சனி, 22 ஜனவரி, 2011

பதிவுலகம் மூலம் தேச சேவை

பதிவர்களே ஒன்றுபடுங்கள், நம் நாட்டை வல்லரசாக்குவோம்.

சமீப காலமாக பதிவர்கள் சிலருக்கு நம் நாட்டை அமெரிக்கா போல ஒரு வல்லரசாக்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. அதற்காக பதிவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் நாட்டுக்கு சேவை செய்யவேண்டுமென்று வேண்டுகோள் விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதைப் பார்த்த எனக்கும் இந்நாட்டுக் குடிமகன் என்ற முறையில் மனச்சாட்சி உறுத்த ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவாக என் மனதில் தோன்றிய எண்ண அலைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ((எப்படி பதிவுத்தலைப்பைக் (சாமியின் மன அலைகள்) கோர்த்திருக்கிறேன், பார்த்தீர்களா?))

சேவை செய்வது என்பது ஒரு புனிதமான காரியம். போகிற வழிக்கு புண்ணியம் சேரும். அது தெய்வத்திற்காகினும் சரி, தேசத்திற்காகினும் சரி, மக்களுக்காகினும் சரி. அதில் உள்ள ஒரே கஷ்டம் என்னவென்றால் எந்த மாதிரி சேவை செய்யலாம் என்பதுதான். என்னுடைய கருத்து, இதற்காக ஒரு பதிவர் மகாநாடு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்தவேண்டும். எலெக்ஷன் சமயத்தில் நடத்தினால் நன்கொடை வசூலிக்க தோதாக இருக்கும். என்ன, ஏது என்று கேட்காமல் கார்ப்பரேட்டுகள் செக் கொடுத்து விடுவார்கள். பிறகு அந்த மகாநாட்டில் விவாதிக்க விஷயங்கள் வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இந்தப் பதிவு.

ஏழ்மையை ஒழிப்போம். இது ஒரு முக்கியமான சேவைதான். இந்த நோக்கத்தில் யாருக்கும் எந்த விதமான எதிர்ப்பும் இருக்க முடியாது. எப்படி ஏழ்மையை ஒழிக்கமுடியும்? இதற்கான திட்டம் ஒன்று தயாரிக்கவேண்டும். அதை செயல்படுத்த வேண்டும். அதற்கு ஆள் பலமும், பணபலமும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஏழ்மையில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.

ஏழ்மையில் இருப்பவர்கள் எல்லோரும் ஏழைகள் அல்ல. அவர்கள் அவ்வாறு வேஷம் போட்டால்தான் அரசு கொடுக்கும் இலவசங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்காகவே அவர்கள் ஏழைகளாகவே இருக்க விரும்புகிறார்கள். அரசும் அவர்களை பல காரணங்களுக்காக அவ்வாறே வைத்திருக்க விரும்புகிறது. ஆகவே ஏழ்மையை ஒழிக்கும் சேவை ஆரம்ப கட்டத்திலேயே அடிபட்டுப் போகின்றது.

அடுத்ததாக செய்யக்கூடியது எல்லோருக்கும் கல்விதருவது. இந்த முயற்சியில் அரசே ஈடுபட்டிருக்கிறது. மதிய உணவுத்திட்டம், இலவச உடை, காலணிகள், சைக்கிள், புத்தகங்கள், இன்னும் பலவற்றை இலவசமாகக் கொடுத்தும் மக்கள் தங்கள் மழலைச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டேனென்கிறார்கள். என்ன செய்ய?

வேறு என்ன சேவை செய்யலாம் என்று யோசித்தால் எல்லா சேவைகளையும் அரசே எடுத்து நடத்துகிறது. அதில் என்ன ஒரே நெகடிவ் சமாசாரம் என்னவென்றால், அந்த சேவைகள் அனைத்தும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையில் இருக்கின்றன. ஆனால் எது எப்படிப்போனாலும் அரசு அந்த சேவைகளை நிறுத்தப் போவதில்லை.

