வியாழன், 6 ஜனவரி, 2011

அரசு அலுவலகங்களில் தணிக்கை


வாழ்க்கையில் கணக்கு வைப்பதும் அந்தக் கணக்கை உரியவர்களிடம் அவ்வப்போது காட்டி ஒப்புதல் வாங்குவதும் நடைமுறையில் உள்ள வழக்கம்தான். கணக்கு பணத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் மற்ற செயல்களுக்கும் சேர்த்துத்தான். நான் யாருக்கும் கணக்குக் காட்டவேண்டியதில்லை என்று யாரும் சொல்ல முடியாது. இந்தியாவின் பெரிய பணக்காரரான அம்பானியும் கூட தன் மனச்சாட்சிக்கு கணக்கு (பதில்) சொல்லித்தான் தீரவேண்டும்.

அரசு அலுவலகங்களில் இன்றும் நிலவும் பல நடைமுறைகள், வெள்ளைக்காரத் துரைகள் விட்டுச் சென்றவைகள்தான். அவர்களுக்கு இந்தியர்கள் மேல் தீராத சந்தேகம் இருந்தது. அதனால் தணிக்கை முறைகளை மிக தீவிரமாகக் கையாண்டு வந்தார்கள். இதில் இரண்டு விதமான தணிக்கைகள் உண்டு.

ஒன்று, துறை சார்ந்த தணிக்கை. இது மேலதிகாரிகள் தொழில் நுட்ப ரீதியாகச் செய்வது. அந்த அலுவலகத்தில் கடந்த வருடத்தில் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்திருக்கிறார்களா? அவ்வாறு செய்யாவிட்டால், ஏன் செய்யவில்லை? என்ன வசதிகள் இல்லை, என்ன வசதிகள் வேண்டும்? இப்படி ஆக்கபூர்வமாக தணிக்கை நடக்கும். இதிலும் சில அதிகாரிகள் வெறும் குற்றம் கண்டு பிடிப்பவர்களாகவே அமைவதும் உண்டு. இந்தத் தணிக்கை அந்த அலுவலகத்தில் செய்யவேண்டிய வேலைகளை மேலும் சிறப்பாகச் செய்ய உதவும்.

அடுத்தது, கணக்கு ரீதியான தணிக்கை. ஒரு அலுவலகத்தில் கடந்த ஆண்டு செய்த செலவுகள் முறையாகச் செய்யப்பட்டிருக்கறதா, ஏதாவது தில்லு முல்லு செய்திருக்கிறார்களா? என்று சரி பார்க்கும் தணிக்கை. பல அலுவலகத் தலைவர்கள் இந்தத் தணிக்கையைக் கண்டு பயந்து கொள்வார்கள். காரணம் அவர்களுக்கு தங்கள் துறை சார்ந்த விதி முறைகள் பற்றிய அறிவு போறாமல் இருக்கும். அவர்கள் இந்த தணிக்கைக்கு வரும் உதவி அதிகாரிகளுக்கு வேண்டிய உபசாரங்களை அதிகமாகச் செய்து அவர்களை சந்தோஷப்படுத்தி, அதிகமான தணிக்கைக் குறிப்புகளை எழுதாத மாதிரி பார்த்துக் கொள்வார்கள். என்ன சௌகரியங்கள் என்று தெரியவேண்டுமல்லவா? அதிகம் ஒன்றுமில்லை. அவர்கள் அந்த அலுவலகங்களிலேயே தங்கிக்கொள்வார்கள். அவர்கள் தங்கும் நாட்களில் இலவச உணவு, டீ, காபி, எடுபிடி வேலைகளுக்கு ஒரு ஆள், ஒரு நாள் சினிமா, பக்கத்திலிருக்கும் ஒரு பிரபல கோவிலுக்கு ஒரு விசிட், அசைவம் சாப்பிடுபவர்களாயிருந்தால் ஒரு நாள் அசைவ விருந்து, ஊருக்குப் போகும்போது பண்ணையிலிருந்து தேங்காய், மற்ற காய்கறிகள், இவ்வளவுதான்.

இந்த மாதிரி சௌகரியங்களை அனுபவித்த அந்த உதவி அதிகாரிகள், தாங்கள் போகும் எல்லா அலுவலங்களிலும் இந்த மாதிரி சௌகரியங்களை எதிர்பார்ப்பார்கள். அந்த சௌகரியங்கள் செய்யப்படாவிட்டால் வேண்டுமென்றே பல தணிக்கைக் குறிப்புகளை எழுதி அந்த அலுவலகத் தலைவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். அதனால் பெரும்பாலான அலுவலகங்களில் இந்த சௌகரியங்களைச் செய்து கொடுத்து விடுவார்கள். அதற்கு ஆகும் செலவை அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் பங்கிட்டுக் கொள்வார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடைமுறை.

