மக்களின் கலாச்சாரம் தெரிகின்றது?//

  தமிழ்மணம் பட்டை: மேல உள்ளது வேலை செய்யவில்லை என்று கீழ ஒண்ணு போட்டேன். இப்ப ரெண்டும் வேலை செய்யற மாதிரி இருக்குது. ஆனா எதை, எப்படி எடுக்கறதுன்னு
  தெரியல. எல்லாம் ஊர்ல சொல்றவங்க பேச்ச எல்லாம் கேட்டதால வந்த வெனைங்க.

  ஹிந்தி தோடா தோடா மாலும் ஹை!

  வடநாட்டு மக்களின் கலாசாரத்தில் எனக்கு பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 8. கலாநேசன் said...

  //நல்ல பதிவு.
  இரண்டு வருடங்களுக்குமுன் போய் வந்து சாலைகள் சரியில்லை என்றேன். என் மனைவியின் தாத்தா முப்பது வருடங்களுக்கு முன் போய் வந்தார்.......//

  பெரியவங்க பக்தியின் காரணமாகப் போய்வந்தார்கள். அப்போது எந்தக் கஷ்டத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இருந்தது.

  இன்று போகிறவர்கள் சுற்றுலா என்கிற மனநிலையில் போகிறார்கள். ஒரு சிறிய அசௌகரியம்கூட அவர்களுக்கு மலைபோல் தோன்றுகிறது.

  நான் பத்து வருடத்திற்கு முன் போயிருந்தபோது கங்கோத்ரியில் பச்சைத்தண்ணீரில் குளித்தேன். இப்போது வெந்நீர் தேவைப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 9. "ஸஸரிரி" கிரி said...

  //உங்களுடனேயே கை பிடித்து அழைத்துச் சென்றது போல் ஒரு வர்ணனை.
  நன்றி! அடுத்த அத்தியாயங்களை எதிர்பார்க்கிறோம்!//

  நன்றி கிரி அவர்களே. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. கக்கு - மாணிக்கம் said...
  //போதும் போதும் என்றுதான் தோன்றுகிறது இந்த யாத்திரை.//

  வாழ்க்கையே சில சமயங்களில் சலிப்புத்தட்டுகிறது. அதை வெல்வதுதான் வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
 11. ஆர்.ராமமூர்த்தி said...

  நல்லா இருக்கு சார்.. நீங்க ‘கண்டின்யூ’ பண்ணுங்க...

  நன்றி ஆர்.ஆர் அவர்களே.

  பதிலளிநீக்கு
 12. இராகவன் நைஜிரியா said...

  பிரயாணம் பற்றி மிக அழகாக சொல்லுகின்றீர்கள் ஐயா.. நன்றி.

  நன்றி இராகவன். நலம்தானே?

  பதிலளிநீக்கு
 13. sweatha said...

  நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
  மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !

  நன்றிங்க ஸ்வேதா. பரிசு, புகழ் இவைகளில் இருந்த ஆசை போய் வெகு நாட்களாகிவிட்டன. என்னுடைய ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதுகிறேன். இதைப்பிடித்தவர்கள் வாசித்தால் அதுவே போதும் அம்மா.

  பதிலளிநீக்கு
 14. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. எளிய நடையில் படிக்க திருப்தியாய். பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 15. வெங்கட் நாகராஜ் said...

  //நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. எளிய நடையில் படிக்க திருப்தியாய். பகிர்வுக்கு நன்றி ஐயா//
  வாங்க வெங்கட், நலமா?
  உங்கள் வீட்டில் ஏதோ விசேஷம் என்று படித்த ஞாபகம். மீண்டும் உங்கள் பிளாக்கைப் பார்க்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. நான் இரண்டு வருடங்கள் முன்பு பத்ரி,கேதார் போய் வந்தேன்.அருமையான இடங்கள்...திரும்ப போய் வந்தது போல ஒரு அனுபவம் கட்டுரையினை படித்ததும்..

  பதிலளிநீக்கு
 17. அடுத்து போகிற ஊரும் பயணமும் எப்படி இருக்கு என்று ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவு. நன்றால் எழுதுகிறீர்கள் சார்.

  பதிலளிநீக்கு
 18. சூப்பர் பதிவு.கலக்குறீங்க சார். ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 19. நல்ல பதிவு.
  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. படங்களுடன் நல்ல பதிவு.

  நாங்களும் பஸ்சில் இருந்து விழுந்து விடுவோமோ என்ற திகிலில்... படித்தோம்.

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 22. டிரைவரோட செல்ஃபோன் நம்பர் வாங்கி வைச்சுக்க சொன்னது மிகவும் உபயோகமான தகவல்.

  உங்க அனுபவம் மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்கும். தொடர் நல்லா போகுது. படிக்க சுவாரஸ்யமா இருக்கு! வயசான காலத்தில யாத்திரைன்னு கிளம்பினா எவ்வளவு சிக்கல்ன்னு சரியா சொல்லிட்டீங்க!

  பதிலளிநீக்கு
 23. என்னது நானு யாரா? said...

  //டிரைவரோட செல்ஃபோன் நம்பர் வாங்கி வைச்சுக்க சொன்னது மிகவும் உபயோகமான தகவல்.
  உங்க அனுபவம் மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்கும். தொடர் நல்லா போகுது. படிக்க சுவாரஸ்யமா இருக்கு! வயசான காலத்தில யாத்திரைன்னு கிளம்பினா எவ்வளவு சிக்கல்ன்னு சரியா சொல்லிட்டீங்க!//

  ஏதோ என்னால் முடிந்தது. எனக்கும் பொழுது போகுது. நாலு பேருக்கு உபயோகமாகவும் இருக்கு.

  பதிலளிநீக்கு