பதிவர்களோ எப்படியாவது, ஏதாவது சேவை செய்தே தீருவோம் என்று கங்கணம் கட்டியாய் விட்டது. முன்வைத்த காலை பின் வைக்கலாமா? கூடாது. சரி, பதிவர்கள் என்ன சேவைதான் செய்யமுடியும் என்று பார்த்தால் ஒன்று எனக்குப் புலப்பட்டது. ஏழைகளின் சாபக்கேடு அவர்களின் குடிப்பழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களின் இந்தப் பழக்கத்தை நிறுத்தி விட்டால் அவர்கள் அனைவரும் பணக்காரர்களாகி விடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.





இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் பதிவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு டாஸ்மாக் கடையைத் தத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டாஸ்மாக் கடை என்றால் அநேகமாக எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். தெரியாதவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும். விலாவாரியான விவரங்கள் அனுப்பப்படும். பதிவர்கள் அங்கு சென்று அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் குடியின் தீமைகளை விளக்கிக் கூறவேண்டும். அதைக்கேட்டு அவர்கள் மனம் மாறி குடிப்பதை நிறுத்திவிடுவார்கள். பிறகு என்ன, அவர்களும் பணக்காரர்களாகி விடுவார்கள். நாடு வல்லரசாகிவிடும். எப்படீஈஈஈ!!!!

பதிவர்களில் சிலர் டாஸ்மாக்கின் நிரந்தர கஸ்டமர்கள் ஆகிவிட்டால் அதற்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். இனிமேல்தானா ஆகப்போகிறார்கள், இப்போதே அப்படித்தான் என்று யாரோ முணுமுணுக்கிறார்கள். அவர்கள் பதிவர்களில் கருங்காலிகள். அவர்களின் ஊளையைக் கேட்காதீர்கள். அவர்கள் நாம் எங்கே இந்த சேவையை செய்து பிரபலமாகி விடுவோமோ என்ற வயித்தெரிச்சலில் புலம்புகிறார்கள். இதற்கெல்லாம் நாம் அசரக்கூடாது. நம் இலக்கை, அதாவது டாஸ்மாக்கை, நோக்கி போய்க்கொண்டே இருப்போம். வெற்றி நமதே.

18 கருத்துகள்:

  1. இப்படி டாஸ்மாக்கிற்கு வரும் கஸ்டமர்களை வரவிடாமல் செய்தால் அந்தக்கடைகள் நஷடமடையுமே, அதற்கென்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  2. நத்தத்தோட்டமவீரன் said...

    //இப்படி டாஸ்மாக்கிற்கு வரும் கஸ்டமர்களை வரவிடாமல் செய்தால் அந்தக்கடைகள் நஷடமடையுமே, அதற்கென்ன செய்வது?//

    ஆமாம் பார்த்தீர்களா, அப்புறம் நம் அரசின் இலவசத் திட்டங்களுக்கு பணத்திற்கு எங்கு போவது? அப்படி நஷ்டம் வரும்போது அண்டை மாநிலங்களிலிருந்து வாடிக்கையாளர்களை ஸ்பெஷல் பஸ்கள் மூலம் வரவழைப்போம்.

    பதிலளிநீக்கு
  3. ((எப்படி பதிவுத்தலைப்பைக் (சாமியின் மன அலைகள்) கோர்த்திருக்கிறேன், பார்த்தீர்களா?))

    ஐயா! எப்படீங்க ஐயா?? எப்படி...????

    //இதற்காக ஒரு பதிவர் மகாநாடு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்தவேண்டும்//

    கண்டிப்பா! நான் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள்ளே இதுவரைக்கும் போனதேயில்லை. சூப்பர் ஐடியா!