இந்த தணிக்கைகளில் பல சமயம் வேடிக்கைகள் நடக்கும். நான் வேலை பார்த்த அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவம். நான் வேலை செய்தது வேதியல் துறை. அங்கு நிறைய வேதியல் பொருட்கள் தேவைப்படும். அவைகளை டெண்டர் விட்டு வாங்குவோம். அதில் கந்தக அமிலமும் ஒன்று. அது அந்தக் காலத்தில் பீங்கான் ஜாடிகளில் வரும். அந்த அமிலம் தீர்ந்தவுடன் அந்த பீங்கான் ஜாடிகளை ஊறுகாய் போடுவதற்காக அங்கு பணி புரியும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆகவே அந்த காலி ஜாடிகளை கணக்கில் காட்டுவதில்லை. நியாயமாக அவைகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.ஒரு சில ஜாடிகளை இந்த தணிக்கை உதவியாளர்களுக்கும் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் ஒரு சமயம் அவர்கள் நன்றி கெட்டத்தனமாக, “இவ்வளவு அமிலங்கள் வாங்கியிருக்கிறீர்களே, அந்த காலி ஜாடிகளுக்கு கணக்கு எங்கேஎன்று எழுதி வைத்து விட்டார்கள். இந்த உதவியாளர்கள் எழுதி வைத்தது எல்லாவற்றையும் ஒரு மேலதிகாரி வந்து எல்லோரையும் வைத்து ஒரு விவாதம் நடத்தி பிறகுதான் அந்த குறிப்புகளை அப்ரூவ் செய்வார். நாங்கள் ஒரு யுக்தி செய்தோம். “சிட்ரிக் அமிலம்” (லெமன் சால்ட்) என்று ஒன்று இருக்கிறது. அது அட்டைப் பெட்டியில் வரும். அதை எடுத்து தயாராக வைத்திருந்தோம். அந்த தணிக்கை ஆபீசர் வந்து இந்தக் குறிப்பைப் படித்ததும் நாங்கள் இந்த சிட்ரிக் அமில பாக்கெட்டைக் காட்டி, எல்லா அமிலங்களும் இப்படி அட்டைப்பெட்டியில் போட்டுத்தான் வரும். நாங்கள் அந்த அமிலத்தை உபயோகித்தவுடன் இந்த அட்டையை குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவோம் என்று சொன்னோம். அவரும் அப்படியா என்று கேட்டுவிட்டு, அப்படியே எழுதிக்கொடுங்கள் என்று எங்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அந்தக் குறிப்பை ரத்து செய்து விட்டார்.


உலத்திலேயே
கந்தக அமிலத்தை அட்டைப்பெட்டியில் வாங்கிய லேபரேட்டரி எங்களுடையதாகத்தான் இருக்கும். இன்னும் இதுபோல் பல வேடிக்கைகள் உண்டு. இந்தப் பதிவிற்கு கொடுக்கும் ஆதரவைப் பார்த்துவிட்டு அந்த வேடிக்கைகளைப் பற்றியும் எழுதுகிறேன்.

11 கருத்துகள்:

 1. ஸ்பெக்ட்ரம் ரேஞ்சுக்கு இது இல்லினாலும், இந்த ஜாடி ஊழல் நல்லாதாங்க இருக்கு. உங்களுக்கு ஊறுகாய் கொடுத்தாங்களா?. அந்த விஷயத்தை ஜாடியோட மூடி போட்டு மறைச்சுட்டீங்களே சார்...

  பதிலளிநீக்கு
 2. ஸ்பெக்ட்ரம் ரேஞ்சுக்கு இது இல்லினாலும், இந்த ஜாடி ஊழல் நல்லாதாங்க இருக்கு. உங்களுக்கு ஊறுகாய் கொடுத்தாங்களா?. அந்த விஷயத்தை ஜாடியோட மூடி போட்டு மறைச்சுட்டீங்களே சார்...

  பதிலளிநீக்கு
 3. உங்கள் அனுபவங்கள் பற்றிய கெமிஸ்ட்ரி, பதிவுலகில் நல்லா ஹிட் ஆகும், தயங்காம சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
 4. Now In Village Panchayat auditing done by Auditors at Block Developement Offices, BDO's advised the Panchayat presidents to give some amount to tackle the auditors by giving bribe and ask the parttime clerks to make the forgery bills/ accounts for that amount as filling sand in streets/ cleaning(Sweeping)streets, and more.., you know an un educated Panchayat President earned Rs. 10 lakhs in immorale and illegal ways!
  So auditing is an eyewash! and a chance to earn money in illegal ways!

