வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மனித வாழ்வில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?முதலில் பிரச்சினை இருக்கிறதா, இருந்தால் அது என்ன பிரச்சினை என்று கண்டுபிடிக்க வேண்டும். கற்பனையில் துன்பங்களை உண்டு பண்ணிக்கொண்டு வருத்தப்படக்கூடாது. ஐயோ, நான் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கமுடியவில்லையே என்பதும் ஒரு பிரச்சினைதான். ஆனால் நம் நல்ல காலத்தினால் அந்தப் பிரச்சினை இப்போதைக்கு நம்மில் பெரும்பாலோருக்கு இல்லை. எதிர் காலத்தில் வரக்கூடும்.
பிறகு அந்தப் பிரச்சினையை நன்கு ஆராய வேண்டும். இந்தப் பிரச்சினை நம்மால் தீர்க்கக் கூடியதுதானா என்று கண்டுபிடிக்கவேண்டும். நம்மால் தீர்க்க முடியுமென்றால் அதற்கான வழி முறைகளை ஆராய்ந்து எந்த முறையில் சிக்கல்கள் குறைவாக இருக்குமோ அந்த முறையைத் தெரிவு செய்து அதை நிறைவேற்ற வேண்டும்.

பெரும்பாலான பிரச்சினைகள் நாமே நம்முடைய செயல்களினால் உருவாக்கிக் கொண்டதாக இருக்கும். அப்போது அதற்கான தீர்வு முறைகளை நாமே கண்டு பிடிப்பது இயலாததாக இருக்கும். இந்த மாதிரி பிரச்சினைகள்தான் உலகில் அதிகம். இந்த மாதிரிப் பிரச்சனைகளுக்கு இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்படாதவர்கள்தான் வழி சொல்ல முடியும். மனித இயல்பு என்னவென்றால் அடுத்தவனிடத்தில் போய் நாம் யோசனை கேட்பதா என்ற ஆணவ மனப்பான்மைதான் அதிகம். இந்த ஆணவத்தினால் அழிந்தவர்கள் அநேகம்.

சாதாரணப் பிரச்சினை என்றால் ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நாம் அடுத்த வேலையைக் கவனிக்கப் போய்விடலாம். அந்தப் பிரச்சினை தானாகவே சரியாய் விட வாய்ப்புகள் இருக்கும். ஆனால் எல்லாப் பிரச்சினைகளையும் இவ்வாறு விட முடியாது. இதற்கு வழி ஒன்றுதான். நமக்கு நம்பிக்கை உள்ள நண்பர்களோ அல்லது உறவினர்களிடமோ சென்று பேசுவதுதான் அந்த வழி. அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இந்தப் பிரச்சினையை அணுகுவார்கள். அப்போது நமக்குப் புலப்படாத தீர்வுகள் அவர்களுக்குத் தோன்ற வாய்ப்புகள் அதிகம்.

இந்த முறையை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் பெரும்பாலான துன்பங்களைத் தவிர்க்கலாம். ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க முடியவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு நல்ல தீர்வு அனுப்பப்படும். அல்லது என்னுடைய முந்தின பதிவில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு ஈமெயில் அனுப்பினால் அவர்கள் நல்ல நல்ல வழிகள் காட்டுவார்கள்.