    //மதிய உணவுத்திட்டம், இலவச உடை, காலணிகள், சைக்கிள், புத்தகங்கள், இன்னும் பலவற்றை இலவசமாகக் கொடுத்தும் மக்கள் தங்கள் மழலைச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டேனென்கிறார்கள். //

    நாம இலவச மார்க் திட்டம், இலவச டிகிரி திட்டம் ஆரம்பிக்கலாம்.

    //இதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால் பதிவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு டாஸ்மாக் கடையைத் தத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.//

    ஐயா இதில் ஆபத்து இருக்கிறது. தத்து எடுப்பதற்கு பதிலாக யாராவது அதை ஒத்தி எடுத்து அவர்கள் பணக்காரர்களாகி விடப்போகிறார்கள்.

    //நம் இலக்கை, அதாவது டாஸ்மாக்கை, நோக்கி போய்க்கொண்டே இருப்போம். வெற்றி நமதே.//

    இது அநியாயம், அக்கிரமம்! உங்களுக்குத் தெரியாதா?

    டாஸ்மாக்கில் இல்லாதவர்கள் டாஸ்மாக்கைப் பற்றி எழுதக் கூடாது என்று சமீபத்தில் ஒரு பதிவர் காரசாரமாக இடுகை போட்டிருக்கிறாரே? படிக்கவில்லையா? :-)

    கலக்கல் ஐயா!

    பதிலளிநீக்கு
  4. நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது?
    என்ன ஆச்சி??

    பதிலளிநீக்கு
  5. இந்த பதிவை வாசிச்சிட்டு உங்களுக்கு சமூக நலத்துறை அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறதா ஒரு வதந்தி.

    பதிலளிநீக்கு
  6. கக்கு - மாணிக்கம் said...

    //நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது?
    என்ன ஆச்சி??//

    எங்கீங்க நல்லாப்போச்சு. ஒரு நூறு பின்னுட்டத்துக்குக் கூட வக்கில்ல. அப்பறம் என்ன நல்லாப்போறது. உடறதில்லீங்க. ஒரு கை பாத்துடறதுதான்.

    பதிலளிநீக்கு
  7. சேட்டைக்காரன் said...

    //இதற்காக ஒரு பதிவர் மகாநாடு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்தவேண்டும்//

    கண்டிப்பா! நான் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள்ளே இதுவரைக்கும் போனதேயில்லை. சூப்பர் ஐடியா!//

    நானும் போனதில்லீங்க. அதுக்குத்தானுங்க இந்தப்பதிவே.

    பதிலளிநீக்கு
  8. // எங்கீங்க நல்லாப்போச்சு. ஒரு நூறு பின்னுட்டத்துக்குக் கூட வக்கில்ல. அப்பறம் என்ன நல்லாப்போறது. உடறதில்லீங்க. ஒரு கை பாத்துடறதுதான்.//

    நூறு பின்னூட்டம் வேணுமா? ஆஹா....ரொம்ப பேராசைதான் உங்களுக்கு. பன்னிகுட்டி ராம்சாமி மாதிரி கும்மி அடிக்க ஆரம்பிச்சாதா இருநூறு பின்னூட்டம் கூட வரும்.

    இதனால் சகல பதிவர் நண்பர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நமது கும்மி அடி கூட்டத்தின் கௌரவ தலைவர் DrPKandaswamyPhD அவர்களின் சாமியின் மன அலைகள் தலத்தில் இன்றுமுதல் அனைவரும் தினமும் வந்து தவறாமல் கும்மி அடித்து கொண்டாடும் படி அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  9. கக்கு - மாணிக்கம் said...

    //இதனால் சகல பதிவர் நண்பர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நமது கும்மி அடி கூட்டத்தின் கௌரவ தலைவர் DrPKandaswamyPhD அவர்களின் சாமியின் மன அலைகள் தலத்தில் இன்றுமுதல் அனைவரும் தினமும் வந்து தவறாமல் கும்மி அடித்து கொண்டாடும் படி அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.//

    ஐயோ, ஐயையோ, அப்படி யாராச்சும் பன்னி(ண்ணி)ப்போடாதீங்க. உங்களைக் கையெடுத்துக் கும்பிடறனுங்க. உடம்பு தாங்காதுங்க.