  பதிலளிநீக்கு
 5. ஒன்று: பரிசோதனைச் சாலைக்கு தணிக்கைக்கு வரும் அதிகாரிகளுக்கு வேதி இயல் தெரிந்து இருந்தால் நலம். அவர்கள் சரித்திரத்தில் இளங்கலை படித்திருந்தால், ஆசிட் என்றால் அவர்களுக்கு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றால் வயிற்றில் ஆசிட் என்பார்களே அது என எண்ணுவார்கள். ( அரசு அதிகாரிகள் தனக்கு தெரியாததை இன்னொருவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முயல்வதில்லை. தமக்கு தெரியாதது இந்த உலகத்தில் இல்லை; அப்படி எதாவது இருந்தால் அது உபயோகமற்றது என்று எண்ணம். மேலும், தமக்கு தெரியாதது என்று காட்டிக் கொள்ளக் கூடாது என்று பயிற்றுவிக்கப் பட்டு உள்ளனர் போலும்!)
  இரண்டு: ஜாடிக்கு கணக்கு கேட்கத் தெரிந்தவர், வாங்கிய அளவே அதிகமா, சரியானதா, என சரி பார்க்க வேண்டும்; சரியான விலையில்,, சரியான விதி முறையைப் பின்பற்றி வாங்கப் பட்டிருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதை விட்டு விட்டு ஜாடிக்கு கணக்கு கேட்டுக்கொண்டு இருந்தால் இங்கு உள்ளவர்களும், டப்பாவையோ, ஜாடியையோ காட்டி திசை திருப்புவது எளிது.
  மூன்று: காபி, டிபன் , (அசைவ) சாப்பாடு முதலியவற்றுடன் (முன்பெல்லாம் வேறு மாநிலங்களில் "திரவ உணவு", இப்போது மது விலக்கு இல்லாததால் தமிழ்நாட்டிலும் "தண்ணி"), இவற்றை படைத்து அறிக்கையை சரி செய்வது வழக்கம் ஆகி விட்டது.
  ஆங்கில ஆட்சியில் இவை எல்லாம் இருந்தது தான். இதற்கு கூட அவர்கள் தான் பழக்கி இருக்கின்றனர். ஆனால் நம்மவர் சர்க்காரியா கமிஷன் சொன்னது போல் விஞ்ஞான ரீதியில்,ஊழல் செய்கிறார்கள்.
  தணிக்கை முறை அதை தெரிந்து கொள்வதில்லை; அல்லது கண்டு கொள்வதில்லை. வாழ்க தணிக்கை முறை.

  பதிலளிநீக்கு
 6. பெரும்பாலான தணிக்கை இப்படித்தான் இருக்கிறது. இதிலும் சில தணிக்கை அலுவலகர்கள் வேண்டுமென்றே தகராறு செய்வார்கள். சுவாரசியமான பகிர்வு. தொடருங்கள் அய்யா.

  பதிலளிநீக்கு
 7. அதுவும் அந்த ஏ.ஆடிட்..என்றுசெம வசுல் நடக்கும்....

  பதிலளிநீக்கு
 8. புருனோ Bruno said...

  //தொடர்புடைய எனது இடுகை ஒன்று கொஞ்ச(சு)ம் தமிழ் பதங்களும் எண்ணையும் (ஆயிலும் ) தணிக்கைகளும் கணக்குகளும் !!!//

  வாங்க டாக்டர், என்னுடைய பதிவுகளையும் படிக்கிறீங்க போல இருக்கு, நன்றி.

  ஆயில் இன்ஜினுக்கும், இன்ஜின் ஆயிலுக்கும் அப்படி வார்த்தைகளில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லீங்களே. அனுமான் "கண்டேன் சீதையை" அப்படீன்னு சொன்னதா எல்லோரும் புகழறாங்க. வார்த்தைகளை முன்பின்னா போட்டா தப்பு இல்லீங்க. அதனால இந்த இன்ஜின் ஆயிலை ஒரு விவகாரமா எடுத்துக்க வேண்டியதில்லை! என்ன ஒரே தப்புன்னா, அந்த இன்ஜின் ஆயிலை லெட்ரின் கழுவ உபயோகித்து Nil ஸ்டாக் பண்ணியிருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. பாரத்... பாரதி... said...

  //ஸ்பெக்ட்ரம் ரேஞ்சுக்கு இது இல்லினாலும், இந்த ஜாடி ஊழல் நல்லாதாங்க இருக்கு. உங்களுக்கு ஊறுகாய் கொடுத்தாங்களா?. அந்த விஷயத்தை ஜாடியோட மூடி போட்டு மறைச்சுட்டீங்களே சார்...//

  அவங்க என்னங்க கொடுக்கிறது? நானே ரெண்டு ஜாடி வீட்டுக்கு கொண்டு வந்து ஊறுகாய் போட்டு வச்சு சாப்பிட்டேன்.

  பதிலளிநீக்கு