    பதிலளிநீக்கு
  10. //இதனால் சகல பதிவர் நண்பர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நமது கும்மி அடி கூட்டத்தின் கௌரவ தலைவர் DrPKandaswamyPhD அவர்களின் சாமியின் மன அலைகள் தலத்தில் இன்றுமுதல் அனைவரும் தினமும் வந்து தவறாமல் கும்மி அடித்து கொண்டாடும் படி அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.//

    இதோ நான் வந்துட்ட்ட்ட்ட்ட்டேனே! :-))

    பதிலளிநீக்கு
  11. //ஐயோ, ஐயையோ, அப்படி யாராச்சும் பன்னி(ண்ணி)ப்போடாதீங்க. உங்களைக் கையெடுத்துக் கும்பிடறனுங்க. உடம்பு தாங்காதுங்க.//

    அதெல்லாம் ஆவுற காரியமில்லை. முன்வைச்ச காலைப் பின்வைக்கிற பழக்கமில்லீங்கோ! :-))

    பதிலளிநீக்கு
  12. நானும் வரேன்... நானும் வரேன்... நானும் வரேன்...

    ஃபைவ் ஸ்டார் ஓட்டலுக்கும். கூடவே கும்முறதுக்கும்..

    பதிலளிநீக்கு
  13. // இதோ நான் வந்துட்ட்ட்ட்ட்ட்டேனே! :-)) //
    சேட்ட.


    பாத்தீங்களா ,,,.....இன்னமும் நம்ம பன்னி குட்டி வரல. அது மட்டும் வந்தா பாருங்க உங்க பதிவு இன்னைக்கு நூறு பின்னூட்டங்கள் வாங்கிடும்.

    பதிலளிநீக்கு
  14. //அதாவது டாஸ்மாக்கை, நோக்கி போய்க்கொண்டே இருப்போம்//
    :-)

    பதிலளிநீக்கு
  15. நம்ம பதிவர் கூட்டத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலோ..சான் ப்ரான்ஸிஸ்கோவிலோ வைக்கலாமே?

    பதிலளிநீக்கு
  16. //பாத்தீங்களா ,,,.....இன்னமும் நம்ம பன்னி குட்டி வரல. அது மட்டும் வந்தா பாருங்க உங்க பதிவு இன்னைக்கு நூறு பின்னூட்டங்கள் வாங்கிடும்//

    நமது பதிவுலக டாக்டர் ஐயாவின் இழையில் பின்னூட்டத்துக்கான புதிய உலக சாதனையை ஏற்படுத்தியே தீருவோம் என்று சோடா பாட்டில் மூடி மீது அடித்து சத்தியம் செய்வோமாக!

    பதிலளிநீக்கு
  17. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    //நம்ம பதிவர் கூட்டத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலோ..சான் ப்ரான்ஸிஸ்கோவிலோ வைக்கலாமே?//
    இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்குது. நம்ம வெளிநாட்டு பதிவர்கள் மனது வைத்தால் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  18. சேட்டைக்காரன் said...

    //நமது பதிவுலக டாக்டர் ஐயாவின் இழையில் பின்னூட்டத்துக்கான புதிய உலக சாதனையை ஏற்படுத்தியே தீருவோம் என்று சோடா பாட்டில் மூடி மீது அடித்து சத்தியம் செய்வோமாக!//

    எந்த சோடா பாட்டில் மூடி என்று தெளிவாச் சொல்லுங்க. நம்ம டாஸ்மாக் கடை சோடா பாட்டில் மூடின்னு தெளிவா இருக்கணுங்க. எத்தனை சரக்கு உள்ள போனாலும் நாம எப்பவுமே தெளிவாத்தானே இருப்போம்?

    பதிலளிநீக்கு